Sunday, August 11, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?– 14


இரு மன்ஸில்கள்!!!


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் இரண்டு மன்ஸில்களை தவிர்த்து விடவே முடியாது. அதாவது இந்த இரு மன்ஸில்களில் தான் லீக் என்னும் பிரம்மாண்டமான மரம் வேர் பாவி கிளை விட்டு, விழுது பாய்ச்சி, செழித்தெழுந்து நின்றது.


ஒன்று கே.டி.எம். அஹமது இப்ராஹீம் மன்ஸில், மற்றது தயா மன்ஸில்.


கே.டி.எம். மன்ஸில், வட சென்னை மண்ணடியில் ஹார்பருக்கு எதிரே வங்கக் கடலின் காற்றுத் தழுவி கிடக்கும் மரைக்காயர் லெப்பைத் தெரு எட்டாம் எண்ணில் இருந்த முஸ்லிம் லீகின் தலைமை நிலையம்.


கே.டி.எம். மன்ஸிலின் மூன்றாவது மாடியில் நின்று, கிழக்கு திசை நோக்கிப் பார்த்தால், பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடல் காட்சி தரும். ஆங்காங்கே சில கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கும். கே.டி.எம். மன்ஸிலின் முதல் தளத்தில் இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமுத்திரம் கண்ணுக்கு தெரியாது ஆனாலும் அங்கே தான் சம்பவங்கள் விரிந்து கிடக்கும்.


இன்னொரு மன்ஸிலான தயா மன்ஸில் தென் சென்னை அன்றைய கடைக்கோடியான குரோம்பேட்டையில் ஒரு தெருவுக்குள் அமைதியாக இருந்தது. ஆனால் கடலின் ஆழத்தை விட ஆழமான சம்பவங்களை மறைத்துக் கொண்டு நிம்மதியாக இருந்தது. இந்த மன்ஸில் மாட மாளிகையோ, கூட கோபுரமோ அல்ல.


ஒரு சுமாரான இடத்தின் மத்தியில் தஞ்சை மாவட்ட கை வினைஞர்களால் உருவாக்கப் பட்டிருந்த ஒரு குடிசையும், அதனை ஒட்டி வலது பக்கம் இரண்டு சிறு அறைகள், இடது பக்கம் ஒரு அறை, நடுவே ஒரு குட்டி முற்றம். அந்த முற்றத்திற்கு பின்னே ஒரு சமையல் அறை, ஒரு குளியல் அறை. இது தான் தயா மன்சில்.


இந்த மன்ஸிலுக்கு வலப்பக்கம் மூன்றடி உயர சுற்று சுவர், அதற்கு மேலே ஒரு சின்னக் குடில். அந்த குடிலுக்கு உள்ளே ஆறேழு நாற்காலிகள். அவற்றிலும் ஒன்றிரண்டு நாற்காலிகளுக்கு ஒரு கால் இருக்காது. அந்த காலுக்கு பதிலாக தனித்தனி செங்கற்கள் அடுக்கிச் செங்கல் கால்கள் நிற்கும். இந்தக் குடிலும் தயா மன்ஸிலின் ஒரு அங்கம் தான்.


இந்த மன்ஸில் ஒரு தனி மனிதருக்கு சொந்தமானது. அந்த மனிதர் கோடீஸ்வரரின் பரம்பரையை சார்ந்தவர். சமுதாய பணிக்காக தன் முழு சொத்தையும் கரைத்து விட்டவர். சென்னை ராஜதானியின் எதிர்க் கட்சி தலைவராக இருந்தவர். டெல்லி நாடாளுமன்றத்தில் பதினைந்து இருபது ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்.


இந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்புக் குழு உறுப்பினராக இருந்தவர். இந்த தயா மன்ஸில் கூட அவரின் நெல்லையில் இருந்த பூர்வீக சொத்தை விற்று தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த தயா மன்ஸிலுக்குள் இந்தியாவின் ஆகப் பெரும் தலைவர்கள் எல்லாம் வந்து அமர்ந்து அவரைச் சந்தித்து அரசியில் பேசி சென்று இருக்கிறார்கள்.


பண்டிட் நேரு அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த பலர் வந்து அவரை இந்த மன்ஸிலில் சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தினுடைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சில முறைகள் வந்து இந்த மன்ஸிலில் சந்தித்து சென்றிருக்கிறார். மற்றும் அமைச்சர்கள் வந்து சந்தித்து இருக்கின்றனர். அடுத்து வந்த முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா, சில பல முறை வந்து சந்தித்து சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த முதலமைச்சர் கருணாநிதி பல முறை இந்த மன்ஸிலில் வந்து சந்தித்து இருக்கிறார்.


மூதறிஞர் ராஜ கோபாலச்சாரி இதே மன்ஸிலில் அவரை வந்து சந்தித்து சென்று இருக்கிறார். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கும் இந்த தயா மன்சில் காரர் இவர்களில் எவர் வீட்டிற்கும் சென்று சந்தித்து அரசியல் பேசியது இல்லை என்ற சரித்திர உண்மையும் இவருக்கு சொந்தமானது.


அந்த இவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹமது இஸ்மாயில் சாஹிப். பெருமைக்குரிய அத்தனை இந்திய தலைவர்களும் இந்த மன்ஸிலில் உள்ள கால் ஒடிந்த செங்கல் அடுக்கிய நாற்காலியில் தான் அமர்ந்து பேசி சென்று இருக்கிறார்கள்.


இறைவன் எனக்கும், எங்களுக்கும் பாக்கியம் வழங்கி அருளி இருக்கிறான். அனைத்து நன்றியும் அவனுக்கே. நானும், நாங்களும் அந்த தயா மன்ஸில் முற்றத்திலும் இல்லத்திற்குள்ளும் ஓடி விளையாடி இருக்கிறோம். அந்த கண்ணியத்திற்கு உரியவரின் மடியில் அமர்ந்து மகிழ்ந்து இருக்கிறோம்.


கே.டி.எம். அஹமது இப்ராஹிம். இவர் காயிதே மில்லத்தின் தம்பி. எங்கள் பிள்ளைப் பருவத்தில் கே.டி.எம் என்று சொன்னால் எங்களுக்கு தெரியாது. வக்கீல் தாதா" என்றவர் தான் கே.டி.எம். என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.



இந்த கே.டி.எம். பெயர்தான் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு காயிதே மில்லத் காலத்திலே சூட்டப் பட்டது. காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராகவும், சென்னை ராஜ்யத் தலைவராகவும் இருந்தார்கள். கே.டி.எம். சென்னை ராஜ்ய பொது செயலாளாராக இருந்தார். (கே.டி.எம், ராஜ்ஜியம் என்பதை மாநிலம் என்று மொழி பெயர்த்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. கே.டி.எம் காலம் வரை சென்னை ராஜ்ஜியம் என்று தான் குறிக்கப்பட்டது. அதற்கு பின்தான் தமிழ் மாநிலம் என முஸ்லிம் லீக் தன்னை கூறிக் கொண்டது)


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பைலாஇவர்களால் தான் சரி பார்க்கப் பட்டு திருத்தப் பட்டு அமைய பெற்றது. காயிதே மில்லத் வாழ் காலத்திலேயே கே.டி.எம் காலமாகி விட்டார்கள். கே.டி.எம் மை அடுத்து அவரிடத்தில் என் தந்தையார் ஏ. கே. ரிபாய் சாஹிப் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.


கே.டி.எம் உடைய நேர்மையும் அழுத்தமும் சில இடங்களில் காயிதே மில்லத்தை விட ஒரு இன்ச் உயர்ந்து இருக்கும். இப்படிச் சொல்வதில் நிச்சயம் குற்றமில்லை.


காயிதே மில்லத் தன்னளவில் மகத்தான நேர்மைக்கு உரியவர்கள். அப்பழுக்கு அங்கே இருக்காது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களிடம் குறைபாடு இருக்கும். காயிதே மில்லத்திற்கும் இது தெரியும்.


சில பல அரசியல் காரணங்களுக்காக அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இது ஒருவகையான காம்ப்ரமைஸ் போல தான் தெரிகிறது.


கே.டி.எம் இடம் இந்த கதையே கிடையாது இது மாதிரி நேரங்களில் கடுமையாகவே நடந்து கொள்வார்.


வக்கீல் தாதா (கே.டி.எம்) முகம் எப்போதுமே இறுக்கமாகத்தான் இருக்கும். சிரிப்பு அவர்கள் இதழில் வந்ததாக எங்களுக்கு நினைவே கிடையாது.


ஒரு கடுமை முகம் முழுவதும் பதிந்து பரவி கிடக்கும். பற்றாக்குறைக்கு இரு காதுகளும் கேட்காது. வக்கீல் தாதா என்றவுடன் இந்த தோற்றம்தான் எங்களுக்கு நினைவிலிருக்கும்.


நெல்லை பேட்டையில் இருந்து சென்னை தலைமையகத்திற்கு இயக்க சார்பாக கிளார்க் மீராசாவுக்கு கடிதம் எழுதுவார்கள். அந்த கடிதத்தில் தன் சொந்த அலுவலையும் எப்போதாவது செய்ய சொல்லி எழுதிருப்பார்கள். இப்படி அனுப்பிய கடிதங்களை எண்ணி சென்னை வந்தவுடன் ஒவ்வொரு கடிதத்திற்கும் இரண்டு அணா கணக்கிட்டு தலைமையகத்தில் செலுத்தி விடுவார்கள். மீராசா செய்த பணிக்காக அவருக்கும் பணம் தருவார்கள்.


கே.டி.எம், பூரணமான ஜனநாயகவாதி. லீகினுடைய பொதுக் குழு தலைவர் தேர்தலை அறிவிக்கும் போது தானும் போட்டியிடுவார். வழி மொழிய யாரும் இல்லாததால் காயிதே மில்லத் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


இதற்கு கே .டி எம் சொல்லும் காரணம் மிக முக்கியமானது. ஜன நாயகம் என்பதில் ஏக மனதாகஎன்பது கொஞ்ச காலத்தில் தனி மனித வழிபாடாக மாறிவிடும். முஸ்லிம் லீகின் சிறு தொண்டன் கூட தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதை உறுதி படுத்தத்தான் நான் போட்டி இடுகிறேன்." என்பார்கள்.


சில வேளைகளில் செயற்குழுவில் காயிதே மில்லத்தின் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள். அந்தக் கருத்தில் லீக் தன்மை குறைந்து வேறொரு இயக்கத்தின் தன்மை இருப்பதாக முடிவு செய்து விடுவார்கள்.


செயற்குழுவில் இதனை பகிரங்கமாகப் பேசுவார்.


"காயிதே மில்லத்தின் இந்த கருத்தில் காங்கிரஸ் தன்மை கலந்து இருக்கிறது. காயிதே மில்லத் பழைய காங்கிரஸ்காரர் என்பதை மறந்து விடக் கூடாது. என்னைப் போன்ற முழு லீகனுக்கு இதில் சம்மதம் இல்லை" என பகிரங்கமாக போட்டு உடைத்து விடுவார்.


செயற்குழு முடிந்தவுடன் காயிதே மில்லதும் கே..டி.எம் மும் ஒன்றாக சேர்ந்து குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு செல்வார்கள்.


கே.டி.எம். சென்னை வந்தால்,தயா மன்ஸிலில் தான் தங்குவார்கள்.


இந்த கடுமையான மலைக்குள் கனிவான ஈரம் கசிவதும் உண்டு. அதற்கு ஓர் அடையாளம் இன்று தலைமை நிலைய மேனேஜராக இருக்கும் மீராசா தான்.


கே.டி.எம். சென்னை வரும்போது எல்லாம் கிழிசல் தைத்த சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வருவார் மீராசா. கே.டி.எம் இதை பார்த்து விட்டு, "மீராசா நமக்கு கஷ்டம் இருக்கலாம், அதற்காக கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு அலுவலகம் வரக் கூடாது ஏனென்றால் நீ லீகின் ஊழியன். நீ இப்படி அலுவலகம் வருவது லீகிற்கு அவமானம். நீ புது சட்டை வாங்கிக் கொள்என்று பணம் கொடுப்பார்.


மீராசா புது சட்டை அணிந்து கொள்வார். ஆனாலும் அடுத்த முறை கே.டி.எம் சென்னை வரும்பொழுதும் மீராசா கிழிந்த சட்டையில் இருப்பார். கே.டி.எம் புது சட்டைக்கு பணம் தருவார்கள். மீராசா புது சட்டைக்கு மாறிக் கொள்வார்.


கே.டி.எம். கண்காணிப்பில் தன்னை தயார் படுத்தி கொண்டவர்தான் இஸ்மாயில் கனி அண்ணன். இவரும் ஒரு முக்கால் கே.டி.எம் தான்.


இந்த கே.டி.எம் நினைவாகத் தான் தலைமை நிலையத்திற்கு கே.டி.எம் மன்ஸில் என பெயர் பொறிக்கப் பட்டது.


குட்டி குறிப்பு :-


நெல்லை சந்திப்பில் ஒடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை ஒட்டி மேற்கில் ஒரு பள்ளிவாசல். இது நெல்லை சந்திப்பு பள்ளிவாசல். பள்ளிவாசலுக்கு மேற்கே ஆறேழு கட்டிடங்கள் தாண்டி பழைய பஞ்சாயத்து தொடக்க பள்ளிக்கூடம். அதை ஒட்டி ஒரு சின்ன சந்து, சந்தைத் தொட்டு ஒரு கட்டிடம். இந்தக் கட்டிடம் 1957 நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு பின் வசூலான மீதிப் பணத்தை வைத்து, முஸ்லிம் லீக் தனகென்று ஒரு கட்டிடத்தை சொந்தத்திற்கு வாங்கியது. இந்த இடத்திற்கு கைலாசபுரம் என்று பெயர்.


மாநில துணைத் தலைவராகவும், மாவட்ட தலைவராகவும் இருந்த எங்களின் தாதா மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிப் லீகிற்காக வாங்கிய முதல் கட்டிடம்.


இதில் ஒரு பகுதி சுமாரான வீடாக இருந்தது. இந்தப் பகுதியை ஜமாதுல் உலமா ஆசிரியர் மௌலானா மௌலவி அபுல் ஹசன் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தனர். ஷாதலி ஹஸ்ரத் பக்கத்தில் இருந்த பள்ளிவாசல் இமாமாக பணி புரிந்தார்கள்.


தென்காசி ஹஸ்ரத் அப்துல் காதர் (ஹாஜியார் தாதா) முஸல்மான் பத்திரிகையின் ஆசிரியர். அகமதியா இயக்கத்திற்கு அந்த காலத்தில் தமிழில் வெளிவந்த முதல் எதிர்ப்பு சுன்னத்துல் ஜமாஅத் பத்திரிகை இது தான்.


இவர்கள் மகன் தான் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள். இந்தக் கட்டிடம் தான் தமிழகத்தில் முஸ்லிம் லீக் தனக்கென்று வாங்கிய முதன்முதலான கட்டிடம்.


இரண்டாவதாக வேலூர் சுண்ணாம்புக் கார தெருவில் மாவட்ட முஸ்லிம் லீக் தனக்கென்று ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாவட்ட தலைமையகம் ஆக்கியது.



மூன்றாவதாகத்தான் மாநில முஸ்லிம் லீக் தனக்கென்று சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் எட்டாம் எண் கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாநில தலைமையகமாக அறிவித்து கே.டி.எம் அஹமது இப்ராகிம் மன்ஸில் என்று பெயர் சூட்டிக் கொண்டது.

No comments:

Post a Comment