Monday, September 30, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–21


ஒரு அழைப்பு! ஒரு வணக்கம்! இடையிலே ஒரு வாழ்க்கை!




M. M. P - இந்த உச்சரிப்பு, தமிழக மேடைகளில் ஒரு காலகட்டத்தில் தாரக மந்திரமாக ஒலிக்கப் பட்ட உச்சரிப்பு.


அரசியல் மேடை, இலக்கிய மேடை, ஆன்மீக மேடை என எல்லா பரிமாணங்களிலும் தனக்கென்று ஒரு கம்பீரத் தொனியுடன், சொல்லாடல்களைப் பூப்போல தூவித் தெளிக்கக் கூடிய ஒரு மந்திர வாகீசம்.

தமிழக எல்லை முழுவதும், மூலை முடுக்குகளிலும், பட்டி தொட்டிகளிலும் நகரப் பட்டணங்களிலும் இவருடைய பேச்சு மொழி தழுவாத பிரதேசங்களே இல்லை.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் மகத்தான சிறப்புக்குரியவர். தமிழக சட்டமன்றத்தில் கூட இவரது தமிழ்த் தாண்டவம் ஆடி இருக்கிறது.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டம். சட்ட மன்றத்தில் மது விலக்கை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வருகிறார். அந்த அவையில் M.M.P முஸ்லிம் லீகின் உறுப்பினராக அமர்ந்து இருக்கிறார்.

முதல்வரின் அனுமதியோடு வரும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேச எழுகிறார். அந்த பேச்சை கருணாநிதி ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதி எழுந்து தன்னுடைய வாய் இதழில் விரல் வைத்து, “இப்போதைக்கு தடை இல்லைஎன்றார். அதாவது, M.M.P பேசிய தமிழின் போதைக்கு தடை இல்லை என்பது போன்று நையாண்டி செய்தார்.

உடனே M.M.P எழுந்து, “ இப்போ தைக்கு தடை இல்லை என்றால், மாசிக்கா? பங்குனிக்கா?” என்று கேட்டார். அதாவது அப்போது தை மாதம், அதைக் குறிப்பிட்டு தைக்கு தடை இல்லை என்றால், மாசிக்கா? பங்குனிக்கா? என்று கேட்டார். 

தமிழக சட்டமன்றமே பெஞ்சைத் தட்டி ஆரவாரித்த்து. அவருடைய பேச்சாற்றலுக்கு இது ஒரு சிறு துளி.

நெல்லை மாவட்டம் ரவண சமுத்திரத்தில் பிறந்த M.M.பீர் முஹம்மது சாஹிப், இவரைத் தான் M.M.P என்கிறோம். இவரைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லியே ஆக வேண்டும். இன்றும், அடுத்து வரும் சில நாள்களிலும் இவரே என் எழுத்துச் செய்தியாக பரிணமிப்பார்.

M.M.P ஒரு நாள் காலை, சுமார் பத்து மணியளவில், சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்திற்கு தீடீரென்று வந்து உதயமானார்.


என் அண்ணன் மகனே (என்னை இப்படித் தான் அவர் அழைப்பார்), நான் நேசித்த சிலருக்கு இன்று மதியம் நம் தலைமை நிலையத்தில் விருந்து வைக்க விரும்புகிறேன். இந்த மிஸ்கீன் தரும் விருந்தை, நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கும் நான் இன்று விருந்து தருகிறேன். நீயும் இங்கு இருக்க வேண்டும்என்றார். 


அந்த காலகட்ட்த்தில் முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்தில் நான் முழு நேரமாக பணியில் இருந்தேன்.

M.M.P இப்படித் தான் ஏதாவது செய்வார்.ஏண்ணே இந்த தீடீர் விருந்து?” என்று கேட்டேன்.


காரணம் கேட்காதே, கலந்துக் கொள்!என்றார். விருட்டென்று வெளியேறிவிட்டார்.


மதியம் வந்தது. அவர் நேசர் என்று குறிப்பிட்டவர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். முஸ்லிம் லீகின் தலைவர் சிராஜுல் மில்லத் முதலில் வந்து அமர்ந்தார். அடுத்து கவிஞர் காசிம், இஸ்மாயில் கனி அண்ணன், மச்சான் நாகூர் கவிஞர் Z. ஜபருல்லா, M.M.P அண்ணனுடைய நண்பராக எங்களுக்கு அறிமுகம் இல்லாத சகோதர இந்து சமுதாயத்தவர் இருவரும் வந்தனர். நான் இருந்தேன்.

எல்லோரும் அங்கே இருக்கிறோம். எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். 

“M.M.P நமக்கு ஏன் விருந்து தருகிறார்?” இந்த கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை. 


சற்று நேரத்தில் இரண்டு கைகளிலும், தூக்க முடியாத பெரிய டிபன் கேரியர், கக்கத்தில் வாழை இலை இருக்க M.M.P யே வேர்க்க, விறுவிறுக்க தானே தூக்கி வந்தார். எங்கள் அனைவருக்குமே இது அதிர்ச்சியான தோற்றம்.

சிராஜுல் மில்லத், “என்ன ஜனாப் இதெல்லாம் நீங்களே தூக்கி வருகிறீர்கள்?” என்றார். 

தலைமை நிலைய மேனேஜராக இருந்த மீராசா ஓடிச் சென்று, அவர் கையில் இருந்த கேரியர்களை வாங்கித் தரையில் வைத்தார். தலைமை நிலைய அலுவலகத்தில் கிடந்த பெரிய மேஜையின் மீது M.M.P கொண்டு வந்திருந்த வாழை இலையை அவரே விரித்தார். இலைகளில் அவரே நீர் தெளித்தார். எங்கள் அனைவரையும் அமரச் சொன்னார். அமர்ந்த நாங்கள் அவரையும் உடன் அமரச் சொன்னோம். மறுத்து விட்டார்.

இன்று நானே உங்களுக்கு பரிமாறப் போகிறேன்என்று சொல்லி, எல்லோருக்கும் பரிமாறினார். 


உணவருந்தியதற்கு பின், சிராஜுல் மில்லத்,


ஜனாப், இப்பொழுதாவது இந்த விருந்துக்குரிய காரணத்தைச் சொல்லுங்கள்என்றார்.


நான் ஒரு நபருக்காக பதிலி ஹஜ்ஜு செல்கிறேன். அதனால் என்னமோ தெரியவில்லை, உங்கள் அனைவருக்கும் இந்த மிஸ்கீன் விருந்து வைக்க முடிவு செய்தேன்என்றார்.


எங்களுக்கு மேலும் அதிர்ச்சி. M.M.P ஏற்கனவே சில ஹஜ்ஜுகள் செய்து இருக்கிறார். அப்பொழுதெல்லாம் செய்யாத இந்த புதுமையை இப்போது ஏன் செய்கிறார். இதற்கும் யாரிடமும் பதில் இல்லை.

நாங்கள் ஒவ்வொருவராக அவரைத் தழுவி எங்கள் மகிழ்வை வெளிப்படுத்திக் கொண்டோம். 

அண்ணே, எங்களுக்காக துஆ செய்யுங்கள்என்றேன் நான்.


என்னை கட்டியணைத்துக் கொண்டு, “நான் முதன்முதலாக ஹஜ்ஜு செய்யும் பொழுது, எங்கள் முதலாளி, உங்கள் தாதா மு.ந. அப்துர் ரஹ்மான் முதலாளி அவர்களுக்கு துஆ செய்தேன். எங்கள் அண்ணன், உங்கள் வாப்பா A.K. ரிபாய் சாஹிப், M.P ஆவதற்கு முன்னால் நான் ஹஜ்ஜு செய்தேன். அப்போது ரிஃபாய் அண்ணனுக்காக துஆ செய்தேன். இப்பொழுது நான் ஹஜ்ஜு செய்ய்யும் பொழுது, ‘அக்கினி நதி’, நாவலுக்கு விமர்சனம் எழுதிய கரங்களுக்குரிய எங்கள் அண்ணன் மகனே! உனக்காக நான் துஆ செய்வேன்என்றார்

என் விழிகள் கலங்கி விட்டன.

இல்லஸ்ட்ரேட் வீக்லியின் ஆசிரியர் குழுவிலிருந்த குர்ரத்துல் ஐன் ஹைதர் என்ற பெண் நாவலாசிரியர் எழுதிய அற்புதமான ஒரு இதிகாசம். ஆம் அது நாவல் அல்ல. இதிகாசம்தான் அக்கினி நதி’. அந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு சிறு புத்தகம் போடும் அளவுக்கு, கவிஞர் காசிமின் சர விளக்குபத்திரிகையில் தொடர் எழுதி இருந்தேன்.

அந்த விமர்சனத்தின் முதல் தரமான ரசிகர், M.M.P தான்.

என் விமர்சனத்தை படித்து விட்டு, அக்கினி நதி நாவல் தமிழில் வந்ததா? என்று கேட்டார். நான் தமிழிலில் படித்து விட்டுதான் விமர்சனம் எழுதினேன் என்று சொன்னேன். அந்த நாவலை எனக்கு படிக்கத் தாஎன்று கேட்டார். அந்த நாவல் தலையணை அளவு பருத்து, துக்ளக் சைசில் நீண்டு இருக்கும்.

M.M.P யிடம் எது கொடுத்தலும் கிடைத்து விடும். புத்தகம் கொடுத்தால் மட்டும் அது, ஒருவழிப் பாதையாகி விடும். 


நான் புத்தகம் தர மறுத்து விட்டேன். நான் திரும்ப நிச்சயம் தந்து விடுவேன்என்று வற்புறுத்தி வாங்கிச் சென்றார்.

அந்தப் புத்தகம் ஒருவழிப் பாதையாகச் சென்று மறைந்தே விட்ட்து. அந்தப் புத்தகமும் என்னிடம் இல்லை. நான் எழுதிய விமர்சனத் தொடரும் என்னிடம் இல்லை. இந்த நிலையில்தான், கஅபத்துல்லாவில் எனக்காக துஆ செய்கிறேன் என்கிறார்.

இந்தத் தினத்திற்குச் சற்று பின்னர், சிராஜுல் மில்லத்தும், தீடீரென்று ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். அந்த முறை இசை முரசு நாகூர் ஹனீபாவும் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்.

இவர்கள் மதீனத்தில் ஒரு நாள், இரவில் ஒரு இல்லத்தில் ஒன்றாகக் கூடுகிறார்கள். அப்போது, இசை முரசு நாகூர் ஹனீபாவிடம், கவிஞர் காசிம் எழுதி இசை முரசு ஹனீபா பாடிய பாடலான ஒரு பாடலைப் பாடச் சொல்லி M.M.P கேட்கிறார். இசை முரசு, கடைசி வரை பாட மறுத்து விட்டார்.

அந்தப் பாடலில் எங்கள் நபியே உங்கள் மதீனத்து மண்ணில் விழுந்து புரண்டு உருள வேண்டும். மரணத்தையும் இங்கேயே தழுவ வேண்டும்என்ற பொருளில் வரிகள் வரும். இதனால், இசை முரசு அண்ணலார் இருக்கும் மதீனத்தில் இந்தப் பாடலைப் பாட மறுத்து விட்டார்.

அதற்குக் காரணம் சொன்னார். இதை இறைவன் இங்கே கபூலாக்கி விட்டால் நானென்ன செய்வேன்?” என்றார்.

எனக்கு அது கபூல் ஆகட்டும்என்று M.M.P சொன்னார். ஏனோ தெரியவில்லை அது அங்கு நிகழவில்லை.


சிராஜுல் மில்லத் இதற்குச் சாட்சியாக இருந்தார்.

ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு ஹாஜிகள் திரும்பி விட்டனர். M.M.P யும் தமிழகம் வந்து சேர்ந்தார். ஆனால் தமிழக முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்திற்கு வந்து சேரவில்லை. சென்னைக்கு வந்தவர், ஈரோட்டுக்குப் போய் விட்டார். அங்கிருந்து என்ன நினைத்தாரோ அஜ்மீருக்கு சென்று ஒன்றிரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி விட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து ரவண சமுத்திரத்திற்குப் போய் விட்டார்.

அதற்குப் பின், தமிழகத்தில் எங்கெங்கோ சென்றிருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்க வில்லை. அடுத்த ரமலான் மாதம் வந்து விட்ட்து. M.M.P ரவண சமுத்திரத்திலேயே தங்கி இருந்தார். இவ்வளவு நீண்ட நாட்கள் அவர் சொந்த ஊரில் தங்கியதில்லை.

இருபத்தேழாம் நோன்பு அன்று, இரவு ரவண சமுத்திரம் பள்ளிவாசலில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். அந்த சொற்பொழிவு ஆழமான அற்புதமான சொற்பொழிவு. அதுதான் M.M.P யின் இறுதிச் சொற்பொழிவு.

அந்தச் சொற்பொழிவை ஆரம்பிக்கும் பொழுது, அற்புதமான துவக்கத்தில் தொடங்குகிறார். 

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, அதன் காதில் பாங்கு ஒலிக்கிறோம், பாங்கு ஒலித்தால் தொழ வேண்டுமே, அங்கே தொழுகை நடைபெற வில்லை. தொழுகை இல்லாத பாங்கொலி தொடக்கமாகி விட்டது. ஒருவர் மரணித்த பின் ஜனாஸா தொழுகை நடக்கிறது. இந்த தொழுகைக்குப் பாங்கு கிடையாது. இது பாங்கில்லாத் தொழுகை. பிறக்கும் பொழுது பாங்கொலிக்கிறது, தொழுகை இல்லை. இறக்கும் பொழுது தொழுகை நடக்கிறது பாங்கு இல்லை. அந்த பாங்குக்கு இங்கே தொழுகை. இந்தத் தொழுகைக்கு அங்கே பாங்கு. இடையிலே ஒரு வாழ்க்கைஇப்படி அந்த பேச்சை M.M.P தொடங்குகிறார்.

இடையில் வாழக் கூடிய மனித வாழ்க்கை பற்றி அவர் பொழிந்திருக்கும் கருத்துக்கள் இப்போதும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

M.M.P யைப் பற்றிய சம்பவங்களை இறைவன் நாடினால் தொடர்ந்து எழுதுவேன்.

Saturday, September 28, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–20


திரும்பவும் தில்லை!


சென்ற வாரம் நான் சிதம்பரம் சென்றிருந்தேன். இதில் புதுமை இல்லை. அடிக்கடி நான் பயணமாகும் பகுதிதான் அது.

சுமார் மாலை ஏழு மணியளவில், தில்லை நடராசப் பெருமான் கோயிலின் வெளிச்சுற்று கல்முற்றப் பாதையில் அங்கங்கே சின்ன சின்ன கும்பல்களாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அங்கே கிடைக்கிற காற்று அலாதியான சுகம் கொண்டது.

நான், மாப்பிள்ளை இஞ்சினியர் செல்வம், மாமா புலவர் கு. சங்கரன், மாப்பிள்ளை தில்லை. கலைமணி நண்பர் இல்லத்தினர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

மாப்பிள்ளை கலைமணி என்னிடம் சொன்னான், “டேய் மாமா, நம்ம ஆனந்த நடராச தீட்சதரை இரண்டு தினங்களுக்கு முன்னால், இந்த கோயில் வளாகத்தில் இப்படி இருக்கும்பொழுது சந்தித்தேன். அவர், “ஹிலால் முஸ்தபா இப்போது எங்கு இருக்கறார். உங்களுக்கு தொடர்பு உண்டா?” என்று கேட்டார்.

நான், “கிட்டதட்ட தினம் தினம் தொடர்பு கொள்வோம்” என்று சொன்னேன். தீட்சிதர், “அப்படியானால், இங்கு அவர் வரும்பொழுது ஆத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ, ரொம்ப வருஷங்கள் ஆச்சு. உங்களை பார்த்தவுடனே அவா நினைப்பும் கூடவே வந்திடுச்சு” என்று சொன்னார்.


கலைமணி இப்படி என்னிடம் சொன்னவுடன், ஆனந்த நடராஜ தீட்சிதர் என் நினைவிலும் வந்து சேர்ந்தார்.

ஆனந்த நடராஜ தீட்சிதர் தில்லை வாழ் அந்தணர் எனப் பெருமிதம் கொள்ளும் தீட்சிதர் குலத்தில் உதித்தவர். நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த 1970 களில் தமிழ்த்துறையின் பேராசிரியர்களில் ஒருவராக பணி புரிந்தவர்.

நல்ல தமிழ் ஆய்வாளர். பிராமணீய குடுமியுடன் நெற்றியில் பட்டையும், வெள்ளைச் சட்டையும், பஞ்சகச்ச வேட்டியும், வலக்கை மணி கட்டில் சிகப்பு நிற கயிறு கட்டியும் இருக்கும் இதே கோலத்துடன் தான் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு வருவார். வகுப்பறையிலும் பாடம் எடுப்பார். எங்களுக்கு ஓராண்டு பாடம் எடுத்தார். கம்ப ராமாயண வகுப்பு அவர் பொறுப்பில்தான் இருந்தது.

பேராசிரியர், ஆனந்த நடராஜ தீட்சிதர் பின்னாளில் முனைவர் பட்டமும் பெற்றிருந்தார்.

எங்கள் வகுப்பறையில், கம்ப ராமயணம் வகுப்பெடுக்க உள்ளே நுழைவார். ஆசிரியர் இருக்கும் அந்த மேடையில் சென்று அமர்வார். அவருக்கு எதிரே மாணவர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்களில் எவரையும் அவர் பார்த்து இருக்க மாட்டார் என்றுதான் நாங்கள் நினைத்துக் கொள்வோம். நாற்காலியில் அமர்ந்து எதிரே தெரியும் மின்விசிறியை உற்றுப் பார்த்துக் கொண்டு கம்பரின் அற்புதமான கவிதைகளை ஒப்பித்துக் கொண்டிருப்பார்.


அப்போது அவரின் தடித்த கண்ணாடிக்கு உள்ளே இரண்டு துண்டுகளாக விழிகள் சுழன்று கொண்டிருக்கும். மின்விசிறிக்கு கீழ் இருக்கும் மாணவ மாணவிகளை அவர் சட்டை செய்வதே இல்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், அதற்கு நடராச பெருமானே கைங்கரியம் வழங்கட்டும் என விட்டு விடுவார்.

அவர், பாடம் நடத்தும் கம்ப ராமாயணத்தில், எங்களைப் போலவே கம்பனும் காணாமல் போய் விடுவான். ஆனால் பக்தி ரசம் சொட்ட சொட்ட பேராசிரியர் தீட்சிதர் மின்விசிறிக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பார்.

பேராசிரியர் தீட்சிதர், தமிழறிஞர். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் உலக மகாகவி கம்பனை அவர் பார்வையில் எங்களுக்கு அடையாளப் படுத்த மட்டும் அவருக்கு தெரியவில்லை.

பேராசிரியர் தீட்சிதரைப் பற்றி, தமிழ்த் துறையில் ஒரு தகவல் நடமாடிக் கொண்டிருந்தது. அதை பேராசிரியர் சாமிநாதன், “அது உண்மைக் கதை” என்று ஒருமுறை சொன்னார்.

தமிழ்த் திரை உலகில் பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு பெரிய இயக்குனர், பேராசிரியர் தீட்சிதரை திரைப்பட பாடல் எழுத அழைத்திருந்தாராம். தீட்சிதரும் அந்த திரைப்படத்தின் காதல் காட்சிக்குப் பாடல் எழுதி சென்றாராம்.


மெல்லிசை மன்னர்கள், விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த காலமது. பேராசிரியர் தீட்சிதருக்கு இசை ஞானமும் கொஞ்சம் உண்டு. தீட்சிதர் எழுதிய பாடலுக்கு அவரே ஒரு ராகமும் மனதில் அமைத்துக் கொண்டிருந்தார்.

விஸ்வநாதன், ராமமூர்த்தி முன்னர் தீட்சிதர், பாடலை ராகத்தோடு அவரே பாடினார். மெல்லிசை மன்னர்கள் ஆடிப் போய்விட்டார்கள். இது தமிழ்ப் பாடலா என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது.

தூய தமிழில், இலக்கணம் பிசகாத பத்து வெண்பாக்களை எழுதி மெல்லிசை மன்னர்கள் முன் கொட்டினால் அவர்கள் என்ன தான் ஆவார்கள்?

“திரைத்துறைக்குத் தமிழ் தெரியவில்லை” என அலுத்துக் கொண்டு பேராசிரியர் தீட்சிதர் தில்லைக்கு வந்துவிட்டார்.

எனக்குக் கம்பனில் கொஞ்சம் ரசனை அதிகம். ஆனால் பேராசிரியர் தீட்சிதரின் கம்ப ராமாயண வகுப்பு, கம்பனை, யேசுவை சிலுவையில் அடித்த கதைதான். எனக்கு இது சங்கடமாக இருந்தது


ஒரு நாள் வகுப்புக்கு பேராசிரியர் தீட்சிதர் வந்தார். அவர் இருக்கையில் அமர்ந்தவுடன், நான் எழுந்து நின்றேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார். அப்பாடா முதல் முறை வகுப்பறைக்குள் ஒரு மாணவனைப் பார்த்து விட்டார் என்ற திருப்தி எங்களுக்கு.


“ஐயா, மேலே சுழலும் மின்விசிறியை விட அதற்கு கீழே அமர்ந்து இருக்கும் நாங்கள் கொஞ்சம் விலை மதிப்புள்ளவர்கள்தாம். எங்களைப் பார்த்து கம்பனைப் பேசுங்கள்” என்றேன்.

பேராசிரியர் தீட்சிதர் ஐயா தந்த பதில் எங்களை எல்லாம் ஆட வைத்து விட்டது.

“ஹிலால் முஸ்தபா” என்று என் பெயரைச் சொல்லி என்னை அழைத்ததும், வகுப்பே அவரை வியப்புடன் பார்த்தது. தீட்சிதர் ஐயாவிற்கு மாணவர் பெயரும் தெரிந்திருக்கிறதே? இந்த வியப்பு நீங்க சில மணித்துளி ஆனது.


மீண்டும் பேசினார். “உங்கள் அனைவரைப் பற்றியும் எனக்கு தெரியும். ஹிலால் முஸ்தபா எனக்கு எதிரில் அங்கு இருக்கிரார். ஹிலால் முஸ்தபாவிற்கு எதிரில் இங்கு நான் இருக்கிறேன். இதுதான் எங்களுக்குள்ள இடைவெளி. அவரை விட சில பத்து வயது மூத்து இருப்பேன். இது எங்களுக்குள் உள்ள கால இடைவெளி. மற்றபடி எனக்கு தெரிந்த கம்பர், ஹிலாலுக்கு தெரிந்தவர்தான். ஹிலாலுக்கு தெரிந்த கம்பர் எனக்கு தெரிந்தவர்தான். இதில் எங்களுக்குள் வித்தியாசம் இல்லை. என்ன செய்ய பகவான் இப்படி சில நேரங்களில் செய்து விடுகிறார்.” என்றார்.

வழக்கம் போல் பாடத்தை தொடங்கி விட்டார்.

வகுப்பு முடிந்தவுடன், நான், ராமனுஜம், பாண்டியன் எழுந்து சென்று தீட்சிதர் ஐயாவை வெளியில் சந்தித்தோம்.

நான் “ஐயா உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

“அப்படி எல்லாம் இல்லை, அப்படி எல்லாம் இல்லை. நான் சத்தியத்த தான் சொன்னேன். நான் சத்தியத்த தான் சொன்னேன்.” என எப்போதுமுள்ள புன்முறுவலோடு சொன்னார். அன்றிலிருந்து அவரைப் பற்றிய மரியாதை எனக்குள் நிமிர்ந்து நின்றது. நன்றாகப் பழகிக் கொண்டோம்.

தீட்சிதர் ஐயா நிச்சயமாக நல்ல தமிழறிஞர். அவர் கலாரசனை மட்டும் எப்பொழுதும் புர்தா அணிந்தே இருக்கிறது. பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.


கிட்டதட்ட, நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்த கால கட்டத்தில், என் பெயரை நினைவு வைத்து, எனக்கு அழைப்பு தந்திருக்கிற அவரின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்போது அவரை சந்திக்க வாய்ப்பில்லாமல் திரும்ப வந்துவிட்டேன். அடுத்த முறை அவரை சந்திக்கும் வாய்ப்பை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.

Thursday, September 26, 2013

பரிகாரம்!



பள்ளிவாசல் உண்டியலில்
பத்து ரூபாய் போட்டேன்!
பாவ அழுக்கைப்
பனி மறைத்தது!


பாதையில் கிடந்த
கண்ணாடிச் சில்லை அகற்றினேன்!
பாவ அழுக்கைக்
காற்று அசைத்தது!


ஏழை ஒருவனின்
பசித்த வயிற்றுக்காகச்
சிந்திக்கத் தொடங்கினேன்!
பாவ அழுக்கின்

அடையாளமே தப்பிப்போனது!

Sunday, September 15, 2013

சிறுகதை - ரத்தம்


ப்பல் ஹம்சா முதலாளி கட்டித் தந்த பள்ளிவாசல். பள்ளிவாசலுக்கு முன்னால் ஒரு சின்ன மண்டபம். அதைத் தொட்டுக்கொண்டு மூன்று பனை உயரத்தில் இரண்டு மினாரா. மினாராவில் உள்ள பொந்துகளில் புறாக்கள் இறக்கையைப் படபடத்துக் கொண்டு பறந்து கொண்டே இருக்கும்.

புறாக்களின் சத்தம் விக்கல் மாதிரி எப்போதும் ஒலிக்கும். மண்டபச் சுற்றுப்புறத்தில் அவைகள் இட்ட எச்சங்கள் வெள்ளைத் துளிகளாக எங்கும் இறைந்து கிடக்கும்.

      மண்டபத்தில் அகலமாக இரு பக்கமும் திண்ணை இருக்கும். வலது பக்கத் திண்ணையில் சந்தூக்கு ஓரமாக எழும்புக் கூடுமாதிரி சோம்பிக் கிடக்கும். திண்ணையில் இதற்குப் பிறகும் காலி இடம் இருக்கும். மத்தியானம் வெய்யில் சுட்டுப் பொசுக்கும் போது அந்தத் திண்ணையில் ஒருக்களித்து படுத்தால் ஜன்னத்தில் இருந்த மாதிரி ஒரு சுகம் தெரியும். குளு குளுவென்று காற்று ஒரே சீராக வருடிக் கொண்டே கடந்து போகும்.

      ஹம்ஸா முதலாளி அந்த ஊரில் பரம்பரைப் பணக்காரர். ஆனாலும் பணத்துக்கு மேல் பணம் சேர்த்தவர் ஹம்ஸா முதலாளித்தான். சிலோனுக்கு என்னவெல்லாமோ ஏற்றுமதி செய்தார். இரும்பு பெட்டி பூராவும் தங்க, வைர நகைகளாக வழியத்தான் செய்தது.

      பெரிய பெரிய சாக்கு முடைகளில் ரூபாய் நோட்டுக்களை அமுக்கி அமுக்கிக் திணித்து வைப்பாராம். அப்படி ஆயிரக்கணக்கான மூடைகள் முதலாளி வீட்டில் இருக்குமாம்.

      சாக்கு முடைக்குள்ளே இருப்பதால் நோட்டுகள் புழுங்கி மக்கிப்  போயிருமாம். அப்போதெல்லாம் அவர் வீட்டின் மூன்றாவது மாடி தட்டவட்டியில் ரூபாய் நோட்டுக்களை அள்ளிப் போட்டு வெய்யிலில் காய வைத்து மறுபடியும் சாக்கு மூடையிலே திணிப்பார்களாம். அதுக்கென்று தனியே இருவர் வேலைக்கு இருந்தார்களாம்.

      ஹம்ஸா முதலாளி வியாபாரம் கொடி கட்டிப் பறந்து உச்சக்கட்டத்துக்கு போன போது சரக்குகளை சிலோனுக்கு எடுத்துப் போக அவரே சொந்தமாக ஒரு கப்பலை வாங்கினார். தூத்துக்குடி துறைமுகத்தில் ஹம்ஸா முதலாளி கப்பல் பந்தய குதிரை மாதிரி தண்ணீரைக் கீறிக் கொண்டு பாயும்.

      கப்பல் ஹம்ஸா முதலாளி வீட்டுக்கு, விருந்து வராத நாளே இருக்காது. கந்தூரி கணக்கா எப்போதும் பாத்தாலும் ஜே ஜேன்னு கூட்டம்தான்.

      முஸாபர்களுக்கு தனியா நார் பெட்டியில் சோறும் குட்டி தேக்சாவில் ஆணமும் தயாராக இருக்கும்.

      தாராள மனசுக்காரர் ஹம்ஸா முதாலாளி. அவர் வீட்டுச் சோறும் கறியும் படாத வயிறு அந்த ஊரில் இருக்கவே முடியாது.

      குமர்களுக்கு நிக்காஹ் என்று எவர் வந்தாலும் அவர்களை வெறுங்கையாகத் திரும்ப அனுப்பமாட்டார். புண்ணியவான் தர்ம பிரபு.

      அந்த ஊரில் மட்டுமில்லை எத்தனையோ ஊரில் ஹம்ஸா முதலாளி பள்ளிவாசல் கட்டித் தந்திருக்கிறார்.

      முஸ்லிம்களுக்குத் தான் செய்தார் என்றில்லை எல்லா மதத்துக்காரர்களுக்கும் என்னவெல்லாமோ செய்தார். ஹம்ஸா முதலாளியை அவர்கள் ஆண்டவன்தான் என்று வாய் நிறைய சொல்லுவார்கள்.

      மனிதன் ஆண்டவன் இல்லை என்று காட்ட அல்லாஹ் நாடிவிட்டான் போல.

      கப்பல் ஹம்ஸா முதாலாளிக்கும் கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது.

      எப்படி வருகிறது. எங்கே இருந்து வருகிறது யாருக்குமே தெரியவில்லை. ஆனால் கஷ்டம் வந்தது.

      பூசணம் பூத்துக் கிடந்த மூடை மூடையான ரூபாய் எல்லாம் என்ன ஆச்சு? காயப்போடும்போது குருவி கொத்திக் கொத்தி தூக்கிக் கொண்டு போய்விட்டதா? பள்ளிவாசல் மினாரா பொந்துக்குள் புறாக்கள் தூக்கிக் கொண்டு போய் திணித்து வைத்துக் கொண்டதோ என்னமோ?

      தூத்துக்குடி கடலில் ஹம்ஸா முதலாளி கப்பல் மிதந்து மிதந்து சிலோனுக்குப் போகும் போது நடுக்கடலில் தீடீர் புயல் வீசியது. மினாரா உயரத்துக்கு அலை எழுந்து விழுந்து இடையில் பட்ட எல்லாவற்றையும் சுருட்டி யானை தேங்காயை துதிக்கையில் மடக்கி வாய்க்குள் அமுக்குவது போல விழுங்கி விட்டது. ஹம்ஸா முதலாளி கப்பலும் சமுத்திரத்தின் குடலுக்குள் பொசுக்கென்று புகுந்து விட்டது.

      ஹம்ஸா முதலாளி கலங்கவில்லை. அவருக்கு ஒரு கம்பீரம் கூடவே பிறந்திருந்தது. அதை எந்த சமுத்திர அலையும் விழுங்கவே முடியாது.

      கப்பல் மூழ்கிவிட்ட செய்தி ஹம்ஸா முதலாளிக்கு வந்தது. அந்தச் செய்தியின் கூடவே அஸர் நேர பாங்கும் ஒலித்தது. முதலாளி பூண் போட்ட கைத்தடியை எடுத்தார். துண்டை சட்டைக்கு மேல் வீசிப் புறப்பட்டு விட்டார்.

      இந்தச் செய்தியைத் தெரிவிக்க வேண்டிய இடத்துக்கு அவர் சர்வ சாதாரணமாக நடந்தார். கலக்கமே இல்லை. வழியில் சலாம் சொன்னவர்களுக்கு சிரித்தபடி பதில் சொல்லிக் கொண்டே கடந்தார்.

      ஹம்ஸா முதலாளியும் மவ்த்தாக வேண்டிய மனுஷன்தானே கப்பல் கவிழ்ந்த பின் ரொம்ப காலம் வாழவில்லை.

      ஒருநாள் காலை பதினொரு மணி. பள்ளிவாசலில் ஒரு விவகாரம். அதை விசாரித்துத் தீர்த்து வைக்க வேண்டிய ஹம்ஸா முதலாளி பள்ளி வாசலுக்குள் போய் அமர்ந்தார்.

      பள்ளிவாசல் பின் பக்கம் மையத்தாங் குழி. அங்கே தென்னை மரங்கள் நிறைய உண்டு.

      அந்தத் தோப்பிலிருந்து ஐந்து தேங்காய்களை நாகூர்கனி ராவுத்தர் எடுத்துக்கொண்டு வெளியில் வரும் போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். பள்ளிவாசல் சொத்து ஹராம். இதுவெல்லாம் பசிக்கிற வயிற்றுக்கு தெரியவா போகிறது?

      ஹம்ஸா முதலாளி தோரணையாக உட்கார்ந்து விசாரித்தார்.

      ''வேய் நாகூர்கனி ஏன் வேய் தேங்காயை பறிச்சீரு?''

      “மொதலாளி அல்லா மேல் சத்தியமா நான் பறிக்கல. நம்ம ராவுத்தர்கனி கபுரு பக்கத்தில் இந்த கொல விழுந்து கிடந்துச்சி. நான் அத எடுத்துக் கிட்டு வந்தேன். மோதினாரிட்ட குடுக்கணும், ஆனா நான் குடுக்கல. தெரியாம எடுத்துட்டுப் போய் விக்க நெனச்சேன். தப்புத்தான் மொதலாளி இந்த ஒரு வாட்டி அல்லா ரசூலுக்காக மன்னிசிருங்க. புள்ளகுட்டிக்காரன் பசி தாங்க முடியல செஞ்சிட்டேன். வெட்கமா இருக்கு மன்னிச்சிருங்க”

      நாகூர்கனி ராவுத்தர் அழுதார். ஹம்ஸா முதாலாளிக்கு முகம் வியர்த்து விட்டது.

      ''வேய் இது தப்பு. அல்லாவூட்டுச் சொத்த திருடக் கூடாது. பள்ளிவாசல்ல கிடந்தா அது பள்ளிவாசலுக்குத்தான் சொந்தம். நம்ம பசிக்காக அத தூக்கிட்டுப் போவக் கூடாது. வயசான மனுஷன் நீரு. நல்லாத்தான் ஒரு காலத்துல வாழ்ந்தீரு. என்ன செய்ய ரப்பு சோதிச்சிட்டான் சரி சரி.... பள்ளிவாசல் உண்டியலில் ரெண்டு ரூபா போட்டுறும்''.

      ''முதலாளி ரெண்டு ரூபாவுக்கு நான் எங்கே போவேன். அது இருந்தா நான் ஏன் இத தூக்கிட்டுக் கள்ளன் மாதிரி போவப் போறேன்.”

      நாகூர்கனி ராவுத்தர் குலை நடுங்கினார்.

      ''வேய் அதெல்லாம் சொல்லக்கூடாது. தண்டனை  தண்டனைதான். என்ன செய்வீரோ எனக்குத் தெரியாது. அடுத்த ஜும்ஆவுக்குள் ரெண்டு ரூபா பள்ளிவாசலுக்கு வந்திரணும். சரி சரி... மத்தவங்கள்  எல்லாம் போகலாம்”

      நீதி விசாரணை முடிந்து விட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. மோதினார் ஓரமாக நின்றார். நாகூர்கனி ராவுத்தர் தலைக் குனிந்து விக்கிக் குலுங்கினார்.

      ஹம்ஸா முதலாளி கைத்தடியை ஊன்றி எழுந்தார். நாகூர்கனி ரவுத்தரைக் கடக்கும் போது மெதுவாக ''வேய் இங்கெ வாரும். பொறவு என்ன வந்து பாரும் சரி சரி அழாதீரும்.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

      பள்ளி வாசலின் படிக்கட்டில் வலது காலை தூக்கி கீழே வைத்தார். இடது காலை தூக்கி வைக்கும் முன் தடாலென்று சரிந்தார். ரூஹு அடங்கி விட்டது.

      ஊரே கூடியது. கப்பல் ஹம்ஸா முதலாளி மவ்தாகி விட்டார். நாகூர்கனி ராவுத்தரை பிறகு ஏன் வந்து பார்க்க சொன்னார். வீட்டுக்கு வரச் சொன்னாரா? மஹ்ஸருக்கு வரச் சொன்னாரா?

      மறு நாள் ஊர் முழுக்க கூட்டம். மலையாளத்தில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தனர்.

      கப்பல் ஹம்ஸா முதலாளி கட்டித் தந்த பள்ளி வாசலுக்கு அவர் ஜனாஸா பயணம் ஆனது.

      செந்தூக்கில் மனிதர்களின் தோளுக்கு மேல் பச்சைத்துணி போர்த்தப் பட்டு பவனி வந்தது. அந்த செந்தூக்கும் அவர் செய்து தந்ததுதான். தூத்துக்குடி கடலில் ஹம்ஸா முதலாளி கப்பல் அசைந்து அசைந்து செல்வது போல மக்கள் கடலில் அவரின் ஜனாஸாவைச் சுமந்து செந்தூக்கு பயணமாகி கொண்டிருந்தது.

      ஹம்ஸா முதலாளி குடும்பம் அதற்குப் பிறகு தலை தூக்கவே இல்லை.

      முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை.

      ஹம்ஸா முதலாளி கட்டித்தந்த மண்டபத்தின் திண்ணையில் அதே செந்தூக்கு இப்போதும் ஒரு அப்பாவியைப் போல படுத்துக்கிடக்கிறது.

      பக்கத்தில் இப்போது இன்னொரு ஹம்ஸா ஒருக்களித்துப் படுத்திருக்கிறார். கப்பல் ஹம்ஸா முதலாளியின் அதே ரத்தம். ஒரே பேரன் ஹம்ஸாதான் படுத்துக்கிடக்கிறார்.

      செந்தூக்கு மரச் சட்டத்தால் ஆன எலும்புக்கூடு. ஹம்ஸா முதலாளி பேரன் எலும்பால் ஆன எலும்புக்கூடு.

      காற்று சுகம் சுகமாக வீசுகிறது. தாதா கட்டிக் கொடுத்த பள்ளிவாசல் ஹம்சாவுக்கு அதில் படுத்திருப்பதே ஒரு கௌரவமாகப் பட்டது.

      நிக்காஹ் விட்டில் கிடைத்த சாப்பாடு வயிற்றில் திடமாகக் கிடக்கிறது. பீடி வேண்டும் துட்டுக்கு எங்கே போக?

      வேலுச்சாமி நாடார் கடையில் ஏற்கனவே கடன் அதிகம். அவன் தரமாட்டான். கப்பல் ஹம்ஸா முதலாளியிடம் தோப்புக்காவல் பார்த்தவன் தான் வேலுச்சாமி. அதை எல்லாம் இப்போது நினைக்கவா போகிறான்.

      பீடி வேண்டும் துட்டு வேண்டும். ஹம்ஸா புரண்டு புரண்டு படுக்கிறார்.

      பள்ளிவாசல் படிக்கட்டுக்கு உள்ளே ஓரமாகப் பச்சைக் கலரில் ஒரு பேப்பர் துண்டு கிடக்கிறது. ஹம்ஸா கூர்ந்து பார்க்கிறார். ரூபாயாக இருந்ததால் படீரென்று எழுந்து அதை நோக்கி ஓடினார். குனிந்து விருட்டென்று எடுத்தார். ஐந்து ரூபாய் நோட்டு. மடியில்  வேக வேகமாக சொறுகிக் கொண்டார்.

      இனி படுக்க முடியாது. பீடி வாங்க வேண்டும். பெட்டிக் கடைக்கு நடந்தார். கடையில் வேலுச்சாமி நாடார் மகன் இருந்தான்.

      கப்பல் ஹம்ஸா முதலாளி வாரிசு, அதே ரத்தம் மிடுக்காக ரூபாயை நீட்டி ஒரு கட்டுப் பீடியும் தீப்பெட்டியும் கேட்டார். கடைக்காரர் பீடியும் தீப்பெட்டியும் அடக்கமாகத் தந்தார். மீதிச் சில்லறையும் ஹம்ஸா கையில் மிதந்தது.

      ஒரு பீடியை எடுத்தார். இதழில் பொறுத்தினார். தீக்குச்சி நெருப்பில் பீடி நுனி கனன்றது. வாய் முழுக்க புகை மண்டியது. நிக்காஹ் சாப்பாடு வயிற்றுக்குள் திமிங்கலமாக கிடந்தது. அதனைக் கூட பீடிப்புகை ஒரு தட்டு தட்டி விட்டது. அப்பாடா...

      ஹம்ஸா பீடி புகை சுருண்டு பறந்து கலைய நடந்து கொண்டே இருந்தார். காலில் சுரீரென்று ஒரு குத்தல் வலி புடிங்கியது. ஹம்ஸா குனிந்து பார்த்தார். கண்ணாடிச் சில் பாளமாக அறுத்திருந்தது. ரத்தம் கசிந்து மண் தரையில் துளி போட்டது.

      பள்ளிவாசலில் கிடக்கும் பொருள் பள்ளிவாசல் சொத்து. கப்பல் ஹம்ஸா முதலாளி எப்பவோ தீர்ப்பு வழங்கினார்.

      கப்பல் ஹம்ஸா முதலாளியின் ரத்தம் அந்த உடம்பில் இருக்க வெறுத்து வெளிப்பட்டது. கப்பல் ஹம்ஸா முதலாளி போலவே மண்ணில் கலந்தது. கப்பல் ஹம்ஸா முதலாளிக்கு இது இரண்டாவது மவ்த்து.