Friday, May 30, 2014

சொல்லே வரலாறு..!


வார்த்தைகள் வர்க்கங்களை அடையாளப் படுத்துகிறது.

சங்கக் கால மன்னர்கள் பெயர்ப் பட்டியலை எடுத்துப் பார்க்கும் பொழுது அவர்களைக் கலப்படம் இல்லாத தமிழ் மன்னர்களாகப் புரிந்துக் கொள்ள முடியும். தலையாலங்கானத்து நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், சோழன் கரிகால் பெருவளத்தான் இப்படி அந்தப் பெயர்கள் கலப்படம் இல்லாத ஒரு தனி வர்க்கத்தை அடையாளம் காட்டுகின்றன.

உபய குலோத்துங்க சோழன், நந்திவர்மன், மகேந்திர பல்லவன் என்ற பெயர்கள் கலப்பினத்தை அடையாளப் படுத்துகின்றன.

இப்படித்தான் பெயர்ச்சொற்களே வர்க்கத்தைச் சொல்லிக் காட்டிவிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள அக்கிரகாரங்களிலோ, சைவத் திருமடங்களிலோ, வைணப் பகுதிகளிலோ எவரும் சுடலைமாடன், மண்ணாங்கட்டி, அமாவாசை போன்ற பெயர்களை வைக்கவே மாட்டார்கள்.

ஆச்சாரியார், வரதராஜ பெருமான், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் போன்ற நாமாவளிகளைச் சேரிப் பகுதிகள் வைத்துக் கொள்ளவே செய்யாது.

அக்கிரகாரம் சுடலைமாடனைத் தாழ்ந்ததாகக் கருதித் தவிர்த்துக் கொள்ளலாம். இதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

விஷ்ணு வர்தனை சேரிப் புறம் ஏன் தீண்டத்தகாததாக ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.?

இப்படியான கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்காது.

அந்தந்த வர்க்க உணர்வுகளை அவர்களே தீவிரமாகப் பேணிக் கொள்வதால் இது மாதிரி பெயர்ச் சொற்கள் இடம் மாற முடியவில்லை.

மராட்டியத்தில் பீமராவ் தமிழகத்தில் சுடலைமாடன் போன்ற சொல். இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக்கு தலைமையேற்ற டாக்டர்.அம்பேத்கர் பெயர் பீமராவ்தான். அதை மாற்றிவிட அம்பேத்கர் தீர்மானிக்கிறார். அதனால் அவருடைய நேசத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அம்பேத்கர் என்பவரின் பெயரைத் தன் பெயராக்கிக் கொண்டார்.

ஆசிரியர் அம்பேத்கர் தலைச்சாதியான பிராமணச் சாதியர். அதாவது அம்பேத்கர் எனும் பெயர் அக்கிரகாரத்திற்குரியது.

பீமராவ் அதைத் தன் பெயராக்கிக் கொண்டார்.

அன்று முதல் இன்று வரை அம்பேத்கர் என்ற சொல்லை அக்கிரகாரம் தலித் வர்க்கத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.

அம்பேத்கர் என்ற பெயர் தீண்டத்தகாதது ஆனது. அம்பேத்கர் அதை வைத்துக் கொண்டதால் அன்றிலிருந்து அந்தப் பெயர் நம்ம ஊர் சுடலைமாடன் ஆகிவிட்டது.

குஜராத்தி மொழியில் நெட்டையன் என்ற பொருளைக் குறிக்கும் ஜின்னா என்ற பெயர் முஹம்மது அலி ஜின்னாவோடு ஒட்டிக் கொண்டதன் பின்னால், அன்றிலிரிந்து அந்தக் குஜராத்தி சொல் மதம் மாறி முஸ்லிம் ஆகிவிட்டது.

குஜராத்தில் கூட ஜின்னா என்ற பெயரை முஸ்லிம் அல்லாதவர்கள் வைத்துக் கொள்வதில்லை.

குஜராத்தி மொழியைத் துளிகூட அறியாத கன்னியாகுமரி வாழ் முஸ்லிம் ஒருவன் ஜின்னா என்ற பெயரை முஸ்லிம் பெயராகத் தாங்கித் திரிகிறான்.

சீதக்காதி என்ற பெயர் தமிழ் முஸ்லிம் பெயராகி விட்டது. இந்தச் சொல்லுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது.

கான் அப்துல் கபார் கான் என்ற பெயரைத் தமிழக முஸ்லிம் கேட்டால் உடனே அவரை உருது முஸ்லிம் என்று சொல்லிவிடுவான்.

இப்படி ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் ஒரு வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது.

வெறும் பெயர்ச்சொல் என்று ஒதுக்கி விடமுடியாது. அந்தப் பெயர்ச்சொல்லுக்குள் சாதித்துவம் இருக்கிறது. மதத்துவம் இருக்கிறது. உயரத்துவம் இருக்கிறது. தாழ்ச்சித்துவம் இருக்கிறது.

இப்படி ஒரு வரலாற்றைத் தொகுத்தால் சமூக வரலாற்றின் யதார்த்த முகம் துல்லியமாக அடையாளப் படலாம்.

Thursday, May 29, 2014

குஜராத்திகளின் ராஜ தர்பார்..!


குஜராத். இது ஒரு விநோதமான மாநிலம்.

இந்தியச் சுதந்திர வரலாற்றைத் தொட்டு, கொஞ்சம் முன்னும் பின்னும் நடந்திருக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது குஜராத்தை ஏதோ ஒரு சாமானிய மாநிலமாகக் கணித்து விட முடியாது.

குஜராத்திகளில் இருவரை புறந்தள்ளி விட்டு இந்தியச் சுதந்திரத்தைப் பற்றி எழுதுகிற எழுதுகோல் உலகின் எந்தச் சரித்திர ஆசிரியரிடமும் இல்லை.

பனியா இனத்தில் பிறப்பெடுத்த மோகன்லால் கரம் சந்த் காந்தி. இந்த கரம்சந்த் காந்தி சட்டம் படிக்க லண்டன் சென்றார், பின்னாளில் மஹாத்மா காந்தியாக அறியப் பட்டார்.

இந்திய வரலாற்றில் இவருடைய கோட்பாட்டையும் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மாற்றுச் சிந்தனையோடு செயல்பட்ட தியாகச் சுடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் மஹாத்மா காந்திக்குக் கிடைத்த பிரபகண்டா மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.

காந்திஜி, ஐரோப்பிய ஆடைகளை உதறித் தள்ளி விட்டுப் பக்கிரித் தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்தி வரலாற்றின் சக்கரவர்த்தி போல் நிலைத்து இருக்கிறார்.

இந்தியா, துண்டாடப்படக் கூடாது, அப்படி ஒன்று நடந்தால் என் பிரேதத்தின் மீது நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தியப் பிரிவினையை ஒப்புக் கொண்டு இருந்தார்.

மற்றொரு பனியா இனத்தைச் சார்ந்த குஜராத்திக்காரர் முகம்மதலி ஜின்னா, ஒன்றிணைந்த இந்தியா இனி ஒரு போதும் இருக்க நியாயம் இல்லை எனக் கூறி பாக்கிஸ்தான் பிரிவினைக்கு நியாயம் கற்பித்தார்.

இந்த முகம்மதலி ஜின்னாவின் தந்தையைப் பெற்ற தந்தை அதாவது தாத்தா தான் முஸ்லிமாக மாறினார். அதுவரை குஜராத்தின் பனியா இந்துதான் ஜின்னாவின் பாரம்பரியம்.

முகம்மதலி ஜின்னா, காந்தியின் தத்துவங்களுக்கு எதிர்ப்புறம் நின்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். இவரும் லண்டனில் படித்த சட்ட மேதைதான்.

ஜின்னா, காந்தியைப் போன்று அல்லாமல், படாடோபமான தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

வெள்ளைக்காரப் பிரபுகளைப் போலத்தான் ஆடை அலங்காரங்கள் இருக்கும். எல்லா நேரங்களிலும் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார். அவர் காலத்தில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் தாடி தொப்பிகளோடுக் காட்சி தந்து கொண்டு இருந்தனர். ஜின்னா மழுங்கச் சிரைத்த பிரிட்டிஷ்காரன் போல் இருப்பார். இவரையும் பிரபகண்டாதான் இந்தியா முழுவதும் பிரபல்யப் படுத்தியது.

குஜராத்தி பனியா காந்திக்கு எளிமைத் தோற்றம் மஹாத்மா தன்மையைக் கொண்டு வந்து சேர்த்தது. மற்றொரு குஜராத்தி பனியா ஜின்னாவிற்கு படோடபத் தோற்றம் அரசியல் தலைமையைக் கொண்டு வந்து சேர்த்தது.

காந்தி ஒரு பூரண இந்து தருமத்தை வாழ்ந்து காட்டியதாக ஒப்புக் கொள்கிறார்.

ஜின்னாவிடம் பூரணமான இஸ்லாம் வாழ்க்கை இருந்ததா? என்ற கேள்விக்கு இன்று வரை சரியான விடை யாருக்கும் தெரியாது.

காந்தி, கஸ்தூரிபா அம்மையாரை மத தர்மப்படித் திருமணம் செய்து கொண்டவர்.

ஜின்னா கிறிஸ்தவ பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார்.

காந்தியின் மூத்த மகன் கிறிஸ்தவனாக, முஸ்லிமாக மாறி மாறி வாழ்வை அமைத்துக் கொண்டவர்.

ஜின்னாவின் மகள் ஒரு போதும் முஸ்லிமாக வாழ்ந்தவரே கிடையாது. இன்றைய பாம்பே டையிங் நுஸ்லி வாதியா குடும்பத்து நபரைத் திருமணம் செய்து கொண்டவர். அதாவது பாம்பே டையிங் இன்றைய அதிபர்களாக இருப்பவர்கள் ஜின்னாவின் பேரப் பிள்ளைகள்.

காந்திஜி சிறைச் சாலைகளைப் பல முறை சந்தித்து போராட்ட வாழ்க்கை மேற்கொண்டு இருந்தவர்.

ஜின்னா சிறைச்சாலையின் வாசலைக் கூட தொட்டவர் இல்லை. ஒரு ஸ்டெனோ, ஒரு டைப் ரைட்டர் என்னுடைய அறிக்கைகள் மூலம் பாக்கிஸ்தானைத் தனி நாடாகக் கண்டவன்”, என வரலாற்றுப் பெருமையைத் தானே சொல்லிக் கொண்டவர். இதில் உண்மையும் இருக்கிறது.

காந்தியினுடைய பெயரில் உள்ள சொற்கள் அனைத்தும் குஜராத்தி மொழியில் முழுமையாக இல்லை. முகம்மதலி ஜின்னா இந்தப் பெயரில் முகம்மதலி அரபு மொழி. ஜின்னா தனி குஜராத்தி மொழி.

ஜின்னாவின் தந்தை பூஞ்சா, அளவுக்கு அதிகமான நெட்டையர். அதனால் ஊர்க் காரர்கள் பூஞ்சாவை ஜின்னா என்று அழைத்தார்கள். ஜின்னா என்றால் குஜராத்து மொழியில் நெட்டையர் என்று அர்த்தம். இந்த ஜின்னாதான் முகம்மதலியோடும் ஒட்டிக் கொண்டது. அவருக்கு பின்னால் ஜின்னா என்பது முஸ்லிம் பெயர் போலயே ஆகிவிட்டது.

காந்திஜியை அவர் சார்ந்த இந்து மதத்தின் வெறியன் ஒருவன்தான் (கோட்சே) ஒருமுறை கொலை செய்ய முயன்றான். அடுத்த முறை சுட்டுக் கொன்றே விட்டான்.

ஜின்னாவை ஒப்புக் கொள்ளாத முஸ்லிம் வெறியன் ஒருவன் ஜின்னாவைக் கொலை செய்ய அவர் மீது கத்தியோடு பாய்ந்தான். ஜின்னாவின் கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. அடுத்த குத்து குத்த அவன் முனைந்த பொழுது ஜின்னாவே தன் கைகளால் கத்தியைத் தட்டி விட்டு அவனைப் பிடித்துக் கொண்டார். ஜின்னா தப்பினார்.

இந்திய வரலாற்றை எழுதிய சில சரித்திர ஆசிரியர்கள், “கத்தியவாராவைச் சேர்ந்த புத்திசாலிகளான இரண்டு பனியாக்களுக்கு இடையில் எழுந்த கருத்து மோதல்களே இந்திய உபகண்டத்தின் 25 ஆண்டுகால வரலாறாக அமைந்து விட்டதுஎன்று குறிப்பிடுகிறார்கள்.

இது முழுவதும் உண்மை அல்ல. ஆனால் உண்மை இல்லாமலும் இல்லை.
சர்தார் வல்லபாய் பட்டேல். பிரிவினைக்குப் பின்னால் சமஸ்தானங்களாகத் துண்டாடிக் கிடந்த இந்தியாவின் நிலையை மாற்றி இரும்புக் கரம் கொண்டு இன்றிருக்கும் இந்தியாவை உருவாக்கித் தந்தவர் என வரலாறு பட்டேலுக்கு முழு சிறப்பைத் தந்தாலும் அது முழு உண்மை ஆகி விடாது. ஆனாலும் பட்டேலுக்கு பெரும் விழுக்காடு சிறப்பு நிச்சயம் சென்று சேரும்.

பட்டேல் அன்றைய மஹாரஷ்டிரக்காரர் என்று அறியப் பட்டாலும், அவர் பிறந்த ஊர் இன்றைய குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. இந்த அடிப்படையில் பட்டேலுக்குள்ளும் குஜராத்தி ரேகை ஓடுகிறது.

இன்று நரேந்திர மோடி என்ற குஜராத்தி பிரபகண்டா மூலம் இந்தியப் பிரதமராக ஏற்றம் பெற்று இருக்கிறார்.

காந்தி எளிய தோற்றத்தைக் காட்டிப் பெருமை கண்டார்.

மோடி எளிய டீ விற்பனையாளன் என்று சொல்லித் தேர்தலைச் சந்தித்து வெற்றி கண்டு இருக்கிறார்.

ஆடைகளில் உயர்வைக் காட்டி ஜின்னா என்ற குஜராத்தி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டர்.

மோடியும் அதே பாணியைப் பின்பற்றி தோற்றப் பொலிவை முன்னிருத்தி ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்று நிர்வாகத் திறமைப் பெற்றுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

மோடியும் தன்னை அப்படி ஒரு அவதாரமாக முன்னிலைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்.

எப்படியோ குஜராத்திகள்தாம் இந்தியாவிற்குப் பலப் பிரச்சனைகளை உருவாக்கித் தந்து இருக்கிறார்கள்.


இன்னொரு மொழியில் சொன்னால், இந்தியாவைத் துண்டாடியும் இருக்கிறார்கள், ஒட்டுப் போட்டு முழுக்கத் தீராத பிரச்சனைகளையும் உண்டாக்கியும் இருக்கிறார்கள்.

Monday, May 26, 2014

அந்தரங்கம்தான் உண்மையானது..!



தி இந்து நாளிதழ் மே 25 இல் ஒரு பேட்டி பிரசுரமாகி இருக்கிறது. பேட்டி எடுத்தவர் ஆர்.ஷஃபீ முன்னா. பேட்டிக் கொடுத்தவர் சேஷாத்ரி சாரி.

இந்த சேஷாத்ரி சாரி ஆர்.எஸ்.எஸ் - யின் அதிகார பூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர். இவற்றையெல்லாம் விட ஆர்.எஸ்.எஸ் தளபதிகளில் அதிமுக்கியமானவர். கூடுதலாக இவர் மும்பை வாழ் தமிழர்.

மோடி என்ன சொல்கிறார்? என்று ஆராய்வதைவிட, பாஜக என்ன நினைக்கிறது? என்று தெரிந்து கொள்வதைவிட, ஆர்.எஸ்.எஸ் என்ன முடிவு எடுத்து இருக்கிறது என்பதிலேதான் பூரணமான உண்மை புரிய வரும். ஆர்.எஸ்.எஸ்-யின் முடிவு இப்படித்தான் என அதன் தளபதிகளில் பலரும் பல நேரங்களில் சொல்லி விடுவார்கள்.

இது ஒரு சாமர்த்தியமான அணுகுமுறை. பாஜகவை யாரும் குற்றம் பிடிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் நிழலல்ல. அல்லது ஆர்.எஸ்.எஸ்- யின் சுவடு பாஜக அல்ல என லாஜிக் பேசி பாஜக தப்பிக் கொள்ள கடந்த காலங்களில் இதைத்தான் கடைப்பிடித்துள்ளது. எதிர்வரும் நாள்களுக்கும் இது சாலப் பொருந்தும்.

சேஷாத்ரி சில கேள்விகளுக்குத் தந்திருக்கும் பதில் அவர் சொந்தப் பதிலல்ல. அதுதான் பாஜகவின் அந்தரங்கப் பதில். ஆர்.எஸ்.எஸ்- யின் அறிவிப்பு.

பேட்டித் தொடர்கிறது..

நடக்கவிருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா? பாஜகவின் ஆட்சியா?”

பாஜக எண்ணுவது போல, அது தனி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கும் போதும், தே.ஜ.கூ ஆட்சியாக இருக்க வேண்டும் என்று அது விரும்புவதையே ஆர்.எஸ்.எஸ் வரவேற்கிறது. இதில் பாஜக நல்லாட்சிகளுக்காகப் பத்தடிகள் எடுத்து வைத்தால் அதனுடன் கூட்டணிக் கட்சிகளும் பத்தடிகள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும்.

இந்தப் பதிலைச் சிந்திக்க வேண்டும்.

பாஜக நல்லாட்சிக்காகப் பத்தடிகள் எடுத்து வைத்தால்இந்த வாசகம் தெளிவாக இருக்கிறது.

பாஜக எது நல்லாட்சி என்று முடிவு செய்கிறதோ அந்த முடிவை அமைக்க பத்தடிகள் எடுத்து வைக்கும். கூட்டணிகள் அதனோடு சேர்ந்து பத்தடிகள் தூக்கிக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும் என்கிறார்.

பாஜகவின் மனோபாவம் கொண்ட நல்லாட்சிக்கு அதன் கூட்டணிகள் ஒத்தூத வேண்டும். அதாவது கூட்டணிகளின் சுயத்தன்மைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும். அதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வழி என ஆர்.எஸ்.எஸ் அறிவித்துவிட்டது.

இது தே.ஜ.கூ ஆட்சியெனில் மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சி தலைவர்களை அழைக்க பாஜக தனித்து முடிவெடுத்தது ஏன்?”

இது பாஜகவின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும் இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப் படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடப்பட்டதுதான் இந்த அழைப்பு. இந்த விஷயத்தைத் தமிழகத்தில் ராஜபக்சேவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்ல மெல்ல புரிய வைப்போம். அவர்கள் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

சேஷாத்ரி சாரி, ஆர்.எஸ்.எஸ் -யின் அந்தரங்கத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

பாஜகவின் இந்த முடிவு தன்னிச்சையான முடிவு அல்ல. கூட்டணியின் முடிவா? என்றால் அதுவும் இல்லை.

அப்படியென்றால் யாரைக் கலந்து பாஜக முடிவு எடுத்திருக்கிறது? மேலும் வெளியுறவுக் கொள்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இதில் அடையாளம் இருக்கிறது என்று சொல்லும் சேஷாத்ரி சாரி அந்த வெளியுறவுக் கொள்கை ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைதான் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறார்.

இந்த உண்மைகளை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் மெல்ல மெல்லப் புரிய வைப்போம். புரிய மறுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்பதையும் தெரிவிக்கிறார்.

அது நாட்டிற்கு நல்லதல்ல என்று சொன்னால் என்ன பொருள்?

புரிந்துக் கொள்ள இயலாத தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை. தேசத் துரோகச் சட்டம் உங்கள் தலையில் வந்து அமரலாம்.

ஐ.நா தீர்மானத்திற்கு முன்பாக தமிழகத்தின் பாஜக தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபொழுது அதன் தேசிய தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?”

கருத்து கூறினார்கள். அது பரவலாக செய்திகளில் வரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம். பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல பல பிரச்சனைகள் இந்த உலகத்தில் உலக மயமாக்கப் பட்டு அவை தீர்க்கப் படாமலேயே உள்ளன. எனவே இந்த பிரச்சனை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப் படுவதுதான் சிறப்பாக இருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை அவர்களின் முக்கிய விருப்பங்களின் பெயரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீர்க்கப் பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம். இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.

சேஷாத்ரி சாரியின் இந்தப் பதிலில் ஆர்.எஸ்.எஸ் -யின் சரியான முகம் தெரிகிறது.

வரலாற்றை எப்பொழுதுமே தன் வலைக்குள் இழுத்து முடக்கிக் கொள்ளும் கலையில் ஆர்.எஸ்.எஸ் அசகாய சூரன். இங்கேயும் அந்த ஞான வெளிப்பாட்டை சேஷாத்ரி சாரி பதிவு செய்கிறார். காஷ்மீரும் பாலஸ்தீனமும் சந்தித்துக் கொண்டிருப்பது அதன் பிறப்பில் இருந்து நடந்துக் கொண்டிருப்பது. இலங்கைப் பிரச்சனை போன்றது அல்ல அது.

இலங்கையின் பிரிவினையை ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது. இதில் எங்கேயோ ஒரு அடிப்படை வரலாறு உருத்திக் கொண்டிருக்கிறதோ? என்ற ஐயம் நமக்கு எழுகிறது. இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் குடியேறிவர்கள்தாம். இலங்கைவாசிகள் இலங்கை மலையகப் பூர்வகுடிகள்.

இந்த வரலாறு நினைவுக்கு வரும்பொழுது சிங்களவர்கள் என்கின்ற இனம் வங்காளம், குஜராத், ஒரியா பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறிய குடியேறிகள்தாம். அவர்கள்தாம் சிங்கள குடிகளாக அறியப்படுகின்றனர் என்ற உண்மை, உண்மையானால் இலங்கையில் இன்று நடப்பதும், தமிழக - இந்திய வடபுல வர்க்கத்தினரின் மோதலாகத்தான் ஆர்.எஸ்.எஸ் ஆழ்மனதில் பதிவு செய்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் உறுதி ஆவதால்தான், இலங்கை பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம் என்ற ஆர்.எஸ்.எஸ்-யின் கருத்தை சேஷாத்ரி சாரி பதிவு செய்து இருக்கிறார்.

இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்து இருக்கலாமே? “

எங்கள் விளக்கத்தை பொது மக்கள் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்து விட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.

ஆர்.எஸ்.எஸ்- யின் முழு பூசணிக்காய் இலையில் வந்து விழுந்துவிட்டது.

நாங்கள் இலங்கைப் பிரச்சனையை இப்படித்தான் அணுகுகிறோம் என்று மக்கள் கவனத்துக்கு கொண்டு வரத்தான் செய்தோம். ஆனால் தமிழகத்தில் எங்களோடு கூட்டணியில் இருந்த அரசியல் சாதுர்யவான்கள்தடுத்து விட்டனர் என்கிறார்.

யார் இந்த சாதுர்யவான்கள்? வைகோவா? ராமதாஸா? தமிழருவி மணியனா? விஜயகாந்தா? சாரிதான் விளக்க வேண்டும்.

இத்தனைத் தமிழகத் தலைவர்களும் பாஜக உண்மை சொல்ல வந்ததைத் தடுத்த குற்றத்திற்குரியவர்கள் ஆகிறார்கள். மேலும் தமிழக மக்களின் செவிகளையும் கண்களையும் மறைத்து பாஜகவுக்கு வாக்குக் கேட்டு வீதியுலா வந்து வாக்குகளை வாங்கித் தந்த கொடும் குற்றத்துக்கும் உள்ளாகிறார்கள்.

இது நம் அரசியல் அமைப்பின் குறைபாடுஎன்று சாரி குறிப்பிடுவது எதையென்று புரியவில்லை.

கூட்டணி - என்றால் தலைமை ஏற்போரின் பாதம் பற்றி நடப்பதைத் தவிர வேறு தனிப்பட்ட கோட்பாடுகளை கூட்டிக் கொண்டு வரக்கூடாது என்று தெளிவாக புரிய வைக்காத குறைபாடுதான் நம் அரசியல் குறைபாடுஎன்று சாரி குறிப்பிடுகிறாரா?

பாஜக எவ்வளவு சாதுர்யமாகத் தன் சக அரசியல் தலைவர்களைத் தான், தனி அதிகாரத்தில் வந்தவுடன் காவுக் கொடுத்து விட்டது பார்த்தீர்களா?

சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பாஜக சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சர்க்கவர்த்தி என்கிறீர்களா?”

இது உலகின் எந்த உலக நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத்தின் வெற்றி. இதில் அதிக அளவில் வாக்களிப்பு நடைப்பெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றிக் கிடைத்துள்ளது. இதை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

இந்த ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைக்கும் எனவும் இதுதான் நாட்டிற்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்திற்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப் பட்டிருக்கின்றன.

ராஜபக்சே போன்ற சார்க் நாட்டு அதிபர்களைப் பாஜக அரசு மோடி பதவியேற்புக்கு அழைத்ததில் மறைபொருள் வெளிப் பாய்ந்துவிட்டது.

பாஜகவும் மோடியும் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக எமக்குத் தந்த வெற்றி. இதை அண்டை நாடுகள் புரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் தீர்மானிப்பதுதான் இனி இந்தியா. அந்த உரிமையை இந்திய மக்கள் மனப் பூர்வமாக எமக்குக் கொடுத்து விட்டார்கள். அதனால் இந்த முடிசூட்டு விழாவிற்கு வாருங்கள்.

எங்கள் ராஜ்ஜிய ராஜாவின், ராஜ்ஜிய பரிபாலனத்தையும் எங்களின் ராஜ்ய அதிகாரத்தையும் நீங்கள் உணர்ந்துக் கொள்ளுங்கள் என்பதை வெளிக்காட்டத்தான் சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்து இருக்கிறோம் என்ற தகவல் தரப்பட்டு விட்டது.

இதுதான் ஆர்.எஸ்.எஸ் -யின் நீண்ட கால லட்சியம். அதற்கு வாய்த்து .இருக்கும் வாய்ப்பு இது என்பதைத் தெளிவு படுத்திவிட்டார்.

அண்டை நாடு, நேச நாடு என்ற வாசகங்கள் எல்லாம் வெளிப்புறத்துக்குச் சொல்லும் வேடிக்கை மொழிகள். அந்தரங்கத்தில் இதுதான் எங்கள் ராஜ்ய பரிபாலனம் என்ற உத்தரவாதத்தைத் தருவதற்குத்தான் சார்க் நாட்டுத் தலைவர்களின் அழைப்பு.


பாஜகவின் போலிப் பரிதாப முகத்தை தேர்தலுக்கு முன்னால் தூக்கித் திரிந்த அதன் நேசக் கட்சிகளே! உங்களுடைய பரிதாபத்தை வரலாறு அவமானகரமானதாக நிச்சயம் பதிவு செய்து விட்டது.

Saturday, May 17, 2014

யார் சொன்னது எதிர்பாராத வெற்றி என்று...?


இந்தியத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளிவந்துவிட்டன. பாஜக 340 ஐத் தொட்டு ஒடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அறுபதைத் தொடுவதற்கு எம்பிக் கொண்டிருக்கிறது. பிற கட்சிகள் அல்லது மாநில இயக்கங்கள் 150 ஐ சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இடதுசாரி இயக்கங்கள் பத்தைத் தாண்டி இருபதை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சுருக்கமாக பாஜக கூட்டணி என்ற தேர்தலுக்கு முன்னிருந்த கோட்பாட்டைத் தாண்டி தனியணியேஎன பகிரங்கப் படுத்துமளவுக்கு வெற்றி எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது.

இந்த வெற்றி எதிர்பாராத ஒரு வெற்றி என்ற கருத்து எல்லோருக்கும் உடன்பாடானது அல்ல.

பாஜகவோ அதன் கூட்டணிகளோ இப்படி எண்ணவில்லை. இந்த அணியை எதிர்த்த எதிரமைப்புகள்கூட இது நடந்துவிடலாம் என்ற எண்ணியே இருந்தனர். அல்லது இந்த அபாயம் நடந்துவிடக் கூடாதே என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளுக்குள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் பாஜக கூட்டணியை இணைத்து ஆட்சியை அமைத்துவிடலாம் என்ற உணர்வும் எல்லோருக்கும் இருந்தது.

இந்தக் கணிதத்தை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பாஜக வெற்றி என்பது எதிர்பாராத அதிர்ச்சி வெற்றி அல்ல.

ஆனால் இந்த அசுர வெற்றி திட்டமிடப்பட்டு உழைப்பாலும் கோட்பாட்டாலும் கொண்டு வரப் பெற்ற வெற்றி என்று சொல்லிக் கொள்வது நிலைமைக்கு பின் பிதற்றிக் கொள்ளும் போலித்தனமானதாகும்.

புதிய தலைமுறை வாக்காளர்கள் அதாவது நவீன இளைஞர்கள் அரசியலையோ சமூக தளத்தில் மக்களுடைய அடிமட்டத்தையோ அல்லது சராசரி வர்க்கத்தினரையோ அறிந்திருக்காத நிலையில் நவீன மீடியாவான சமூக வலைதளங்களில் ஏசி அறைக்குள் இருந்து விவாதித்துக் கொண்டு இந்திய சமூகத்தின் ஆழங்களையும் அவசியங்களையும் அறிந்துவிட்டதாக தீர்மானித்து முதிர்ச்சி இல்லாத அரசியல் நிலையில் வழங்கி விட்ட வாக்குகளின் தீவிரம்தான் இந்த அசுர எண்ணிக்கையின் விபரீதம்.

சில மாதங்களுக்கு முன்னால் டெல்லி சட்டமன்ற தேர்தலில் இதே வேகத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவைத் தந்துவிட்டு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலே தங்கள் தவறைச் சரிசெய்துக் கொண்டு இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியை முழுவதுமாக டெல்லியில் விளக்குமாற்றால் துடைத்துவிட்டார்கள்.

இந்த அவசர முதிர்ச்சியற்ற முடிவுகளால் நடந்துவிடக் கூடிய தீமைகளை அடுத்த ஒராண்டுக்குள் இந்த அவசர புதுசுகள் புரிந்துக் கொள்வார்கள்.

நான் இளைய வர்க்கத்தைச் சிந்தனை பலமற்றவர்கள் என்று கருதியதாகத் தவறாக நினைக்க வேண்டாம். இவர்கள் சிந்தனைக்கு வழிகாட்டிகளான மீடியாக்கள் இவர்களை உருவாக்குகின்றனர். இவர்கள் அரசியல் தீர்வுகளை உருவாக்கவில்லை என்பதுதான் என் வாதம்.

இந்தியாவினுடைய உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்கள் பாஜகவுக்கு அசுர பலம் வர ஆவண செய்துவிட்டன. பாஜகவைப் பொருத்தளவில் அது சிறுபான்மை அழிப்பு இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இன் செல்லப் பிள்ளை. அதே நேரத்தில் தீவிரமான சண்டிப் பிள்ளை என்ற விமர்சனம் எப்பொழுதும் உண்டு.

இது பிழையான விமர்சனம் என்று நிரூபிக்க இன்றுவரை இந்தியத்தில் உண்மையான தெளிவான ஆதரங்கள் நிச்சயமாக இல்லை என்பதும் உண்மை.

ஆனாலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழக் கூடிய உ.பியிலும், பிஹாரின் சில பகுதிகளிலும் சிறுபான்மையினர் வாக்கு பாஜகவை விலக்கிவிடவில்லை. இதற்கென்ன காரணம்?

வட மாநிலத்தில் சிறுபான்மைச் சமுதாயங்களை மோடியும் , பாஜகவும் மோசமான முறையில் சிதைத்து இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அடுத்தும் தேவைப் பட்டால் இது நிகழ்த்தப் படும் என்பதும் சத்தியம்.

இங்குதான் ஆழமாக அரசியல் கண்ணோட்டத்தோடு சிந்திக்க வேண்டும்.

பாஜகவுக்கு உயிர் வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமானால் இந்துத்துவா கோஷம் உயிர் பெற்று இருக்க வேண்டும். இந்துத்துவா என்பது இந்து தத்துவம் என்று புரிந்துக் கொள்ள கூடாது.

பாஜக அதில் கவனமாக இருக்கிறது.

இந்துத் தத்துவத்தை இந்தியாவிற்குள் முன்வைத்து அரசியல் நடத்துவது பல ஆபத்துகளை இந்துத்துவாவிற்கே ஏற்படுத்தும் என்பது எல்லாரையும்விட பாஜகவுக்கே நன்குத் தெரியும்.

இந்துத்துவாவிற்கு எதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த எதிரிகளைச் சாட வேண்டும். அந்த எதிரிகளும் பாஜகவை எதிர்ப்பதற்கு பதிலாக இந்துத்துவாவை எதிரியாக கருதித் தாக்க முற்பட வேண்டும் என்று ராஜரீக தந்திரத்தை ஆர்.எஸ்.எஸ், அதன் கைப்பிள்ளையான பாஜகவைக் கொண்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ், பாஜகவினுடைய இந்தச் செயல்பாட்டை பேயாக்கி மோடியென்ற நபரின் நடவடிக்கைகளை பிசாசாக்கி இதிலிருந்து சிறுபான்மையினரைக் காக்க நாங்களிருக்கிறோமென்று பூச்சாண்டிக் காட்டி தங்கள் அரசியல் பலத்திற்கு ஆதரவாக வைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த யதார்த்த உண்மையை சிறுபான்மையினர் புரியத் தொடங்கினர். ஆனாலும் அந்தப் புரிதல் தவறான புரிதலாக இருந்த காரணத்தினால் பாஜக தனது எண்ணிக்கையை இந்தத் தேர்தலில் உயர்த்திக் கொண்டது.
முதல் கட்டமாக பாஜகவின் இந்த வெற்றியை இந்த மாதிரி கணிப்பில் இருந்து ஆராயத் தொடங்குவோம்.


இதை முதல் தகவலாக பதிவு செய்கிறேன். பாஜக தனது அரசு பொறுப்பை ஏற்கட்டும். அதற்குப் பின்னால் இன்னும் ஆழமாக அகலமாக உற்று நோக்குவோம்.

பாஜகதான் மதவாதக் கட்சியா..?


இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டின் தேர்தல் முடிவு நமக்கு பல செய்திகளைச் சொல்கின்றது.

பாஜகவின் தாக்கம் தமிழகத்தில் முளைவிடவில்லை. மோடி அலை என்ற பம்மாத்து தமிழகத்தில் தலையெடுக்கவில்லை. இந்த உண்மை எப்படி நிகழ்ந்தது?

பாஜக ஒரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியது. திமுக இன்னொரு கூட்டணியை உருவாக்கியது. பாஜக கூட்டணிக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன.

ஒன்றை பாஜகவே எடுத்துக் கொண்டது. மற்றொன்றை பாட்டாளி மக்கள் கட்சி பறித்துக் கொண்டது.

பாஜக கன்னியாகுமரியில் வெற்றி முகம் காட்டி இருக்கிறது. சிறுபான்மைச் சமுதாய கிருத்துவர்களும் முஸ்லிம்களும் கணிசமாக இருக்கக் கூடிய தொகுதி கன்னியாகுமரி தொகுதி. ஆனாலும் லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று பாஜக வெற்றிப் பெற்று இருக்கிறது.

தமிழ் நாட்டில் அநேகமாக 100% கல்வி அறிவு பெற்ற மாவட்டம் அது. கல்வி அறிவு பெற்றால் பாஜக வென்றுவிடும் என்று முடிவு கட்டக்கூடாது. நமது கல்வியறிவு ஒரு வினோதமானது. சுயநலக் கணக்குப் போடுவதில் கெட்டிக் காரத்தனமானது.

கன்னியாகுமரி வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஆதரவு தரக்கூடிய பழக்கமுள்ளவர்கள். இந்த முறை டெல்லி பாராளுமன்றத்தில் காங்கிரசு அமரப் போவதில்லை என்ற கணிப்பில் பாஜகவுக்குத்தான் அந்த வாய்ப்பு வரும் என்ற நினைப்பில் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

தங்கள் தொகுதி மத்திய கேபினட் அமைச்சர் தொகுதி என்று முடிவு கட்டி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதனால் தங்கள் தொகுதிக்கு மிகப் பெருத்த லாபங்கள் வந்து சேரும் என்று முடுவெடுத்து இருக்கிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணனும் பாஜக தலைவராக இருந்தாலும், தன் தொகுதியில் எல்லா வாக்காளர்களுக்கும் ஏற்றவராகவே தன்னை மாற்றிக் கொள்வார்.

அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை தனது கட்சி கொள்கைகளை நீக்கிக் கொள்வார். இது அந்தத் தொகுதியில் நடந்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு உண்மை. ஆகவே அந்த வெற்றியை பாஜக தனி வெற்றி என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி தான் பிறந்து வளர்ந்த சொந்தத் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத தர்மபுரி தொகுதியில் நின்று வென்று இருக்கிறார்.

தர்மபுரி, சாதிக் கலவரம் உச்சத்தைத் தொட்டுக் கூத்தாட்டம் ஆடி சமீபத்தில்தான் தன் கோர முகத்தைக் காட்டி இருக்கக் கூடிய தொகுதி. இந்த சாதித் தாக்குதலின் காரணமாக அன்புமணி சாதியைச் சார்ந்தவர்கள் கணிசமாக வாழக் கூடிய தர்மபுரியில் சாதி வெறி என்ற கோரமுகம் மாறுவதற்கு முன்னாலேயே அன்புமணி அங்கு நின்று வெற்றி பெற்று இருக்கிறார்.

தர்மபுரியில் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக் கூடிய அவர் சாதியினரில் பெரும்பான்மையினர் அன்புமணிக்குத்தான் வாக்களித்து இருக்கறார்கள். எனவே இது பாஜக கூட்டணிக்கோ, மோடியினுடைய அலைக்கோ வந்த வாக்கு அல்ல.

தமிழகத்தின் மீதமுள்ள 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி சூடி இருக்கிறது. அதாவது பாஜக பம்மாத்து பலிக்கவில்லை. மோடியின் அலை என்பது சிமிழுக்குள் அடங்கிய நீர்க்குமிழிப் போலானது.

இதற்கு என்ன காரணம்?

திமுக கூட்டணியா? தனித்து நின்ற காங்கிரசு சக்தியா? இடதுசாரி இயக்கங்களா?
இந்த மூன்றும் இல்லை. அதிமுக என்ற தனிக்கட்சியின் தேர்தல் உத்திதான் இதற்குக் காரணம்.

ஒருவகையில் பார்த்தால் இந்தியாவிலேயே பாஜகவை பிடறியைப் பிடித்து வெளியே தள்ளிய கட்சி அதிமுகதான்.

ஆனால் இந்த பாராட்டை முழுமையாக அதிமுகவுக்குக் கொடுக்கலாம் என்று நினைக்கும் பொழுது கூடவே ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.

எதிர்க்காலத்தில் தனிப்பெரும் எண்ணிக்கைக் கொண்ட பாஜகவை சில பல ஆதாயங்களுக்காக அதிமுக ஆதரித்து பாஜக நிகழ்த்த இருக்கக் கூடிய பெரிய தீங்குகளுக்கு ஒத்துழைப்புத் தராமல் இருக்குமா? உறுதி சொல்ல முடியாது.

சிறுபான்மை மக்கள் கணிசமாக இருக்கக் கூடிய தொகுதியாக வெளிப்படையாக தெரியக்கூடிய தொகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் எப்படி பதிவாகி இருக்கின்றன என்று அடுத்து கவனிக்க வேண்டும்.

கிருத்துவ சமுதாயத்தவர் அதிகமிருக்கக் கூடிய கன்னியாகுமரி தொகுதி பாஜக கைவசம் போய்விட்டது. அதன் வெற்றிக்கு சிறுபான்மைச் சமுதாயத்தின் ஓட்டும் கணிசமாகப் பங்காற்றி இருக்கிறது.

மயிலாடுதுறை, சிறுபான்மைச் சமுதாய முஸ்லிம்கள் கணிசமாக இருக்கக் கூடிய ஒரு சின்ன தொகுதி. இந்தத் தொகுதியில் முஸ்லிம் அரசியல் அமைப்பைச் சார்ந்தவர் நிற்கிறார். ஆனால் மூன்றாவது இடத்திற்கு வந்து தோற்று இருக்கிறார். அதிமுக வென்று இருக்கிறது.

வேலூர் பாரளுமன்ற தொகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதி. அங்கேயும் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் மூன்றாவதாக வந்து தோற்று இருக்கிறார்.

முதலிடத்தில் அதிமுக வந்து வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாமிடத்தில் பாஜக இருக்கிறது.

ராமநாதபுரம் தொகுதி, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதி அதிமுக ஒரு முஸ்லிமை நிறுத்துகிறது. திமுக ஒரு முஸ்லிமை நிறுத்துகிறது. ஆனால் அதிமுக முஸ்லிம் வெற்றி பெற்று இருக்கிறார்.

திமுக முஸ்லிம் தோற்று இருக்கிறார். இந்தத் தேர்தலில் செல்வாக்குள்ள அத்தனை முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்து இருக்கின்றன. அதிமுகவைக் கடுமையாக எதிர்த்து இருக்கின்றன.

ஆனால் வெற்றி பெற்றது அதிமுக முஸ்லிம்தான். இது எப்படி நடந்து இருக்கும்?

தமிழகத்தினுடைய முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து ஒரு வாத்த்தை வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்களுக்கு நிரந்தர பாதுகாவலன் கலைஞரும் திமுகவும்தான் என்று.

இப்படி தமிழக முஸ்லிம் உணர்வுகளை , தமிழக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தவறுதலாக புரிந்து பழக்கிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

கருணாநிதி அடிக்கடி மேடையில் சொல்லிக் கொள்வார். என் பிணத்தின் மேல் மிதித்துதான் தமிழக முஸ்லிம்களை எதிரிகள் தாக்க முடியும்என்று இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இங்கேயும் பாஜக என்ற பேயை பூதமாக்கி அதிலிருந்து பாதுகாக்க என் பின்னால் வாருங்கள் என்று முஸ்லிம் சமுதாய தலைவர்களை தனக்குப் பின்னால் நிறுத்திக் கொண்டு தன் அரசியலை வளர்த்தவர் கருணாநிதி.

இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளில் துறு ஏறி இருக்கிறது. விழிகளில் காமாலைப் படர்ந்து இருக்கிறது. இவைகளைப் பக்குவமாக கருணாநிதி உருவாக்கித் தன் அரசியல் வாழ்வை அலங்கரித்துக் கொண்டார்.

தமிழகத்தின் முஸ்லிம்களைப் பொருத்தளவில் இதுவரை கூட்டணிக் கட்சிக்குத்தான் அவர்கள் வாக்கைப் பதிவு செய்து வந்தார்கள். பாஜகவை இடது கையால் கூட தொட மாட்டோம் என்று தங்களுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலைப்பாட்டில்தான் முஸ்லிம்களின் வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி வந்து இருக்கின்றன.

மாயவரத்தில் முஸ்லிம்களுடைய வாக்கு அவர் எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அங்கு தேர்தல் களத்தில் நின்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதரலிக்குத்தான் விழுந்து இருக்கிறது. ஆனால் ஹைதரலி தோற்று இருக்கிறார்.

தோழமைக் கட்சிகளான திமுக மற்றும் பிற கட்சிகளின் வாக்கு சாதிய அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிரிந்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் போய் சேர்ந்து இருக்கின்றன.

வேலூர்த் தொகுதி அனைத்து முஸ்லிம் அரசியல் அமைப்புகளும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனாலும் இவரும் தோற்று இருக்கிறார்.

இந்தத் தொகுதியிலும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சாதி மத அடிப்படையில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் வாக்களித்துவிட்டார்கள். அதனால்தான் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்தைத் தொட்டு இருக்கிறது.

பாஜக மட்டும்தான் மதவாத கட்சியா? திமுக எப்படி தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறது? புரிந்துக் கொள்ள வேண்டிய நேரமிது.

ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்.

முஸ்லிம் அரசியல் அமைப்புகள் அதிமுகவை ஆதரிக்காதீர்கள் என்று உறுதியாக அறிவித்து செயல்பட்டு இருக்கின்றனர்.

வேலூரைப் போல, மயிலாடுதுறையைப் போல திமுக அமைப்பினருக்கு முஸ்லிம்களின் வாக்குப் போயிருந்தால் தோழமைக் கட்சி ஓட்டும் அவருக்குக் கிடைத்திருந்தால் திமுக முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மாறாக அதிமுக முஸ்லிம் வேட்பாளர் வென்று இருக்கிறார்.

அதிமுகவினுடைய வாக்குகள் அதிமுக முஸ்லிமுக்கு கிடைத்து இருக்கிறது. முஸ்லிம்களின் ஒரு சிறுபான்மை வாக்கும் அதிமுக முஸ்லிமுக்குப் போய் சேர்ந்து இருக்கிறது.

திமுக மற்றும் அதன் கூட்டணி வாக்குகள் திமுக முஸ்லிமுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. அது சாதி அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. அதனால்தான் திமுக முஸ்லிம் அங்கே தோற்று இருக்கிறார்.

இன்னொரு உதாரணம். இந்த முறை தமிழகத்தினுடைய பிற தொகுதிகளிலும் தமிழக முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் அதே நேரத்தில் காங்கிரசுக்கோ பாஜக கூட்டணிக்கோ வாக்கை மாற்றிப் போட்டுவிடாமல் அதிமுகவிற்கு போட்டு இருக்கிறார்கள்.

அதிமுகவின் வெற்றிகளுக்கு அதுவும் ஒரு காரணம். அதாவது முஸ்லிம் அமைப்புகளின் அரசியல் தலைவர்கள் தவறான புரிதலில் திமுகவின் முதுகிற்குப் பின்னால் அணிவகுத்து இருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் மக்களில் ஓரளவுக்கு கணிசமானவர்கள் இந்தத் தலைவர்களின் அணுகுமுறையை தூக்கித் தூர எறிந்து இருக்கிறார்கள்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம். மத்திய சென்னை தயாநிதி மாரன் தொகுதி, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஒரு தொகுதி. ஆனால் நாற்பதினாயிரத்துக்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறார்.

அதாவது முஸ்லிம்களின் வாக்கின் ஒரு பகுதி அதிமுகவிற்குப் போய்விட்டது.

தலைவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள். மக்களில் ஒரு பகுதியினர் அதிமுகவைப் பார்க்கிறார்கள்.

முஸ்லிம் கட்சிகள் நின்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குத்தான் வாக்களித்திருக்கின்றார்கள். மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் பாஜகவையும் திமுகவையும் சமமான மதவெறி இயக்கம்தான் என்ற முடிவில் கணிசமான முறையில் அதிமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள்.

உடனடியாக இந்தக் கண்ணோட்டத்தோடு அரசியலை ஆராயத்தான் வேண்டும்.