Thursday, November 28, 2013

சங்கடம்தான்

சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் - 1


தமிழக முஸ்லிம்களுக்கும் திராவிடப் பாரம்பரிய இயக்கங்களுக்கும் ஒரு அணுக்கமான உறவு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கொஞ்சம் கூடுதலாகவே இந்தப் பிணைப்பு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தமிழக வரலாற்றில், இந்திய விடுதலைக்குச் சற்று முன்னும் அதன் பின்னுமான காலகட்டங்கள் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. இது இந்திய முஸ்லிம்களுக்கே பொதுவாக இருந்தாலும் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை கூடுதலாக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒரு காலகட்டம்.

காங்கிரஸ் பேரியக்கம், அகில இந்திய முஸ்லிம் லீக் ( ஜின்னா தலைமையிலான லீக்) இந்த இரு இயக்கங்களில் இந்திய முஸ்லிம்கள் கலந்திருந்தனர். முஸ்லிம் லீகில் கணிசமாக இருந்தனர்.

தமிழக முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய விடுதலைக்கு முன்னால் , காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய கூட்டமும், கிலாஃபத் இயக்கத்தினுடைய கூட்டமும் ஒரே மேடையில், ஒன்று காலையிலும் மற்றொன்று மாலையிலுமாக நடந்திருக்கின்றன.

அதாவது காங்கிரசோடு நல்ல தோழமையோடுதான் முஸ்லிம்கள் இருந்தனர்.

ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் தனக்குள் மதத்துவேஷத்தை வைத்திருந்தது லேசாகத் தெரிய ஆரம்பித்தது. இதனை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாக்கி ஊதிப் பெருக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் இயக்க கூட்டமும், கிலாஃபத் இயக்கக் கூட்டமும் நடந்த ஐக்கியத்திற்குக் குந்தகம் நிகழ்ந்து விட்டது.

இதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு காரணம். காங்கிரஸ் பேரியக்கத்தின் மேல்மட்டத்தில் உள்ள பிராமணர் உள்ளிட்ட உயர்சாதி வர்க்கத்தினர் மற்றொரு காரணம்.

காங்கிரஸுக்குக் கீழ் நம்பிக்கையோடு இனி வாழ்வதற்குச் சந்தேகமாக இருக்கிறது என்ற உணர்வு முஸ்லிம்களில் பெரும்பான்மையோருக்குத் தோன்றியது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்தது நிகழ்ந்தது. நாடு துண்டானது.

முஸ்லிம் லீகில் உள்ள தலைவர்களில் பலர் , ஜின்னா உட்பட காங்கிரஸிலிருந்து வெளியேறி லீக் தலைமை ஏற்றவர்கள்தான். காயிதே மில்லத்தும் அப்படித்தான்.

இப்பொழுது தமிழகத்துக்குள் நாம் பார்வையைத் திருப்ப வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் முஸ்லிம்கள் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர்.

ஆனால் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். விடுதலைக்குப் பின் அகில இந்திய முஸ்லிம் லீக் இல்லை. அது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றானது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குறைந்திருந்தாலும் பின்னர் அது முஸ்லிம்களின் தாய்ச் சபை என்ற அந்தஸ்த்தில் வலுப்பெற்றது.

தமிழகத்தில் அப்பொழுது தென்பட்ட இயக்கங்கள் காங்கிரஸ் பேரியக்கம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், பொதுவுடைமை இயக்கம், நீதிக் கட்சி. இன்னும் சில ஜாதீயம் சார்ந்த இயக்கங்கள்.

முஸ்லிம்கள், நீதிக் கட்சியில் இல்லையென்ற அளவிற்குத்தான் இருந்தனர். இந்த நீதிக் கட்சிதான் திராவிட இயக்கத்தின் அம்மா.

பொதுவுடைமைக் கட்சியில் தமிழத்தில் அங்கே இங்கே என்று சில முஸ்லிம் முகங்கள் தெரிந்தன. இதற்கு ஒரு காரணம் இருந்தது. மேற்கு வங்காளத்தில் மௌலானா மொஹானீ , மௌலானா கோலத்தோடு தோளில் ஒரு பையைத் தொங்கப் போட்டு , அந்தப் பைக்குள் ஒரு குவளை, பிரட் பாக்கெட்டு ஒன்று வைத்துக் கொண்டு வங்காளம் முழுக்க பொதுவுடைமைக் கருத்துக்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

திருமறையிலிருந்து சில வசனக் கருத்துக்களைப் பொதுவுடைமைக் கோட்பாடு வசீகரித்துக் கொண்டிருக்கிறது என்ற பாணியில் அவருடைய பேச்சுகள் இருந்தன.

பொதுவுடைமை இயக்கத்தை இந்தியத்தில் தோற்றுவித்த முதுபெரும் தலைவர்களில் மௌலானா மொஹானீயும் ஒருவர்.

மௌலானா மொஹானீயின் சொற்பொழிவுகள் , பொதுவுடைமைக் காரர்களால் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப் பட்டது.

இதனால் இந்தியா முழுவதுமே உள்ள சில முஸ்லிம்கள் பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப் பட்டனர். தமிழகத்திலும் இப்படிக் கொஞ்சம் நிகழ்ந்தது. கேரளத்தில் கொஞ்சம் அதிகம் நிகழ்ந்தது.

ஆனால் திராவிட இயக்கத்தின் தாயென்று சொன்ன நீதிக் கட்சிக்குள் முஸ்லிம்களின் பங்களிப்பு அவ்வளவாக நடக்கவில்லை.

நீதிக்கட்சியிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் வெளியேறி ஈரோட்டு ஈ.வே.ராமசாமி பெரியார் திராவிட இயக்கத்தைத் தோற்றுவிக்கிறார்.

அதுவரை அரசியல் பேசி வந்த பெரியார் , திராவிடக் கழகம் தோற்றுவிக்கப் பட்டபின் சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டு அரசியலைச் சற்று பின்னுக்குத் தள்ளி விட்டார். பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெரியாரின் பேச்சுப் பொருளாகச் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

பிராமண ஆதிக்க எதிர்ப்பைத் தொடங்கியவுடன் , பிராமணர் கொண்டு வந்து சேர்த்திருந்த இந்து தர்மத்தையும், இந்துக் கடவுளர்களையும் எதிர்க்கத் தொடங்கினார்.

இந்தத் தோற்றத்தைத்தான் பெரியாரின் நாத்திகம், அதிகம் வலியுறித்தியது. அதனால் தமிழகத்தில் அடக்கப் பட்ட சாதியினரின் பெருந்திரள் பெரியாரின் இயக்கத்தில் இணைந்து கொண்டது. இந்துக்களில் மற்ற பிற்படுத்தப் பட்ட சாதியினர் மற்றும் மேல் சாதியினர் பெரியாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரியாருக்கு ஒரு நடைமுறைச் சிக்கல் இப்பொழுது ஏற்பட்டது. அவர்தம் பிரச்சாரத்திற்குத் தேவையான மேடைகளைத் தமிழகத்தில் அமைக்கச் சிரமப் பட்டார்.

ஒடுக்கப் பட்ட மக்கள் உடலுழைப்புத் தந்தார்கள். ஆனால் அவர்களிடம் பொருளாதார பலம் இல்லை. பெரியாரின் பிரச்சார மேடைகளுக்கு இதுதான் இடைஞ்சல்.

இந்தக் கட்டத்தில் பெரியார் புத்த, இஸ்லாமிய, கிறித்துவ மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது போல தன் பேச்சை மாற்றி அமைத்தார். இதனால் முஸ்லிம்களில் கணிசமானவர்களின் பார்வையில் பெரியார் புதுமையாகக் காணப் பட்டார்.

தமிழகத்தில் நடந்த மீலாது மேடைகளில் எல்லாம் பெரியாருக்கு முஸ்லிம்கள் இடம் தரத் தொடங்கினார்கள். இதனடிப்படையில் முஸ்லிம்களுடைய ஒரு பெருத்த ஆதரவின் காரணமாகத் திராவிட கழகத்தின் பிரச்சார மேடைகளுக்குப் பொருளாதார பின்புலம் ஏற்படலாயிற்று.

இந்தத் தொடக்கம்தான் தமிழக முஸ்லிம்களுக்கும் திராவிட கழகத்திற்கும் தொடங்கிய உறவின் தொடக்க நிலை.

அன்றைய திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணா, ஈ.வே.கி. சம்பத், பட்டுக்கோட்டை அழகிரி போன்ற தி.க வின் சிறந்த சொற்பொழிவாளர்கள் அடிக்கடி மீலாது மேடைகளில் தென்பட ஆரம்பித்தனர்.

பொதுவாக ஒரு குறை உண்டு. ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள், இன்னொரு மதக் கோட்பாட்டை விமர்சிக்கும் அதே மதத்தில் பிறந்த ஒருவருக்குப் பூதாகர வரவேற்பைத் தருவது இயல்பு. இப்படி வரவேற்றது முஸ்லிம்கள் பக்கமும் நடக்கத்தான் செய்தது. இந்தக் குணக்கேடு இன்றுவரையில் தொடரத்தான் செய்கிறது.

பெரியார் இஸ்லாத்தை ஆதரித்ததினால், இஸ்லாத்திற்குப் பெருமை என்று முஸ்லிம்களில் சிலர் நினைக்கத் தொடங்கினர். அதே மாதிரி அண்ணாவும் அவரைச் சார்ந்த பிறரும் இஸ்லாமியக் கோட்பாட்டைப் பிரமிக்கத் தக்க அளவு வியந்து பேசியதால், இவர்களே நம் நண்பர்கள் என்ற சின்ன நப்பாசையும் முஸ்லிம்களிடம் இருந்தது.

இன்றுகூட இஸ்லாத்தின் பெருமைகளில் ஒன்றாய் நீரோட்ட அடியார்இஸ்லாத்தைத் தழுவி, மீலாது மேடைகளைக் கண்ட போதும் , வலம்புரி ஜான் இஸ்லாத்தைப் பற்றி எழுதிய போதும் , பெரியார்தாசன் அப்துல்லாவாகி மேடைகளைச் சந்தித்த போதும் , வீரபாண்டியனார் இஸ்லாமியச் செய்திகளை இஸ்லாமிய மேடைகளில் விளக்கும் பொழுதும் இஸ்லாத்திற்கு ஒரு புத்துயிர் வந்துவிட்டது போன்ற எண்ணம் எழுந்து விடுகிறது. இவர்களுக்கு அதிகப்படியான வரவேற்பையும் , மேடைகளையும் அமைத்துக் கொடுப்பது முஸ்லிம்களின் வழக்கமும் ஆகிவிட்டது.

இந்த ஒட்டுறவுதான் முஸ்லிம்களில் பெரும்பாலோர் தி.மு.க வுடன் தங்கள் ஆதரவுகளைப் பெருக்கிக் கொள்ள காரணமாக இருந்தது.

அரசியல் நிர்பந்தம் காரணமாகத் தமிழகத்திலிருந்து காங்கிரஸை நீக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் லீகிற்கும் , பொதுடைமைக் கட்சிக்கும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து சுதந்திரா கட்சி தொடங்கி இருந்த ராஜ கோபாலாச்சாரிக்கும் (ராஜாஜி) ஏற்பட்டது .

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் இயக்கமாகத் தன்னைப் பூரணமாக ஆக்கிக் கொண்டாலும், பெரியாரின் தி.க வின் தாக்கம் காரணமாக இதுவும் நாத்திகக் கட்சி என்ற ஒரு எதிர்ப்பு ராஜாஜிக்கு இருந்தது. முஸ்லிம் லீகிலும் சிலருக்கு இருந்தது.

பல அரசியல் காரணங்களால் தி.மு.க வை அங்கீகரிக்க முடியாத கட்டாயம் பொதுவுடைமைக் கட்சிக்கும் இருந்தது.

கருத்து முரண்கள் இருந்தாலும், பொது எதிரியான காங்கிரசை விழுத்தாட்ட இந்த மூன்று இயக்கங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தர முன்வந்தன.

தி.மு.க சட்ட மன்றத்தில், ஐந்தாகத் தொடங்கி ஐம்பதாக பெருத்தது. அடுத்த கட்டம் அண்ணாவே எதிர்ப்பார்த்திராத நிலையில் தமிழக ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணிகள் அதன் பின்னால் ஒன்றொன்றாக உடைந்து போயின.

ஆனால் முஸ்லிம் லீக், தி.மு.க கூட்டணி நன்றாக இறுக ஆரம்பித்தது. தி.மு.க , முஸ்லிம் லீக் கூட்டணியைக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஏற்படுத்திக் கொள்ள முனையும் பொழுது முஸ்லிம் லீக் செயற் குழுவில் சில கருத்துகள் பரிமாறப் பட்டன.

செயற்குழு உறுப்பினர்களில் ஒரு சிலர், “ஒரு நாத்திக அரசியல் இயக்கத்தோடு நாம் கூட்டணி வைக்க வேண்டுமா?” என்றும் கேட்டனர். மேலும் அவர்கள் குறிப்பிட்டனர், “தி.மு.கக்காரர்கள் தங்களுடைய வசீகர பேசாற்றலால் நாளாவட்டத்தில் நம் இளைஞர்களைக் கபளீகரம் செய்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறதுஎன்றும் குறிப்பிட்டனர்.

ஆனாலும் காங்கிரஸை விழுத்தாட்ட இந்தத் தருணத்தில் இதுதான் சரியான வழி என முஸ்லிம் லீக் செயற்குழுவில் மிகப் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தப் பெரும்பானமையினரின் ஆதரவின் அடிப்படையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தி.மு.க முஸ்லிம் லீக் கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை ஒப்புக் கொண்டார்கள்.

Wednesday, November 27, 2013

அந்த மூளை இப்படித்தான் யோசிக்கும்!!!



நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றார். முதல்முறையாகக் கொலை முயற்சி செய்த போது அது தோல்வியில் முடிந்தது. சில நாள்களிலேயே அடுத்த முயற்சி. அதில் கோட்சே வென்றான். காந்திஜீ மரணித்தார்.

கோட்சே தூக்கிலிடப் பட்டதற்குப் பின்னால் உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது அவன் வலக்கையில் முஹம்மது இஸ்மாயில்என்று பச்சைக் குத்தி இருந்தான். முஸ்லிம் ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வது ஒரு அடிப்படை சுன்னத். அந்த அடையாளமும் கோட்சேயிடம் இருந்தது.

இதெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது கோட்சே ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு இருந்திருக்கிறான். தனியாகக் காந்திஜீயின் கொலை நிகழ்வை நிகழ்த்தி இருக்க முடியாது. ஒருமுறைக்கு இருமுறை முயற்சி நடந்திருக்கிறது என்கிற போதே இது ஒரு கூட்டுச் சதி என்பது தெளிவாகி விடுகிறது.

தான் மாட்டிக் கொண்டால் தனது அடையாளம் ஒரு முஸ்லிம் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதிலும் சரியான கவனம் வைத்திருக்கிறான்.

காந்திஜீயின் கொலை நிகழ்வதற்கு முன்புவரை அவன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்ததாகவும் சில காரணங்களால் அதிலிருந்து அவனை வெளியேற்றி விட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் தரப்பு இந்த வழக்கில் ஜோடனை செய்தது.

கோட்சே மாட்டிக் கொண்டால் அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று எப்படி முன்திட்டம் போட்டு இருந்தனரோ அதைப் போலவே , ஆர்.எஸ்.எஸ்ஸிலிரிந்து அவன் விடுவிக்கப் பட்டதும் ஒரு முன்திட்டமே.

கோட்சே காந்தியைச் சுடுவதற்கு முன்னால் லாட்ஜ் எடுத்து தங்கி, தவறான சுகபோகங்களில் அவனும் அவன் கூட்டாளியும் இருந்ததாகப் போலீஸ் தகவல் பதிவாகி இருக்கிறது.

எப்படியோ காந்திஜீயைத் தீர்த்துக் கட்ட ஒரு கோட்சே முழுவதுமாகத் தயாரிக்கப் பட்டான். பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எங்களை விட்டு அவன் போய் விட்டான் என அறிவிப்புச் செய்தது. இதுதான் அவர்கள் பாணி.

பாபர் மஸ்ஜித் தரைமட்டம் ஆனது. அதுபோது கல்யாண்சிங் உ.பி.யின் முதல்வராக இருந்தார். அவரைப் பற்றி பி.ஜே.பி. வானளாவ புகழ்ந்துக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ராணுவப் பாதுகாப்பு அனைத்தையும் மீறி பாபரி மஸ்ஜித் மண்குவியலானது.

இந்த நிகழ்வுக்குப் பின் பா.ஜ.கவால் தலையில் தூக்கி ஆடப்பட்ட கல்யாண் சிங் , பின்னர் பா.ஜ.கவால் மெதுவாகக் கழட்டி விடப்பட்டார். குற்றச் சாட்டுகளின் பெரும்பகுதியைக் கல்யாண் சிங் மீது தூக்கிப் போட்டார்கள். அவர் கட்சியை விட்டு வெளியேறினார். தனிக் கட்சித் தொடங்கினார்.

மீண்டும் பா.ஜ.கவை நாடினார். ஆனால் இன்று வரை செல்லாக்காசாக பா.ஜ.க அவரை ஆக்கி விட்டது.

அதே பாபர் மஸ்ஜித் இடிப்பில் குதியாட்டம் போட்ட பெண்மணி, ஒரு கட்டத்தில் லால் கிருஷ்ண அத்வானி,முரளி மனோஹர் ஜோஷி தோளில் தாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உமாபாரதி. இந்த உமாபாரதியின் மீது மக்கள் வெறுப்பு அதிகரித்த உடனே அவரையும் கழட்டி விட்டது பி.ஜே.பி.

இன்று குஜராத் மோடி, கூத்தாடித் தலைக்கு மேல் அமர்ந்து பவணி வந்துக் கொண்டிருக்கிறார்.

நாதுராம் கோட்சே தயாரான போது காந்திஜீ காணாமல் போனார். குற்றம் நாதுராம் கோட்சேயின் மீது விழுந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புத் தப்பிக் கொண்டது.

பாபரி மஸ்ஜித் வீழ்ச்சியின் எரிச்சலை கல்யாண் சிங் மீது வீசி எறிந்து விட்டு பா.ஜ.க அமைதி அடைந்தது. உமாபாரதிக்குப் பெரிய உற்சவமே நடத்தி விட்டு உமாபாரதி பாதிப்புக்கான போது அவரைக் கழட்டிவிட்டு பி.ஜே.பி நகர்ந்துக் கொண்டது.

இன்று மோடிக்கு அதே ஆரவாரம். இந்தியாவில் எதிர்காலத்தில் ஏதோ ஒரு அருவருப்பான ஜனநாயகக் கொலை , அழிவு நிகழ்த்தப் படுவதற்குத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? மோடிக்கு முன்னால் இருந்தவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுதான் மோடிக்கும் நிகழப் போகிறது. பி.ஜே.பி தப்பிக் கொண்டு அடுத்து யாரையாவது தேடிக் கொண்டிருக்கும்.

மேலே சொன்ன நிகழ்வுகள், அடிப்படையில் ஒரே மாதிரியாக நிகழ்ந்து இருக்கின்றன. இனியும் அதுவே நிகழும். ஆழ்ந்து கவனியுங்கள் இது புரியும்.

தலை நிமிர்த்தி, தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் மோடிக்கு இது புரிய நியாயம் இல்லை. நாதுராம் கோட்சேக்கும் இது புரியவில்லை. கல்யாண் சிங்கிற்கும் இது புரியாமல் போனது. உமாபாரதிக்கும் இந்தத் தெளிவு இல்லாது போனது. அந்தப் பட்டியலில் மோடிக்கு அடுத்த இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி ஏதாவது நிகழும் பொழுதெல்லாம் நிகழ்த்தியவர்களைப் பலி கொடுக்க பி.ஜே.பியும், அதன் தாயான ஆர்.எஸ்.எஸ்ஸும் தயங்கியதே இல்லை.

இதில் உள்ள வேதனை என்னவென்றால், முதல் தயாரிப்பில் காந்திஜீ காணாமல் போனார்.

அடுத்த தயாரிப்பில், பாபர் மஸ்ஜித் செங்கலும் மண்ணுமாக சிதறி வீழ்ந்தது.

அதற்கடுத்து என்ன நடக்குமோ? இதற்குத் தான் மோடி தயாரிப்பு.

நடந்திருக்கும் வரலாறுகள் இப்படி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது!

Sunday, November 24, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–30


கொஞ்சம் அரசியல் பேசுவோம்!


எம்.ஜி.ஆர் 1964-இல் தமிழக மேலவை உறுப்பினராக இருந்த காலம். திமு.கவின் பொதுச் செயலாளர் அண்ணா.

இந்தக் காலக்கட்டத்தில் ஏதோ ஒரு மனக்கசப்பின் காரணமாக தி.மு.கழகத்திற்கும் அதன் தலைமைக்கும் அதிர்ச்சி தர நினைத்த எம்.ஜி.ஆர் தனது M.L.C பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை அண்ணாவுக்கு அனுப்பினார்.

ஒரு சின்ன அதிர்வு தி.மு.க விற்குள் எழுந்தது. எம்.ஜி.ஆரின் ராஜினாமாவைப் பெற்றுக் கொண்ட அண்ணா இரண்டு மூன்று நாட்கள் அமைதிக் காத்தார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் என் கடமைபடம் வெளியானது.

திரையரங்குகள், எம்.ஜி.ஆர் படங்கள் வெளியீட்டு நாள்களில் எப்பொழுதும் நிரம்பி வழியும். என் கடமைவெளியான தியேட்டர்கள், வெளியான நாள்களில் நிரம்பவில்லை. முதல் மூன்று நாட்களும் நிரம்பவில்லை. உடனே எம்.ஜி.ஆர் அண்ணா கேட்டுக் கொண்டதன் பேரில் ராஜினாமாவைத் திரும்ப பெற்றுக் கொண்டேன் என அறிக்கை விட்டார்.

அண்ணாவும் சம்மதம் சொன்னார். அடுத்த தினங்களில் இருந்து திரையரங்குகள் நிரம்பி வழியத் தொடங்கின.

எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்க அங்கேதான் பரிசோதித்துப் பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டார். அதன்பின் எம்.ஜி.ஆர் மன்றங்களை விரிவு படுத்தினார். பொறுமையாகக் காத்து இருந்தார். மதுரை தி.மு.க மாநாட்டில் கருணாநிதியிடம் கட்சிக் கணக்குக் கேட்டு எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பொறுத்தார் பூமி ஆள்வார்என்பது எம்.ஜி.ஆரை பொருத்தளவில் உண்மையாகி விட்டது.

எம்.ஜி.ஆர். தனிக்கட்சித் துவங்க அண்ணா காலத்திலேயே ஒரு அந்தரங்க அடித்தளம் அமைக்க முயன்றார் அது நடவாத போது சுதாரித்துக் கொண்டார். இது உண்மையான அரசியல் தான்.

ஆனால் பிராமணீய மதச் சக்தி இதற்கு முக்கால் பங்குக் காரணம் என்பது போன்ற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.

தமிழகத்தில் காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி இவற்றுகிடையே அரசியல் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் கை சற்று ஓங்கத் துவங்கியது.

அண்டை மாநில கேரளாவைப் போன்று காங்கிரஸ் பேரியக்கம், பொதுவுடைமை தேசிய இயக்கம், முஸ்லிம் லீக், பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் ஃபார்வர்டு பிளாக் (சுபாஷ் சந்திரபோஸ்), ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சி போன்ற இவைகள்தாம் தமிழக அரசியலில் பெரிதானக் கட்சிகளாக வெளித்தெரிந்தன.

நீதிக் கட்சி தென் பிராந்திய காங்கிரஸ் எதிர்ப்பு இயக்க கட்சியாக முன் நின்றது. பசும்பொன் தேவரின் ஃபார்வர்டு பிளாக் ஒரு ஜாதியக் கட்சியாகச் சுருங்கிக்கொண்டது. ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சிஇன்றைக்குள்ள பாட்டாளி மக்கள் கட்சி போன்று மற்றோரு ஜாதிக் கட்சியாக இருந்தது.

காங்கிரசுக்குத் தேவரின் கட்சியையும், ராமசாமி படையாட்சியின் கட்சியையும் சமாளிப்பது சுலபமாக இருந்தது.

காங்கிரசுக்குத் தேவரின் கட்சியை இணைத்துக் கொள்ளவோ அல்லது உடைத்துச் சிதறடிக்கவோ வாய்ப்பு இல்லாது போனது. அதனால் தலித் பெருமக்களைக் கங்கிரஸ் கைவசம் எடுத்து ஜாதி மோதலை உருவாக்கி ஃபார்வர்டு பிளாக்கைச் சமாளித்துக் கொண்டது.

ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சியைக் காங்கிரஸ் எளிய முறையில் ஜீரணித்து விட்டது. ராமசாமி படையாட்சிக்கு மாநில அமைச்சர் பதவி கொடுக்கச் சம்மதித்த உடன் ராமசாமி படையாட்சி தன் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணைந்து கொண்டார்.

மீதமுள்ள கட்சிகள் பொதுவுடைமைக் கட்சி, முஸ்லிம் லீக், நீதிக் கட்சி.

நீதிக் கட்சி பிராமண எதிர்ப்பு மனோபாவத்தோடும் பிராமணர் அடுத்த மேல் ஜாதி வகுப்பாரின் முக்கியத்துவத்தோடும் உருவாக்கப் பட்ட கட்சி. காங்கிரஸ் பிராமண ஆதிக்கக் கட்சி, என்ற கோதாவை முன்னிறுத்தித் திராவிட உணர்வை மேனிலைப் படுத்தி நீதிக்கட்சி பிரச்சாரத்தில் இறங்கி இருந்தது.

காங்கிரஸ் இதனையே வாய்ப்பாக்கி, முகமூடிக்குள் தன்னை மறைத்து நீதிக் கட்சியை உடைத்து திராவிடக் கழகம் உதயமாக உதவியது. இதில் பிராமணச் சதி நிரம்ப உண்டு.

திராவிடக் கழகம் சமூக அமைப்பானது. திராவிடர் கழகம் பின்நாளில் அண்ணா தலைமையின் கீழ் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கமானது.

காங்கிரசுக்கு ஆழ்மனதில் மகிழ்ச்சியும் அதன் முகத்தில் குறுஞ்சிரிப்பும் மலர்ந்தது. இந்த மலர்ச்சியின் பின்னணியில் பிராமணீய அரசியல் ரொம்பவுமே செழித்து இருந்தது.

தன் பெயரளவில் திராவிடர் என்று இருந்தாலும் தி.மு.க. தமிழ் மொழி, தமிழினம் என்ற நம்பத்தகுமான கோஷத்தை முன் வைத்தது. காங்கிரசுக்கும் இதில் உள்ளூர மகிழ்ச்சிதான்.

ஏனென்றால் பெருகி வரும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தி.மு.க. தான் சரியான எதிர் விளைவு எனக் காங்கிரஸ் சரியாகவே தப்புக்கணக்குப் போட்டது.

தி.மு.க. மேடைகள், பொதுவுடைமைக் கோட்பாட்டை ஆதரிப்பது போல் பேசிக்கொண்டு பொதுவுடைமை இயக்கத் தலைவர்களைக் கொச்சைப் படுத்தியது.

பொதுவுடைமை இயக்கம் ஒரு கொலைகாரக் கட்சி போலவும், அரசியல் காரணமாகக் கைதாகி இருந்த பொதுவுடைமை இயக்கத்தவர்களைக் கொலைக் குற்றவாளிகள் போலவும், ஆயுள் கைதிகள் போலவும் தி.மு.க. மேடைகளில் அசிங்கம் அரங்கேறியது.

பொதுவுடைமை இயக்கம் ஏற்கனவே கங்கிரசால் தடை செய்யப்பட்டு இருந்தது. பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் தலைமறைவாகி அரசியல் நிகழ்த்திக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இருந்து விடுபட்டுத் தடை நீங்கி பொதுவுடைமை இயக்கம் தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தமிழகம் எங்கும் தி.மு.க. வின் மேடைகைள் முழங்கிக் கொண்டு இருந்தன.

பொதுவுடைமை இயக்கத்திற்குச் சரியான கவ்ண்ட்டர் தி.மு.க.தான் என்பதைப் புரிந்து கொண்டு தி.மு.க.வின் மீது அதிகம் பாயாமல், பாய்வது போல பாசாங்குக் காட்டி தி.மு.க.வைக் காங்கிரஸ் வளர்த்து விட்டது.

தி.மு.க.வைப் பின்நாளில் சமாளித்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் கணிப்பு. தி.மு.க. ஒரு கட்டத்தில் கங்கிரசின் நினைப்பையும் மீறி கங்கிரசுக்கே கவ்ண்ட்டராக மாறியது.

காங்கிரஸ், பொதுவுடைமைக்குக் கவ்ண்ட்டர் என நினைத்தத் தி.மு.க. தனக்கே கவ்ண்ட்டர் ஆனதால் கொஞ்சம் அதிர்ந்தது. இனிமேல் தி.மு.க.வை உடைத்தாக வேண்டியதுதான்.

பிராமண முகத்தைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் நரித்தனத்தில் இறங்கியது. ஏற்கனவே பிராமணீய அரசியலுக்கு நரித்தனம் வரலாற்று ரீதியாகக் கூடப் பிறந்தது. பிராமணீய அரசியலுக்குப் பல தற்காப்புக் கலைகள் தெரியும்.

தன்னுடைய பிராமண முகத்தையே காட்டித் தாக்குதலைத் தன் மீது நிகழ்த்திக் கொண்டு எதிரியை உடைக்கும் சதியை நிகழ்த்தி தன்னை நிலைப்படுத்துக் கொள்ளும் சாணக்கியத்தனம் பிராமணீய அரசியலின் ராஜதந்திர முறைகளில் ஒன்று.

தி.மு.க.வில் இருந்து ஈ.வே.கி.சம்பத் வெளியேறினார். அவரால் அரசியல் நடத்த முடியவில்லை. தான் தோற்றுவித்தத் தனிக் கட்சியைக் கலைத்து விட்டு இறுதியில் காங்கிரசில் போய் இணைந்துக் கொண்டார். அதாவது எந்தக் கை பின்புலத்தில் தூண்டியதோ அந்தக் கையிலேயே சம்பத் சரணாகதி அடைந்தார்.

அடுத்து எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். இங்கும் பிராமண முகத்தை நிழலாகக் காட்டியது காங்கிரஸ் இயக்கம்தான்.

நீண்ட காலமாகத் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக் கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கம் தானும் இரண்டானது. இது இந்திய அளவில் நடந்தது. தமிழகத்தில் பிளவு பட்டு இருந்த பொதுவுடைமை இயக்கத்தின் ஒரு பிரிவான இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து தி.மு.க.வுக்குக் கவ்ண்ட்டர் எம்.ஜி.ஆர்.தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டது.

அதனால்தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகப் பின்புலம் இருந்து இயக்கத் தொடங்கினார் (தோழர் கல்யாண சுந்தரம் பிராமணர் அல்லர்).

எம்.ஜி.ஆர். தன்னுடையக் கட்சியின் சின்னமாகத் தாமரைப் பூவைத்தான் நினைத்து இருந்தார்.

இது தவறான முடிவு. இந்தச் சின்னத்தின் பின்புலத்தை வெளிப்படுத்தி தொடக்கத்திலேயே உங்களைத் தி.மு.க. நசுக்கி விடும். கொடியில் தாமரைச் சின்னம் வேண்டாம். அண்ணா படத்தையே கொடியில் வைத்துக் கொள்ளுங்கள்என எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தியவர் தோழர் கல்யாண சுந்தரம் என ஒரு மறைமுகத் தகவல் இருக்கிறது.

அகில இந்தியத்திலும் காங்கிரசை ஜீரணிக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு ரகசிய நடவடிக்கையில் இறங்கியது. காங்கிரசுக்குள் ஊடுருவதுதான் அதற்கான வழி எனத் தீர்மானித்துச் செயலில் இறங்கியது.

தோழர் மோகன குமார மங்களம் காங்கிரசுக்குள் சென்றார் மத்திய அமைச்சர் ஆனார். அஸ்ஸாமிலிருத்து வந்த தோழர் பரூவா காங்கிரசுக்குள் நுழைந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். ஒரிசாவில் தோழியர் நந்தினி சத்பதி காங்கிரசுக்குள் நுழைந்தார், மாநில முதல்வர் ஆனார். மேற்கு வங்கத்திலும் பல தோழர்கள் காங்கிரசுக்குள் நுழைந்து உயர் மட்டத்துக்கு வந்தார்கள். காங்கிரசுக்குள் ஊடுருவல் நன்றாகத்தான் நடந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. ஊடுருவல்களைக் காங்கிரஸ் ஜீரணித்து விட்டது.

தோழர் பாலதண்டாயுதம் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பலர் மரணம் அடைந்தார்கள். அதில் தோழர் பாலதண்டாயுதத்தோடு சேர்ந்து மார்க்ஸிய சிந்தனை உள்ள தலைவர்கள், அரசு அதிகாரிகள் மொத்தம் 11 பேர் கூண்டோடு இந்த விமான விபத்தில் இறந்து போனார்கள். இவர்கள் அனைவருமே காங்கிரசுக்குள் கம்யூனிஸ்டுகள் ஊடுருவலை ஆதரித்தவர்களும் செயல் பட்டவர்களும் ஆவார்கள். இந்த விபத்தில் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய தேசிய கம்யூனிஸ்டு கட்சியின் தோழியர் ஜெயலட்சுமி மட்டும் உயிர் தப்பினார். இந்த விமான விபத்து ஒரு சதி என்று அந்த நேரத்தில் சொல்லப் பட்டது.

முடிவாக இந்த ஊடுருவல் முழுவதுமாகத் தோற்றுவிட்டது.

தமிழகத்திலும் தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர் நல்ல எதிரிதான் என ஆலோசனை செய்து வளர்க்கப் பட்ட அ.தி.மு.க.வும் பின்நாளில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தான இயக்கமாக ஆகி விட்டது.

பிராமண எதிர்ப்பு உணர்வை மறைமுகமாகத் தூண்டி விடுவதும் பிராமணீய அரசியல்தான். எதிர்ப் புறத்தில் இருப்பவர்களைப் பிராமண எதிர்ப்பு இயக்கங்களிலேயே சிக்கவைத்து அதை ஜாதி மத மோதல்களாகத் திசை திருப்பி விட்டு அதனால் பிராமணீய அரசியல் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது.

இதனுடையத் தோற்றம்தான் இந்திய தேசிய காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும். இந்த ராஜதந்திரத்தை முறியடிக்க வேற்றுப் பாதையினை இன்றைய அரசியல் சிந்தனைகள் மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.

நாயகப் பேரொளி ம.முஹம்மது மைதீன்!


முஸ்லிம் லீகினுடைய சென்னை மாவட்டத்தின் தலைவர் என் இனிய தம்பி ஜெய்னுலாபிதீனின் அருமைத் தம்பி கவிஞர் ஜமாலுதீன் இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.

வேதனையான ஒரு தகவலைச் சொன்னார். கவிஞர் ம. முஹம்மது மைதீன் இன்று காலமாகி விட்டார். அவருடைய ஜனாஸா வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் செய்தி சொன்னார்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்)

இந்தச் செய்தி வந்த நேரத்தில் இருந்து கவிஞர் ம.மு. மைதீன் பற்றிய நினைவோட்டங்கள் என்னை அலைக்கழித்தன.

முஸ்லிம் லீக் வட்டாரத்திற்குக் கவிஞர் ம.மு. மைதீனை அதிகம் தெரியாது. கவிஞருக்கு அரசியல் நோக்கங்களோ கோட்பாடுகளோ பெரிய அளவில் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ராமநாதபுர மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்தார் என்பது என் நினைவு. கருவில் திரு உடையார்என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதாவது பிறப்பிலேயே ஆளுமை உடன்பிறந்திருக்கிறது என்பது இதன் பொருள். கவிஞர், பிறவிக் கவிஞர்.

முறைப்படித் தமிழ் கற்ற புலவரோ, பட்டங்கள் பெற்ற தகுதிக்குரியவரோ அல்லர் அவர்.

பொதுவாக புலவர் படித்தவர்கள், மற்றும் M.A போன்ற பட்டப் படிப்பு படித்தவர்கள் தாங்கள்தாம் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கனவுக்கு அனேகர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

ஆனால் தமிழ்க் கவிஞர் ம.மு. மைதீன் போன்ற கவிஞர்களால்தான், தமிழ்த் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.

கவிஞரை நான் சந்தித்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். என்னுடைய வாழ்க்கை, மண்ணடியைச் சுற்றி பின்னிப் பிணைந்திருந்த கால கட்டத்தில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தோம்.

மண்ணடிக்கும் எனக்கும் உறவுநிலை விடுபட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

கவிஞர் ம.மு. மைதீன் ஏழு கிணற்றுப் பகுதியில் ஒரு சின்ன, அவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருப்பார். அது அவருக்கு ஜீவிதத் தொழில்.

வணிகத்திற்கு நடுவிலே அவருக்கே உள்ள இயல்பான கவிதா பிரவாகம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே இருக்கும்.

அவர்தம் மத்திய வயதில் தமிழ் மாமேதைகளான, இலக்கணக் கடல் மே.வீ. வேணுகோபலனாரிடமும், தமிழறிஞர் பாலசுந்தரனாரிடமும் அவர் மாணவனாக இருந்த காலமும் உண்டு.

மரபுக் கவிதை, கவிஞரின் விளையாட்டு மைதானம். அற்புதமான கவியோட்டம், சந்தக் குதிப்புகள், உவமை லயங்கள் சர்வ சாதரணமாகக் கவிஞரின் கவிதைகளில் சல்லாபம் செய்து கொண்டிருக்கும்.

நாயகப் பேரொளிஎன்ற ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு, இவர் நாயகப் பேரொளி கவிஞர் ம.மு. மைதீன்என்ற அடைமொழியால் பின்னர் அழைக்கப்பட்டார்.

இந்த நாயகப் பேரொளி நூல் வெளியீடு மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெரு எண் 8, பின்னர் 35 இலக்குடைய முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் நடந்தது. தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் தலைமைத் தாங்கினார். பல கவிஞர் பெருமக்களும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டார்கள்.

நாயகம் உதித்த காலகட்டம், அமாவாசை இருள் போன்ற இருண்ட காலகட்டம். அங்கே நாயகப் பிரகாசம் உதித்தது. இந்தச் செய்தியைக் கவியாக்கும் பொழுது, நாயகப் பேரொளி கவிஞர் ம.மு.மைதீன் ஒரு தலைப்புத் தந்திருந்தார். 

கருப்பு நிலாக் காலம்”. அமாவாசைக்கு இருட்டு நிலா என்ற உருவகத்தின் அற்புதத்தைக் குறிப்பிட்டு நாயகப் பேரொளி வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் 

இந்த ஒரு தலைப்புக்காக மனமகிழ்வோடு சன்மானமாக நான் 100 ரூபாய் அன்பளிப்பு செய்கிறேன்.என அன்பளிப்புச் செய்தார்.

இந்த மகத்துவங்களால் நிரம்பி இருந்த கவிஞர் இன்று இறைவன் நாட்டப்படி அவனளவில் சேர்ந்துவிட்டார். அவரின் மரணத்திற்கு முந்தைய முப்பதாண்டுகள் வாழ்வுநிலைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது போனாலும், அதற்கும் முந்தைய காலகட்டத்தின் அவர் நட்பை இன்று நினைக்கும் பொழுதும் அது ஒரு பிரகாச நிலாக் காலம்தான்.

எங்கள் இறைவா! நாயகப் பேரொளியைத் தன்னால் முடிந்த அளவு கவியாக்கிய உன் அடியார் கவிஞர் ம.மு. மைதீனின் குற்றம், குறை, பாவங்களை மன்னித்து அருள்வாயாக! அவருக்கு மண்ணறை வாழ்வினை மலர்ச்சியாக்கி அருள்வாயாக! மறுமையில் அவர் எழுப்பப்படும் நாளில் நாயகப் பேரொளி பரவி இருக்கும் இடத்தில் அவருக்கும் நீ இடம் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!.