Monday, March 17, 2014

வாக்கு வழிபாடு...!


மார்ச் 13 ஆம் தேதி தி இந்துவில் (தமிழ் நாளிதழ்) ஒரு செய்தி.
பணம் வாங்காமல் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மக்களுக்குக் கொண்டு செல்லச் சத்தியாகிரக இயக்கத்தினர் ஒரு நூதனமானப் பிரச்சார முறையை மெரினா கடற்கரையில் கையாண்டனர்.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த பொது மக்களின் கால்களில் விழுந்து பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையைப் பிரச்சாரப் படுத்தினார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் தொடங்கி வைத்தார். சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராம கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான நிர்வாகிகள், மற்றும் ஐம்பது கல்லூரி மாணவர்கள் இந்த காலில் விழும் கலாச்சாரத்தைப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

இந்த அமைப்பு கடந்த பத்தாண்டுகளாகவே பொது மக்கள் காலில் விழுந்து இப்படிப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்கிறது. இந்த அமைப்பில் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கிறார்களாம். இதுவரை ஐம்பத்தியொரு லட்சம் நபர்கள் காலில் விழுந்து இவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்களாம்.

மேலே சொன்ன தகவல்களை தி இந்து பத்திரிகை படத்துடன் செய்தி பிரசுரித்து இருக்கிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலும், தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிப்பதைச் சுயமாகத் தீர்மானிப்பதும் ஜனநாயகக் கடமை ஆகும். இந்த நெறிமுறைகளை ஒரு பாமர மனிதன் தொடங்கி படித்தறிந்திருக்கும் பாமரன்வரை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கும், ஜனநாயக அரசியல் இயக்கங்களுக்கும் முழுவதுமான பொறுப்பாகும்.

ஒரு சட்ட நடைமுறையைக் கடைப்பிடிக்க வணக்க வழிபாடு நடத்தி, பூஜை புணஸ்கர நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கெஞ்சிக் கூத்தாடி செயல் படுத்த முற்படுவது கேலிக்கூத்தானது மட்டுமல்ல. கேடுபாடு நிறைந்த கேவலமுமாகும்.

ஜனநாயக விழிப்புணர்வுக்குரிய நடைமுறை நிச்சயமாக இது இல்லை. கடந்த பத்தாண்டாகச் சத்தியாகிரக இயக்கத்தினர் இந்த காலில் விழும் கலையைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள் என்ற கணக்கைப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

சுமாராக ஐம்பத்தொரு லட்சம் பேர் அதாவது ஒரு கோடியே இரண்டு லட்சம் பாதங்களைப் பணிந்து வணங்கிக் கேட்டு இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒரு வாக்குக்குச் சுமார் ஆயிரம் தொடங்கி ஐயாயிரம் ரூபாய் வரை வழங்கி இருக்கிறார்கள். கால் கொண்ட கடவுளர்கள்வாங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரனமாக அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஃபார்முலாவாக அறிமுகம் ஆகி இருக்கிறது.

ஐம்பது லட்சம் ஆதரவாளர்களைப் பெற்றிருக்கும் சத்தியாகிரக கால் விழு கலாச்சாரம் என்ன சாதித்து இருக்கிறது? பாதத்தில் கை வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட பரிதாபத்தைத் தவிர வேறெதுவும் பலிதமாகி விடவில்லை.

இதுமாதிரி வினோத நடவடிக்கைகள், கேளிக்கைகளாகத்தான் அல்லது கேலிக் கூத்தாகத்தான் இருக்க முடியுமே தவிர திருத்தத்தைக் கொண்டு வரும் தெளிவாக அது இருக்க ஒரு போதும் வாய்ப்பில்லை.
பிரச்சாரம் என்பது தெளிய வைக்கும்., புரிய வைக்கும் அறிவு பூர்வமாண நடவடிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறைப் படுத்த சில காலங்கள் தாமதமானாலும் கூட அந்த நடவடிக்கைத்தான் நேர்மையான ஜனநாயக நடைமுறை.

ஆனால் காலில் விழும் கலாச்சாரத்தில் ஒரு கொடூரம் 1967, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது நடந்தது.

விருது நகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் வேட்பாளராக நின்றார். அந்தத் தொகுதி அவரின் சொந்தத் தொகுதி. அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் விருது பட்டி என்று குறிக்கப்பட்ட ஒரு பட்டி விருது நகர்என்ற தொழிற்மயமான நகராக மாறியது.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நலிவுற்றுக் கிடந்த கொடிய நிலை நீங்கி வர்த்தகத்திலும் தொழிற்துறையிலும் முன்னுக்கு வர பெரிதும் காரணமாக இருந்தவர் காமராஜர்தான்.

அந்த பலனடைந்த சமூக மக்கள் கணிசமான அளவில் வாழும் நகரும் விருது நகர்தான்.

ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அந்தத் தொகுதியில் 1967 இல் தோற்றுப் போனார்.

அவரைத் தோற்கடித்தவர் தமிழகத்தின் பென்னம் பெரிய அரசியல் தலைவர் அல்லர். அரசியல் ஞானமும் அனுபமும் கைவரப் பெற்றவர் அல்லர். கல்லூரியில் மாணவராக இருந்து அப்போதுதான் வெளிவந்த பெ.சீனிவாசன் என்ற மாணவர்தான் அவர்.

பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து அண்ணாதுரை இந்த மாணவரை நிறுத்தினார்.

தி.மு.க வின் மாணவர் அமைப்பு பெ.சீனிவாசனுக்கு வாக்குக் கேட்டுத் தொகுதிக்குள் இறங்கியது.

அப்படி வாக்குக் கேட்டு வந்த மாணவர்கள் ஒவ்வொரு வீட்டின் பெற்றோர்களிடமும் நெடுஞ்சாணாக காலில் விழுவார்கள். எங்களுக்குச் சத்தியம் செய்து தந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம் என்று முரண்டு பிடிப்பார்கள்.

எல்லா வீடுகளிலும் எப்படியும் ஒரு மாணவன் இருப்பான். அந்த மாணவனின் தலையில் கை வைத்து பெ. சீனிவாசனுக்கு வாக்குத் தருவோம் எனச் சத்தியம் செய்தால்தான் நாங்கள் எழுவோம் என்று சாதித்து வாக்குகளை பெ.சீனிவாசனுக்கு ஆதரவாகத் திரட்டி காமராஜரைத் தோற்கடித்து விட்டார்கள்.

தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் அண்ணாதுரை அறிக்கை விட்டார். பெருந்தலைவர் காமராஜர் தோற்றிருக்கவே கூடாது. என் மனம் மெத்த வேதனைப் படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் சட்டமன்றத்தில் பெ.சீனிவாசனுக்குத் துணை சபாநாயகர் பதவி தரப்பட்டு இருந்தது. இந்தப் பெ.சீனிவாசன் பின்னாளில் ஒரு நடிகையோடு வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது வேறு கதை.

காலில் விழுந்த கலாச்சாரம் திராவிட பாரம்பரியத்தால் கற்றுத் தரப்பட்டு ஒரு மகத்தான தவறைப் புரிந்த வரலாறு தமிழகத்தில் நடந்தது.
அதே காலில் விழும் கலாச்சாரம், ஒரு நல்லது செய்ய நினைப்பதாக கையாளப்படும் பொழுது இதுவும் தவறாகத்தான் சென்று முடியும்.
கால வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் கற்காலம் நோக்கி காலில் விழும் கலாச்சாரத்தைக் கொண்டு செல்வது எந்தக் காரணத்திற்காகவும் நல்லதல்ல.

__________________________________________________________________
கீழே தரக்கூடிய செய்தி மேலே சொன்ன செய்திக்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் ஒரு சந்தேகத்திற்குரியது.

பெருந்தலைவர் காமராஜர் இந்தத் தேர்தல் (1967) காலத்தில் நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்என்று எப்பொழுதும் பயன்படுத்தாத வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மறைந்த சமுதாயக் கவிஞர் தா.காசிம் காமராஜரின் இந்த வார்த்தையைக் கடுமையாக ஆட்சேபித்தார். உரிமைக் குரல் வார இதழில் ஒரு கண்டனக் கவிதை எழுதினார். அப்போழுது அவர் எங்களிடம் சொன்னார்,
காமராஜர் மீது நான் அறம்பாடப் போகிறேன். அறம் பாடுவதற்குச் சில இலக்கண வரம்பு விதிகள் இருக்கின்றன. பன்னிரு பாட்டியல் இது பற்றி விளக்கி இருக்கிறது.

பாலதானம்
குமாரதானம்
அரசதானம்
மூப்புதானம்
மரணதானம்

இப்படித் தானங்கள் அமைத்துப் பாடப்படுபவரின் பெயரின் முதல் எழுத்தை எந்த தானத்தில் வைத்து பாடப்போகிறோமோ அந்தத் தானத்திற்குப் பொருத்தமாக, அமங்கல சொல்லை அமைத்து பாட வேண்டும். இது ஒரு மாந்திரீகம் போன்ற கலை.

கவிஞர் காசிம் அந்தப் பாடலை மூப்புதானம் வைத்து எழுதினார்.
அந்தப் பாடல்

படுத்துக் கொண்டு ஜெயிக்கப் போற ஆள பாருங்க..என்று தொடங்கும்.
இடையில் அமங்கலச் சொல்லான காலொடிந்து வீடடங்கி கிடக்கப் போறாருஎன்ற வரியைப் போட்டு அந்தப் பாடலை நிறைவு செய்து இருந்தார்.

எனக்கு இந்த அற விவகாரங்களில் அன்று நம்பிக்கைக் கிடையாது.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்துக்குத் திருநெல்வேலி சென்று திரும்பிய காமராஜர், ஒரு விபத்தில் சிக்கி கால் எலும்பில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டு படுக்கையில் படுத்து விட்டார். அதன்பிறகு அந்தத் தேர்தலில் எங்கும் பிரச்சாரம் செய்ய இயலவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. அதன்பின் காங்கிரஸ் இன்று வரை எழுந்திருக்கவில்லை. காமராஜரும் அதன் பிறகு விருது நகர் தொகுதியில் நிற்கவில்லை. நாகர்கோயில் பாராளுமன்றத் தொகுதிக்குச் சென்று ஒரு முறை நின்று வென்றார். டில்லி சென்றார்.
அப்பொழுது காங்கிரஸ் இரண்டாக உடைந்துவிட்டது. காங்கிரஸின் கால் முறிந்து விட்டது. ஸ்தாபன காங்கிரஸில் காமராஜர் இருந்தார். இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.


மீண்டும் சொல்லுகிறேன் இது கொசுறு செய்திதான். கவிஞரின் அறம் காலை ஒடித்தது என்பது என் வாதம் அல்ல. எப்படியோ கால் ஒடிந்தது. காங்கிரஸ் அரசு இழந்தது. கவிஞர் பாடலும் வெளியில் வந்தது. இந்த ரகசியம் என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

Sunday, March 16, 2014

கனவு பற்றிய சில கலவைத் தகவல்கள்..!


நண்பர் ரசூலின் (முக நூலில்) கனவுத் தகவல்கள் பற்றிய பதிவு அருமையான ஒரு விவாதத்திற்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.
கனவின் தகவல்களை மாயை என்ற ஒற்றைச் சொல்லால் ஓரத்திற்கு தள்ளிவிட முடியாது.

கனவில் மனம் பதிந்து இருக்கிறது. மனதில் கனவு தழும்புகிறது. இந்த மனம் என்பது தனிமனித மனமாகவும் இருக்கலாம். சமுதாய மனமாக, கூட்டு மனமாகக் கூட இருக்கலாம். ஆனால் கனவு எங்கிருந்தோ வந்து நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு செய்திதான்.

கனவில் வஹீ (இறைப்புறத்து தகவல்) வெளிப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் கனவை வெறும் மாயை என்று புறந்தள்ளினால் நபிமார்களுக்கு வந்த கனவில் வந்த இறைப்புறத்து தகவல்கள் அத்தனையும் அந்தஸ்த்தற்ற, ஒப்புக் கொள்ள முடியாத தகவலாகத்தானே முடியும்?

இப்படி ஹெச்.ஜி.ரஸுலின் கேள்வியில் இருக்கும் நியாயம் செழுமையான சிந்தனைதான்.

கனவைப் பற்றி இன்னும் சில தகவல்கள் எண்ணிப் பார்க்கப் பட வேண்டிய ஒன்றாகும்.

ஒருவன் கனவு காணுகிறான். கனவு காண்பவனுக்கு வயது நாற்பது. அவன் கனவில் தன்னை ஏழு வயது பாலகனாகப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நாற்பது வயதிலிருந்து தன் ஏழு வயதுக்கு பின்னோக்கிச் சென்றிருக்கிறான். அதாவது முப்பத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கிய பயணம் நிகழ்ந்திருக்கிறது. இப்படி நகர்வதற்கு முப்பத்து மூன்று ஆண்டுகள் தேவைப்படுகிறது.

ஆனால் இவன் கனவில் சில மணித்துளிகளில் சென்று இருக்கிறான். ஒரு நீண்ட காலத்தை ஜெட் வேகத்தில் கடந்து இருக்கிறான்.
இந்த நீண்ட கனவை அவன் எவ்வளவு நேரத்தில் பார்த்திருப்பான் என நினைக்கிறீர்கள்?

யதார்த்தத்திற்கும் கனவில் கண்ட காட்சிக்கும் எவ்வளவு நீண்ட கால தொலைவு தூரம் இருந்தாலும் அவன் கனவு கண்ட காலம் சுமார் மூன்று முறை பெருமூச்சு விட்ட காலம்தான். ஒரு மணித்துளி கூட இல்லை.
இது மனதின் வேகமும் வெளிப்புறத்தில் உள்ள காலச் சுழற்சியின் வேகமும் நேர்கோட்டில் இருப்பதின் அடையாளம்.

ஞானத்தின் பிரகாசம் இமாம் கஸ்ஸாலி அவர்கள், ஒரு நீண்ட கனவின் காலம் மூன்று மூச்சு இழுத்தலின் கால அளவே இருக்கும் இந்த கால இடைவெளியில் பலப்பல பத்தாண்டுகள் கடந்து இருக்கும் எனக் குறிப்பிடுகிறார்கள்.

கனவு ஒரு தகவலை நிச்சயம் தரும்.பல நேரங்களில் மனத்தின் ஓரசாரங்களில் உள்ள அழுத்தங்கள் தூக்கத்தில் கனவு போல காட்சி தரும். ஆனால் இவைகள் கனவுகள் அல்ல.

இந்த வேறுபாட்டைக் கண்டறிவது எப்படி?

கனவு என்பது நிலவு ஒளியில் பார்க்கிற காட்சி போன்று ஒரு தெளிவுடன் இருக்கும். அந்தக் காட்சி எப்பொழுதும் நம் மறதிக்குள் போகாது.
அந்தக் கனவு எப்பொழுது நினைத்தாலும் அப்படியே நம் நினைவுக்கு வந்துவிடும். இப்படி காணப்படும் காட்சிகளைக் கனவு என்று குறித்துக் கொள்ள வேண்டும். சில வேளைகளில் ஒரே காட்சி திரும்பத் திரும்பவும் பல நேரங்களில் கனவாக வரும். இதுவும் கனவுதான் என்பதற்குச் சாட்சி.
இந்தக் கனவு மனதிற்கு வழங்கப்படும் இறைப்புறத்து தகவல். இது நிச்சயம் செய்தி அந்தஸ்த்து கொண்டது. நம் வாழ்வோடு தொடர்புடையது. அதிலிருந்து நம் வாழ்விற்குத் தேவையான சரியான முடிவுகளை வழிகாட்டிப் போல தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தங்கள் கனவுகளாக வெளியேறும். இது கனவு என்ற மொழியில் குறிப்பிட்டாலும் கனவு அல்ல,

ஆழ்ந்த தூக்கத்தின் போது உடல் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க உடல் தூண்டப்படும் பொழுது ஒரு காட்சி வரும். அந்த காட்சி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து நம்மை எழுப்பிவிடும்.

விழித்தவுடன் நாம் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, கழித்து விட்டு வந்து படுத்துவிடுவோம். தூக்கம் மறுபடியும் தொடரும். கனவு அதோடு மறந்து விடும்.

இங்கே கண்டது கனவந்தஸ்துள்ள காட்சி. நம் ஆழ்ந்த தூக்கத்தில் உடல் தேவையை, விழிக்கச் செய்ததன் மூலம் அறிவுறித்திய ஒரு தகவல்தான் இது.

கனவல்லாத இது கூட ஒரு தகவலைத்தான் நமக்கு தந்திருக்கிறது.
அடி விழுவது போல கனவு கண்டு , விழித்து அலறுவது யதார்த்தத்தில் கனவின் பிரதிபலிப்பு. கனவில் விழுந்த அடி , விழிப்பில் அவஸ்தையாக ஒலித்திருக்கிறது.

ஒருவன் பசியோடு படுத்திருந்தான். கனவு வருகிறது. அற்புதமான உணவுகளை அருந்திச் சுவைத்து அந்த ரசனையில் விழித்து விடுகிறான். ஆனால் விழிப்பில் அவன் பசி அடங்கி இருக்குமா? நிச்சயம் அவன் பசி அடங்கி இருக்காது. வயிறு நிறைந்திருக்காது.

கனவில் அடி விழுந்தது விழிப்பில் வலி தெரிகிறது. கனவில் புசித்த உணவு விழிப்பில் வயிறு நிறைவைத் தரவில்லை.

இப்படிப்பட்ட பல கனவுகளின் படித்தரங்களை ஆராய்ந்து அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

இறைத் தூதர்களுக்கு இறைப்புறத்துச் செய்தி வஹியாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வஹியை வானவர் கொண்டு வந்து இறைத்தூதருக்கு சேர்த்து இருக்கிறார்.

இறைத் தூதர்களுக்கு தூக்கத்தில் சில பொழுது வஹி வந்திருக்கிறது. கனவு அந்த வஹியைச் சுமந்து வந்து தருகிறது. அதாவது கனவு இங்கே வஹிகொண்டு வரும் வானவர் போன்று செயல் பட்டிருக்கிறது.


Saturday, March 15, 2014

ஆம் ஆத்மி !!



நண்பர் Siraj Ul Hasan ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு இருக்கிறார்.

ஆம் ஆத்மி என்ற அமைப்பு அவசர கதியில், ஆனால் சரியான திட்டப் பின்னணியில் எழுந்து வந்த ஒரு அரசியல் சவலைப் பிள்ளை. ஜனநாயக வீழ்ச்சிக்கும் இந்தியத் தாழ்ச்சிக்கும் ஊழல் மட்டுமே மூலாதாரமாகும் என்ற சிந்தனையை முன்வைத்து அரசியல் களத்துக்குள் தாவி குதித்து இருக்கும் இயக்கம் ஆம் ஆத்மி.

ஆம் ஆத்மி கேஜ்ரிவால், அன்னா ஹஸாரே தூக்கித் திரிந்த இயக்கத்தில் துணை நின்று அதிலிருந்து துள்ளித் தெறித்து வெளியே வந்தவர்.

ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கக் கூடிய பகாசுர கம்பெனிகளே ஆம் ஆத்மிக்கு வெளிப்படையான பின்புலங்கள்.

தேசப் பிரச்சனைகளைப் பூரணமாக எதிர் கொள்ள எத்தகைய பலப் பின்னணிகளும் சிந்தனைப் பின்னணிகளும் கைக் கொண்டிராத ஒரு கனவு சாம்ராஜ்யம் ஆம் ஆத்மி.

சிலர் இப்படி நினைக்கக் கூடும். ஆம் ஆத்மியைக் கண்டு பி.ஜே.பி அலறிக் கொண்டிருக்கிறது. பி,ஜே.பி யை ஆம் ஆத்மி அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தழித்து விடும் சக்தி கொண்டது எனச் சிலர் நினைக்கக் கூடும்.

இந்தச் சிந்தனையும் நினைவும் பூரணமான பொய்த் தோற்றமே.

பத்திரிகையாளர் ஞானி நல்லதொரு சிந்தனையாளர். ஆனால் கடந்த சமீப ஆண்டுகளாக அமெரிக்காவோடு சின்ன சின்ன தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த தொடர்பு அவரின் நீண்ட கால சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கேள்விக்குரியதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் மாற்றி விட்டன.

ஆம் ஆத்மியை ஞானி நாடிக் கொள்வதும், ஞானியை ஆம் ஆத்மி தேடிக் கொள்வதும் தவறான, பிழையான அணுகுமுறைதான்.

இதே தான் பேராசிரியர் அ.மார்க்ஸுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. அ.மார்க்ஸ் சிறுபான்மைச் சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தின் மீது அக்கறையான அணுகுமுறையைக் கைக்கொண்டு இருக்கிறார்.

அடக்கப்பட்டவர்களுக்கு , ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர் எப்பொழுதும் சார்பாக இருந்திருக்கிறார். அவர் களப்பணி இதற்கு ஆதாரமாக இருக்கிறது என நம்பப் படுகிறது என்பதை என் இனிய நண்பர் சிராஜுல் ஹஸன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வேன் நான்.

இவர் மட்டுமா இந்தப் பட்டியலில் இருக்கிறார்? கடந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பட்டியலிற்குள் எட்டிப் பார்த்தவர்கள் பலர் உண்டு.

முரசொலி அடியார், வலம்புரி ஜான் இப்படி ஒரு பட்டியலைச் சொல்லலாம். இவர்களிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிரமாக சுப. வீர பாண்டியன் ,அ.மார்க்ஸ் போன்ற சில சிந்தனையாளர்கள் இப்பொழுது செயல் பட்டு கொண்டிருக்கலாம்

ஆம் ஆத்மிக்கு ஞானி பொருத்தமில்லாதவர். ஞானிக்கு ஆம் ஆத்மி தவறான அடையாளம்.

பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் சரிப்பட்டு வராது. இஸ்லாமிய அரசியல் இயக்கங்களுக்கு அ.மார்க்ஸ் ஒத்தூதல் ஒத்து வராது.

இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கொஞ்சம் ஆழமாகத் தான் அலசியாக வேண்டும்.

Sunday, March 9, 2014

அசுத்த வார்த்தைகள்!!!




வாழ்த்துதல் என்பது உயிரினத்தின் யதார்த்தமான சுகானுபவமிக்க உயரிய செயல்பாடு.

இந்தச் செயல்பாட்டை அதனுடைய புரிதலிலும் அர்த்தத்திலும் கையாளும்போது அதன் வெளிச்சம் வரலாற்றுப் பிரமிப்பு மிக்கதாகும்.

ஆனால் இந்த வெளிச்சச் செயல்பாடு மிக வேக வேகமாக விரயமாக்கப் படும்பொழுது சமுதாயத்தின் சீர்கேடும் சிதைவும் சரித்திரச் சின்னமாகத் தேங்கி விடுகிறது.

வாழ்த்தத் தெரியாத மனிதம் வாழத் தெரியாத விரயம். அதேநேரம் வாழ்த்து என்ற பெயரில் பொய்மையை மூட்டைக் கட்டித் தூக்கி வந்து கொட்டும் பொழுது சமூகத்தின் தலைவிதியேத் தகர்க்கப் படுகிறது.

வாழ்த்துதலில் உண்மை இருக்கும். சத்தியத்தின் உயிரோட்டம் துடித்துக் கொண்டிருக்கும். எளிமையானதாக அது இருக்கும். தேவை இல்லாத புனைதல் நிச்சயமாக அங்கே இருக்காது. இதுதான் சரியான வாழ்த்துதலின் அடையாளம்.

இன்றைய அரசியல் உலகம், ஆட்சி பீடங்கள், அதிகார வர்க்கங்கள் இந்த உண்மையை உருத்தெரியாமல் சிதைத்து அதனைச் சமாதிக்குள் அனுப்பி அந்தச் சமாதியின் மீது அழகியச் சலவை சின்னங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் லாபம் இருக்கிறது. இது வளர்ச்சிக்கு வழி செய்கிறது இன்னும் சொல்லப் போனால் இது ஒரு ராஜ தந்திரம், அறிவின் சாகசம், கெட்டிக்காரத்தனத்தின் லாபக் கையிருப்பு என்றெல்லாம் பிரச்சாரம் கலந்த வணிகமாக இது மாறிவிட்டது.

ஒரு இயக்கத்தின் தலைமையை அல்லது அதிகார வர்க்கத்தின் தலைமையை வானளாவப் புகழ்வதால் சலுகைக் களஞ்சியத்தை நிரப்பிக் கொள்ள முடியும் என்ற கருத்தாக்கம், மகத்தான கேடாக மட்டும் இல்லை. தலைமுறைச் சீரழிவு சம்பந்தப் பட்டதாகவும் அது இருக்கிறது.

வாழ்த்துதல் என்பது மீறி, புனைதல் என்னும் பொய்யின் கோட்டைக்குள் நுழையும் பொழுது நமது ஆழ்மனம் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத் தமிழினத்தின் தலைவரே!”, “முத்தமிழ் அறிஞரே!”, “வாழும் வள்ளுவரே!”, “தொல்காப்பியச் சுடரொளியே!

தாயே!”, “தமிழே!”, “கன்னி மரியே!”, “காவேரிச் செல்வியே!”, “பொன்னியின் செல்வியே!” , “இதய தெய்வமே!” , “காவல் தெய்வமே!

இப்படியெல்லாம் வார்த்தைகளைக் கண்டெடுத்து தங்கள் தலைமைகளை அலங்காரப் படுத்தும் மனித மனங்களை ஒரு சமூகம் மன்னித்து விடுவதோ மறந்து விடுவதோ தலைமுறைத் தவறாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதைச் சொல்லிக் காட்ட வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையாளர்களுக்கு இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு புதிய சொல்லாடலையே கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இல்லாததையெல்லாம் இருப்பதாகச் சொல்லி வாழ்த்திவிட்டு, அந்தப் போஸ்டரின் கீழே ஒரு வரியைச் சேர்த்து இருப்பார்கள்.

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்இந்த வாக்கியம் தமிழ் தோன்றிய காலம் தொட்டு தொடர்ந்து வந்ததாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தினால் கண்டறியப்பட்டு அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் தரப்பட்டது. இன்றைக்கு அம்மா இதய தெய்வத்துக்கும் இந்த வசனம் வழங்கப் படுகிறது. இதில் யாருக்கும் வெட்கமில்லை.

இந்த அடைமொழிகளை சொல்பவர்களுக்கு இவற்றில் எதுவுமே துளியும் உண்மையில்லை என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் இந்த வார்த்தைகளை முன்னெடுத்து வைக்கிறார்கள்.

இந்த வாசகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கும் இவற்றில் குன்றிமனியளவும் சத்தியம் இல்லை என்ற சமாச்சாரம் பிரம்மாண்டமாகத் தெரியும். ஆனாலும் தங்களைத் தாங்களே மகிழ்வால் தழுவிக் கொள்கிறார்கள்.

இவைகள் எல்லாம் ஒரு கேளிக்கைப் போல் அமைகின்றன. இவைகளைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் பொழுது இந்த இருவரின் பக்கமும் அது ஒரு உண்மையைப் போல சிலை வடிவம் பெற்று விடுகிறது. இதுதான் மனநோய்.

நாளாக நாளாக நிழல்களை நிஜமாக கருதுகிறார்கள். அப்படியே நம்புகிறார்கள். நிஜமான இந்த மனிதர்கள் நிழலாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதல்கூட இல்லாமல் போலியாகவே மாறிவிடுகிறார்கள்.

இந்த போலிகளின் ஆளுமைகளும், ஆட்படும் தன்மைகளும் சமுதாயத் தோற்றங்களாக உருவாகும் பொழுது தலைமுறைகள் சவலைப் பிள்ளைகளைப் போல சக்திகள் இழந்து மரணக் குழியில் மல்லாந்துக் கிடக்கின்றன.

அதாவது மன நோய்களே மனித உருவங்களாக அங்கீகரிக்கப் படும்பொழுது, தலைமுறைகள் எத்தகைய அவலங்களைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இன்றைய தன்னிகரற்ற தமிழினம் ஒரு அடையாளம் ஆகும்.

இந்த மன உணர்வு, இன்றுதான் சமுதாயம் கண்டுபிடித்த ஒன்றாக இருக்கிறது என்று கருத வேண்டாம்.

மனித அழிவு தலைதூக்கும் பொழுது இந்த மனநோய் வீதி உலா வரும் என்பதற்குச் சரித்திர வீதிகளில் சான்றுகள் கிடைக்கின்றன.

இனியர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

இது வள்ளுவர் வாசகம்.

ஒரு தொடர்பை, உறவைச் சுட்டிக் காட்டும் பொழுது, அதில் உண்மை இருக்க வேண்டும். ஒரு பெருமிதத்தை ஒருவருக்கு பொருத்திக் காட்டும் பொழுது, அதில் சத்தியம் இருக்க வேண்டும். மாறுபாடாக, வாழ்த்துவதாகக் கருதி உரியவர்களை உயர்த்துவதாகப் புரிந்து அதிகப் பட்சமாகப் பேசப்படும் எந்த மொழியானாலும் அந்த மொழி வாழ்த்து மொழி அல்ல. புனைதல் மொழிஎன ஒரு அற்புதமான சொல்லாடலை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

ஒருவர் எமக்கு இவ்வளவு உயர்வானவர் அவருக்கு நாம் அவ்வளவு அணுக்கமானவர் என்று காட்டப் பயன்படுத்தும் அத்தனை மொழிகளும் புனை மொழிகள்.

எப்படியென்றால் எங்கள் தலைவி’ , ‘காவேரித் தாய்’, ‘கன்னி மரியாள்’, ‘இதய தெய்வம்என்றெல்லாம் புனையப் படுகின்ற மொழிகள் போலிகளின் கருவறையில் தயாரான கற்பச் சிதைவு பிண்டங்கள்.

எங்கள் தலைவர்’, ‘தமிழனத் தலைவர்’, ‘ராஜ ராஜ சோழன்’, ‘வாழும் வள்ளுவர்’, ‘முத்தமிழ் அறிஞர்என்றெல்லாம் பிதற்றப்படுவது பொய்யென்னும் தாயின் பால் குடித்து வளரும் பாலகச் சிதைவுகள்.

இதைத்தான் வள்ளுவர், ”புனையினும் புல்லென்னும் நட்புஎன்கிறார்.

புனைமொழிக் கலாச்சாரத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமை இருந்தாலும் அதனுடைய மோசமான பரிமாணத்தை ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புப் போல சிறப்பாக்கியச் சீரழிவைத் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்தாம் தலைக் கனக்க சுமந்து, தோள் வலிக்கத் தூக்கி தமிழக வீதியெங்கும் விற்றுத் திரிகின்றன. இப்படிச் சொல்வதற்கு அச்சப் பட வேண்டியது இல்லை.

சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் புனைமொழியில் சொல்வதென்றால்தளபதி”, “நாளைய முதல்வர்என்னும் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது. இது தேர்தல் காலத்தில் வெளிப்படத் தெரிவது தேர்தல் விதிக்கு முரண்பட்டது. எனவே அதை மூட வேண்டும். இதுதான் வழக்கின் சாராம்சம்.

சரியாகத்தான் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இதுபோல் அரசுத் திட்டங்களில் அரசு செலவில் தர்மங்களை வழங்கும் பொருள்களில் முதல்வர் என்ற தனிமனிதரின் உருவமோ அல்லது அந்த ஆளுங்கட்சியின் சின்னமோ பொறிக்கப்பட்டு இருப்பது தகாதது மட்டுமல்ல மகத்தான தவறானது கூட. அது குற்றச்சாயல் கொண்டது என்ற எண்ணத்தையும் இதன் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். வரவேற்க வேண்டிய சிந்தனை.

இந்த அருவருப்பைத் தொடங்கி வைத்தது ஸ்டாலிலின் தந்தையும் தமிழக முன்னாள் முதல்வரும் புனைமொழியில் சொல்வதானால் தமிழினக் காவலரும், முத்தமிழ் அறிஞரும், வாழும் வள்ளுவரும் என வருணிக்கப் படும் கலைஞர் கருணாநிதிக்குத் தான் பூரண உரிமையாகும்.

கருணாநிதி எட்டடி என்றால், “போயஸ் தோட்டத்துப் புறா”, “பால்கனிப் பாவைஎன்று கருணாநிதியால் புனையப் பட்ட முதல்வர் செல்வி ஜெயலலிதா கருணாநிதியை விட கூடுதலாகப் பதினாறு அடி தாண்டித் துள்ளிக் குதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

இந்த வேகத் துள்ளலைச் சகிக்க முடியாத ஸ்டாலின் இந்தக் கேட்டின் வலிமையை மக்களுக்கு இன்று புரிய வைக்கிறார்.

நாம் ஒன்றுதான் சொல்ல முடியும் ,”புனைமொழி தளபதியாரே!, உங்கள் தந்தையான வாழும் வள்ளுவருக்கு எப்படியாவது தலைவலிக் கொடுத்து கொண்டே தான் இருப்பீர்களோ?”

இதய தெய்வம், நாளைய பிரதமர் என்னும் புனைமொழிகளை சுமந்துத் திரியும் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.

அம்மா தண்ணீர் வழங்கிவிட்டீர்கள், அம்மா உணவகம் வீதிகளில் அசத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றை மறந்து விட்டீர்களே! டாஸ்மாக், தமிழகத்தின் அரசுக் கஜானாவையே காத்துக் கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையை உங்கள் அடிப்பொடித் தொண்டர்கள் விளம்பரப்படுத்த மறந்து விட்டனர். 'அம்மா டாஸ்மாக்என்ற விளம்பரத்தை மறைத்து உங்கள் புகழுக்குப் புழுதிச் சேர்க்கிறார்கள். உரிய நடவடிக்கை உடனே எடுங்கள்”.

பொய்யான ஒன்றை, பொய்யென்றே தெரிந்து சொல்லிக் கொள்வதும் அதைப் பொய்யென்றே தெரிந்து ஏற்றுக் கொள்வதும் ஒரு கட்டத்தில் பொய்யென்னும் நிலையை மீறி அதுவே உண்மையென்னும் உணர்வாக நம்பப்படும்போது நடந்துவிடும் சீரழிவுக்கு ஹிட்லரும், ஹிட்லரின் மதிமந்திரி கோயபல்சும், ஹிட்லர் ஆட்சியின் சீரழிவும் நல்லதொரு எடுத்துக்காட்டு.

அடுத்தத் தலைமுறையை ஹிட்லரைப் போல் மன நோயாளியாக்கும் இந்த வாழ்த்தியல் வழிப்பாட்டுத் தத்துவம்தான் உள்ளபடிக்கு நமது அடுத்த தலைமுறைக்கு நாம் விதைத்து வைக்கும் விஷ விருட்சம்.