Sunday, August 11, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–15

நேர்மையின் தோரண வாயில்!


தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழைய அன்றைக்குக் குரோம்பேட்டை தான் நுழை வாயில்.
குரோம்பேட்டை அன்று நுழை வாயிலாக மட்டும் இல்லை.
கண்ணியம், நேர்மை, உறுதி, கோட்பாட்டின் ஆழம், எதற்காகவும் சரிந்து விடாத அழுத்தம் இவற்றின் தோரண வாயிலாகவும் அன்று குரோம் பேட்டை இருந்தது.
இரு பெரும் மகத்தான தலைவர்கள் அந்தக் குரோம் பேட்டையில் வாழ்ந்து சரித்திரமாகி  இருக்கிறார்கள்.
ஒருவர் தென் மாநில கடைக்கோடி, நாகர்கோயில்காரர். மற்றொருவர் அந்த மாவட்டத்திற்கு முன் இருக்கும் நெல்லை பேட்டைக்காரர்.
உண்மையின் வெளிச்சம் போல பொது உடைமை இயக்கத்தின் தலைவராகத் திகழ்ந்த தோழர் பா.ஜீவானந்தம். தோழர் ஜீவானந்தம் எளிமையின் காட்சி. அதே நேரம் உறுதியின் மாட்சி.
மற்றொருவர், சத்தியத்தின் சகல பரிமாணங்களும் பூர்த்தியாகத் திரண்டிருந்த பிரகாசம். கண்ணியத்திற்கு உரிய காயிதே மில்லத். இறை நம்பிக்கையின் ஆணி வேரில் தளை பட்டிருந்தவர் காயிதே மில்லத்.
இந்த இருவரும் சென்னை குரோம்பேட்டையில் தான் வாழ்ந்து இருந்தார்கள்.
தோழர் ஜீவானந்தம் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
காயிதே மில்லத் குடிசையில் வாழ்ந்து வந்தார்.
தயா மன்ஸில் எளிமையின் அடையாளமாக இருந்தது. ஆனாலும் இந்திய முஸ்லிம்களின் இமய உச்சாக நிமிர்ந்து நின்றது.
ஒரு முறை அன்றைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரிடம் இருந்து தயா மன்ஸிலுக்கு ஒரு தகவல் வந்தது.
ஆசிய ஜோதி, இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் தூதராக மத்திய அரசின் கேபினெட் அமைச்சர் பக்ருதீன் அலி அஹ்மத் (இந்திரா காந்தியின் காலத்தில் இந்திய ஜனாதிபதி ஆனவர்) சென்னை வந்திருக்கிறார். கிண்டி ராஜ் பவனில் தங்கி இருக்கிறார். காயிதே மில்லத்தைச் சந்திக்க நேரம் ஒதுக்கினால் குரோம் பேட்டை தயா மன்ஸிலுக்கு வந்து சந்திக்க தயாராக இருக்கிறார் - இது தான் காமராஜர் அனுப்பிய தகவல்.
காயிதே மில்லத்துக்கு இதில் இருக்கும் "கள்ளம்" புரிந்து விட்டது.
"மன்னிக்க வேண்டும். அவசரமாக நான் கேரளா செல்கிறேன். வேறொரு நேரத்தில் சந்தித்துக் கொள்ளலாம்"
என்று பதில் அனுப்பி விட்டு, அன்று மாலையில் கேரளா புறப்பட்டு விட்டார்கள்.
மறுநாள் மாலை திருவனந்தபுர தலைமைச் செயலாளரிடம் இருந்து காயிதே மில்லத்திற்கு, அமைச்சர் பக்ருதீன் அலி அஹ்மத் தங்களை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார் என்ற செய்தி வருகிறது.
காயிதே மில்லத் இதற்கு மேலும் சந்திப்பைத் தவிர்க்க விரும்பவில்லை.
நாளை மறுநாள் சென்னை குரோம் பேட்டையில் தயா மன்ஸிலில் காலை 10 மணி அளவில் சந்திக்க சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
குறித்த நாள் குறித்த நேரத்தில் குரோம் பேட்டை தயா மன்ஸிலில் சந்திப்பு நிகழ்ந்தது.
தயா மன்ஸில் எல்லைக்குள் மத்திய அமைச்சர் பக்ருதீன் அலி அஹ்மதும், முதல்வர் காமராஜரும் மட்டுமே வந்து சந்தித்தார்கள்.
பேச்சு வார்த்தை 40 நிமிடங்கள் நடந்து முடிந்தன. வெளிய வரும் பொழுது மத்திய அமைச்சர் முகத்திலும், காமராஜர் வதனத்திலும் நிம்மதி இருக்க வில்லை.
உள்ளே நடந்த பேச்சு வார்த்தையின் சாராம்சம் இது தான்.
முஸ்லிம் லீகை ஏதாவது காரணம் கூறி மூன்று மாதத்திற்குள் காயிதே மில்லத் கலைத்து விட வேண்டும். இது நடந்து விட்டால் மத்திய அமைச்சரவையில் பிரதமர் பதவியைத்தவிர காயிதே மில்லத் விரும்பும் வேறு எந்த அமைச்சர் பதவியையும் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலம் வரை தரத் தயாராக இருப்பதாக உறுதி மொழி தரப்பட்டு இருக்கிறது.
காயிதே மில்லத்துக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால் சவூதிக்கோ அல்லது காயிதே மில்லத் விரும்பும் வேறு எந்த ஒரு நாட்டிற்கோ இந்திய நிரந்தரத் தூதராக நியமிக்க தயார் என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது.
காயிதே மில்லத் சாந்தமாக சிரித்துக் கொண்டே மத்திய அமைச்சரிடம் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
"நீங்கள் தருவதாகக் குறிப்பிடும் இந்தப் பதவிகள் முஸ்லிம் லீக் இயக்கத்தின் உறுப்பினர் பதவிக்குச் சமமானதாக நான் நினைக்க வில்லை. பண்டிதரிடம் இந்தப் பதிலைச் சொல்லி விடுங்கள்எனக் கூறி விட்டார்கள்".
காமராஜரைப் பார்த்து,
"உழைப்பாளர் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் இணைந்து அமைச்சர் பதவி ஏற்கும் பக்குவம் உயர் திரு ராமசாமி படையாட்சிக்கு இருக்கலாம். ஒரு போதும் இந்த முகம்மது இஸ்மாயிலிடம் அந்தப் பக்குவம் வராது என்று நீங்களும் சொல்லி விடுங்கள்" என்று காயிதே மில்லத் கூறிவிட்டார்கள்.
மூன்று நான்கு நாட்கள் அலைக்கழிப்பு முற்றுப் பெற்றது.
நேருவுக்கு காயிதே மில்லத்தைப் பற்றி ஒரு தெளிவான பார்வை இருந்தது. ஆனாலும் இப்படி குறுக்கு வழியில் ஒரு முயற்சி செய்து பார்த்தார்.
காயிதே மில்லத்திற்கு நேருஜி எப்படி ஒரு உயர்ந்த மதிப்பு தந்திருக்கிறார் என்பதற்கும் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.
பாராளுமன்ற ஒரு முக்கிய குழு அவசரமாகக் கூட வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தக் குழுவுக்கு பிரதமர் தலைவர். பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியத் தலைவர்கள் அதில் உறுப்பினர்கள். அவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர்.
அவசரம் கருதி உறுப்பினர்களுக்கு தந்தி அனுப்பப்பட்டு மறுநாள் மாலை 5 மணிக்குக் கூடியது.
காயிதே மில்லத் விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்கள். மாலை 5 மணி கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். குழு முக்கியப் பிரச்சினையை விவாதித்துக் கொண்டு இருந்தது. நேரம் கடந்து கொண்டு இருந்தது. காயிதே மில்லத் 6.40 க்கு எல்லாம் ஏதாவது ஒரு மஸ்ஜிதில் இருக்க வேண்டிய கட்டாயம். ஏனென்றால் அது நோன்பு காலம்.         
இந்த நிலையில் காயிதே மில்லத் யோசித்து நெளிந்து கொண்டு இருக்கும் பொழுது, கூட்டத் தலைமைத் தாங்கிக் கொண்டு இருக்கும் பிரதமர் நேருவின் உதவியாளர் காயிதே மில்லத்தின் அருகில் வந்து "ஐயா உங்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பக்கத்தில் இருக்கின்ற இந்த அறையில் செய்யப்பட்டு இருக்கிறது. நீங்கள் அதை நிறைவேற்றி விட்டு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமரால் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்" என்றார்.
காயிதே மில்லத் அந்த அறைக்கு உரிய நேரத்தில் சென்றார்கள். அங்கே டேபிளில் ஏதோ ஒரு பள்ளிவாசலில் இருந்து வரவழைக்கப்பட்ட நோன்புக் கஞ்சி, சில பேரீச்சம் பழங்கள், தேனில் ஊறவைக்கப் பட்ட சில பழத்துண்டுகள், குடி நீர் இவைகள் இருந்தன. டேபுளுக்குப் பக்கத்தில் தொழுகை விரிப்பு விரிக்கப் பட்டு இருந்தது. காயிதே மில்லத் கடமைகளை முடித்துக் கொண்டு கமிட்டிக் கூட்டத்தில் வந்து கலந்து கொண்டார்கள்.
கமிட்டிக் கூட்டத்தில் இன்னும் இரு முஸ்லிம்களும் இருந்தனர். ஒருவர் பொது உடைமை இயக்கத்தைச் சார்ந்தவர், இன்னொருவர் பிரஜா சோசியலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்.
நோன்பை காயிதே மில்லத் மட்டுமே கடைபிடிப்பார் என்ற உறுதிப்பாடு நேருவுக்கு இருந்தது. நேருஜி அதற்கு ஏற்பாடும் செய்து இருந்தார்.
இது நேருஜியின் பண்பாட்டு அழகு!..
தயா மன்ஸிலில் இன்னும் ஒரு சம்பவம் நடந்தது. தமிழகத்தில் ஒரு நெருக்கடியின் காரணமாக காங்கரஸ் அமைச்சரவை உணவு வழங்களில் ரேஷனைச் சட்டமாக்கியது. ரேஷன் கார்டுக்காக மக்கள் கணக்கெடுப்பு தொடங்கியது.
பெரியவர்களுக்கு ஒரு கணக்கும் சிறியவர்களுக்கு ஒரு கணக்குமாக ரேஷன் பொருள் வழங்க முடிவானது.
தயா மன்ஸிலில் கணக்கெடுப்பாளர் வந்தார். காயிதே மில்லத் அப்பொழுது டெல்லியில் பாராளுமன்ற கூட்டத்தில் இருந்தார்.
காயிதே மில்லத்தினுடைய மருமகளார் கணக்கெடுப்பாளரிடம் 5 பெரியவர் ஒரு சிறியவர் என்று கூறி பதிவு செய்து விட்டார்கள். காரணம் வழங்கப் படும் ரேஷன் பொருளின் அளவு ஒரு மாதத்திற்குப் போதாது. அதனால் இரண்டு சிறுவர்களை பெரியவர் கணக்கில் சேர்த்து விட்டார்கள்.
காயிதே மில்லத்திற்கு இது தெரியாது. சில மாதங்கள் கழித்து ரேஷன் கார்டுகள் வீடுகளுக்கு வழங்கப் பட்டன. ரேஷன் கார்டை காயிதே மில்லத் பார்த்தார்கள். அதில் 5 பெரியவர் ஒரு சிறியவர் என்று இருப்பதைப் பார்த்து, தவறுதலாகப் பதிவாகி விட்டது. நம் வீட்டில் 3 பெரியவர்  3 சிறியவர் தானே இருக்கிறோம். (அதாவது காயிதே மில்லத், மகன் மியாக்கான் சாஹிப், மருமகள், பேரப்பிள்ளைகள் ஹிப்பத் பாத்திமா, நுஸ்ரத், தாவூத் இவர்கள் தான் காயிதே மில்லத் குடும்பம்).
உரிய இடத்தில் சென்று இதை திருத்தி வாருங்கள் என்று மருமகளைக் கூப்பிட்டுக் கொடுத்து விட்டார்கள்.
காயிதே மில்லத் மருமகளார் தான் தாம் அப்படிச் சொன்னதாகவும்  அதற்குரிய காரணத்தையும் சொன்னார்கள்.
காயிதே மில்லத் முகம் மாறி விட்டது. ரேஷன் அட்டையை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார்கள்.
மறுநாள் காலை தானே நேரே புறப்பட்டு குரோம் பேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்ட் திருத்தப் பகுதியில் மனுக் கொடுத்தார்கள். அங்கிருந்த அதிகாரி காயிதே மில்லத்தை அறிந்து இருந்தவர். "ஐயா இதில் என்ன இருக்கு, பரவாயில்லை" என்று தயங்கியபடி சொன்னார்.
காயிதே மில்லத் அதிகாரியைப் பார்த்து
"தயவு செய்து உங்கள் பணியை நீங்கள் ஒழுங்காகப் பாருங்கள்" என்று கூறி ரேஷன் கார்டையும் மனுவையும் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள்.
சில நாட்கள் கழிந்தது. திருத்தப் பட்ட ரேஷன் அட்டை காயிதே மில்லத் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
இன்னொரு கண்டிப்பும் காயிதே மில்லத் இல்லத்தாருக்குச் சொன்னார்கள்.
ரேஷன் பொருளாக வழங்கப் படும் அளவு எதுவோ அந்த அளவில் தான் அந்த மாதத்தில் உணவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது போதவில்லை என்றால் ரேஷனில் வழங்காத உணவுப் பொருளை வெளியில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரேஷனில் வழங்கும் பொருளை எக்காரணம் கொண்டும் வெளி மார்கெட்டில் விலை கொடுத்து வாங்கக் கூடாது. இது நாம் அரசுக்குச் செய்யும் துரோகம். கள்ள மார்க்கேட்டை ஊக்கப்படுத்தும் குற்றம்என காயிதே மில்லத் கடுமையாக இல்லத்தாருக்குக் கட்டளை இட்டார்கள்.
காயிதே மில்லத் இந்த உலகத்தை விட்டு செல்லும் நாள் வரை இந்த பத்திய முறைதான் தயா மன்ஸிலில் உறுதியாகக் கடைப் பிடிக்கப் பட்டது.

                அடுத்தும் தயா மன்ஸிலைப் பார்ப்போம்!..

1 comment:

  1. இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என அறியும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இப்போது இல்லையே என்று நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது.

    ReplyDelete