Sunday, August 18, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–19

இரு நினைவுகள்!!


நெல்லை கைலாசபுரம் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைமையகத்தை நினைக்கும் பொழுதெல்லாம், எனக்கு சில துணுக்கு துணுக்கான தகவல் நினைவுகள் வருகின்றன. அவற்றை இங்கே கொஞ்சம் பதிவு செய்து  கொள்கிறேன்.

நெல்லை முஸ்லிம் லீக் அலுவலகமும், அந்த அலுவலகத்தின் ஒட்டிய வீடும், மாவட்ட லீகின் உரிமையானது. அந்த வீட்டில் பன்னெடுங்காலமாகக்  குடியிருந்தவர்கள், மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதலி ஹஸரத் அவர்கள்.

இவர்கள் என் தாய்வழித் தாயின் உறவுக்காரர். தமிழில் முதலில் வெளிவந்த அன்வாறுல் குர்ஆன் ஆசிரியர், மௌலான மௌலவி அப்துர் ரஹ்மான் பாகவியின் ஒன்று விட்ட சகோதரர். ஷாதலி ஹஸரத்தின் தந்தையார், ஆலிஜனாப் அப்துல் காதர் சாஹிப், மதரசாக்களில் ஸனது பெறாத மாபெரும்  இஸ்லாமிய மார்க்க மேதை.

அவர்கள் காலம் அஹமதிய்யா அமைப்புகளுக்கும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளுக்கும் மத்தியில் தத்துவ மோதல்கள், சகட்டு மேனிக்குக் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன.

‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகை, அறிஞர் தாவூத் ஷா அவர்களுக்குரியது. ஆங்கிலம், தமிழ், அரபி மொழிகளில் தாவூத் ஷாவின் பாண்டித்யம் அண்ணாந்து பார்க்க வைக்கக்கூடியது.

தாருல் இஸ்லாம் பத்திரிகையில் ஒரு அறிவிப்பு எப்பொழுதும் இருக்கும். அந்தப் பத்திரிகையில் எழுத்துப் பிழை சுட்டிக் காட்டினால், ஒரு எழுத்துக்கு அரையணா தரப்படும் என்ற அறிவிப்புதான் அது. அந்த அளவுக்குத் தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் பத்திரிகை இப்பொழுது கூட வருகிறது  என்று சொல்ல முடியாது.

வெளி வந்த நாளில் இருந்து இறுதி நாள் வரை எழுத்துப் பிழை இல்லாத இந்தப் பத்திரிகையில் ஒரே ஒரு முறை ஒரு எழுத்துப் பிழையைக் கண்டு பிடித்து விட்டார் ஒரு முஸ்லிம் லீகர். அவர்தான் கூத்தானல்லூர் கவிஞர் சாரண பாஸ்கரனார். (இவர் சுன்னத் வல் ஜமாஅத் காரர்)

இந்தப் பத்திரிகையில் அஹமதிய்யா கொள்கைகள், வேகத்தோடு வெளிவந்து கொண்டிருந்தன. இதற்குப்   பதில் சொல்லத்  தென்காசியிலிருந்து ‘முஸல்மான்’ பத்திரிகை சுன்னத் வல் ஜமாஅத்துடைய கோட்பாட்டை வீரியமாக வெளியிட்டு கொண்டிருந்தன.

இந்த பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியரும் ஷாதலி ஹஸரத்தின் தந்தையார்.

ஷாதலி ஹஸரத்தினுடைய பரம்பரையினருக்குத், தென்காசியில் வங்காரு குடும்பம் என்று பெயர். இந்த வங்காரு என்ற சொல், தெலுங்கு மொழி சொல்லான பங்காரு என்ற சொல்லின் தமிழ் வடிவம்.

தென்காசியில் முத்து வணிகம் செய்த குடும்பம் அது. இந்தப் பங்காரு குடும்பத்தில் பங்காரு முத்து மீரான் என்பவர் தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியவன் காலத்தவர்.

பராக்கிரம பாண்டியன், இந்த முத்து மீரானை சிரச் சேதம் செய்ய கட்டளையிட்டுவிட்டான். அந்த நேரத்தில் மன்னனை நோக்கி வசைகவி பாட, பராக்கிரம பாண்டியன் தலைமுறை சிதைந்து விட்டது என்ற ஒரு சரித்திரக் கதை உண்டு.

பங்காரு குடும்பத்தில் அன்று தொட்டு இன்று வரை, ஆலிம்களும், புலவர்களும் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக வருகின்றனர்.

எங்களின் பாரம்பரியத்தைப் பற்றி  பங்காரு குடும்பத்தில் உள்ள ஷாதலி ஹசரத்தின் முன்னோரில் ஒருவர் கவிதை வழிவாறு பாடித் தந்திருக்கிறார்.

ஷாதலி ஹஸரத் அவர்கள் நெல்லை லீக் தலைமையகதிற்கு அருகில் குடியிருந்த காலங்களில் கைலாசபுரம் பள்ளிவாசலின் இமாமாகப் பணிபுரிந்து வந்தார்கள். அந்தப் பள்ளியின் வளாகத்துக்குள் ஒரு அறையில் வாடகை  கொடுத்து ஜமாஅத்துல் உலமா பத்திரிகையின் அலுவலத்தை உருவாக்கி நடத்தி வந்தார்கள்.

அதன் ஆசிரியரும், வெளியீட்டாளரும் அவர்கள்தான். மேடைப் பேச்சில் கணீரென்ற தொனியில் மணிக்கணக்கில் அள்ளிக் கொட்டக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

முஸ்லிம் லீகின் ஆணித்தரமான கோட்பாட்டு உறுதிமிக்கவர்கள். ‘முஸ்லிம் லீகின் வரலாறு’ என்ற சின்ன பிரசுரத்தை அந்தக் காலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தன் வாழ்வின் இறுதி வரை, நெல்லை பள்ளிவாசலின் இமாம் பணியையும், முஸ்லிம் லீகின் அரசியல் பணியையும் விடாமல் கடை பிடித்தவர்கள்.

ஷாதலி ஹஸரத் எனக்கு தாதா முறைக்காரர். என்னை மிகவும் கேலி செய்யக் கூடியவர்.

ஒரு நாள் லீக் தலைமையகத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தேன். ஷாதலி ஹஸரத் அவர்கள் அதை ஒட்டிய, வீட்டின் படிக்கட்டிலிருந்து இறங்கினார்கள். என்னைப் பார்த்தவுடன்,

“வேய் புலவரே, எப்பம் வந்தீர்? புலவராய் இருந்தாலும், பாங்கொலி கேட்டவுடன், பள்ளிக்கு தொழத்தான் வர வேண்டும்.” எனக் கூறிக் கொண்டே படிகளில் இறங்கினார்கள்.

நான், சிரித்துக் கொண்டே, ”தாதா ஆபீசுகுள்ள வாங்களேன்” என்றேன்.

“நான் இப்பொழுதெல்லாம் லீக் ஆபீஸுக்குள் வருவது இல்லை” என்றார்கள்.

“ஏன் லீக் பிடிக்கவில்லையா தாதா?” என்றேன்.

“அது எப்படி பிடிக்காமல் போகும்? லீக் என் உயிர் மூச்சில் கலந்து இருக்கிறது” என்றார்கள்.

“அப்பம் ஏன் ஆபீஸுக்கு வர மறுக்கிறீர்கள்?” என்றேன்.

“லீக் ஆபீசுக்குள் உருவப் படத்தை வைத்து விட்டார்கள்” என்றார்கள்.

அவர்கள் சொன்ன உருவப் படங்களில் ஒன்று, காயிதே மில்லத்தின் படம், மற்றொன்று மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிபின் படம்.

“தாதா, ஹஜ்ஜுக்கு, வெளிநாட்டுக்கு எல்லாம் போய் இருக்கிறீங்க, எப்படி பாஸ்போட்டு இல்லாமலா போனீங்க? அதில் உங்கள் படம் இருக்குமே! உங்கள் பையில் கரன்ஸி நோட்டுகள் இருக்கின்றன. அதில் காந்தி படம் இருக்குமே!” என்றேன்.

“புலவர் பட்டிமன்றம் நடத்துறீரோ?” என்று சிரித்து கொண்டே பள்ளிவாசலை நோக்கி இமாமத் பண்ண நடந்து சென்றார்கள்.

நான் அவர்களை மடக்கிவிட்டதாக நினைத்தேன். இது தேவையற்ற வாக்குவாதம் என்று இன்று முழு வாக்குமூலம் தருகிறேன்.

அன்று அவர்கள் மனம் புண்பட்டு இருக்குமேயானால், “மன்னித்துக்  கொள்ளுங்கள்” என்று இறைவன் வழியே பிரார்த்திக்கிறேன்.

ஷாதலி ஹஸரத் அவர்களுடைய மகனார், மௌலானா மௌலவி முஹம்மது இப்ராஹீம் ஹஸரத் தந்தையாருக்கு பின்னர், பள்ளிவாசல் இமாமத் பணியையும், முஸ்லிம் லீகின் தொண்டுப் பணியையும் தொடர்ந்து கடைப் பிடித்தார்கள்.

இன்று, அவர்கள் இல்லை. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். முஹம்மது இப்ராஹிம் ஹசரத் என்னுடன், தென்காசி காட்டு பாவா ஆரம்ப பள்ளியின் வகுப்பறைத் தோழர்.

சர்தார் இப்ராஹிம் சாஹிப்!
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைமையகத்தோடு இரண்டறக்  கலந்துவிட்ட ஒரு தொண்டர். மேலப்பாளையம் அருகாமையில் உள்ள குறிச்சிக்காரர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய தாதா பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள குடிலில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்.

இவர், பிறப்பால், தலித் சமுதாயத்தின் சொந்தக்காரர். அந்தக் காலத்திலேயே  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் ஆபீசில் ஹெட் கிளார்க் பதவி வகித்தவர்.

குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவியவர்.

ஒவ்வொரு வாரமும், சனிக் கிழமை மாலை மேலப்பாளையத்திலிருந்து ரஹ்மத் நகருக்கு சைக்கிளில் வருவார்.

எங்கள் தாதாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். எங்கள் தாதாவோடு உணவு அருந்தி அங்கேயே தங்கி விடுவார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சைக்கிளிலேயே மேலப்பாளையம் சென்று விடுவார். அப்போதெல்லாம், பேண்ட், சட்டை, தாடி, தொப்பி கோலத்தில்தான் இருப்பார்.

அரபு மொழி ஞானத்தை வளர்த்துக் கொண்டவர். திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதி எங்கள் தாதாவிடம் படித்துக் காட்டுவார். எங்கள் தாதா அவற்றைக் கேட்டுக் கொண்டு “பேஷ், பேஷ்” என்று ஆரவாரம் செய்வார்கள்.

சர்தார் இப்ராஹிம் சாஹிப், எழுதிய பல ஆங்கில பிரசுரங்களை எங்கள் தாதா வெளியிட்டு இருக்கிறர்கள்.

1945 ஆம் ஆண்டு நடந்த நெல்லை மாவட்ட மாநாட்டில் அகில இந்திய முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் ஒருவர், லியாகத்அலி கான் இரண்டரை மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அதே உணர்ச்சி வேகத்தில் தமிழில் மொழி பெயர்த்தவர் தூத்துக்குடி பிரைமரி முஸ்லிம் லீகின் செயளாலர் ஷேக் இப்ராஹிம் சாஹிப். நம் சர்தார் இப்ராஹிம் சாஹிபுக்கு மிகப் பெரிய ஆங்கில மோகம் இருந்தது. அதனால் அன்று லியாகத்அலி கான் உரையை மொழிபெயர்த்த ஷேக் இப்ராஹிம் சாஹிப் பெயரை தனக்கு வைத்துக் கொள்ள ஆசைப் பட்டார். அந்த ஷேக் இப்ராஹிமில் சர்தாரை சேர்த்து, சர்தார் இப்ராஹிம் ஆனார்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், வாழ்வின் முழு நேரத்தையும், முஸ்லிம் லீகின் ஆபிசில் பணியாற்றக் கூடிய வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

பெரும்பாலும் பச்சை சட்டை, பச்சை துண்டு அணிந்தவராகத்தான் இருப்பார். தொழுகை பேணுதலை அவரிடமிருந்து பல முஸ்லிம் லீகர்கள் கற்றுக் கொண்டார்கள்.

இரவு நேரத்தில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, மங்கிய வெளிச்சத்தில், தஹஜ்ஜத் தொழுகை, இன்னும் என்னென்ன தொழுகையோ அவற்றை ஒரு உருவம் தொழுது கொண்டிருக்கும்.

அந்த உருவம்தான் சர்தார் இப்ராஹிம் சாஹிப்.

அவர் உடம்பில், முகத்தில் வெள்ளைப் படர்ந்து இருக்கும். தோற்றம் ஒரு பக்கீர் போல் இருக்கும். ஆனால் அவர் அரசுப் பணி செய்து பென்சன் வாங்கி வாழ்ந்து கொண்டிருந்தவர்.

லீக் அலுவலகத்தில் வருபவர்களுக்கு பணிவிடை செய்வதில், அவருக்கு ஒரு அசாத்திய பிரியம். டீ, காபி கூட வாங்கி வந்து தருவார். பல லீகர்கள், லீக் அலுவலக ஊழியர் என்று நினைத்து அவரை வேலை வாங்குவார்கள். அப்போதும் அவர் முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வார்.

இவருக்கு உடல் முழுவதும், தடிப்பும் சீழும் எப்படியோ தொற்றிக் கொண்டது. நாங்களெல்லாம் எத்துணை முறையோ மருத்துவம் பார்க்க டாக்டரிடம் அழைத்தோம். வர மறுத்து விட்டார். ஆனால் ஒவ்வொரு இரவும், விழித்தெழுந்து தஹஜ்ஜத் தொழுது, அழுது இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.

ஆச்சர்யம், அவர் உடலிலிருந்த தடிப்புகளும், சீழும்  அவர் உடம்பிலிருந்து துளியும் தெரியாமல் அவரை விட்டு நீங்கி விட்டது.

அவருக்கு வந்த நோயென்ன? யாருக்கும் தெரியாது? அதற்குரிய  மருந்தென்ன? இறை ரகசியம்.

சர்தார் இப்ராஹிம் சாஹிபுக்கு எப்போதாவது, குறிச்சி மகன் வீட்டில் இருந்து உணவு வரும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுவார். அவர் மகனின் பெயர் எங்கள் தாதாவின் பெயரான அப்துல் ரஹ்மான் சாஹிப்.

ஒருநாள், இரவு நான் பன்னிரெண்டு மணிக்கு பின்னர், நெல்லை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு வந்தேன். வாசலுக்கு வெளியெ படிக்கட்டுக்கு பக்கத்தில் இருவர் இலையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். நான் லீக் ஆபிசின் கதவைத் தட்டினேன். சர்தார் சாஹிப் கதவைத் திறந்தார். நான் வாசலுக்குள் நுழைந்தவுடன், வாசல் படிக்கட்டில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி
“யார் நீங்கள்?, இந்த நேரத்தில் படிக்கட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே!” என்று சத்தம் போட்டேன்.

சர்தார் பாய், என்னைப் பார்த்து, “சத்தம் போடாதீர்கள், நான் தான் உணவைக் கொடுத்தேன்” என்றார்கள்.

கதவை அடைத்து விட்டு, உள்ளே வந்துவிட்டேன். சர்தார் சாஹிபிடம் கேட்டேன்,

“உணவு ஏது? ஏன் இந்த நேரத்தில் அவர்களுக்கு கொடுத்தீர்கள்” என்று கேட்டேன்.

“மதியம் என் மகன் கொண்டு வந்து கொடுத்தான்” என்றார்கள் சர்தார் சாஹிப்.

“மீதமுள்ளதை இந்த நேரத்திலா அவர்களுக்கு கொடுக்க வேண்டும்?” என்று நான் திரும்ப கேட்டேன்.

“மத்தியான சாப்பாட்டில் மீதமுள்ளதில்ல. முழு சாப்பாடும் அதுதான்” என்றார்.

“நீங்கள் ஏன் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்.

“எனக்கு அது ஹலாலானது அல்ல என்றார்.

“அப்படியானால் அவர்களுக்கு?” என்றேன்.

“அவர்களுக்கு அது ஹராமானது அல்ல” என்றார்.

சொன்னவர், அடுத்து கேட்பதற்கு வழியில்லாமல், தக்பீர் கட்டி நின்று விட்டார் அந்த நள்ளிரவில்.

சர்தார் சாஹிப் தூய்மையான மனிதர். அப்பழுக்கற்றவர்.

வெளியே உணவருந்திக் கொண்டிருந்தவர்கள், தவறானவர்கள் என்பது மட்டும் புரிந்தது. அன்று, சர்தார் சாஹிப் சொன்னது எனக்கு புரியவில்லை. இன்று தெரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் விளங்கவில்லை.

சர்தார் சாஹிப், முஸ்லிம் லீக் அலுவலகத்தின், மூச்சுப் போல கலந்து இருக்கிறார் என்று, இன்று எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.


No comments:

Post a Comment