Wednesday, July 31, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? – 9

ஊழியன் வழங்கிய பட்டமளிப்பு


சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்புள்ள சிதம்பரம் தனக்கென ஒரு தனி அழகை கொண்டிருந்தது. எந்த வீதிகுள்ளும் வாழும்  அந்த மக்கள் மேற்கொண்டிருக்கும் மதத்தின் பக்தி மணம் வெளிப் பட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாதிரியான அமைதி நிலவும். சிதம்பரத்திற்கே இரண்டு இடங்களில் தான் பெருமை நிலைத் திருந்தது .


ஒன்று, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தி சுற்றுலா மக்கள்.

இரண்டு அண்ணாமலை பல்கலைக் கழகம்.

சிதம்பரம் எல்லையை தாண்டி பாலமான் பாலத்துக்கு கீழ் ஓடும் பெரிய ஓடையா அல்லது சின்ன ஆறா என்று சொல்ல முடியாத அளவில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நதி.

இந்த பாலமான் பாலத்தைக் கடந்து வலது புறம் திரும்பி இரண்டுப் பக்க மரங்களுக்கு நடுவில் சென்றால் ரயில் வே ஸ்டேஷன் .

இந்த ரயில் வே ஸ்டேஷனுக்கு ஒரு விசித்திர விதி இருந்தது. நான் ஒரு பத்தாண்டுகள் அங்கே நடமாடித் திருந்திருக்கிறேன். இந்த ரயில் நிலையத்தில் எவருமே பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியது கிடையாது.

ஆனால் அந்த ரயில் நிலையத்தை தாண்டியுள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மாணவ மாணவியரும், ஊர் மக்களும் அந்த பிளாட்பாரத்தில் எல்லா நேரமும் நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

அண்ணாமலை நகர். அங்குள்ள அண்ணாமலைப் பலகலைக் கழகம் அன்றிருந்த அந்த அழகை இன்று இழந்து விட்டது எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு மன உறுத்தலாகவே இன்றும் இருக்கிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பற்றி ஒரு வெண்பா எழுதி இருக்கிறார்.

அந்த  உண்மையை நாங்கள் அன்று கண்டிருந்தோம்.

"தில்லைப் பதிவுடையான் சிற்றம் பலத்தேநின்று
அல்லும் பகலும்நின்று ஆடுகின்றான் -எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து"

தில்லையிலே நடமாடும் நடராஜர் அப்படிக் கூத்தாட காரணம் சிதம்பர எல்லையில் அமைந்திருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கண்டுதான் என பல்கலைக் கழகத்தை வாய் மணக்க பாராட்டினார்.

அண்ணாமலை தமிழ்த் துறையில் நான்கு ஆண்டுகள் நான் மாணவனாக இருந்திருக்கிறேன். இந்த நான்கு ஆண்டுகளும் என் வாழ்வின் சாதனைக் காலம் என்றுக் கூட சொல்லலாம். அங்கே நடந்த மாணவப் போராட்டங்கள், அங்கே நடந்த  ஆய்வரங்கங்கள், அங்கே எப்பொழுதுமே நிலைத்திருக்கும் அரசியல் போராட்டங்கள். எல்லாவற்றிலுமே எனக்கும் நேரடிப் பங்கு இருந்திருக்கிறது.

தமிழ்த் துறைத் தலைவர் பேரா. .சுப. மாணிக்கனார் என் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக பல நேரங்களில் நான் பாதுகாக்கப் பட்டிருந்திருக்கிறேன். சரியாக முதலாண்டு நீங்கலாக மீதமுள்ள மூன்றாண்டுகள் எனக்கு கார்டியனாக ஐயா உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் தான் இருந்தார். என்னால் பல நேரங்களில் போர்க் களம் அமைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கும் வந்து விட்டது.

 புலவர் வகுப்பு நான்கு ஆண்டுகளிலும் நான் துறை முதல் மாணவனாக தேர்வில் வெற்றிப் பெற்று இருந்தேன். ஆனாலும் தமிழ்த் துறையின் பேராசிரியர்கள் பலருக்கும் தேவையற்ற தலை வலியாக இருந்தது உண்மை.

அதே போல் பல பேராசிரியர்களுக்கு நான் மதிப்பு  தரும் மாணவனாகவும் இருந்திருக்கிறேன். முன்னாள் முதல்வர் M.G. ராமச்சந்திரன், அவர் நடிகராக திகழ்ந்த காலக் கட்டத்தில் அண்ணாமலைப் பலகலைக் கழகத்திற்கு அறக்கட்டளை நிறுவி, அந்த பணத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் துறைக்கு புலவர் வகுப்புக்கும், M.A க்கும் தனித்தனியாக பல்கலைக் கழக முதலாக வரும் மாணவர்களுக்கு ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்க உதவி இருந்தார்.

அந்த தங்கப் பதக்கத்தில் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தின் முத்திரைப் பதித்து இருக்கும். மறுபக்கத்தில் M.G. ராமச்சந்திரன் என்ற பெயர் பொறித்து இருக்கும்.

நான் படிக்கும் போது, துறை முதல் மாணவனாக வந்து இந்தத் தங்கப் பதக்கம் பெற தகுதி அடைந்தேன்.

இந்தப் பதக்கத்துடன் இரண்டாயிரம் ரூபாயிக்கு புத்தகங்களும் பரிசாக தரப் பட்டன.

இந்தத் தொகைக்கு என்ன புத்தகங்கள் வேண்டும் என்று துறைத் தலைவருக்கு ரெஜிஸ்டரிடம் இருந்து கடிதம் வரும். துறைத் தலைவர் அந்த மாணவனிடம் இருந்து தேவையான புத்தகப் பட்டியலை வாங்கி ரெஜிஸ்டருக்கு அனுப்புவார்.

இந்த விதிப் படி எங்கள் பேராசிரியர் .சுப. என்னிடம் புத்தகப் பட்டியல் கேட்டார். நான் அவரிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தேன். அதை வாங்கி பேராசிரியர் படித்து பார்த்தார். நீ கேட்டிருக்கும் எந்தப் புத்தகத்தையும் பல்கலைக் கழகம் வாங்கி தராது என்றார்.

ஐயா நீங்கள் இதை அனுப்பி வையுங்கள், தந்தால் புத்தகம் தரட்டும். இல்லையென்றால் பரிசுத் தொகையை வைத்துக் கொள்ளட்டும் என்றேன்.

எங்கள் பேராசிரியர் சிரித்துக் கொண்டே, பட்டியலை ரெஜிஸ்டருக்கு அனுப்பி விட்டார்.

நான்  கேட்டிருந்த புத்தகப் பட்டியல் அத்தனையும் சிகப்பு சித்தாந்த புத்தகங்கள்.

பேராசிரியர் குறிப்பிட்டது படி , ரெஜிஸ்டரிடம் இருந்து மறுநாளே ஒரு பதில் வந்து இருந்தது.

"மாணவன் கேட்டிருக்கும் பட்டியல்  புத்தகங்களை தர இயலாது, அண்ணாமலை அல்லது சிதம்பரத்தில் கிடைக்கக் கூடிய புத்தகப் பட்டியலை கேட்டு வாங்கி அனுப்பவும்””. ரெஜிஸ்டர் பதிலில் இப்படி இருந்தது.

பேராசிரியர் என்னை அழைத்து இந்தத் தகவலை சொல்லி, இன்னொரு புத்தகப் பட்டியலை எழுதி வா என்றார்.

எனக்கு எப்போதும் வரும் ஆவேசம் அப்போதும் வந்து விட்டது. ஒரு பட்டியல் தயார் பண்ணினேன். அப்போது வாரப் பத்திரிகைகளாக குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கல்கண்டு, இலக்கிய இதழ்களாக தீபம், கண்ணதாசன், சிறு பத்திரிகை கசடதபற, அரசியல் இலக்கியம் கலந்த இதழ் செம்மலர் இவைகளை எழுதி, இவை அனைத்தும் சிதம்பரத்தில் கிடைக்கும். அவைகளை என் பரிசுத் தொகைக்கு உரிய அளவில் வாங்கி தந்து விடுங்கள் என எழுதி அதை எங்கள் பேராசிரியரிடம் கொடுக்காமல் நானே நேரே ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்று ரெஜிஸ்டரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.
ரெஜிஸ்டரின் கோபம் அன்று மதியமே வெளிப் பட்டுவிட்டது. எங்கள் பேராசிரியருக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பி இருந்தார்.

எங்கள் பேராசிரியர் என்னை அழைத்தார். "ஏன்டா யாருக்கும் எப்போதும் ஒத்துப் போக மாட்டியா? கேட்ட புத்தகப் பட்டியல் நீ என்னிடம் தானே தந்திருக்க வேண்டும், நேரே ன் பதிவாளரிடம் போய்க் கொடுத்தாய்?" என்று சற்று கடுமையாகவே என்னிடம் கேட்டார்.

நான் ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி, "அவர்தானே பட்டியல் கேட்டு இருந்தார். அவர் கேட்ட படி சிதம்பரத்தில் கிடைக்கக் கூடிய புத்தகங்களைத் தானே நான் எழுதி இருந்தேன். ரெஜிஸ்டரார் சொல்லுக்கு மரியாதைக் கொடுத்துத் தானே எழுதி இருந்தேன். அதனால் தான் நேர சென்று அவரிடம் கொடுத்தேன்" என்றேன்.

பேராசிரியர் முகத்திலிருந்த கடுமை படீரென்று மாறி விட்டது. வாய் விட்டு பலமாக சிரித்தார். சரி சரி போ என்று என்னை அனுப்பி விட்டார்.

எங்கள் பேராசிரியரே அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகளில் இருந்து பரிசுத் தொகைக்குரிய நூற்களைக் குறித்து ஒரு பட்டியலை பதிவாளருக்கு அனுப்பி விட்டார்.

பட்டமளிப்பு விழா வந்தது. பதக்கம் பெரும் மாணவர்களுக்கு மட்டும் பதக்கத்தையும், பட்டச் சுருளையும் ஆளுனர் நேரடியாகத் தருவர். அன்றைய தமிழக ஆளுநர் K .K .ஷா அவர்கள்.

நானும் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தேன். ஆனால் அந்த மண்டபத்திற்குள் செல்ல வில்லை. மேடையில் K.K. ஷா, இணை வேந்தர் முத்தையா செட்டியார், துணை வேந்தர் ஆதி நாராயணன், பதிவாளர் அமர்ந்திருந்தனர். துறைத் தலைவர் என்ற முறையில் ஐயா .சுப. மாணிக்கனார் மேடைக்கு வந்து, தமிழ்த் துறையில் பதக்கம் பெற்ற புலவர் மாணவன் என்னையும், தமிழ் M.A மாணவரையும் மேடைக்கு அழைத்தார். M.A மாணவர் மேடைக்கு வந்தார். ஆளுநர் கையால் பதக்கத்தையும் பட்டதையும் பெற்றார்.

நான் வரவில்லை. என் பதக்கத்தையும், பட்டதையும் ரெஜிஸ்டரிடம் ஒப்படைத்து விட்டனர்.

மூன்று தினங்கள் கழித்து எங்கள் பேராசிரியர் மாணிக்கனார் அவர்களை சென்று சந்தித்தேன். ஐயா அவர்கள் அதிகமதிகம் வேதனைப் பட்டார். ஒருவர் வாழ்க்கையில் ஒருமுறை வரும்  இந்த அறிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டாயே!, நீ ஏன் பட்டமளிப்பு விழாவிற்கு வரவில்லை என்று கேட்டார்.

"ஐயா நான் வந்திருந்தேன். ஆனால் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் வரவில்லை. நமது தேர்வு முறை அறிவை வெளிப் படுத்தும் ஒன்றாக இல்லை. நினைவில் உள்ளதை காகிதத்தில் கொட்டி விட்டால் முதல் மதிப்பெண் பெற்று விடலாம். அப்படித் தான் நானும் இந்த முதல் மதிப்பெண்ணை பெற்று இருக்கிறேன். இந்த விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் வரவில்லை என்றேன்"

எங்கள் பேராசிரியருக்கு இதில் சம்மதமில்லை. பேசுவதை நிறுத்திக் கொண்டார். நான் அடையாளக் கடிதம் தருகிறேன். அதைக் கொண்டு போய் பதிவாளரிடம் கொடுத்து உன்னுடைய பதக்கத்தையும், பட்டத்தையும் பெற்றுக் கொள்" என்றார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட நான், பதிவாளர் அறைக்கு சென்றேன். பதிவாளருக்கு என் மேல் மூடை மூடையாக கோபம் உண்டு. எனவே கடிதத்தை வாங்கிக் கொண்டு என்னை அறைக்கு வெளியே போய் அமரச் சொன்னார்.

நான் வெளியே வந்து அமர்ந்தேன். பதிவாளர் ஹெட் கிளர்கை தன் அறைக்கு அழைத்து என்னுடைய பதக்கத்தையும், பட்ட சுருளையும் கொடுத்து என்னிடம் ஒப்படைக்கச் சொன்னார்.

ஹெட் கிளார்க் அவர் இருக்கைக்கு என்னை அழைத்து சென்று மகிழ்வோடு என்னிடம் தந்தார்.

நான், "ஐயா இந்த ஊழியரிடம் (பியூன்) கொடுங்கள் ,அவர் கையால் நான் பெற்றுக் கொள்கிறேன் என்றேன். ஹெட் கிளார்க் முகம் சிவந்து விட்டது. ஆனாலும் ஊழியரிடம் அவர் கொடுத்து விட்டார். என்னுடைய பதக்கத்தையும், பட்டதையும் நான் அந்த ஊழியர் கையால் தான் பெற்றேன். அன்று எனக்கது பெரும் மகிழ்வாக இருந்தது.

பதக்கத்தை என் தந்தையாரிடம், தாயாரிடம் கொண்டு வந்து காட்டினேன். என் தந்தையாருக்கு மகிழ்ச்சி. அந்தத் தங்கப் பதக்கத்தை முன்னும் பின்னும் பார்த்து விட்டு, என்னிடமே தந்து விட்டார்கள்.

சும்மா சொல்லக் கூடாது, ஒரு மாசம் அது என்னிடம் இருந்தது. ஒரு நாள் கைச் செலவுக்கு பணம் இல்லை. சிகரெட் வாங்கக் கூட காசு இல்லை. சென்னை ஐஸ் ஹவுஸ் லாயிட்ஸ் காலனியில் நாங்கள் குடி இருந்தோம். உரிமைக் குரல் வார இதழின் பணியாளர் குளச்சல் செய்யதை அழைத்துக் கொண்டு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மார்வாரிக் கடையில் ஒரு பவுன் தங்கப் பதக்கத்தை நூறு ரூபாய்க்கு அடகு வைத்துவிட்டேன்.

குளச்சல் செய்யது, எனக்கு தெரியாமல் என் தாயிடம் இதை சொல்லி விட்டார். என் தாயார் உடனே பணம் கொடுத்து அந்த பதக்கத்தை மீட்டெடுத்துக் கொண்டார்கள். இது எனக்கு தெரியவே தெரியாது. தங்கப் பதக்கத்தைப் பற்றி நான் கவலைப் படவில்லை.

வட்டி கட்ட முடியாமல், மூழ்கி விட்டதாக நினைத்துக் கொண்டேன். பத்து ஆண்டுகளுக்கு பின், என் தாயார், இதை மீட்ட கதையை சொல்லி என்னிடம் காட்டினார்கள். நான் என் தாயாரிடம் பதக்கத்தை கேட்டேன். நீ வைத்த பதக்கம் மூழ்கி விட்டது. உனக்கு கிடையாது என்றார்கள்.

என் தந்தையார் அந்தப் பதக்கத்தை என்னுடைய சிறிய தாயாரின் கணவரான பதிவுத் துறையின் டி..ஜி யாக ஓய்வுப் பெற்ற சின்ன வாப்பா அவர்களிடம் கொடுத்து, இந்த டாலரோடு கொஞ்சம் தங்கம் சேர்த்து கழுத்து செய்னாக செய்துவிட சொல்லி இருந்தார்கள். ஹிலால் பிள்ளைக்கு இதைக் கொடுத்து விடலாம் என்றும் கூறி இருந்தார்களாம். இது எதுவுமே எனக்குத் தெரியாது.

அண்ணாமலையில் பெற்ற தங்கப் பதக்கத்தை டாலராகவும் செய்னாகவும் இணைத்து செய்த பொற்கொல்லர் பதக்கத்தை உருக்கி டாலராக்கி விட்டார். பின்னர் என் தந்தையார் இதைப் பார்த்து ரொம்ப வருத்தப் பட்டார்களாம். என் தந்தையார் ஹஜ்ஜுக்கு சென்ற இடத்தில மக்கத்தில் இறை நாட்டப்படி அவனிடம் சேர்ந்து விட்டார்கள்.

அதற்கு பின்னால் நானும் என் சகோதரர்களும், தந்தையார் வைத்திருந்த பெட்டிகளைத் திறந்து பார்த்த போது, இந்த டாலர் செயின் ஒரு பேப்பரில் குறிப்பு எழுதி பொதிந்து வைத்திருப்பதைப் பார்த்தோம். அப்போது அந்த டாலர் என்னிடம் தரப் பட்டது.


என்னுடைய அறியாமையின் கனம் என்னைக் கடுமையாக அழுத்திக் கொண்டிருக்கிறது.