Tuesday, June 4, 2013

பக்கீர்!!!
     ஷா தொழுகை முடிந்து வெகு நேரமாகிவிட்டது. பள்ளி வாசலின் உள்பிரகாரத்தின் வலது மூலையில் அவன் மட்டும் இருக்கிறான். தொழவில்லை. அமர்ந்த நிலையில் அவன் உடல்  குலுங்குகிறது. சப்தம் இல்லாத அழுகை. அழுகையும் ஒரு தொழுகையா? அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. அழுகிறான். மனதில் குற்றச் சூடு தகதகக்கும் போது விழிகள் கரைகின்றன.

     இறைவனுடன் ஒரு மன்றாட்டு பிழைகளுக்கு பரிகாரம். மனிதனின் வேதனைகளை இறைவனுக்கு அறிவிக்கும் ஆடையாளம். அழுகையில் மனத்தை கழுவிய திருப்தி இருக்கிறது.

     அவனிடம் சில சமயங்களில் சன்னமான விசும்பல் ஒலியும் வெளிப்படுகிறது. ஒரு மனிதன் ஏன் இப்படியெல்லாம் தவிக்கிறான்.

     போனவாரம் வெள்ளிக்கிழமை கடைக்கல்லாவின் ஓரம் ஒரு மர ஸ்டூலில் அமர்ந்திருந்தான். அந்த மர ஸ்டூலுக்கு வயது முப்பது இருக்கும். இவனுக்கு முன்பு அதில் எத்தனையோ பேர்கள் இருந்துவிட்டனர். காலம் அந்த ஸ்டூலை அங்கும் இங்குமாக சேதப்படுத்தி இருந்தது. ஒரு தினுசான ஆட்டம் அதில் இருக்கும். உட்காருவதற்கே பதன உணர்வு தேவைப்பட்டது.

     வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு அதில் அமர்வான். பன்னிரெண்டு மணியைக் கடையின் கடிகாரம் ஓசையுடன் ஒலிக்கும் போது எழுந்து விடுவான். வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள். யாசகத்துக்கு விதவிதமான மனிதர்கள் வருவார்கள். கெஞ்சலாகச் சப்தம் இடுவார்கள். கைகளை அவனை நோக்கி நீட்டுவார்கள். அலுமினியக் கிண்ணியில் இருந்து ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை வந்தவர்களின் தரத்திற்கு ஏற்ற மாதிரித் தருவான். இப்படி ஆறு வருடங்களின் வெள்ளிக்கிழமைகள் மாமூலாக கழிந்து வருகின்றன.

     மைதீன் ராவுத்தர் கடை என்றால் கர்ப்பத்துக்குள் லேசாக நகரும் பருவமுள்ள பிள்ளைகளும் தெரிந்திருப்பார்கள். இப்படிச் சொல்வதில் மைதீன் ராவுத்தருக்கு அலாதியான ஒரு கிக்.

     வெள்ளிக்கிழமை தருமம் மைதீன் ராவுத்தரின் சுவாசம் போன்ற ஒன்று. முதல் நாள் வியாழக்கிழமை இரவே நூற்றி ஐம்பது ரூபாய்க்கு எட்டணா ஒரு ரூபாய் நாணயங்களை அதற்கென்று உள்ள அலுமினியக் கிண்ணியில் சேர்த்து விடுவார். மறுநாள் வெள்ளிக்கிழமை அதற்கென்றே ஒரு வேலைக்காரன் பழைய மர ஸ்டூலில் அமர்வான். தரும பரிபாலனம் நடக்க ஆரம்பித்துவிடும். இந்த வேலைக்கு அவனைத்தான் மைதீன் ராவுத்தர் பணித்திருந்தார்.

     'பக்கீரு காசு. அது அவங்களுக்குத்தான் சேரனும். அதில் தப்பு நடந்துட்டா அல்லா மறுமையில திடலுக்குத் திடல் அலைய வச்சிருவான். ஜாக்கிரதை'. ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் மைதீன் ராவுத்தர் உச்சரிக்கும் சுலோகம் இது.

     அவனுக்கும் அச்சம் இருந்தது. தப்பு நடப்பதே இல்லை. என்ன கொஞ்சம் சிலுமிஷம் நடக்கும். பிச்சைக்கு வருகிறவர்களில் கூட நல்ல வாளிப்பான வசீகரமான குட்டிகளும் உண்டு. இதுகள ஏன் பிச்சை எடுக்க ரப்பு உட்டுட்டான்? அவனுக்குள் இப்படி சில சந்தர்ப்பங்களில் தோன்றும். ஒரு நாணயம் என்பது மீறப்படும். வாளிப்புக்கு ஏற்ற மாதிரி இரண்டு மூன்று நாணயங்கள் அவர்களுக்கு போய் சேர்ந்து விடும். பக்கீரு காசு பக்கீருக்குத்தானே போகிறது. என்னா கொஞ்சம் கூடப் போகுது. சிலருக்கு போவது நின்னு போகுது. அவ்வளவுதான். அவனுக்குள் இப்படி ஒரு சமாதானம்.

     அவன் அந்த வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல மர ஸ்டூல் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து விட்டான். மனத்தில் ஒரே ஆத்தமாட்டாமை.

     அம்மா ராத்திரி எல்லாம் இருமித் தொலைத்தே தூக்கத்தைக் கெடுத்து விட்டாள். பாவம் அவள் என்ன செய்வாள்?  அவன் பால்குடி காலத்தில் வாப்பா சம்சுகனி மவுத்தாகி விட்டார். அம்மா துடித்துப் போனாள். யார் துடித்தால் என்ன, உலகம் தேவைகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும்.

     அம்மா இங்கு வந்து பிச்சைக் கேட்கும் ஒருத்தியைப் போல இல்லாமல் ரோஷத்தொடு பீடி சுற்றி இவனை வளர்த்தாள். அவளுக்குள் எத்தனை சுகங்கள் இன்பங்கள் தானே உதிர்ந்து செத்துக் கருகி இருக்கிறதோ - அந்த ரஹ்மான்தான் அறிவான். பீடி சுற்றி வருமானம் வந்தது. டிபியும் நானும் வரேன்னு சொல்லி கூப்பிட்டாமலே கூட வந்துவிட்டது.

     அம்மா ரொம்ப நாள் இருக்கமாட்டா. அவள் ஆசைகள் எல்லாம் அவளுக்கு முன்பே மைய்யத்தாங் குழியில் அதாபு பட்டுக் கொண்டிருக்கின்றன.

     டிபிக்கு மருந்து வாங்க வேண்டும். தினம் முட்டை மூன்று சேர்க்கச் சொல்லி  டாக்டர் கட்டாயப்படுத்துகிறார். வழிதான் தெரியவில்லை.


     அவனுக்குள் தாய்மையின் பாசக்கசிவு சொட்டுச் சொட்டாக விழுகிறது. அம்மா இருமல் அவன் காதுக்குள் வந்து கத்துகிறது.

     "வாப்பா”... - அந்தக் கிழவி அவனிடம் கையை நீட்டுகிறாள். அந்தக் கைகளில் விரல்கள் கரைந்து போயின. சீழ்வடிவதை கந்தத் துணி சுற்றிக்கிடந்து மறைத்திருக்கிறது. பதிவாக  வரும் கிழவிதான்.

     அவன் எதுவும் பேசாமல் மூன்று ஐம்பது பைசா நாணயங்களை அவளின் உள்ளங்கைகளில் போடுகிறான். வழக்கத்தைவிட ஒரு நாணயம் அதிகம் அது. சின்னப் பையன்கள், குமரிகள், பிய்ந்த தொப்பிக்குள் தலையினைத் திணித்துக் கொண்டு வரும் பக்கீருகள் வருகிறார்கள். அவன் அலுமினியக் கிண்ணியில் இருந்து போட்டுக் கொண்டே இருக்கிறான்.

     அம்மாவின் காறித் துப்பும் சளியில் ரத்தம் திப்பித் திப்பியாக விழுகிறது. தொண்டையைத் தடவிக் கொள்கிறாள். அவன் கண்ணுக்கு இது தெரிகிறது. மனசில் மிளகாய்த் தூளை வாரிவாரி யாரோ எறிகிறார்கள். காந்துகிறது.

     இன்றைக்கு அம்மாவுக்கு முட்டை, ஆப்பிள், மாதுளை பழங்கள் வாங்கிப் போனால் என்ன? பணம்? அதுதான் அலுமினியக் கிண்ணத்தில் மின்னுகின்றனவே. - பக்கீருக் காசு. பாவம் முதலாளி, நம்பிக்கைத் துரோகமில்லையா?

     அம்மாவுக்கு நாக்கு பல நேரங்களில் வரண்டு போகுது.எச்சிலைக் கூட்டிக் கூட்டி உதட்டை மடக்கி நக்கிக் கொள்கிறாள். லேசான ஈரப் பதப்பு உதட்டில் அப்புகிறது. கொஞ்ச நேரத்தில் அவளின் உள்ளுக்குள் இருந்து எதையோ பிடுங்கி வெளியே தள்ளுவது மாதிரி கொடூரமான இரும்பல் வருகிறது. அவள் கண்களில் கண்ணீர் அரும்பு அரும்பாய் கோர்த்து, நிற்க இடமில்லாமல் உதிருகிறது. அம்மா தினம் தினம் ஸக்கராத்து ஹாலுலெ நெழிகிறாள். அவளின் ஒரு நிமிஷத் தெம்புக்கு ஒரு முட்டை தேவைப்படுகிறதோ?

     தாய்ப்பாசம் ஜெயித்துவிட்டது. தர்ம நேர்மை பிச்சை எடுக்கப் போய்விட்டது.

     "அத்தா இன்னிக்கு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஆவலையா?" ஒரு கையில் பிள்ளையினைத் தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டு கொஞ்சம் வயிறு உப்பிய கர்ப்பிணிப் பெண் - ஒருத்தி அவனிடம் குசலம் விசாரிக்கிறாள். அவளும் வெள்ளிக்கிழமை பக்கீருதான்.

     அவன் அவளுக்கு பதில் சொல்லவில்லை. அலுமினியக் கிண்ணியைக் கவிழ்த்துக் காட்டுகிறான்.

எல்லாம் கொடுத்து ஆகிவிட்டது என்பதின் அர்த்தம். இடுப்புப் பிள்ளையினைச் சற்று உயர்த்தி ஒரு இடுக்கு இடுக்கிக் கொண்டு அவள் பக்கத்துக் கடைக்கு போகிறாள். அவளுக்கென்ன ஆயிரம் கடை இருக்கிறது.

அவன் பக்கீரு பணத்தின் மீதியை வேட்டியின் இடுப்பு மடிப்பில் பத்திரமாக இறுக்கிக் கட்டிக் கொண்டான். அன்றைய வெள்ளிக்கிழமை தர்ம ராஜ்ஜியம் நிறைவு பெற்றுவிட்டது. ஜும்ஆ தொழுகை நெருங்கிவிட்டது. ஓட்டமும் நடையுமாகப் பள்ளிக்கு ஓடுகிறான். வக்த்து கிடைத்துவிட்டது.

மூன்று முட்டை மூன்று ஆப்பிள் மாதுளை ஒன்று ஒரு கேரி பேக்கில் கனக்கிறது. அவன் வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

அம்மா விடாத இருமலுடன் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறாள். அவளின் முன்னாள் கேரி பேக்கை வைக்கிறான். அம்மா திறந்து பார்க்கிறாள். அவள் விழிகளில் இப்போது உதிர்வது வேதனைக் கண்ணீர் இல்லை. பிரசவ காலத்து வேதனைக்குப் பின் பெற்ற பிள்ளையை முதலில் பார்க்கும் தாய்மைப் பார்வையில் அவனைப் பார்க்கிறாள்.

“நேரம் ஆகியிடுச்சி. கடையில முதலாளி திட்டுவாங்க. நான் வரேம்மா – அவனின் அம்மா சிரிக்கிறாள். எத்தனை நாளாகி விட்டது. இந்தச் சிரிப்பு அவளில் முகிழ்த்து.

     அவன் கடை வாசலில் ஏறுகிறான்.

     “எலே இன்னிக்கு ஒழுங்கா பக்கீரு காசுகள போட்டியா? ரொம்ப சீக்கிரமா இன்னிக்கு முடிந்தாப்புல தெரிதே... இல்ல கொஞ்சம் ஒசத்திட்டியா... பக்கீரு காசுலே... ஜாக்கிரதை.

     முதலாளி மைதீன் ராவுத்தர் ஒரு குறுஞ்சிரிப்பில் கேட்டார்.

     அவன் தலையைச் சாய்த்துச் சிரித்துக் கொண்டே கடைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் மனதுக்குள் நெருப்பு கொதிக்கிறது. முகத்தில் கருகின சாயல் படர்கிறது. பக்கீரு காசு அம்மாவை சுடுமா? தன்னைச் சுடுமா? யா அல்லாஹ்! யாரைச் சுடுவாய்? அவன் விழிகளில் கண்ணீர் சுடுகிறது.

     மஹசரில் வதைக்கிறது கிடக்கட்டும் – இந்த மண்ணிலேயே  தகிக்கிறதே.

அவன் இப்போது கடையில்தான் இருக்கிறான். ஆனால் கபுரின் நெருக்குதலில் கதறுகிறான். நட்டுவாக்காலி, தேள் பிடுங்குகிறது. கைகளில் மலக்குகள் நெருப்புக் கம்பியை பாளம் பாளமாக சொருகுகிறார்கள்.

பக்கீரு காசு திரும்பக் கொடுத்தால் பிழைக்கலாம். யாரிடம் கொடுப்பது? கொடுப்பதற்குப் பணத்துக்கு எங்கே போவது?


அவனும் கிட்டத்தட்ட பக்கீருதான். ஆனால் பக்கீரு காசை எடுத்து அதை ஏன் உறுதி செய்துக் கொண்டான். பக்கீரு நிலை வேண்டாம்.

  அவன் விழிகள் மடமடவென்று கண்ணீரைக் கொட்டுகிறது. எழுந்து விட்டான். கண்ணீர் மழை நிற்கவில்லை.

மழை பெய்யும்போது பிரார்த்திக்கிறான். அல்லாஹ் மன்னிக்கலாம்...


No comments:

Post a Comment