Friday, June 7, 2013

உரைச் சித்திரம் - நம்பிக்கை



"திருட்டைத் தெரிந்திருக்காத திருடன்.
  கஸ்தூரியின் வாசனையை அள்ளிவரக்
  கஸ்தூரியில் கன்னக் கோல் போடும் அறிவிலி"



     ஸ்ரா நகரத்தின் ஒதுக்குப் புறமான வீதி. வீதியின் கடைக்கோடியில் ரம்மியமான குடில். எளிமையான எடுப்பான குடில். சுற்றிலும் பசுமை. எத்தனை வண்ணத்தில் பூக்கள். குப்பென்று தளைத்துக் கிடக்கும் பசிய செடிகள். அது ஒரு ஞானப் பர்ணசாலை.

     இரவு வானம். மேகக் குப்பைகளைக் கூட சற்று நேரத்துக்கு முன்னே வீசிய காற்று துடைத்து ஒதுக்கித் தூர எங்கேயோ தள்ளி இருந்தது.

     நிர்மலமான வானத்தில் வெளிச்ச உருண்டையாக நிலா. ஒரு விதவையைப் போல் எளிமையாகத் தனித்துக் கிடந்தது. புள்ளி நட்சத்திரங்களுக்கும் என்ன போதாத காலமோ? ஒன்றைக் கூட வான வட்டாரத்தில் காண முடியவில்லை.

     ஞானப் பர்ண சாலைக்குள்ளும் ஒரே ஒரு ஒற்றை நிலா. அருள் பழுத்த அப்பழுக்கற்ற பிரகாச மேனி. பாலாற்றின் ரோஜாப் படகு.

     இறை வணக்கத்தில் ஒரு உருவம். எத்தனை ரக்அத் தொழுகை இதுவரை நிறைவேறி இருக்கிறதோ? - அது இறை ரகசியம்.


     தொழுது கொண்டிருந்த ரக்அத்தின் முடிவு வருகிறது.  இருந்த நிலையில் தலை வலப்பக்கம் ஸலாம் கொடுக்கத் திரும்புகிறது. அப்பாடா... சொர்க்கத்தின் ஜன்னல்திரை அசைவது போல்...

     மௌனம் குடிகொள்கிறது. கண் மூடிவிட்டது. இதழ்கள் அசைகின்றன. புஷ்பத்திற்குள் காற்று புகுவது போல சின்னச் சலனம்.

     நட்டநடு இரவில் இறைவணக்கத்தில் இருப்பவர் ராபியத்துல் பஸரியா. அவரின் ஞான விருட்சம் குடில் முழுவதும் நிழல் பரப்பிக் கிடக்கிறது. நிழலே அதிகாலைச் சூரிய வெளிச்சம்தான். இறைக் கிருபைக்கும் அவருக்கும் இடையில் ஈச்சிறகு கனத்தில் கூட திரையில்லை.

     குடிலுக்குள் எவனோ ஒரு மூன்றாமவன். அம்மையாரின் மோனப் பார்வை அவனுக்கு உறக்கம் போலத் தோன்றுகிறது. தனி மனுஷி. ஆளே இல்லாத குடில். அக்கம் பக்கத்தில் எவரும் இல்லை. வந்தவன் முன் ஜாக்கிரதையுடன் சுற்றிச் சுற்றி வேவு பார்த்துக் கொள்கிறான்.

     குடிலுக்குள் துழாவுகிறான். எதுவேமே இல்லை. ஞானக் குடிலுக்குள்ளும் திருடனா?

     திருட்டைத் தெரிந்திருக்காத திருடன். கஸ்தூரியின் வாசனையை அள்ளி வர கஸ்தூரியில் கன்னக் கோல் போடும் அறிவிலி. முகவரி தப்பிப் போன திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறான்.

     திருடனுக்கு எதுவுமே இல்லை. திருட வேண்டிய பொருள் இல்லாத வீட்டில் தனியே திணறுகிறான் திருடன். அவனுக்குள் எரிச்சலுக்குப் பதிலாக வெட்கம் வேர் பரப்பி ஸ்திரமாகிறது.

     மெதுவாகக் குடிலின் வாசலைக் கடக்க இடது காலை வெளியில் வைக்கிறான்.

     "அப்பனே, ஏன் அவசரம்? நில். நிதானம் தேவை. திருடுவதற்கு முன்னும் அது தேவை. தீர்மானம் இல்லாமல் இந்தத் தொழிலில் இறங்கக் கூடாது. திருட வேண்டிய பொருளின் இருப்பை அறிந்து கொள்ளாமல் திருட வருபவன் மட்டி. திருடத் தெரியாதவன் ஏன் திருட வேண்டும்? குருடனுக்கு ஏன் பட்டுப் பீதாம்பரம்? அப்பனே பொறுமையாக நில்".

     ராபியத்துல் பஸரியா நிதானமாக இதழை மலர விடுகிறார்.

     திருடனுக்குள் வேர்த்துவிட்டது. அங்கமெல்லாம் படபடக்கிறது. தலை தெறிக்க ஓட வேண்டும். கால்கள் பலமிழந்து விட்டன. அப்படியே நிற்கிறான்.

     "அப்பனே! திருட்டு எண்ணம வரும் போதே அச்சமும் அதில் கரைந்து கலந்து விடுகிறது. நீ இப்போது அச்சப்படுகிறாய். நீ இன்னும் மனுஷனாகத்தான் இருக்கிறாய். மிருகம் உனக்குள் இப்போதுவரை வரவில்லை. மனுஷன் இப்படித்தான் இருப்பான். இங்கே வா... என் அருகில் வா...

     அம்மையாரின் மொழிகளில் சங்கிலி பின்னிக் கிடக்கிறது. அது அந்தத்  திருடனை விடாமல் பிடித்து இழுத்து வந்து அம்மையாரின் அருகில் அவனை நிறுத்துகிறது.

"அப்பனே! இறைவன் படைப்புகளில் மகா பலஹீனமான பெண் படைப்பு நான். பண இருப்பில் மகா கேவலமான ஏழை நான். என் குடிலில் எதை எதிர்பார்த்துத் திருட வந்தாய்? நான் உனக்கு எதையாவது திருடத் தரவேண்டும். ஒரு கடினமான பொறுப்பை என் மீது சாட்டிவிட்டாயே. அப்பனே! அதோ பார் ஒரு பழம் ஈச்சம் பாய், அதை எடுத்து வா.

ஏவிய திசையில் ஒரு நாயைப் போலத் திருடன் ஓடுகிறான். ஈச்சம் பாயை ஏந்தி வந்து ஏந்தியபடியே அம்மையாரின் எதிரில் ஒரு ஓரத்தில் ஒடுங்கி நிற்கிறான்.

     “அப்பனே அதை உதறி இப்படி விரித்துப் போடு

     தரையில் காட்டிய இடத்தில் பாயை விரிக்கிறான்.

     “தகரக் குவளையை எடுத்துக் கொள். தண்ணீர் அங்கே இருக்கிறது. அதை மொண்டு கொள். உடலை ஒளூ செய்து தூய்மைப் படுத்திக்கொள். பட்டியல் இட்ட படி பணிகளை முடிக்கிறான்.

     “அப்பனே! வா. அந்தப் பாயில் நின்று தொழு. நான் பிரார்த்திக்கிறேன். அதற்குப் பின் தொழுகையைத் தொடர். எனக்கும் உனக்கும் என் எண்ணத்துக்கும் உன் எண்ணத்துக்கும் இறைவனான ரப்புல் ஆலமீன் உன்னை இங்கிருந்து வெறுமனே அனுப்ப மாட்டான். நம்பு. நான் தினம் தினம் இடைவெளி இல்லாமல் இதனை அனுபவிக்கிறேன். நம்பு.

     அம்மையாரின் கைகள் தாழம் பூவைப் போல மேல் ஏந்தி நிற்கின்றன. செதுக்கி வைத்த விழிகள் இமைகளால் தாழிடப்படுகின்றன.

     “என் இறைவனே! உன் அடிமையின் குடிலுக்குள் ஏதுமற்ற இன்னொரு அடிமை திருட வந்துவிட்டான். என் குடிலில் எதுவுமே இல்லை. இப்போது அவனை உன் குடிலுக்கு கூட்டி வந்து நிறுத்திவிட்டேன். அங்கே இல்லாதது எதுவுமே இல்லை. அவன் தேவையை அவனைவிட நீ நன்கறிவாய். அதனை அவனுக்கு வழங்கி அருள். என் நம்பிக்கை உன் அருளால் எப்போதும் குறையாது. அவனின் நம்பிக்கை குறைவால் அவனை நீ புறக்கணித்து விடாதே! என் இறைவா! என் வேலை இவ்வளவுதான். இனி உன் வேலைதான் தொடர வேண்டும்

     வார்த்தைகள் தானே முற்றுப் பெற்றுக் கொண்டன. அமைதி நிலவுகிறது. கபுருக்குள் (மண்ணறைக்குள்) இருக்கும் தனிமை அமைதி. இந்த கபுரமைதிக்குப் பின் தானே இறை தரிசனம் கிடைக்கும். அமைதியே அங்கு அமைதியாக ஒடுங்கி நிற்கிறது.

     திருடன் அனிச்சை செயல் போல தக்பீர் கட்டுகிறான். தொழுகை தொடர்கிறது. இரண்டு. அடுத்தும் இரண்டு. மேலும் இரண்டு. பிறகும் இரண்டு ரக்அத்துகள் நீடித்துக் கொண்டே போகின்றன. அம்மையார் அவனையும் இறைவனையும் விட்டுவிட்டு நகர்ந்து நிற்கிறார்கள்.

     அதிகாலையின் இளம் காற்று பனித் துவாலையை இழுத்து வந்து பூமி மீது அனாவசியமாக வீசி விரிக்கிறது. பரா நகரத்துப் பள்ளிவாசல் மினாராவுக்கு மேலே பரவி நகரம் முழுவது பாங்கு ஒலிக்கிறது.

திருடன் தொழுகை நின்று விட்டது. அமைதி. பஜ்ரின் தொழுகை கடமையாகிறது. எல்லாம் நிறைவேறி விட்டன.

     “தாயே! என் இறைவன் எனக்கு எல்லாம் தந்துவிட்டான். திருட வந்தேன். ஆம். சரியான இடத்தில்தான் நான் திருட வந்திருக்கிறேன். என் இறைவன் மகத்தானவன். என் தேவைகளை அவன் அறிந்தவன். அதனை உங்கள் குடிலில் மறைத்து வைத்திருந்தான். என்னைத் திருட அனுப்பினான். இப்போது திருடியே விட்டேன். தாயே ஞானத்தின் விழிகளைத் திறப்பது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. ஆனால் ஞானத்தின் முகம்தான் எங்கெங்கோ மறைந்து கிடக்கிறது. என் ஞான முகம் இந்தக் குடிலுக்குள்.

தாயே! உங்களையும் என்னையும் படைத்தவன், ஞானத்தாலேயே உங்களை ஆசிர்வதிக்கிறான். இரவில் வந்தத் திருடன் பஜ்ரில் ஞானியாகக் கனிந்து விட்டான். எது எப்போது நடக்கும்? ரகசியம் படைத்தவனின் பொக்கிஷம்.




அம்மையாரின் பொன்விழி இமைகள் மடிக் கொள்கின்றன. இப்போது அங்கே      அம்மையாருக்கும் ஆண்டவனுக்கும் இடையில் மனித நெடி குறுக்கிடப் போவதில்லை. அமைதி... சாந்தம்... கபுரடிக்குள் இருக்கும் தனிமை அமைதி.
*********

    ஞானக் குடில் வாசலில் இருவரும் வந்து நிற்கின்றனர். மதியத்தின் சூரியன் வான உச்சியில் தன்னைச் சுட்டுக் கொண்டே எரிகிறது. அம்மையாரின் விழிகளுக்குள் வாசலில் நிற்பவர்களின் நிழல் விழுகிறது.

     “யாரங்கே..?
    
     அம்மையாரின் மொழி எல்லாப் பக்கமும் மணக்கிறது.

     “தாயே..! கோரிக்கையுடன் வாசலில் நிற்கிறோம். அனுமதித் தாருங்கள் உள்ளே வருகிறோம்.

     “இடம் மாறி வந்துவிட்டர்கள். கோரிக்கையைத் தீர்க்கக் கூடியவன் எங்குமே நிறைந்திருக்கிறான். இந்தக் குடில் மட்டுமா வாசஸ்தலம்? படைத்தவனை இடத்துக்குள் சுருக்க முடியாது

     அம்மையாரின் வார்த்தைகளில் மெத்தென்ற சூடு படர்கிறது.

     “தாயே..! உங்களிடம்தான் கேட்க வேண்டும். அந்த அல்லாஹுவுக்காக அனுமதித் தாருங்கள். நாங்கள் உள்ளே வருகிறோம்

     “என் ரப்புக்காகவா அனுமதி..? இமைக்கும் முன் உள்ளே வாருங்கள்

     குடிலுக்குள் இருவர் நுழைகின்றனர். அம்மையாரின் வெளிச்சம் வந்தவர்கள் விழிகளை கூசச் செய்கின்றன.

     “தாயே! எங்களுக்கு ஒரு ஆசை. நிறைவேற்றுங்கள். நாங்கள் யாசிக்கின்றோம்

     “ஆசைகளே இல்லாத குடிலுக்குள் ஆசைகளுடன் நீங்கள். மனிதர்களிடம் யாசிக்காத இந்த இறையடிமையிடத்திலா யாசகம்? ரப்பே! இதற்கு அர்த்தம் என்ன? சரி கேளுங்கள்...!

     அம்மையார் மௌனம் காக்கிறார்கள்.
    
     “தாயே! வாழ்நாளில் ஒருவேளையாவது நாங்கள் ஹலாலான உணவை உண்ண வேண்டும். எங்களுக்கு உங்கள் குடிலில் உள்ள உணவில் துளியைத் தாருங்கள். மறுக்கத் தெரியாத உங்களிடம் யாசிக்கிறோம். தாருங்கள்

     அம்மையாரின் மனத்துக்குள் தாய்மை குளிர்கிறது. சுவனத் தென்றலின் துணுக்கு ஒன்று நெஞ்சுக்குள் சுழல்கிறது.

     அருகில் இருக்கும் தட்டின் மூடியை நீக்குகிறார்கள். இரண்டு ரொட்டிகள் இருக்கின்றன.

     “என் இறைவனே! நீ மகா கிருபையாளன். கேட்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையானவைகளை என்னிடத்தில் அருள் செய்திருக்கிறாய். என் ரப்பே! நன்றியும் வணக்கமும் உனக்கே சொந்தம்

     அம்மையார் தட்டை எடுத்து வந்தவர்கள் பக்கம் நீட்டப் போகும் நொடியில்...

     குடிலின் வாசலில் “அம்மா! தாயே! பசிக்கிறது. பசிக்குத் தாருங்கள் உண்மையான யாசகக் குரல் ஒலிக்கிறது.

     ஹலாலுக்குத் தருவதா? பசிக்குத் தருவதா?

     அம்மையார் யோசிக்க நேரம் எடுக்கவில்லை. இரண்டு ரொட்டிகளையும் யாசகனுக்குக் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.
    
     வந்தவர்கள் மனத்தில் கல் விழுந்துவிட்டது. ஹலாலுக்கு இறைவன் இன்னும் தங்களுக்கு நாடவில்லையா? வேதனையில் வார்த்தைகள் வெடுக்கென்று விழுகின்றன.

     “இறைவன் மீது இவ்வளவு அவ நம்பிக்கை கூடாது. பொறுமை நம்பிக்கையின் கர்ப்பவயிறு

     அம்மையாரின் மொழிகளில் நம்பிக்கைச் சமுத்திரம் அலையடித்தன.

     நேரம் லேசாக நகர்ந்தன. பணிப்பெண் ஒருத்தி மூடிய தட்டுடன் குடிலுக்குள் நுழைகிறாள்.

     “தாயே! எங்கள் எஜமானி அம்மாள் தங்கள் சமூகத்திற்கு இந்த ரொட்டிகளை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்கள். அதை இங்கே வைப்பதற்கு அனுமதித் தாருங்கள்

     வந்தவர்களின் முகத்தில் குதூலம். அம்மையாரைப் பார்கிறார்கள்.

     “பெண்ணே..! அதை இங்கே கொண்டு வா... திறந்து காட்டு..! எண்ணிக்கை எத்தனை என்று சொல்..!

     அம்மையாரின் மனத்தில் ஏதோ ஒரு தீர்மானம்.

     “தாயே! தட்டில் மொத்தம் பதினெட்டு ரொட்டிகள் பணிப்பெண் பணிவுடன் பதில் தருகிறார்.

     “அப்படியானால் இது எனக்குரியதன்று. எடுத்துச் செல்...

     அம்மையாரின் ஆணை பிறந்துவிட்டது.

     ஹலால் உணவுக்காக வந்தவர்களின் முகத்தில் கருமேகம்.

     பணிப்பெண் பயந்து தட்டுடன் ரொட்டிகளை எடுத்துச் சென்றுவிட்டாள்.

     அமைதி... கபுரடிக்குள் இருக்கும் அமைதி...

     நேரம் நகர்கிறது. மீண்டும் பணிப்பெண் வருகிறாள்.

     “தாயே! தவறு நடந்துவிட்டது மன்னியுங்கள். முதலில் தங்களுக்கு என்று எடுத்துவைத்த தட்டில் அவசரம் காரணமாக இரு ரொட்டிகளை வைக்க மறந்துவிட்டோம். தங்களுக்கு என்று தீர்மானித்தவை இருபது ரொட்டிகள். அவசரம் இரண்டு ரொட்டிகளை மறைத்துவிட்டது. மன்னிப்புக் கேட்டு மீண்டும் இருபது ரொட்டிகளைத் தங்கள் சமூகத்தில் சமர்ப்பிக்க என் எஜமானி பணித்து விட்டார். எங்களை மன்னியுங்கள்.

     அம்மையாரின் இதழ்கள் விரிகின்றன.

     “இதுதான் சரி. இதுதான் எனக்குரியது. அதனை இங்கே வைத்துவிட்டுச் செல். பெண்ணே! என் இறைவன் உனக்கும் உன் எஜமானிக்கும் பரக்கத்துகளை சொரிந்தருள்வானாகவும்

     அம்மையாரின் அனுமதி அங்கே தவழ்ந்தது.

     ரொட்டித் தட்டுகளை நகர்த்தினார்கள். வந்தவர்களுக்கு வழங்கினார்கள்.

     “தாயே! மன்னிக்க வேண்டும். அதிகப்படியாக பேசவில்லை. ஆனாலும் ஆவல் எங்களை இடிக்கிறது. ஒரு சந்தேகம் கேட்க அனுமதி வேண்டும்

     “கேளுங்கள்அம்மையாரின் உறுதி எழுந்து நின்றது.

     “முதலில் பதினெட்டு ரொட்டி வந்தன. அவை தங்களுக்கு உரியதல்ல என்று சொன்னீர்கள். இதுவென்ன கணக்கு?

     “ஒரு அறச் செயலுக்கு இறைவன் பத்து பங்காகத் திரும்பத் தருகிறேன் என்று சொல்லியுள்ளான். சற்று நேரத்திற்கு முன் வாசலில் பசித்த வயிறுக்கு இரண்டு ரொட்டிகள் வழங்கினேன். இறைவன் பத்து மடங்காக எனக்குத் திருப்பித் தரக் கடமைப்பட்டுவிட்டான்.

     பதினெட்டு ரொட்டிகளில் பத்து மடங்கு பூர்த்தியாகவில்லை. அப்படியானால் அது எனக்குரிய தன்றுதானே.

திருப்பி அனுப்பினேன். இருபது ரொட்டிகள் வந்தன. பத்துப் பங்கு கணக்கு முழுமையாகப் பூர்த்தியாகிவிட்டது. இப்போது அது நிச்சயம் எனக்குச் சொந்தமானதுதான்.

     இறைவனின் சொல் ஒரு போதும் பொய்யாவதில்லை

     அம்மையாரின் இதழ்கள் மூடிக் கொண்டன. விழி இமைகள் சாத்திக் கொண்டன.



நம்பிக்கை... நம்பிக்கை...அங்கே எங்குமே நம்பிக்கை நிரம்பி வழிந்தது.

No comments:

Post a Comment