Sunday, June 2, 2013

ஓசை


உரைச்சித்திரம்


     காலங்களைக் கரைத்துக் கொண்டு தான் மட்டும் அண்ணாந்து நிற்கும் ஒரு சின்ன மலை அடிவாரத்துக்கு கொஞ்சம் மேலாக விரிந்து கிடக்கும் திட்டு. அந்தத் திட்டின் முடிவில் ஒரு மனிதர் குனிந்து நுழைந்துவிட முடியும் அளவில் உள்வாங்கிய குகை. குகைக்குள்ளே இருட்டு; ஒரு அரக்கித் தன் கன்னங்கருத்த தலை மயிர்கற்றையை அதற்குள் திணித்து வைத்தது போல.
                        

     குகை வாசலில் ஆசைகளின் துகள்கள் கூட ஓட்ட முடியாத வகையில் உதறி எறிந்து விட்ட வற்றியுலர்ந்த மேனியினைச் சுமந்த ஒருவர் நிற்கிறார்.
    
     எலும்புகளை எண்ணி விடலாம். தோல் சின்னத் துணியைப் போல உடலில் மடிப்புகளாகப் போர்த்தப்பட்டிருக்கிறது. மானங்களை மறைக்க பழைய ஆடை. காலம் அதனுடன் போராடித் தோற்றுப் போய்விட்டது. முகவாய்க் கட்டையில் தானே சரியாக வளர்ந்து போதுமான வளர்ச்சியில் நிறுத்திக் கொண்ட தாடி ஒழுங்கு. முதுகு கொஞ்சம் கூனி விட்டது. பணிவுக்கு ஒரு புற அடையாளம்.


     கால்களை அழுத்தமாக ஊன்றி நிற்கிறார். இறைவன் அன்றி என் பணிவு எவனிடமும் இல்லை என்பதற்கு அதுதான் அறிவிப்பு. மெலிந்த திரேகத்திற்குள்ளும் பாறை அழுத்தம்.

     ஓய்வுக்காகவா அவர் அங்கே நிற்கிறார்? அப்படி இருக்காது. அவரிடம் ஆசையின் அலையடிப்பு முற்றிலும் வற்றிவிட்டது. ஆனாலும் இந்த உலகம் இன்னும் தோற்றுவிடவில்லை.

     உலகம் அந்த மகா புருஷரைக் குகைக்குள் இருந்து வெளியே கட்டி இழுத்து வந்து விட்டது.

     குகைக்குள்தான் எத்தனை ஆண்டுகள்? பத்து இருக்குமோ? பன்னிரெண்டு ஆகி இருக்கலாமோ? ஞானிகளுக்குக் கணக்கு எதற்கு?

     நாள்கள் வாழ்வதற்குத் தானே! அவர் வணக்கத்தில்தானே வாழ்ந்திருக்கிறார். எப்போதோ குடிசைக்குள் புகுந்தார். அவரை அங்கு அனுப்பிவிட்டு உலகம் வாசலில் சலிக்காமல் காத்திருந்தது.

     குகைக்குள் இறுகிக்கட்டித் தட்டிப்போன அந்த மனிதக் கல் துண்டின் மீது, விடாமல் தன் உரசலை காற்றில் கரைத்து உலகம் அனுப்பிக் கொண்டே இருந்தது.  

     ஞானியும் மனிதர்தான். அதுதான் அவருக்கும் அடிப்படை. கல்லாகிப்போன மனிதரின் உள்ளுக்குள் திடீர் குலுக்கம். மனிதர் அதிர்ந்தார். இது எப்படி நடந்தது?

     கல்லை விட, இறுக்கத்தை விட, உலகத்தை விட, இறைவணக்கத்தை விடவும் இறைவன் மகத்தானவன். எல்லாமே படைப்புத்தான். அவன்தான் படைத்தவன். இது மீண்டும் மீண்டும் நிருபணம் ஆகிறது.

     குகை மனிதர் துணுக்குற்றுப் பதறி விழித்து அதுவரை இழந்து போன நாள்களை நினைவுக்குக் கொண்டு வந்தார். நினைவு மரணித்து விட்டது. செத்த நினைவு அவருக்கு இனி சரியான செய்தி சொல்லாது.

     குகையில் இருப்புக் கொள்ளவில்லை. சரியான இடத்தில் ஸ்பரிசம் பட்டுவிட்டால் அது மனிதனை அலைக்கழித்து விடும். அதுதான் அங்கும் நடந்து விட்டது.

     முன்னூறு நாளைத் தொட்ட கரு இனி கர்ப்பக் கோளரைக்குள் குந்திக்கிடக்க முடியாது.

     குகை, அந்த மனிதரை பிரசவித்து விட்டது. தீண்டக் கூடாத கனி அவரைத் தீண்டி விட்டது. அந்த ஆதத்தின் மைந்தர் குகையில் இருந்து அப்புறமாகி விட்டார்.

     அந்த மனிதர் இப்போது குகைக்கு வெளியில் இருக்கும் ஏகாந்த சூனியத்தை விழிச் சாட்டைகளால் மாறி மாறி விளாசுகிறார். அது பார்வையே இல்லை. தீக்கங்குகள் திரண்டுத் திரண்டு புறப்படும் பிரகாச உருண்டைகள்.
    
     இதுவரை தேக்கித் தேக்கி நிறைத்து வைத்த ஞானத்திலும் சுழிகள் விழுகின்றன. அவர் நெற்றியின் சுருக்கம் அதை உண்மையாக்குகிறது.

     அந்த குகை மனிதருக்கு பெயர் கிடையாதா? ஒரு தாய் கர்ப்பம் அவரைத் தாங்காமலா இருக்கும்? பிறப்பு சத்தியம் என்றால் அவருக்குப் பெயரும் நிச்சயம்தான்.
    
     என்ன பெயர்? அவருக்குத்தான் நினைவு மரணித்துவிட்டதே!

                           ******************

     வெளீர் நிறத்தில் உயர்ந்த நிமிர்ந்த திமிர் கொண்ட வெள்ளை குதிரை. எப்போதும் அதன் உடம்பில் ஒரு துள்ளல். அதன் மீது கம்பீரமான மனிதன். வைரங்களைப் பதித்த பட்டுத் தலைப்பாகை. முதுகு வளையாத குத்திய இருப்பு. மேனி முழுக்க இளமை நெடி. அவனைச் சுற்றி ஒரு சின்ன புரவிக் கூட்டம். அவைகள் மீதும் காவலர்கள். வெள்ளைக் குதிரை மனித மன்னன்  வேட்டைக்குக் கிளம்பி இருக்கின்றான்; பரிவாரங்கள் புடைசூழ.

     அதோ புள்ளி பதித்த மண் நிற மான். வேட்டைக்கு வந்த மனிதனைத் தேடி வந்து முன்னின்று முறைக்கிறது. அதைச் சுற்றி மின்னல் நரம்புகள். மீண்டும் மீண்டும் விளாசிச் செல்லும் பிரகாசம்.
                       

     மன்னன நிலைகுத்தி நிற்கிறான். வேட்டைப் பொருள் மானா? தானா?

     தன்னிலை திரும்புகிறான். மானுக்குள் இப்போது ஒரு மிரட்சி. திக்பிரமையில்தான் மனிதன் தோற்றுப் போவான். ஒரு புல் கூட அப்போது அவனை கீறிக் காயப்படுத்த முடியும்.
    
     தன்னிலை திரும்பிய மனிதன் இறைவனின் பிரதிநிதி ஆகிவிடுகிறான். மலைகள் கூட தன் பாரிய உடலை அவன் காலடியில் உதிர்த்து விடத்தான் வேண்டும்.

     மன்னன் தன்னிலை திரும்பி விட்டான். மானுக்கு இது எப்படிப் புரிந்தது? காற்றைக் கிழித்து மின்னலாய் ஒழுகி ஓடத் தொடங்கிவிட்டது.

     மன்னன் தன் வெள்ளை குதிரை மீது சாட்டையினைச் சொடுக்கினான். இதுவரை படாத அடி. ஏற்படாத வலி. குதிரை பறந்தது. கூட வந்த பரிவாரம் திக்குமுக்காடியது.

     மான், ஒரு நேரம் காற்றில் கரைகிறது. மறுநேரம் மின்னலில் ஏறிக்  குதிக்கிறது. மன்னன் சளைக்கவில்லை. மானை அடியொற்றி தொலைந்து கொண்டே போகிறான்.

     மானைக் காணவில்லை. பின்னால் பரிவாரத்தின் அறிகுறி இல்லை. மன்னன் தனித்து நிற்கிறான். தனக்குக் கீழ் உயர்ந்த ஜாதிக் குதிரை துள்ளிக் கொண்டே இருக்கிறது என்பதைக் கூட மறந்து போகிறான்.
    
     ராஜ்யமே இல்லாத பரதேசியாக அந்தக் கணத்தில் நிற்கிறான். பரதேசி மனப்பக்குவத்தை அவனால் தாங்க முடியவில்லை.

     எனக்கு மான் வேண்டாம். பரிவாரம் வேண்டும். என் தேசம் வேண்டும். என் ராஜ பரிபாலனம் வேண்டும். அவை எல்லாம் எங்கே? கத்த வேண்டும் போல் ஆக்ரோஷம் எழுகிறது.

     வார்த்தைகள் வரவில்லை. மொழிகளையுமா தொலைத்துவிட்டான்? சுற்றிப் பார்க்கிறான். கண்ணில் பட்டவைகளே கணத்துக்குக் கணம் படுகின்றன. வேறு எதுவுமே இனி அவன் கண்ணில் விழாதா? அவைகளுமா அவனைப் பரதேசி ஆக்கிவிட்டன?

     வானை இடித்து முட்டி மோதி திரண்டு ஓர் ஓசை அதி வேகச் சுழற்சியில் இறங்கி வருகிறது. மன்னனின் செவிப்பறைகளைச் சிதைத்து உறுமி இதயத்தின் எங்கோ ஒரு மூலைக்குள் திடுமென்று விழுகிறது.

     "மரணம் உன்னில் மலரும் முன்னே விழித்தெழு" இது ஓசையா அல்லது மரணத்தின் உறுமலா? மன்னன் வேர்க்கிறான். இந்த இடியில் இருந்து தப்பி ஓடப் பாதையினை விழிகள் தேடின.

     விழிக்குள் பேரொளி விருட்டென்று  ஊடுருவியது. இப்போது பாதைகள் இருண்டு போயின.

     "மரணம் உன்னில் மலரும் முன்னே விழித்தெழு" மற்றுமொருமுறை அதே ஓசை அதட்டியது. மன்னன் ஒரு கட்டெறும்பைப் போல, அந்த நேர்த்தியான வெள்ளை குதிரையில் இருந்து விழுந்தான். குதிரை திக்குகள் இன்றித் தெறித்து ஓடியது.

     கொஞ்சம் தொலைவில் இதுவரை விரட்டி வந்த மான் கண்ணில் படுகிறது. " என்னை நீ  வேட்டையாட முடியாது. நான் உன்னை வேட்டையாட வந்தேன்"! மானுமா பேசுகிறது?

     கண்களைக் கசக்கி விட்டு வெறித்துப் பார்த்தான். மான் இல்லை. மனவெளித் தோற்றமா?

     மன்னன் நிதானத்துக்கு வந்தான். தனக்குள் இதுவரை மாபெரும் வேட்டை நடந்துவிட்ட கோரம் இருப்பதை அவனால் இப்போது உணர முடிந்தது.

     யார் எதை வேட்டையாடினர்? தெரியவில்லை. ஆனால் வேட்டைக்காடு மைதானம் அலங்கோலமாகக் கிடக்கிறது. அதனைத் தான் சுமந்து நிற்பதாக அவனால் முழுமையாக நம்ப முடிந்தது.
    
     நினைவுக்கு வருகிறது. இதே ஓசையை ஏற்கனவே மன்னன் கேட்டிருக்கிறான். மூன்று முறைகளுக்கு மேல் இனி அந்த ஓசையை மனிதன் கேட்க முடியாது போலும். அடுத்து அந்த ஓசையைத் தன் மரணம்தான் கேட்குமோ? ஒருவேளை அந்த மரணம்தான் இந்த ஓசையோ?

     இனி தான் மன்னனா? மையித்தா? இல்லை இரண்டுமே இல்லாத  பரதேசியா? எதுக்குமே சொந்தமில்லாத பக்கீரா?

     இனி அவன் மன்னன் இல்லை. மரணம் அவனில் இப்போதைக்குக் கால்பதிக்க முடியாது. அப்படியானால், அவன் விழித்தெழுந்து விட்டான்.
    
     அந்த வனாந்திரத்தில் கேட்ட ஓசை அவனுக்கு எப்போது முதலில் அறிமுகமானது?
                     ******************    
     அத்தாணி மண்டபம். அரச பீடத்தில் மன்னன். பிரதான அமைச்சர் வலது ஓரத்தில். அவரின் எதிரில் தளபதி நிமிர்ந்த கம்பீரத்தில் அமர்ந்திருக்கிறார். மன்னனுக்கு இரு பக்கத்தில் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் பணியாளர். மண்டபத்தில் படை வீரர்கள். மக்கள் பிரதிநிதிகள். பரபரப்பான நேரம்.

     எங்கிருந்தோ ஒரு யாத்ரீகர். எப்படியோ உள்ளே நுழைந்து விட்டார். மிடுக்கோடு மன்னனுக்குச் சமீபத்தில் நெருங்கிவிட்டார். எவரும் இதை எதிர்பார்க்கவில்லை.

     திக்குகள் முழுக்கவும் கூர்ந்து பார்க்கிறார். அவருக்கு ஏனோ திருப்தி உண்டாகவில்லை. இதழில் தீபம் போல ஒரு குறு முறுவல். வந்த வேலை முடிந்துவிட்டது. செல்வதே சாலச் சிறந்தது என முடிவு கட்டிவிட்டார். புறப்படுகிறார்.

     ஏ! முதியவரே! நில்லும்! ஏன் வந்தீர்? எப்படி வந்தீர்? உம் குறு முறுவலின் ஏளனத்தை இந்தப் பாரம்பரியமிக்க அரசவையில் கொட்டிவிட்டு ஏன் புறப்படுகிறீர்?

     மன்னனின் கடுஞ்சொல் முதியவரை இழுத்து நிறுத்தியது.

     "ஒன்றுமில்லை, இந்தச் சத்திரத்தில் ஒரு நாள் தங்கிச் செல்லலாம் என்று வந்தேன். இப்போது விருப்பம் இல்லை. திரும்பிவிட முடிவு கட்டி விட்டேன்".

     அரசவை சத்திரமா? படை வீரர்களின் கரங்கள் உடைவாளின் மீது பதிகின்றன.

     மன்னன் கை அசைக்கிறான். ஒரு அமைதித் துணுக்கு அங்கே விழுகிறது.

     “பெரியவரே! வரம்பு மீறிய வார்த்தைகள் இனி வேண்டாம். பாரம்பரிய அரச அவையைச் சத்திரமாகச் சொன்ன பழிக்கு உமது உயிரே விலையாக வேண்டும். என் பரம்பரைத் தயாளம் உம்மை மன்னித்துவிட்டது. இந்த அவை சத்திரம் என்றால் நாங்கள் ஆண்டிகளா? இது ராஜ துரோகம். என் பெருந்தன்மை உம்மைப் பொறுத்துக் கொள்கிறது.

     மன்னனின் வாயில் இருந்து மொழி மடை திறந்து கொட்டியது.

     ‘மன்னா! உனக்கு முன் இங்கே இருந்தது யார்?
     ‘என் தந்தையார்
     ‘அவருக்கு முன்பு?’
     ‘என் பாட்டனார்
     ‘அவருக்கு முன்பு?
     ‘என் பூட்டனார்
     ‘அவருக்கு முன்பு?
     ‘இதுவென்ன கேள்வி? இது அரசவை. விகட கூடமன்று

     “மன்னா, ஒவ்வொருவரும் தங்கிப்போன பின்னர், நீயும் வந்திருக்கிறாய். தங்கி இருக்கிறாய். விரைவில் போய்விடுவாய். உன் மகன் அடுத்து... இப்படியே தொடரும். இது சத்திரத்தின் தர்மம் அல்லவா? வருவதும் போவதும் மட்டுமே நடப்பு. எவருக்கும் இது சொந்தமில்லை என்பதே ஹக்கு. இப்போது சொல். இது சத்திரக்குணம் தானே. இதில் தவறு எங்கே இருக்கிறது? மன்னனுக்கு மதி வேண்டாமா?

     முதியவர் எவரையும் சட்டை செய்யவில்லை. புறப்பட்டு விட்டார். மறைந்து விட்டார்.

     மன்னன் தலையில் கிரீடம் அழுத்தியது. பாரம்பரியத்தின் தோலில் பெரிய பொத்தல் விழுந்து விட்டது. ரணமும் சதையும் பிதுங்கிப் பிதுங்கி அதன் வழியே நழுவிச் சரிந்தது. இதனை மன்னனால் சகிக்க முடியவில்லை. தலை தரையின் பக்கம் சாய்ந்தது. அது சஜ்தாவின் துவக்கமாக இருக்கலாம்!
    
     அந்த முதியவரின் ஓசையை மன்னன் இப்போது நினைத்துப் பார்க்கிறான். அதே மொழி. ஆனால் இங்கே முதியவர் இல்லை.

                           ************
     நாட்கள் நொண்டியடித்து நகர்கின்றன. ஒருநாள் இரவு மன்னனுக்கு அரசு அலுவல் அலுப்புத்தட்ட வைத்து விட்டது. சோர்வு உடம்பு முழுக்க அசத்தலாக ஆர்ப்பாட்டம் செய்தது.

     படுக்கை அறைக்குள் நுழைகிறான். இந்திய இலவம் பஞ்சு மெத்தை சீனத்துப் பட்டால் தளும்பிக் கிடக்கிறது. பாரசீகத்து ரோஜா இதழ்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு மென்மையான உருவம் அதில். ரம்மியமான நெளிவு சுளிவுகளுடன் படுத்துக் கிடக்கிறது. ஒரு எளிய பூமரக் கொத்து பரவிக் கிடப்பது போலத் தோற்றம்.

     மன்னனுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி; பஞ்சணையில் யார்? இந்தப் பதிலி உருவம் யாருடையத? நடையில் வேகம் தளும்புகிறது.
    
     உற்றுப் பார்கிறான் மன்னன். எரிச்சல் குலை குலையாகக் குலுங்குகிறது. மெத்தையினைத் தட்டிச் சரி செய்யும் பணிப்பெண் ஒய்யாரமாகப் பரவிக் கிடக்கிறாள். தூக்கத்தின் வருடல்கள் அவளை ஸ்பரிசித்து ஸ்பரிசித்து லாவண்யமூட்டுகிறது. ராஜ தூக்கம்.

     சற்று நேரத்துக்கு முன்வரை அவள் அந்த மெத்தையினைத் தட்டி சரிசெய்தாள். மெத்தையின் மென்மைச் சுகந்தம் அவளை அதில் கொஞ்சம் அமரத் தூண்டியது. அமர்ந்தாள். சுகப்பற்று அவளிடம் தன கைவரிசையினைக் காட்டிவிட்டது. சாய்ந்தாள். சரிந்தாள். சொப்பன யுகத்தில் ராஜ குமாரியாகச் சரசமாடுகிறாள்.

     மன்னன் சாட்டையின் இருப்பிடத்திற்கு ஓடினான். அலுப்புகளுக்கு அது ஒரு சுகப்பிரசவம் போல ஆனது.

     அடுத்த வினாடி பணிப்பெண் மீது சாட்டைகள் ராஜவரிகளைத் தீட்ட ஆரம்பித்தன.

     பணிப்பெண் பதறி எழுந்தாள் ஒரு லஹரி உலகத்தை நழுவவிட்ட பரிதவிப்பு அவள் பார்வையில் நெகிழ்கிறது.
    
     எழுந்தாள்; நின்றாள்; சாட்டையின் விசாரிப்பு அவளை அதட்டவில்லை. மன்னனை உற்றுப்பார்த்தாள். மன்னனின் மனமுடுக்கில் ரத்த விளார் கண்ணியது. சாட்டையினைக் கை தரைக்குத் தவறவிட்டது.

     ‘ஏனடி ராஜ மெத்தை தேவைதானா?
‘மன்னர் மன்னிக்க வேண்டும். இது எனக்கு எப்போதும் ஆகாது. உள்ளமும் உடம்பும் கைவசம் தப்பிப்போனது. மன்னர் மன்னிக்க வேண்டும்.

     பதிலில் நடுக்கம் இல்லை. அதில் ஒரு ஞான முகவரி தென்பட்டது.

     ‘சாட்டை உன்னை அழவைக்க வில்லையே?
சரியான தண்டனை வரும்போது ஏற்றுக் கொள்வதுதானே அப்துகளின் குணம்.
‘புரியவில்லை மன்னர் மொழி தடுமாறினார்.

‘‘மன்னர் மீண்டும் மன்னிக்க வேண்டும். சில கணங்கள் படுத்த எனக்கு என் எஜமானின் தண்டனை கிடைத்து விட்டது. பல காலங்கள் படுத்திருக்கும் உங்களுக்கு நம் எஜமானின் தண்டனை மறுமையில் எப்படி இருக்கும்?

பணிப்பெண்ணின் பதில் சாட்டையின் வேகத்தை விட வேகமாகப் பதிந்தது. மன்னன் வலி போருக்க முடியாமல் நடுங்கினான்.

     சொத்துரிமையின் குரல்வளையில் தூக்குக் கயிறு இறுகுகிறது; இது கொலையா? தற்கொலையா?

     மன்னனின் உறக்கம் அன்று முதல் கபுரடியில் அவஸ்த்தைப் படலாயிற்று. அதுக்கு இனிமேல் தனக்கு மேலுள்ள மண்ணை நக்கிப் புடைத்து வெளியில் வர வாய்ப்பே இருக்காதோ?
    
பணிப்பெண்ணின் பதிலின் ஓசையிலும் அரசவையின் முதியவர் ஓசை கலந்து தொனித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

மூன்றாவது முறையும் அந்த ஓசையினை மன்னன் அடுத்த சில நாட்களில் செவி மடுத்தான்.

     நான்காவது முறை அந்த ஓசைக்கு அவரிடம் வேலை இல்லாது போனது. மன்னர் அந்த ஓசைக்குள் அது முதல் ஐக்கியமாகி விட்டார்.

     தூக்கம் வராத பல இரவுகளில் ஒரு இரவு. சாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவின் கோரம் இன்னும் கொஞ்ச நேரத்தில் கொல்ப்பட்டு விடும். சூரியனின் மந்திரச் செம்மை இரவைத் தழுவித் தழுவி கபக்கென்று விழுங்கி விடும்.

     மன்னனின் படுக்கை அறையில் கஸ்தூரி வாசனை திடீரென்று அதிகரிக்கிறது. அங்கே கொட்டிக் கிடக்கும் பூக்களுக்கு எப்போதும் இந்த வாசனை பொருந்தி வருவதில்லை. அங்கு ஒரு தினுசான நெடி பரவுகிறது.

     மன்னனின் படுக்கை அறைக்கு மேல் ஒருவர் அவசரமாகவும் அழுத்தமாகவும் நடமாடுகின்ற ஓசை. ஓசையே செய்தி சொல்லிவிடும் அவர் எதையோ தேடுகிறார். எவனோ ஒருவன் எதையோ தொலைத்துவிட்டு அரச மாளிகையில் அதுவும் ராஜ படுக்கை அறையின் மேல் வந்து தேடுவதா? நடு இரவைத்தாண்டி ஒரு பகலின் துவக்க விளிம்பு நேரத்திலா இந்தத் தேடுதல்?

     ‘யார் அங்கே...? ஏ! யார் அங்கே..? இந்த அகால வேளையில் அங்கே?

மன்னனின் அலறல் ராஜ மாளிகையைக் குலுக்கியது.

‘ஏனப்பா இந்தக் கதறல். எல்லார் தூக்கத்தையும் கலைப்பதில் ஏன் இந்த வெறிச் சுகம்?’.
படுக்கை அறைக்கு மேல் தளத்தில் இருந்து பதில் வந்தது.

பதிலா அது? இவ்வளவு நிதானத்தில் எவன் துணிச்சலாக ராஜ மரியாதை இல்லாமல் சொல்வது?

நிதானத்திற்கு முன் ஆவேசம் மண்டியிட்டு விடுகிறது.

‘யார் நீ? மேலே என்ன செய்கிறாய்?

மன்னனின் குரலில் குழைவு. அடுத்து அழுது விடுவான் போலும்.
‘ஒன்றுமில்லை, என் ஒட்டகத்தை காணவில்லை. அதைத் தேடுகிறேன். நீ தூங்கு. உன் ரோஜாப் பூவின் இதழ் நுனியைக் கூட நான் திருடிச் செல்ல மாட்டேன். நான் திருடன் இல்லை. என் பொருளைத் தேடும் பறிக்கொடுத்தவன்.

மன்னன் தலைக்குள் ஒரு பெரும் போர்க்களத்தின் குதிரைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சின்னபின்னமாகச் சிதறி ஓடின.

கொடிய இரவு கரைந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெரிய ஒட்டகத்தைத் தேடி உப்பரிகை மீது ஏறி எவன் தேடுவான்?

ராஜ கொத்தளத்தின் மேல் ஒட்டகம் எப்படி ஏறும்? அது அங்கே ஏன் ஏற வேண்டும்? அங்கே அதற்கு என்ன மேய்ச்சல் கிடைக்கும்?

மன்னர் படுக்கை அறைக்கு மேல் ஒரு பைத்தியமா?

மன்னருக்கு அந்த நொடியில் என்றுமில்லாத அளவுக்கு சிரிப்பலை மலை மலையாக எழுந்து விழுந்து குதியாட்டம் போடத் துவங்கிவிட்டது. இப்படி ஒரு பைத்தியத்தை உலகம் இனி எப்போதும் பார்க்க முடியாது. அந்தப் பாக்கியம் தனக்குக் கிடைத்துவிட்ட ஆனந்தப் பிரவாகம்.

‘ஏ! முட்டாள். ஒட்டகம் மாடி ஏறுமா? மாடியில் அதற்கு என்னப்பா தீனி கிடைக்கும்? கிறுக்கனே! இந்த இரவிலா அதைத் தேடி என் படுக்கை அற மீது பரபரக்கிறாய்? உடனே கீழே இறங்கு. என்முன்னே வா. உன் முட்டாள் தனத்துக்கு நான் வெகுமதி தருகிறேன். அது ஒரு ஒட்டகமாகக் கூட இருக்கலாம். முட்டாளே வா. கீழே வா. என் எதிரில் வா.

மன்னனின் குதூகலம் கொப்பளித்தது.

‘யார் முட்டாள்? பஞ்சு மெத்தையில் படுத்துப் புரண்டு கிரங்கும் வாசனைகளில் தோய்ந்து சிருங்கார நாற்றத்தை முகர்ந்து முகர்ந்து காலத்தை கழுதைப் போல சுமந்து கொண்டு நீ இறைவனைத் தேடும் கோலத்துக்கு இந்த ஒட்டகம் தேடுதல் உயர்வானதப்பா!

மேலிருந்து தெளிவாக இந்த வார்த்தை ஓசைகள் மன்னனின் காது நுனிகளைக் கூசச் செய்து உள் நுழைந்தன.

உப்பரிகையின் ஒட்டகத் தேடுதல் முட்டாள்தனமானால் பஞ்சு மெத்தையில் இறைத் தேடுதல் படுமுட்டாள் தனம்தானே.

மன்னனின் ஆர்வம் நுங்கும் நுரையுமாகப் பொங்கியது.

‘ஏ மனிதா என் எதிரில் வா. நீ தேடும் ஒட்டகம் இங்கே பஞ்சணையில் படுத்துப் புரள்கிறது. வந்து கைப்பற்றிக் கொள். விரைந்து வா.... வா... வா...!

பதில் இல்லை. தேடியவனுக்குத் தேடப்பட்ட பொருள் அடையாளமாகி விட்டது. புறப்பட்டுவிட்டான்.

ஓசைகள் மட்டும் அறை முழுவதும் ஒரு வண்டு மொழியில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

பழக்கப்பட்ட ஓசை. அத்தாணி மண்டபத்தில் அன்று ஒலித்த ஓசை. இதே பஞ்சணையில் பணிப்பெண்ணின் வாயிலிருந்து விழுந்த அதே ஓசை. இன்று மேல்புறத்திலிருந்து மீண்டும் அறைக்குள் பொழிந்து விட்டது.

சுகபோக சொந்தங்களின் பிடரி நரம்பு தெறித்து அறுந்தது. ஞானத்தின் வெளிச்சத் துளி துளைத்து விட்டது. ஞானத்துக்குப் பாதைகள் தேவை இல்லை. அதுவே ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொள்ளும்.

மானைத் தேடி ஓடி வனாந்தரத்தில் நின்றவன் இப்போது தனித்து நிற்கிறான்.

வேட்டை ஆடப்பட்டவன் தானே என்பதைப் புரிந்துக் கொண்டான். இனி அவன் ராஜ்ஜியத்திற்குத் திரும்ப முடியாது.

மேலும் மேலும் தொடர்ந்து முன்னேறினான். இந்த குகை வாசலில் வந்து நின்றான். குகைக்குள் தோ ஒரு காந்தம் உள்ளிழுத்தது. பய் ஒட்டிக் கொண்டான். இன்று அந்தக் காந்தம் பிடியைக் கழற்றிக் கொண்டது. குகைக்கு வெளியே நிற்கிறார்.

குகை மனிதருக்கு சில விஷயங்கள் பொறிதட்டுகின்றன.

பல்க் தேசத்தின் ராஜ சிம்மாசனம் துரத்தித் துரத்தி அடித்து இந்த குகைக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது.

மன்னன் காணாமல் போனான்; அத்ஹமின் மகன் இப்ராஹீம் இப்போது குகை வாசலில் நிற்கிறார்.

ஓசைகள் எப்படி விரட்டி அடித்திருக்கின்றன.

ஓசைதான் மனிதனை அடையாளப்படுத்துகிறது.

குழந்தையின் அழும் ஓசைதான் நரம்புகளை விட்டு ரத்தங்களை பாலாக்கி மார்பின் வழி பிதுக்கித் தள்ளி வெளியில் கொண்டு வருகிறது. அங்கு தொடங்கிய ஓசைகள் மரணத்துக் குழியில் சேர்ந்தே புதைகிறது. மீண்டும் ஒரு கோரப் பொழுது வரும்; அப்போதும் ஓசைகள்தாம் மக்கி மண்ணாகிப்போன இந்த மனிதனைப் பழைய உருவில் தட்டி எழுப்பிப் பதறித் துடிக்க வைக்கும். ஓசைகள் ஆன்மாவின் உரம்.

குகை மனிதர் – இப்ராஹீம் இப்னு அத்ஹம். இனி குகைக்குள் அந்நியமாகிப் போனார். பயிற்சி முடிந்து போய்விட்டது. தனிமை இனிமேல் அவர்க்குத் தகாதது. மனித சமுத்திரத்தில் அவரின் தோணி நீந்தி ஆகவேண்டும்.

எங்கோ எவரோ ஓசைகளால் விரட்டப்படுவார். அவருக்குத்தான் இந்த குகை அவசியப்படும்.

ஞானச் சக்கரவர்த்தி குகையை விட்டு நகர்கிறார். பரந்த வெளிக்குள் இனி ராஜ்யப் பரிபாலனம் தொடங்க வேண்டும். ஞான சாம்ராஜ்யத்திற்கு அன்றுதான் முடி சூட்டுவிழா.

குகையைத் தொலைவில் இருந்து திரும்பிப் பார்க்கிறார்.

ஓர் அரக்கி தன் கன்னங் கருத்த மயிர்க் கற்றை முழுவதையும் அந்தக் குகைக்குள் திணித்து வைத்திருக்கிறாள்.

இப்ராஹீம் இப்னு அத்ஹமின் இதழின் கடைசி ஓரத்தில் ஒரு சுடர்க்கோடு பதிகிறது. புன்முறுவல். வெளிச்சம் தெறிக்கிறது.


 


ஞானத்தின் முகவரியே இத்தனைப் பிரகாசமானதா?


புகைப்படங்கள்: bing images –ற்கு நன்றி.

No comments:

Post a Comment