Sunday, June 9, 2013

சிறுகதை - எரிகொள்ளி!!!


படச்ச ரப்பே துன்யாவை சுருட்டி எங்கேயாவது  எறிஞ்சிடு"


"னுஷப் பிறவி வஞ்சிக்க மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. அதுக்கு பாசம் பரிவு எதுவும் கிடையாது. சும்மா பசப்பும். மோசமாக நடிக்கும். ஓரவஞ்சனை பிடிச்ச மனுஷப் பிறவி.


     ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு எதிரி. நம்பவே கூடாது. கழுத்த அறுத்திடுவாங்க. படச்ச ரப்பே துன்யாவை சுருட்டி எங்கேயாவது எறிந்சிடு"

     ஆசியாவிற்கு ஒரே எரிச்சல். எதைச் செய்தாலும் குறைதான். இரக்கப்பட்டு ஓடி ஓடி நல்லது செய்வாள். வலிய வலிய நுழைந்து பழகுவாள். எல்லாமே கல்லாக மாறி அவள் தலையில் நச்சென்று விழும்.

     தன்னைத் தாக்கும் கல்லைத் தானே தயாரித்து அடுத்தவரிடம் கொடுத்து அதைத் தன் மீது எரிய அவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த ஏளனத்தை சுமந்து வருந்திக் கொள்வதில் ஆசியாவிற்கு அசாத்திய ஆர்வம்.

      ஆனால் நேற்றுக் கூட அப்படித்தான் நடந்தது. பஜ்ர் தொழுதுவிட்டு முஸல்லாவில் அமர்ந்து வெள்ளைத் துப்பட்டாவைத் தலை முதல் முழுக்கப் போர்த்தி குட்டியான அசைவுடன் மாமி ஓதுவதே பரக்கத்தான காட்சி. ஆற்றில் அலைகள் அசைந்து அசைந்து நம்மைத் தள்ளிக் கொண்டு இருக்குமே அது போல மாமியின் அரபு உச்சரிப்பு மனுஷர்களை உலுக்கிவிடும்.

     ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பருகாமல் வெறும் வயிற்றில் மாமி ஓத ஆரம்பித்து விடுவார்கள். வெறும் வயிற்றில் ஓதினால் குடல் காந்தாதா? தொண்டை வறண்டு போகாதா? சூடா ஒரு கப் காபி மிடருக்குள் இறங்கினால் எப்படி இருக்கும்? ஆசியாவிற்கு இந்த எண்ணம் எழுந்துவிட்டது.

     புதுப் பாலில் மூக்கைத் துளைக்கும் வாசனையில் காப்பி போட்டாள். குடிக்கிற சூடான பதத்தில் காப்பி ஊற்றி மாமிக்குப் பக்கத்தில் வைத்தாள். ஓதுகிற வாய்க்கு அவளால் முடிந்த அர்ப்பணம்.

     குர்ஆனில் பதிந்து நகரும் விழிகளை ஒரு மின் வெட்டும் கணத்தில் மாமி நகர்த்திப் பார்த்துக் கொண்டார். ஓதும் சுகத்துடன் ஒரு சின்னத் திருப்தியும் மாமிக்குள் கலந்து கொண்டது. ஆனாலும் ஓதுதல் தொடர்கிறது. பாதியில் நிறுத்த முடியாது. மாமி நிறுத்தவும் மாட்டார். அப்படிச் செய்வது குர்ஆனை அவமதிக்கிறதுக்குச் சமம். மாமியின் பக்கத்தில் காப்பி குளிர்கிறது.

     ஆசியாவிற்கு அடுத்த வேலைகள் அழைப்பு அனுப்பி விட்டன. வேலையில் ஐக்கியம் ஆகிவிட்டாள். நேரம் ஒழுகிக் கொண்டே இருந்தது.

     "ஆசியா.. காப்பிய வாயில வைக்க முடியலேம்மா. ஐஸ் தண்ணியா இருக்கு. சூடு காட்டி எடுத்துட்டு வாம்மா"

     மாமியின் குரல் ஆசியாவிற்கு ஒரு வேலையினைக் கொடுத்தது.

     ஆசியாவுக்குள் இன்னொரு ஆசியா இருக்கிறாள். அவளை மாமியின் குரல் இடித்துவிட்டது.


     "கெழட்டு மூதேவிக்கு வேலயே இல்ல. நான் வேல மெனக்கிட்டு சூடா காப்பி போட்டு குடுத்தா அத ஆறவுட்டுட்டு ஐஸ் தண்ணியா இருக்காம். கொறை சொல்லலேனா கெழட்டுக்கு ரூஹு போயிரும். சுட வைக்கனுமாம். கொழுப்புப் புடிச்ச கெழம். எனக்கு  நல்லா வேணும். ஓதுறதுல கொறச்சல் இல்ல. குசும்புலயும் குறைச்சல் இல்ல"



     ஆசியாவின் மனம் பூராவும் பற்றி எரிகிறது. வார்த்தைகள் மட்டும் உச்சரிப்பு சுத்தமாக வாய்குள்ளே முணகலாக வளைய வளைய வருகிறது. மாமிக்குக் கொழுப்பு அதிகம். வேண்டுமென்றே வேலை வாங்குகிறாள் என்ற நினைப்பு ஆசியாவை உறுத்தியது.

     காப்பிச் சட்டியை எடுத்து அடுப்பில் இடிக்கிறாள். ஆசியாவின் எரிச்சல் காப்பியோடு கிடந்தது கொதிக்கிறது. காப்பிக் கொதிப்பு ஆவியாகிவிடும். ஆசியா கொதிப்பு புலம்பலாக வடியும்.

     "சீக்கிரம் இட்லி ரெடி பண்ணும்மா. தெனம் லேட்டாப் போனா எனக்கே வெட்கமா இருக்கு. சிடுமூஞ்சி மிஸ் வேற வாள் வாள்னு கத்தும்" மகள் காலை டிபனுக்குத் தயாராகினாள்.

     ஆமா இங்கே நான் மெத்தையிலே படுத்து ஆரஞ்சுப் பழம் முழுங்கிக்கிட்டு கால ஆட்டிக்கிட்டு பேப்பர் படிச்சிட்டுக் கெடக்கேன். குத்தங் கண்டுபிடிக்க நீ வந்திட்ட. போளா, இங்கே எல்லாத்தையும் நான் ஒருத்திதான் செய்யணும். எனக்கு மட்டும் அம்பது கையி இருக்கு பாரு. இட்லி லேட்டாத்தான் ஆவும். தின்னா தின்னு இல்லாட்டித் தொலைஞ்சி போ...

     ஆசியாவுக்குள் இருந்து ஆங்காரம் பீறிட்டுத் தெறிக்கிறது.

     மெத்தையில் படுத்து ஆரஞ்சுப்பழம் சாப்பிடும் மாமாவைத்தான் ஆசியா குத்திக் கீறுகிறாள். மாமிக்குப் புருஷன்தானே மாமா. அதுதான் எரிச்சல்.

     மாமா காதில் இது போய் விழுகிறது. அவர் தட்டில் இருக்கும் ஆரஞ்சுப் பழச்சுளைகளைப் பார்க்கிறார். அவைகளையும் கொஞ்ச நேரத்துக்கு முன் ஆசியாதான் அழகாகச் சுளை சுளையாய் பிரித்து எடுத்து மாமாவுக்கு முன் தலையில் தலையில் துணியை இழுத்துப் போர்த்திப் பவ்வியமாகக் கொண்டு வந்து வைத்திருந்தாள்'.

     ஆசியாவின் மகள் எதுவும் பேசவில்லை. அம்மாவுக்கு என்னமோ ஒரு ஷைத்தான் புடிச்சிருக்கு. மக்ரிப்புல மோதினாருட்ட தண்ணி ஓதி கொடுக்கணும். நமக்கு ஏன் இந்த வம்பு. மனதுக்குள் இப்படி நினைப்பு வந்தது. பள்ளிக்கூட புத்தகத்தை பேக்கிற்குள் திணித்துக் கொண்டிருந்தாள் மகள். இட்லிக்கு எப்போது அழைப்பு வரும் என்பது அவளின் எதிர்பார்ப்பு.

     ஆசியாவின் முதுகுத் தண்டு வடத்தின் வலி இப்போது சுரீரென்று கொட்டியது. இரண்டு  வருஷமாக விடாத தொந்தரவு. என்னத்தை விழுங்கினாலும் வலி போகவில்லை. தன்னையே விழுங்கிட்டுத்தான் போகும் என்பது ஆசியாவின் பூரண நம்பிக்கை.

     இட்லிப் பானையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்தாள். வேலை முடிந்து விடவில்லை. இட்லி மாவு இன்னும் கொஞ்சம் இருக்கிறது. இன்னும் இரண்டு அடுக்கு சுடலாம். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் இட்லி சட்டி அடுப்பில் ஏறத்தான் வேண்டும். கொழுந்தனுக்கு இனிமேல்தான் சுடனும். இது ஒரு அதிகபட்ச வேலை.

     "அவரு டாட்டா பேரன். சூடாத்தான் சாப்பிடுவாரரு. ஆறிப்போனா உடனே எந்திரிச்சிருவாரு. ஏன் எந்திருக்க மாட்டாரு? நான் ஒருத்தி கெடச்சிட்டேனில்ல. இந்த வூட்டு மருமவளாவா வந்திருக்கேன். வேலக்காரிக்குப் பதிலா நான் வந்திருக்கேன். இந்த மனுஷனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி ஒரு பொண்டாட்டி வந்து அவட்ட இப்படி சூடா தனியா எனக்கு சுட்டுத்தான்னு சொன்னா அப்பத் தெரியும். தொடப்பக் கட்டயெ தூக்கிட்டு வருவா. எல்லாரும் என்ன மாதிரி இளிச்சவாயளாவா இருப்பா. அண்ணன் பொண்டாட்டின்னு கூட ஒரு மதிப்பு இல்ல. நான் ஒரு பேமலக்கு"

     ஆசியாவுக்கு எரிச்சலைப் பிடுங்கிக் கொண்டு வர இன்னும் எத்தனையோ விஷயங்கள் அங்கே பட்டியல் போட்டுக் காத்திருக்கின்றன.

     "எம்மா ஆசியா தொப்பிக்கு நீலம் முக்கும்போது பாத்து முக்குமா. திப்பித் திப்பியா நீலம் நிக்குது. அசிங்கமா இருக்கும்மா" வெள்ளிக்கிழமை குளியலுக்குச் செல்லத் தயாராகும் மாமனாரின் அட்வைஸ் வருகிறது.

     "இருக்கும்லா. ஏன் இருக்காது. கெழட்டு வயசிலயும் ராத்திரிக்குப் பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்து காலமுக்கி விட்டு சுகமா தூங்குற கொழுப்புலத்தானே இப்படிப் பேசுறது. மருமவ இருக்காளேன்னுக் கூட வெக்கமில்லாம பொண்டாட்டிக் கூட ஒரே ரூம்புல படுக்குற மானங்கெட்ட மனுஷனுக்கு மண்ட நிறைய கொழுப்புலா இருக்கு. நீலம் திப்பித் திப்பியா இருக்காம். முதுகு வலிக்கிற வலி எனக்கில்லா தெரியும்"





     ஆசியா தன் இதழ்களுக்குள் தன் வார்த்தைகளால் தன்னையே அவித்துக் கொள்கிறாள்.

     அடுக்களையில் வெக்கை காந்துகிறது. ஆசியாவுக்குள்ளும் கனல் பொங்குகிறது. எரிச்சல் எழுந்து குதியாட்டம் போடுகிறது. மனதுக்கு நிம்மதி வேண்டும். வாசல் கட்டுக்கு வருகிறாள்.

     எதிர் வீட்டில் பல்கீஸ் தன் கணவனை ஆபீஸுக்கு வழி அனுப்புகிறாள். இது தினம் நடக்கும் ஒரு சம்பிராதயம். அவன் ஸ்கூட்டர் ஸ்டார்டரை உதைக்கிறான். கரிய புகைத்துண்டு சைலன்சர் வாயிலிருந்து கொப்புளிக்கிறது. ஒரு குலுக்கல். ஒரு உந்தல். ஸ்கூட்டர் புறப்பட்டுவிட்டது. முகம் நிறைய சிரிப்பு பல்கீஸிடம் தங்கி நிற்கிறது.

     ஆசியாவையும் அவள் பார்க்கிறாள். பழக்கத்தால் ஒரு குறுஞ்சிரிப்பை உதிர்க்கிறாள். ஆசியாவும் பதிலுக்கு ஒரு சிரிப்பை எடுத்து எறிகிறாள்.

     "மூஞ்சியப் பாரு. பெரிசா புருஷன் வேலைக்குப் போறான். ஊரு உலகத்துல எவனுமே இதுவரை போனதே இல்ல. டாட்டா காட்டி அனுப்புறாளாம். திருட்டுக் கழுதை. ஒரு ஸலாஞ் சொல்லி அனுப்பலாமுல்லோ. இவளல்லாம் ஒரு துலுக்கச்சி. வெள்ளைக்காரன் பேத்தின்னு நெனப்பு. வெக்கங்கெட்டவ. ரோடுன்னுக் கூட நெனைப்பில்ல. கொஞ்சிகிறாகெ. மூதேவிக்கு ஏம்மேலே பொறாமை அதிகம். ஏம்மாதிரி நெறமா அழகா இல்லேன்னு அந்த நாயிக்கு பொறாம. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். அவங்க அவங்க படைப்பு அப்படி. நா இங்கே நிக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டே அவ அவனுக்கு டாட்டா காட்டி அனுப்புறா. அவ புருஷன அவா அனுப்பிட்டுப் போவட்டும். எனக்கென்ன வந்துச்சு. என்னைப் பாத்து அந்த நாசமா போறவ ஏன் சிரிக்கணும்? கொழுப்புத்தானே.

     ஆசியாவுக்கு வாசலிலும் கதகதப்பு அதிகரிக்கிறது. வீட்டுக்குள் வருகிறாள். நடுவீட்டில் சீப்பு கிடக்கிறது. பள்ளிக்கூடத்துக்குப் போகும் அவசரத்தில் மகள் விட்டுப்போய் இருக்கிறாள். ஆசியா அந்த சீப்பை எடுத்தால். தூக்கித் தூர எறிந்தாள். அந்த சீப்பு இரண்டு ஜம்ப் பண்ணி மூன்றாவது ஜம்ப்பில் பொத்தென்று விழுந்து, நான் என்ன செய்தேன்னு கேட்டுக் கிடக்கிறது.

     ஆசியாவின் எரிச்சல் அடங்க வில்லை. பெட்ரூமில் போய்ச் சரிகிறாள். வடக்குப் பக்கச் சுவரில் ஆசியாவும் அவள் கணவனும் இணைந்து போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அவள் பார்வை போட்டோவில் பதிகிறது.

     "ரெண்டு வருஷம் ஆச்சி. துபாயில் என்ன செஞ்சுகிட்டு இருக்காகளோ..? என் நெனப்பு அவுகளுக்கு அடிக்கடி வருமா? வராமலா இருக்கும். பொண்டாட்டி நெனப்பு இல்லாம புருஷன் இருப்பானாக்கும். அவகெ செல்லமா கன்னத்தெ தட்டுறதே தனிதான். நமக்குத்தான் இங்கே ஊருலாப்பட்டெ வேலே. அவகள நெனக்கக் கூட நேரமில்ல. அவுகளுக்கும் அப்படியா இருக்கும்? அதுவேன்னமோ தெரியலே. எல்லா வேலைகளுக்கு நடுவுலயிலும் ஆம்பிளைக்கு பொம்பள நெனப்பு வந்திர்து. பொம்பளைக்கு அப்படி இல்ல. என்னெ பத்தி ரொம்பத்தான் நெனச்சிக்கிட்டே இருப்பாக. எழுதுற கடிதத்தில எல்லாம் எப்படி தேடித் தேடி ஏங்குறாகெ.

     ஆமா பெரிய நெனப்பு? நெனச்சா மட்டும் போதுமாக்கும். அவ எப்படி இருக்கா..? என்ன பாடு படுறான்னு ஓடியாந்து பாக்காத ஆம்புள ஒரு ஆம்புளையா? அந்த மனுஷனுக்கு ஆசையே இல்ல. சனியன் புடிச்சவன் அங்கெ கிடந்தது வெட்டி முறிக்கிறானாம்.




     ஆசியாவுக்குள் கனன்று கொண்டிருக்கும் இன்னொரு ஆசியா நெம்பித் தள்ளி மேலுக்கு வருகிறாள். ஆசியா எரிச்சல் படுகிறாள்.
    
     ஆசியாவின் இந்த நெருப்பை மூட்டும் எரிகொள்ளி எங்கே கிடக்கிறது?

     ஆசியாவின் விழிகள் வடக்குப் பக்கச் சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் தன் கணவன் முகத்தை இழுத்துப் பிடித்து விழுங்கிக் கொண்டே இருக்கின்றன. அவளுக்குள் எரிச்சல் கத்தை கத்தையாக இறங்கிக் கொண்டே இருக்கிறது.
*********

படங்கள்: நன்றியுடன் – bing images.



No comments:

Post a Comment