Sunday, June 2, 2013

அடையாளச் சின்னமாகும் முன்பாக!!!



ற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள், உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பிரிந்து விடாதீர்கள் இப்படித் திருமறையின் செய்தியினைக் காயிதே மில்லத் தம் வாழ்நாளில் பேசாத மேடைகள் இருந்ததில்லை.

ஒற்றுமைக்குத்தான் அதிக அளவில் சோதனை உருவாகும் வாய்ப்பும் உண்டு.

நான்கு மாடுகள் ஒன்றிணைந்து மேய்ந்தது புலியைக் கூட விரட்டி அடித்தன. அவை தமக்குள் குதர்க்கம் கொண்டு தனித்தபோது ஒவ்வொரு மாடுகளாகப் புலிக்கு இரையானது என்னும் கதையினை ஆரம்பப் பாடசாலையில் நாம் ஆரம்பித்து வைத்தோம்.

தனிக் குச்சியினை இரு விரல்களுக்கிடையில் வைத்து முறித்துவிடலாம். பல தனிக்குச்சியினை ஒன்றாகக் கட்டி ஒரு கட்டாக்கிவிட்டால் இரு கரங்களைக் கொண்டு முழு பலத்துடனும் கூட முறிக்க முடியாது என்று மற்றொரு கதை சொல்லி ஒற்றுமையின் பலத்தை நாம் வலியுறுத்தித்தான் வருகிறோம்.

ஒற்றுமை நமக்குப்  பாலபாடம் என்றாலும் அதைத்தான் மிகச்சுலபமாகப் பிடரிக்குப் பின்னால் தூக்கி எறிந்து விடுகிறோம்.

இந்திய முஸ்லிம்கள் பிரச்சனையினைப் பாராளுமன்றம் விவாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் மிஸ்டர் முகம்மது இஸ்மாயில் மனநிலை இதுபற்றி எப்படி இருக்கிறது? என பண்டித நெஹ்ரூவும் பின்னர் இந்திரா காந்தியும் அறிந்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

காயிதே மில்லத்தின் மன ஓட்டத்தின் அடிப்படையில்தான் இந்திய முஸ்லிம்களின் பிரச்சனை விசாரிக்கப்படும். இப்படி ஒரு பாக்கியம் காயிதே மில்லத்துக்கு வருவதற்குக் காரணமாக இருந்த முஸ்லிம்களின் ஒற்றுமை இன்று பரிகசிக்கத்தக்க ஒன்றாக மாறிவிட்டது.

காயிதே மில்லத்தின் காலத்துக்குப் பின் ஒரு பிரச்சனையில் இந்திய முஸ்லிம்கள் ஒரே ஒரு முறை ஐக்கியமானார்கள். இந்த ஐக்கியம் உச்ச நீதிமன்ற ஆணையினைப் பாராளுமன்றத்தின் உதவி கொண்டு மாற்றி அமைத்தது. அதுதான் ஷாபானு வழக்கு.

காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தமிழகத்தில் ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும் என்ற உணர்வு வந்தபோது தி.மு.க. வின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, காயிதேமில்லத்தின் குரோம்பேட்டை தயா மன்ஜில் குடிலுக்குள் ஓடி வந்தார். ஆதரவு வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காணாமல் போனது. இன்று வரை அதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த இடத்தில் எலும்புக்கூடுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டியான காயிதே மில்லத்தின் பின்னால் அணி திரண்ட முஸ்லிம் சமுதாயத்தின் சாதனைக்கு இது கூட ஒரு அடையாளம்தான்.

ராஜகோபாலாச்சாரியாரின் தமிழ் ராஜ்ய முதல்வர் பதவி தட்டி பறிக்கப்பட்டபோது காமராஜர் முதல்வரானார்.

ஆனால் அப்போது அவர் சட்ட மன்றத்தில் உறுப்பினர் இல்லை. இடைத்தேர்தல் ஒன்றின் மூலம் பிரதிநிதித்துவம் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது காமராஜருக்குக் கிடைத்த தொகுதி வடஆற்காட்டிலுள்ள குடியாத்தம்தான்.

காமராஜ் காயிதே மில்லத் இல்லத்திற்கு ஓடி வந்தார். குடியாத்தத்தில்,     தான் தோற்றால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்பதை அறிந்திருந்தார். தமிழகத்தின் பாதை திசை திரும்பி விடும் என்பதையும் புரிந்திருந்தார்.

இந்த விபரீதங்களை மாற்றி அமைக்கும் சக்தி குடியாத்தம் முஸ்லிம் வாக்காளர்கள் கையில் இருந்தது. காமராஜர் காயிதே மில்லத்திடம் ஆதரவு தேடினார். சில அரசியல் காரணங்களுக்காகக் காயிதே மில்லத் ஆதரவு தெரிவித்தார்கள். காமராஜர் முதல்வராக நீடித்தார்.

காயிதே மில்லத்தைக் காமராஜர் நாடக் காரணம் அன்றைய முஸ்லிம் ஒற்றுமைதான்.

பிரிவினைக்குப் பின் பண்டித நெஹ்ரூ முஸ்லிம் லீகை செத்த குதிரை என்றார். செத்த குதிரைக்குள் கிடந்த ஜீவனை உசுப்பிவிட்டு சமூக ஒற்றுமையினை முன்னிறுத்தி முஸ்லிம் லீக் நிமிர்ந்தபோது, பண்டித நெஹ்ரூ கேரளத்தில் முஸ்லிம் லீகின் பிறைக் கோடிக்குக் கீழ் நின்று தனது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு யாசித்தார்.

பண்டிதரை இப்படி மாற்றிக்காட்டியது முஸ்லிம்களின் ஒற்றுமை.

ஒற்றுமையினைப் பற்றிச் சிறு வயதில் கதைகள் கற்றோம். பின்னர் கண்ணெதிரில் நேரடியாகக் கண்டோம். ஆனாலும் அந்த மகத்தான ஆற்றலை மீண்டும் மீண்டும் மண்ணுக்குள் புதைக்கிறோம்.


ஒரே தலைமையின் கீழ் இயங்கும்போது இந்திய அரசியலில் இந்தச் சமூகத்தின் கருத்தோட்டம் கண்டறியப்பட்டது. அதற்கு மதிப்பும் இருந்தது.

இன்று ஒரே தலைமை என்பது துண்டுத்துண்டாக மாறிப் போய்விட்டது.ஆறு ஏழு தலைமைகள் ஆங்காங்கே நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாகத் தலை தூக்கி விட்டன.

தேவைப்பட்ட அரசியல் கட்சிகள் தேவைப்பட்ட முஸ்லிம் தலைமை லேபிள்களைத் தங்களின் ஆதரவாக ஒட்டிக்கொண்டன. சில்லரையான சமூகத்திற்கு ஒட்டு மொத்த மவுசு காலாவதி ஆகிவிட்டது.

தலைமைகளின் எண்ணக்கை அதிகரித்ததும் சமுதாயத்தின் கவுரவம் கிழித்து எறியப்பட்டது.

முஸ்லிம்களின் கல்வி பாதிக்கப்பட்டது. சென்னையின் அன்றைய மவுண்ட் ரோட்டில் இருந்த முஹம்மதன் கல்லூரி அரசு கலைக் கல்லூரியாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டபோது காயிதே மில்லத் காட்டிய எதிர்ப்பை அரசு அலட்சியப்படுத்தியது. உடனடியாக அதன் விளைவாக சென்னையில் புதுக்கல்லூரி, திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, தென் மாவட்டங்களில் கருத்த ராவுத்தர் கல்லூரி இப்படி பல கல்லூரிகள் முஸ்லிம்களின் சார்பாக முன்னறிவிப்பு செய்தன.

ஆனால் இன்று முஸ்லிம்களின் கல்வியில் பெரும் தேக்கம். வேலை வாய்ப்பில் இழுபறி. வாழ்க்கை நிலையில் பரிதவிப்பு எல்லாம் வந்து சூழ்ந்துவிட்டன.

ஒற்றுமையின் சிதைவால் ஒவொரு முஸ்லிமும் நேரடியான பாதிப்பை அனுபவிக்கிறான்.

முஸ்லிம் தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இனிமேலும் சாமர்த்தியமான சரி செய்யும் வாதங்களை மட்டும் இந்தத் தலைமைகள் வீதிகளில் பேசி வந்தால் சமூகத்தால் அடையாளம் காண முடியாத நிலைக்கு ஆளாக வேண்டிவரும்.

இன்றையச் சமூகத் தலைமைகளிடம் கோட்பாடு மாறுபாடு இல்லை. சமூக உணர்வுகளிலும் ஏற்றத் தாழ்வு இல்லை. ஆனாலும் தனித்தனிக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டுள்ளனர்.

தலைமைகளின் தன் முனைப்புத்தான் புதிய கூடாரங்களின் உற்பத்தியாக இருக்கிறது. வீம்பாகிப் பருத்திருக்கும் சொந்தப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டால் ஓரணியின் சேனை பலம் உண்டாகிவிடும்.

தனித்தனி மனித மோதல்களால் சமுதாயம் சல்லடையாகத் துளைக்கப்பட்டுவிட்டது. அதனால் உரிமை என்னும் தேன் இந்தச் சல்லடையில் ஊற்றப்படும் பொது முழுவதும் ஒழுகி விடுகிறது. வேதனை என்னும் கசடுகள் மட்டும் சல்லடையில் தங்கி விடுகின்றன.
ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமை திருமறையின் வாசகத்துக்கு உரிய வாழ்க்கையினைப் பெற்றிருக்க வேண்டும்.
“என் வணக்கமும், வழிபாடும், என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ் ஒருவனுக்காகவே
இதனைக் காயிதே மில்லத் பேசிக் காட்டாத மேடைகளே இருந்ததில்லை.

மக்கள் ஒன்றாகத் தயார்தான், தலைவர்கள் மனநிலை எப்படி என்பதுதான் கேள்வி. சரியான பதில் இல்லாதுபோனால் அனைத்துத் தலைமைகளும் ஓர் அடையாளச் சின்னங்களாக மட்டுமே அமையக் கூடிய எதிர்காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.



No comments:

Post a Comment