Monday, June 3, 2013

மனிதர்! புனிதர்! மஹ்மூதர்!



பாலைவனப் பூமியிலே பால்நிலவு
பவனிவந்த வேளையிலே ஓர்இரவு
வானவர் ஜிப்ரீல் வந்து நின்றார் – நபியே
வான்மறை வாசகம் ஓதுமென்றார்!

ஓதவும் படிக்கவும் நானறியேன் – ஒரு
உச்சரிப்புக்  கூடத் தெரிந்தறியேன்!
நான்எதை ஓதுவேன் என்றார்கள் – நபி
நாதர் ஒடுங்கியே நின்றார்கள்!

உம்மைப் படைத்தான் ஓரிறைவன் – ஒரு
உருவம் இல்லாத மாபெரியோன்!
தம்மை நினைத்துப் பேர்சொல்லி – உம்
தளிரிதழ் அசைப்பீர் என்றுசொன்னார்!

திருமறை வெளிச்சம் சுடர்விட்டது – பல
தீமைகள் வெந்து எரிபட்டது!
அருள்மழை எங்கும் துளிர்விட்டது – அந்த
ஆண்டவன் கருணை முளைவிட்டது!

வட்டியின் கழுத்து அறுபட்டது – மதுத்
தொட்டியும் வெடித்து உடைபட்டது!
கெட்ட ஒழுக்கம் தடைபட்டது – இறைக்
கிருபை எங்கும் நடைபோட்டது!

பிறந்தது பெண்ணாய் இருந்துவிட்டால் – மண்
பிளந்தது அன்றுடன் முடிவுற்றது!
சிறந்தது தாயின் பாதமென்று – ஒரு
சிறப்பும் வந்தே துணைநின்றது!

இறைவன் ஒருவன் அவன்அல்லாஹ்!
இணையும் துணையும் பெற்றில்லான்!
மறையைப் பெற்றவர் அவன்தூதர் – அவர்
மனிதர் புனிதர் மஹ்மூதர்!


No comments:

Post a Comment