Tuesday, August 4, 2015

சௌந்தர்யம்...! -5-



வெளிச்ச வரலாறு
புறப்பட்டு விட்டது...!

( விதிக்கப்பட்ட நிர்ணயங்கள்
நடந்து முடிந்துவிட்டன...!

இறைச் சட்டம் மீறப்படாமல்
நிறைவேறிவிட்டது. ..!

உயர்ந்த மானிடம் கூட மரணத்தைச்
சுகித்து தீர வேண்டும்...!

ஆனாலும் சில மரணங்கள்
நிரந்தர வாழ்வாகவே
நிலைத்து விடுகின்றன...!

பூமியில் தோன்றிய அனைத்தும்
வாழ்க்கையை ஒருநாள்
உதறி எறியத்தான் வேண்டும்...!

காலம்...
சரித்திரம் படைப்பது மட்டுமல்ல...!
வரலாறுகளை
முடித்து வைப்பதும் அதுவே...!

இயேசு பிரான்
பிறப்புக் காரணங்கள்
முடிவுபெறும் காலக்கட்டம் அது...!

அந்த ஞானப் பிரகாசமும்
மறைந்து விடத்தான் வேண்டும்...!

அந்த விதிப்பின் தினம்
அன்று நடந்தது...!

இயேசு பாவங்களைத்
துடைத்தெறிய வந்தார்...!
அதே பாவங்களால்
அன்றைய தினம் தக்கப்பட்டார்...!

தவறுகள் அவரின்
ரத்தத்துளிகளால் கழுவப்பட்டன. ..!

அந்தப் பெருமகான் வாழ்வு முடிந்தது...!
நிலத்தில் உலாவிய நிலா
கண்ணுக்கு மறைந்தது...!

மக்தலேனா செய்தி அறிகிறாள். ..!
துடிக்கிறாள். ..!துவழ்கிறாள். ..!

புழுதியில் விழுந்து புரள்கிறாள். ..!
தன்னைத்தான் தானே பிராண்டிக் கொள்கிறாள்...!

ஜீவன்களை அடையாளப் படுத்திய
ஜீவாத்மாவுக்கா மாபெரும் கொடூரம். ..?

சகிக்க முடியவில்லையே...!
கண்ணீரைக் கொட்டிக் கொட்டிச்
சரீரத்தையும் ஆன்மாவையும்
கரைத்துக் கொள்கிறாள்...!

இனிவரும் வாழ்க்கை வினாடி
விரையமானதே. ..!

கதறுகிறாள். ..! பதறுகிறாள்...!
பித்துப் பிடித்து வீதியெங்கும்
மண்வாரித் தூற்றி எறிந்து ஓடுகிறாள்...!

அந்தப் பிரகாசத்தைப் புதைத்த கல்லறை
நோக்கி ஓடுகிறாள்...!)

மக்தலேனா:---
ஓ...!என் போதகரே...!
உமக்கா மரணம்...?
உமக்கா வேதனைகள்...?

கட்டெறும்புக் கடிபட்டுக்
கருங்கல்லா சிதறிவிடும்..?

மரண இதழ்களில்
உம் மேனி
எப்படி ருசிபட முடியும்...?

நடக்கவே முடியாதவைகளை
நான் நம்பவே மாட்டேன்...!

புதைகுழிக்குப் போய்விட்ட
என் சகோதரனை
அழைத்து வந்த
அற்புதம் அல்லவா நீர்..?

உமக்கும் ஓர் புதைகுழியா. ..?
யார் இதை நம்புவது..?

மரணத்தை விழுங்கியவரை
மரணம் விழுங்குவதா. ..?

ஆண் தீண்டாத கன்னியில்
அவதரித்தவரை
மண் தீண்டவா முடியும்...?

உப்புத் துண்டங்கள் தாம்
நீரில் கரைந்து காணாமல் போகும்...!
வைரமணியை நீரென்ன செய்துவிடும்...?

நான்...நம்ப மாட்டேன்...!
நீரே... இதைச் சொன்னாலும்
அது பொய்களின் தோற்றம்தான்
நான்...நம்பமாட்டேன்...!
சத்தியம் செய்தேன்...!
நீர் மரணிக்கவில்லை...!

சாவுக்கு அப்பாற்பட்ட
சரீரம்...உமக்குச் சொந்தமானது...!

முள்ளும் ஆணிகளும்
உம்மைக் குத்தினால்
முனை மழுங்கிச் செத்தும் போகும்...!

நெருப்பைப் பொசுக்கும்
துரும்புகளும்
இருக்கவா முடியும்...?

உம்மை மரணித்ததாக
உச்சரிக்கும்
மனித நாக்குகளை
நான் அறுத்தெறிந்து விடுவேன்...!

என் போதகருக்கு
மரணமில்லை...! மரணமில்லை...!
மரணமேயில்லை. ..!

( இப்படிக் கத்திக் கொண்டே மக்தலேனா இயேசுவைப் புதைத்த
கல்லறைக்கு அருகே வருகிறாள். ..!
கல்லறையின் மேற்புறக் கல் நகர்த்தப் பட்டிருக்கிறது...!
அங்கே...கல்லறைக்குள் தூய வெள்ளாடையில்
இருவர் நிற்கின்றனர்...!

இயேசு பிரான் சரீரம் அங்குக் காணப்படவில்லை...!
புதைகுழிக்குள் எட்டிப் பார்க்கிறாள் மக்தலேனா...!
உள்ளிருப்போரிடம் கேட்கிறாள். ..! )

மக்தலேனா:---
ஏ..., தூயவர்களே. ..!
எங்கே என் போதகர். ..?

இருவரில்
ஒருவர் :---

பெண்ணே...!
உன் போதகர் இங்கே இல்லை...!
அவர் இங்கே
இருக்கவும் நியாயமில்லை...!

கஸ்தூரி வாசனையை
உள்ளங்கையா சிறைப்படுத்தும். ..?

( சுற்றும் முற்றும் வெறித்து மக்தலேனா பார்க்கிறாள்...!
சற்றுத் தொலைவில் கல்லறைக் காவலாளி நிற்கிறார்...!
அவரை நோக்கி மக்தலேனா ஓடுகிறாள்...! )

மக்தலேனா:---
ஏ...! கல்லறைக் காவலரே. ..!
என் போதகர் புதைகுழி
இதுவென்றால்...
எங்கே என் போதகர்...?

உம் காவலில் ஏதாவது
கவனக் குறைவு
நடந்து விட்டதா...?
எங்கே என்
போதகர் சரீரம்...?

காவலாளி:---
பெண்ணே..! மகளே...!
மக்தலேனா...!
உனக்குமா
அடையாளம் மறந்து போனது...?

எங்கே என்னை... உற்றுப் பார்...!
நானா காவலாளி...?
உன் ஜீவனில் வெளிச்சம் தெரிகிறதா..?
( மக்தலேனா உற்றுப் பார்க்கிறாள்.)

மக்தலேனா:---
போதகரே...! நீரா...?
நானறிவேன்...!
மரணம் உம் கால்பட்ட
மண்ணைக் கூடத் தீண்டாதே. ..!

வானத்துச் சூரியனை
ஒரு வெண்துணியினால்
கட்டிக் களவாட முடியாதே...!
நானறிவேன்...! போதகரே...!
நானறிவேன்...!

( இயேசு பிரான் பாதங்களைத் தொட மக்தலேனா ஓடுகிறாள்...!)

இயேசு பிரான்:---

மகளே...!
சற்று விலகியே நில்...
என்னைத் தீண்டாதே...!

மக்தலேனா:---
என் போதகரே...!
அசுத்தப்பட்ட நான்
அன்று
உம்மைத் தொட்டுப்
பரிசுத்தப்பட்டேன். ..!

இன்று
பரிசுத்தப்பட்ட நான்
உம்மைத் தீண்டியா
அசுத்தமாகி விடுவேன்...?

என்ன பாவம் செய்தேன்..?
போதகரே..! உம்... மரணச்
செய்தியைவிட. ..
"தொடாதே நீ "
இந்த வார்த்தைத் தீ
என்னை எரித்துப் பொசுக்கி விட்டதே...!
மன்னிப்புக் கிடையாதா...?

ஒரு வேளை உம்
மன்னிப்பு
மகத்துவத்தைத்தான்
மரணத்துக்கு
ஒப்புக் கொடுத்து விட்டீரோ...?

இயேசு பிரான்:---
மகளே...!
புலம்புதல் சாத்தானின்
கீதமல்லவா...?

வார்த்தைகளால் அளவுகளை
மீறாதே. ..!

கொடிய வசனங்கள்
பாவங்களை அள்ளிச் சுமக்கும்
கூடையல்லவா. ..?

மகளே...!
வேணடாம். ..!
மகத்தான மன்னிப்பை
மீண்டும் வழங்குகிறேன்...!

மானிடரில்
எவருக்கும் கிடைக்காத
முதல் பாக்கியத்தை
உனக்கல்லவா தந்திருக்கிறேன்

என் உயிர்த் தெழுதலைச் சந்தித்த
முதல் மனுஷி நீ...!

ஜீவன்களில் பரிசுத்தப் பிரதிநிதி...
இந்த நாளில் இந்த நகரில்
நீ மட்டுமே...!

மகதலேனா:---
போதகரே..!
உம் பாதங்களைத் தொட்ட
கரங்கள் இவைகள்...!

அநதப்
பாதங்களில்
அழுது அழுது கண்ணீர் கொட்டிய
விழிகள் இவைகள்...!

அவற்றை
ஒற்றி ஒற்றிப் புனிதம் பெற்ற
முடிக் கற்றைகள் இவைகள்...!

என்னுடன் அதிகம்
பரீட்சயம் பட்ட
அப்பாதங்களை
நான்
இன்று மட்டும்
தொடத் தகுதியற்றவள்
ஆகி விட்டேனா...?

அன்று
உம்மைத் தொட்டவர்களின்
அசுத்தங்களைத் துடைத்தெறிந்த நீர்
இன்று சக்தியற்றா போனீர். ..?

போதகரே...! என்னை மன்னித்துவிடும். ..
நான் புலம்புகிறேன். ..!
வார்த்தைகளை அதிகம் அதிகம்
கக்குகிறேன். ..!

இயேசு பிரான்:---
மகளே...!
உனக்குத் தரப்பட்ட
அனுமதிகளை மீறுகிறாய். ..!

நிறுத்திக்கொள். ..!
மன்னிப்பும் பெறமுடியாத
பாதகத்துக்குள்
புகுந்து கொள்ளாதே. ..!

என்
வாக்குகளே
உனக்கு வெளிச்ச மாகட்டும். ..!

நான் சொன்னவைகளையே
உன் சிந்தை ஒப்புக் கொள்ளட்டும்...!

தர்க்கம்...! அது...
உண்மைகளைத் தொலைத்து விட்டபின்
பிறப்பெடுத்த பிசாசு...!
அது உனக்கு வேண்டாம்...!

மகளே...! தர்க்கிக்காதே. ..!
நம்பிக்கை மட்டுமே வை...!

நம்பிக்கைதான்
தேவசபை முத்திரை மோதிரம். ..!
தேவசபை நுழைவுச் சீட்டு...!
நீ அதைப் பெற்றுக் கொண்டாய். ..!
மறுதலித்து விடாதே...!

நான் என் மூலத்தோடு
இன்னும் இணையவில்லை...!
நடுவே
நீ ஒரு இடைஞ்சலைச்
செய்து விடாதே...!

மகளே...,! என்னைத் தீண்டாதே...!

மக்தலேனா:---
( குனிந்து பணிந்து நடுங்கி )

போதகரே..., ஒப்புக் கொள்கிறேன்..!
நீரே
என்னை நம்பிக்கையில் நிலைப்படுத்தும். ..!

வேத அழைப்பில்
அனுபவப்படுத்தும்...!

இயேசு பிரான்:---
மகளே...!
என் பூரண ஆசீர்வாதம்
உன் மீது பிரகாசமாய்
நிறைந்து கொண்டே இருக்கிறது...!

வீண் பேச்சுகளும்
விளக்க உரைகளும்
இன்மேல் உன் போதகருக்குப்
பொறுத்தமில்லை. ..!
புரிந்து கொள்...!

ஊருக்குள் செல்...!
என் உயிர்த்தெழுதலை
உலகுக்கு
நீயே அறிவிப்புச் செய்...!

என் உயிர்த்தெழுதலைப்
பார்த்த உனக்கு
இனி இடுகாட்டில் வேலையில்லை...!
ஓடு...! உலகுக்குச் சொல்...!
பாககியங்களில் மகத்தானது இதுதான்...!

என் பிறப்பு...!ஆண் தீண்டாத அதிசயம்...!
அறிவித்தவர் என் அன்னை மரியாள்...!

என் உயிர்த்தெழுதல். ..!
உலகுக்குக் கிடைத்துவிட்ட
தீர்வான அருட்கொடை. ..!
என்ன மகளே...!

இதனை
நீ சென்று அறிவிப்புச் செய்...!

உன் தகுதி
உனக்குப் புரிந்து விட்டதா..?

மகளே..! போ...!
போய் அறிவிப்புச் செய்...!
( மக்தலேனா ஊருக்குள் ஓடுகிறாள்...!)

மக்தலேனா:---
ஓ...!மக்களே...!
என் போதகர் மரணிக்கவே இல்லை...!
உயிர்த்தெழுந்து விட்டார்...!

உலகம் மீண்டும்
ரட்சிக்கப்பட்டு விட்டது...!

பாக்கியம் உள்ள
விழிகள் பார்த்துக் கொள்ளட்டும்...!

இது தேவச் செய்தி...!
செவியுள்ளோரே. ..! ஓடி வாருங்கள்...!
விதிப்புள்ளோரே...! கண்டு களியுங்கள்...!

அதோ...! அடிவான ஓரத்தில்....!
என் போதகர் பயணம்...! பாருங்கள்...! பாருங்கள்...!

மரண முத்திரை தொட்டறியாத
வெளிச்ச வரலாறு...!
புறப்பட்டு விட்டது...!
பாருங்கள்....! பாருங்கள்...! பாருங்கள்...!

( மகதலேனா அறிவித்துக் கொண்டே ஓடுகிறாள்...!
உலகமெங்கும் ஒலி பரவுகிறது...!
அவள் ஓடிக் கொண்டே இருக்கிறாள்...!
காலப் பெருவெளியில் கரைந்து கொண்டே இருக்கிறாள்...!

அவள் மகா சௌந்தர்யம்...!
மதிப்பு மிக்க ஜீவப் பிரகாசம்...!
பரந்த வெளியில் எங்கோ கலந்திருக்கிறாள். ..!

( சௌந்தர்யம்.முற்றும்.)

No comments:

Post a Comment