Saturday, August 1, 2015

சௌந்தர்யம்! ( இது ஓர் உரை கவிதை) - 1




நீர்ச் சுனைக்குச்
சமுத்திரக் கொந்தளிப்பு...!

(அது ஒரு மதிய வேளை.
உச்சியை விட்டுச்
சற்றே மேற்குச் சரிவில்
உருளத் துவங்கியது சூர்ய வட்டம்...!

கிழித்து எறிந்த
சலவைத் துணிகள்போல்
திண்டு திண்டாகத்
தூர தூரமாக மேகக் கூட்டம்...!

வெப்பக் கலவைகள்
அப்பிக் கிடக்கும்
காற்றுச் சுருள்களின் அலையடிப்பு...!

பசிய மரங்கள்
தாகத் தவிப்பில்
நாக்கு இலைகளைச்
சப்புக் கொட்டுகின்றன. ..!

சற்றுத் தொலைவில்--ஒரு
கருப்புக் காகம்
ஓர் ஒற்றைக் குரலில்
ஓயாது எழுப்பும் ஓங்கார ஓசை. ..!

பேரீச்சை மரத்தடியில்
சாய்ந்து கிடக்கும்
ஒட்டகையின் உஷ்ணமூச்சுச்
சர்ப்பச் சீறலாக
விம்மி விம்மிச் சரிகிறது. ..!

வளைந்து வளைந்து
தழுவித் தொங்கும்
திராட்சைக் குலைகளுக்கிடையே
நெளிந்து நெளிந்து
நச்சுப் பாம்புகள்
ஒளிந்து கொள்ளும் சாகஸங்கள். ..!

ஊர் முழுவதும் ஓர் அமைதி. ..!

ஒரு சிலர் மட்டும்
அந்தத் தீ நடக்கும் தெருக்களில்
வெப்பப் புழுக்களாய்
வெந்து நடக்கும் வேதனை. ..!

பிரமாண்டமான
மாட விலாசங்கள்...!

அகண்ட வீதி வெளிகளில். ..
பூமியே சூடுதாங்க முடியாமல்
மூச்சிரைக்கும் ஓர் சந்தர்ப்பம். ..!

அந்த வீதியின்
கடைசி ஓரம். ..!

நெடிது உயர்ந்த தூண்கள். ..!
அண்ணாந்து பார்க்கும் தலைவாசல். ..!
அங்கே
வண்ண வண்ணச்
சித்திரைச் சிற்ப வேலைப்பாடுகள்
தொத்திக் கொண்டிருக்கும் கலையாம்சம். ..!

மெல்லிய பூங்கொடிகளின்
படர்தலில்
மறைந்து கிடக்கும்
சாளரத் தோற்றம்...!

முற்றம் எங்கும்
வாசல் பூக்களின் கும்மாளம்...!

அநத
மாளிகை உள்ளேதான்
எத்தனை எத்தனை இருக்கைகள்...!

பஞ்சுப்பொதி அழுத்தும்
மெத்தை அணைகள்...!

அந்த மாளிகை மாடியில். ..
மர ஊஞ்சலில்...
மலர் தூவிய பஞ்சணையில்...

ஆடியும்...அசைந்தும். ..
நெளிந்தும். ..நெகிழ்ந்தும். ..
துவண்டும்...துவழ்ந்தும். ..

சௌந்தர்ய
ஜாலம் நிகழ்த்தும் மக்தலேனா...!

அப்பாடா...!

ரோஜாப்பூ மேனி...!
ராஜ ஒய்யாரம். ..!
ஓர் சௌந்தர்ய லஹரி...!

தொட்டால் ஒட்டிக் கொள்ளும்
கொள்ளை நிறம்...!

திராட்சைக்கனி கருமையில்
அடர்ந்து சுருண்டு
வழிந்து கிடக்கும்
கேசக் குப்பை...!

ஒரு தேர்ந்த சிற்பி
அளவெடுத்துச் செதுக்கிய நெற்றி...!

மெலிதாய்
மின்னலாய்
நிமிர்ந்த நாசி...!

கூர்மை மழுங்காத
முள் ஊசிப் பார்வை...!
தத்தளிக்கும் விழிப் பாய்ச்சல்...!

அந்தி வானம்
சாயம் பூச
நாடிவரும் அதரத் தடாகம்...!

சூரியச் சுடரிலும்
வெள்ளை அருவிபோல்
துள்ளியெழும் பல்வரிச் அணிவகுப்பு. ...!

விழி பட்டால் கூட
வழுக்கிக் சறுக்கி விழும்
விம்மிப் புடைத்த பளிங்கு மார்புகள்...!

தளிர்கள் தொட்டாலும்
தழும்பாகிப் போகும்
தந்தக் கடசலில்
தழுவித் தொங்கும் கரங்கள்...!

ஒசிய ஒசிய உரசி
வெளிச்சம் செய்யும்
அற்புத இடை...!

தென்காற்றுப் பட்டாலும்
கண்ணியப் போகும்
பருத்துக் கொழுத்துத்
திரண்ட தொடைகள். ..!

பூக்களை இணைத்துத்
தூரிகை எழுதிய பாத நெளிவு. ..!

ஆம்.!

அவளே மக்தலேனா...!

அவள்
காந்த வாசஸ்தலம். ..!
கவர்ச்சி மாளிகை...!
புஷ்பப் பல்லக்கு...!
மதன தோரணம்...!
அவளேதான் மக்தலேனா...!

சில வேளைகளில்...
இல்லை இல்லை...
மிகச்சில சகாப்தங்களில். ..

இறைவன்
தன் படைப்பைப் பற்றித்
தானே கர்வம் கொள்கிறான். ..!
அவன் அப்படிக் கருதிய
கர்வத் தோற்றம் மக்தலேனா...!

அவள்
முடிவாகி வந்த அழகு சொரூபம். ..!

அவள்...இப்போது...
தோழி மார்த்தாளிடம் பேசுகிறாள். ..!

ராக வீணையொன்று
வார்த்தை வார்க்கிறது. ..!
அவள் பேசுகிறாள்...! )

மக்தலேனா: இன்றைக்கு வெப்பம் அதிகமோ. ..?

மார்த்தாள்: இருக்கலாம்...
உன் அங்கம் எங்கும்
கொத்துக் கொத்தாக
அரும்பிப்
பூத்துச் சிரிக்கும்
இந்த
அதிர்ஷ்ட வியர்வைத் துளிகளைப் பார்...!

மக்தலேனா: இதுவென்ன மோசமான
மதியம்...?

மார்த்தாள்: பொழுதுகளின் விளைவுகளை
நீ சபிக்கக் கூடாது...!
அது ஆண்டவனைச் சங்கடப்படுத்தும்...!

மக்தலேனா: (மெல்லிய வெளிச்சச் சிரிப்புடன்.)
ஏதேது. ..
உன் நாக்கு நுனிகளை
ஞான வார்த்தைகளால்
இன்று
அலங்காரப் படுததுகிறாய். ..!

மார்த்தாள்: (சற்றே நாணத்துடன் நெளிந்து)
மனம் காட்டியதை
வாய் பேசுகிறது...!

மக்தலேனா: (நெற்றியில் சுழிகளை ஏற்படுத்தி விழிகளை
மார்த்தாள் முகத்திற்கு நேரே நிலைகுத்தி
நிறுத்தி...)

சரி...
ஷாம்ஷனிடம் சென்று
செய்தி சொல்லி வா...!
இன்று
இளமை இரவில்
மூன்றாம் பிறை
வானில் மங்கலாகக்
கோடு கிறுக்கும் நேரத்தில்...
கீழ் தேசத்துச்
சந்தனக் குழம்பும்
அந்தரங்கத்தையே
அதிர வைக்கும்
கஸ்தூரிப் பூச்சும்
எடுத்த வர
நான் அழைப்புத் தந்ததாகச்
சொல்லி வா...!

மார்த்தாள்: ( விழிகளை விரித்து ஆச்சர்யத்துடன்)
யாரை...
ஷாம்ஷனையா. ..?
வணிக வட்டாரத்தின்
சக்கரவர்த்தி ஷாம்ஷனையா?
மன்னருடன்
சரியாசனம் அமைத்து
மந்திராலோசனை நடத்தும்
அந்த...ஷாம்ஷனையா. ..?

மக்தலேனா: (அசாதாரணமாக)
ஆம்...
அந்த ஷாம்ஷனத்தான். ..!
அந்த மகத்தான
அவனையே தானடி...!

மார்த்தாள்: அந்த மா மனிதரையா. ..?
உனது ஆணை என்ன
அரசச் சட்டமா...?
உனது அழைப்புக்கு
பணிந்து ஓடி வர
அவரென்ன
வாலாட்டிக் குழைந்துவரும்
ஓர் அற்பப் பிராணியா. ..!
ஏய்...மக்தலேனா...!
இது
எல்லை மீறிய
ஓர் துஷ்பிரயோகம்...!

மக்தலேனா: ( எரிச்சலாக)
அடியே...!
அத்து மீறும் அசிங்கப் புழுவை. ..!
அழைப்பு விடுத்திருப்பது நான்...!
எனக்குப் பணிவிடை செய்ய
ஷாம்ஷன் என்ன...! சாதாரணம்...!
ஷாம்ஷன்
செல்வங்களை மட்டுமே
நிறைத்துக் கொண்ட
ஒரு ஒற்றைத்
தனி மனிதன் தானே....!
இந்தத் தேசத்துச்
சாம்ராஜ்யமே
கை கட்டி என் முன்னே
சரணடைந்துதான்
தீர வேண்டும்...!

மார்த்தாள்: இது அதிகப்படியான
ஆணவம்...!
சிலந்தி வலைக்குச்
சித்திர அந்தஸ்து
தேவை இல்லை...!

மக்தலேனா: ( ஏளனமாக)
ஏய்...மார்த்தாள்...
நீ...
துரும்புகளுக்குக்
க்ரீடம் சூட்டி
ராஜ மரியாதை செய்கிறாய்...!

என் இதழ் அழைப்புச்
சாதாரணமானதா. ..?

அது
உலகச் சட்டவிதிகளின்
முதுகில் விழும்
நெருப்புச் சாட்டை...!
அது
சர்வ வல்லமை படைத்த
சக்தி...!

இதை உணர்வதற்கே
உனக்குப் பல யுகங்களின்
பிறப்பு நடந்தாக வேண்டும்...!

என் விழிபட்ட இடத்தில்
நடந்துவிடும் விபரீதங்களை
நீ அறிய மாட்டாய்...!
போ...நான் சொன்னதை
நீ செய்...!

மார்த்தாள்: உன் கட்டளையை
நான் மீறிப் பழக்கமில்லை...!

ஆனாலும்
ஊற்று நீருக்குச்
சமுத்திரக் கொந்தளிப்புச் சரியில்லை...!

மக்தலேனா: என்ன இது....?
வார்த்தைக்கு வார்த்தை எதிர் வாதம்...!
உனக்கிது வழக்கமில்லையே. ..!

மார்த்தாள்: ஷாம்ஷனுக்குச் சேவை செய்ய
நாலாயிரம் அடிமைகள்
அவர் சுட்டு விரல் நீட்டும் திசைப்
பற்றி எரியும்...!

செல்வத்தின் உச்சியில்
அமர்ந்திருக்கும் அவர் முன்னே
அறிவு சாம்ராஜ்யங்கள் கூடத்
தலை மடிந்து நிற்கும்...!

அந்த...ஷாம்ஷனையா
ஒரு ஏவலைப்போல--நீ
அழைத்து வரச் சொன்னது
நடக்குமா...?
நடந்தால்... அது....அடுக்குமா...?

அடுப்பெரிக்கச் சூரியனிடமா
நெருப்பள்ளி வரமுடியும்...?

மக்தலேனா: அடியே...
சூறாவளியின் வேகத்தில்...
மணல் துகள்கள்
திசைக்கொன்றாய்ச்
சிதறித்தான் ஆகவேண்டும்...!

நான்...சூறாவளி...
நீ. .. போ...சொன்னதைச் செய்ய. ..!
நீ. ..உனக்குரிய பழக்கத்தை
மாற்றாதே. ..!
நான் என் பழக்கத்தை
மாற்றுவதே இல்லை...!

மார்த்தாள்: ஒரு விபரீதம்
தனது துவக்கத்தை
இப்படித்தான் ஆரம்பிக்கும். ..?
( மார்த்தாள் செல்ல எத்தனிக்கிறாள். ..)

மகதலேனா: நில். ..மார்த்தாள். ..நில்...!
நீ அதிகம் பேசி விட்டாய். ..!
மீதியையும் பேசு...
உன் எண்ணம் என்ன? சொல்...!
சந்தேகம் எனபது
தாறுமாறான எண்ணம்...!

குப்பை சுமக்கும் உள்ளம்
சாதனைகளுக்குச் சவக்குழி. ..!
மார்த்தாள்...அது உன்னிடம்
இருக்கவே கூடாது...!

மார்த்தாள்: ஒரு பெண்ணுக்குள்
இத்தனை வீரியமா. ..!

மக்தலேனா: ஒரு பெண்ணுக்கு
அடங்கத்தான் தெரியும்...!

மார்த்தாள்: நீ ஆர்ப்பரிக்கிறாயே...?
அப்படியானால்
ஆணவத்தின் மேல்
பெண் தோல் போர்த்தப் பட்டிருக்கிறதோ. ..?

மக்தலேனா: அடியே...பைத்தியக்காரி. ..நான் யார்...?

மார்த்தாள்:: நீ மக்தலேனா...!
மிகவும் நேர்த்தி மிக்க
வசீகரமான பெண்...!

மக்தலேனா: இல்லை...
நான் பெண் மட்டும் இல்லை...!

ஒரு பெண் மட்டும் அழைத்து
எந்த ஆணும்
அசையக் கூடமாட்டான்...!
அறிவேன். ..! நான்...அறிவேன்...!
ஆண்
எதிர்பார்க்கிற அளவு
பலகீனமானவ னில்லை...!

பெண்ணை விட மோசமாக
நடிப்பான். ..!

அனுபவங்களுக்கு மட்டுமே
அனுமதி தருவான்...!அறிவேன்...!

ஏன்...!
நீ கூடப் பெண்தானே...
யாரையாவது அழைத்துப் பார்...!
அதுவும் ஆணையிட்டு அழைத்துப் பார்...!

அந்த உன் ஆணைக்கு...
ஓர் ஆணின்
அங்கத்தைத் தழுவிக் கிடக்கும்
துணி நுனியை கூட
அசைக்கும் சக்தி இருக்காது...!

ஆனால்
நான் அழைத்தால்
என் அழைப்பு மொழியின்
இறுதி உச்சரிப்பை
என் இதழ் முடிக்கும் முன்பே
என் பாத விரல் நுனியில்
எவனும் தலைசாய்த்துப்
பணிந்து கிடப்பான்...!
இதை நீ அறியவேண்டும்...!

இது ஏன்...?
நான் ஒரு பெண் என்பதாலா...?
இல்லை...!

ஒரு பெண் நினைத்து
எதுவும் சாதித்து விடமுடியாது. ..!

மார்த்தாள்: அப்படியானால்...நீ...யார்தான்...?

மக்கலேனா:: ( எழுந்து நடந்து ஓர் ஒய்யார அசைவில் திரும்பி...)
அடியே...
நான் வெறும் மக்கலேனா
மட்டுமல்லள்...!

நான்... தசை நரம்புத் திரட்சிகளால் ஆன
ஓர் பெண் மட்டுமல்ல. ..!

நான் தான் சௌந்தர்யம்...!
ஆம்...நான்தான்...சௌந்தர்யம்...!
சௌந்தர்யம் நான்தான்...!

மார்த்தாள்: அப்படியென்றால்...
அங்கங்கள் வேறு...சௌந்தர்யம் வேறு...
இப்படியா அர்த்தம்...?

மக்தலேனா: ஆம்...இது நிச்சயம்...இதுதான் சத்தியம்...!
அங்கங்கள் இல்லாத
மானிட இனமே இல்லை...!

அவைகள்
குறைந்திருக்கலாம். ..குறையாக...இருக்கலாம்...,!

ஆனால்
சௌந்தர்யம் இல்லாத
அங்கங்கள் இருக்க முடியும்...!

கிரகங்கள் இல்லாத வான் வெளியில்லை. ..
கிரகங்கள் வேறு...வான்வெளி வேறு...!
அங்கங்கள் இல்லாமல் சௌந்தர்யம் இல்லை...!
அங்கங்கள் வேறு...சௌந்தர்யம் வேறு...!

மார்த்தாள்: மிகைப்படுத்தி உணர்ந்து கொண்டிருக்கிறாய். ..!
இதுதான் அறியாமையின் குரு பீடம்...!

மக்தலேனா: தவறு மார்த்தாள்..!இதுதான் தவறு..!
நீ பிழைகளையே பேசுகிறாய்...!

சௌந்தர்யத்தின் முன்னே
சகலமும் அடிமையே. ..!
இதுதான் ஓர் மமதையல்ல. ..!

தன்னைத் தானே அறிந்து கொண்டதால்
கையகப்பட்ட ஞான முதிர்ச்சி...!
மறுபடியும் சொல்லுகிறேன்...!
பெண் யாரையும் அடிமைப்படுத்த அருகதையற்றவள். ..!

வேறு எதுவும்
யாரையும் நிரந்தரமாக
அடிமைப்படுத்த முடியாது...!
அப்படியே நடந்தால்
முடிவில் அதுவே ஏமாந்து போகும்...!

நான் பெண் அல்லள். ..
நான் மக்தலேனாவும் அல்லள்...
நான் மமதையும் அல்லள்...
நான் சௌந்தர்யம்...!

என் எதிர் பக்கம்
அடிமைகள்தாம் இருக்க முடியும்...!
சமமானவர்களோ. ..மேம்பட்டவர்களோ. ..
இருக்கவே இயலாது...!

இதுதான் படைப்பு ரகசியம்...!
சரிசரி. ..போடி
வேலையை முடித்து வா...!

மார்த்தாள்: செல்கிறேன்!
எப்படியோ ஓர் நெருப்புத் துணுக்கு
பஞ்சிப் பொதியில்
சுமையாக இறங்கிவிட்டது...!
இனி எரிந்துதான் முடியவேண்டும். .!

( மக்தலேனா சிரிக்கிறாள். உச்சத்தொனியில் ஓங்கார
ஏளனத்துடன் சிரிப்பைத் தொடர்கிறாள்.
அது சிரிப்பலை. ..ஒரு வரலாற்றின் துவக்க மணியோசை).

( இளமாலை வேளை...!
மந்தகாசமான காற்றுத் தூவல். ..!

அசையும் கேசக் சரங்களை
விரல் நுனிகளால் கோதிய படியே
பஞ்சணையில் மக்தலேனா..
வெளிச்சக் குவியலாய்
பதிந்து கிடக்கிறார். ..!

அவளின் நெளிவு சுழிவுகளில் எல்லாம்
ஓர் அதிசய நேர்த்தித் தளும்புகிறது. ..!
வாசலில் ஆண் அழைப்பு ஓசை...
மார்த்தாள் வாசலை நோக்கி விரைகிறாள். ..!

வாசலில்...ஷாம்ஷன். ..!
இருகரங்களிலும் பொன் தட்டைத் தாங்கி நிற்கிறார்...!
அதில் கஸ்தூரி...சந்தனக் குழம்பு...!

மா பெரும் வணிக சாம்ராஜ்யம்
அடக்க ஒடுக்கமாக சௌந்தர்யத்தின்
தலைவாயிலில் குழைந்து குனிந்து நிற்கிறது...!

உள்ளே சௌந்தர்ய ஒய்யாரம்
அரைவிழிப் பார்வையை
அனுப்பி வைக்கிறது )

மக்தலேனா: ( மார்த்தாளைப் பார்த்து )
பார்த்தாயா. ..

சௌந்தர்யத்தின் வாசலில்
செல்வ மலையின் அடக்கம்...!

என் மயிர் கற்றையின்
ஒற்றை மயிர்த்துளி நுனியில்
இதோ இந்த மாமலையைக் கட்டித்
தொங்க விட்டுவிட்டேன்...!

மார்த்தாள்: வைரக் கற்கள் சின்னதாக இருக்கலாம்
அதை நீ விழுங்குகிறாய். ..!
முடிவைப் பார்ப்போம்...!

அழிவு கற் துகள்களுக்கா...
பிரமாண்டமான
சௌந்தர்யத்திற்கா. ..?

பொறுமை மட்டும்
போதுமான தீர்ப்பு வழங்கும்...!

No comments:

Post a Comment