Monday, August 3, 2015

சௌந்தர்யம். ..! -3-



தானியங்களைப்
பதர்களால் மூடாதீர்கள். ..!

( காலம் சுருள்கிறது...!

ஒருநாள் மக்தலேனாவின் நகர் எல்லையில் இயேசு பிரான் தன் சீடர்களுடன் மீணடும் வந்து கொண்டிருக்கிறார்...!

ஊர் திரண்டு அவரை வரவேற்க எல்லை நோக்கி ஓடுகிறது...!
மக்தலேனாவுக்கும் செய்தி சென்று சேர்கிறது...!

அவள் ஜீவனில் ஒரு குதூகலம்...! தலைதெறிக்க ஓடுகிறாள். ..!
ஊர் எல்லையில் முன்பு கண்ட அதே பிரகாசத்தைக் காண்கிறாள். ..!
கூட்டத்தை முண்டியடித்து விலக்கித் தள்ளி ஒரு காற்றுச் சாடலில்
சாடுகிறாள். ..!

அந்தப் பிரகாசத்தின் பாதங்களே இப்போது
அவள் முழுப் பார்வைக்குள்ளும்
பதிவாகின. ..!

அந்தப் பாத கமலங்களைப் பற்றிப் படித்து
அவை கண்ணிப்போய் விடாதவறு தாங்கித் தழுவி
முத்தம் இரைத்துக் கண்ணீர் பொழிகிறாள். ..!

இயேசு பிரான் சற்று குனிந்து
மக்தலேனாவின் முதுகுப் பகுதியையும்
கற்றையாக வழிந்து கிடக்கும் மயிரிக் குவியல்களையும்
உற்றுப் பார்க்கிறார்...!

ஒளி பொருந்தும் ஜீவனை
அடையாளம் கண்டு கொண்டார்...! )

மக்தலேனா:---
போதகரே...!
நீர் புதுப்பித்த ஜீவன்
உம்மைப் பணிகிறது. ..!

இயேசு பிரான்:---

மகளே...! எழுவாய். ..!

(மக்தலேனா எழுகிறாள். இயேசு பிரான் இதழ்கள் விலகுகிறது.
ஒரு சின்னப் புன்முறுவல் வெளிச்சப்படுகிறது. அவளைப் பார்க்கிறார்.
அவள் ஜீவனுக்குப் பொருள் புரிந்து விட்டது...!)

மக்தலேனா:---
போதகரே...!
உம் வருகையால் என் குடிலில்
தீபச் சுத்தம் நடக்கட்டும்...!

ஒரே ஒரு வேளை
இந்த எளிய மகள்
இல்லத்து உணவை
உமது உன்னத இதழ்கள்
சுவை பார்க்கட்டும்...!

இது ஜீவ அழைப்பு....!
இதைத்
தவறவிடுவது என் தர்ம இழப்பு...!

இயேசு பிரான்:---
( புன்னகை மாறாமல் )
மகளே...!
உன் அழைப்பு
அங்கீகரிக்கப்பட்டு விட்டது...!
நீ செல்வாய். ..!

(இந்தச் சரித்திரச் சம்பவம் சுற்றி நின்ற
பரிசேயர்களுக்கு அருவருப்பாகப் பட்டது...!

நடத்தையில் பங்கப்பட்ட பெண்ணொருத்தியின் இல்லத்தில்
போதகருக்கு விருந்துபசாரமா. ..?
இதை அங்கீகரிக்க முடியாது...!

போதகரைத் தடுத்து நிறுத்த
அங்கே ஓர் சதித் திட்டம்...!

தூய்மைப்பட்டவர்களாகக்
கருதிக் கொண்டவர்களின் துயரச் செயல்...!
கேடுகெட்ட முணுமுணுப்பு...!

இத்தனையையும் இயேசு
உணர்கிறார்...!

மக்தலேனா இல்லம் நோக்கி
ஆழ்ந்த அமைதியில்
உபசாரம் ஏற்கும் நிறைவில்
ஒரு தென்றல் அசைவில் நடக்கிறார்...!

மக்தலேனா இல்லத்தின் முன்னே
இயேசுவின் பாதங்கள் பதிந்து நிற்கின்றன...!

மக்தலேனா இயேசுவின்
பாதத்தில் விழுந்து புரண்டு
கண்ணீரால் நனைக்கின்றாள். ..!
அவள் இல்லம் அன்றுதான்
தேவ சபை அந்தஸ்து பெற்றது...!

இல்லத்துக்குள்ளே
இயேசுவின் வருகை நிகழ்ந்துவிட்டது. ..!.

ஓர் உயரிய ஆசனத்தில்
இயேசு பிரான் அமர்கிறார்...!

மக்தலேனா ஒரு கலசம் நிறையப்
பன்னீரும் பரிமணப் பொருள்களும்
கலந்து வைத்த நீர் கொண்டு
அவள் கண்ணீர் நனைத்த
இயேசுவின் பாதங்களைக் கழுவுகிறாள். ..!

சுருள்சருளாகத் திரட்சி பெற்ற
தலை முடிக் கற்றைகளால்
கழுவிய பாதங்களைத் துடைக்கிறாள். ..!

அன்றுதான்
அந்தச் சுருள் முடிக்கு
மணிமுடி சூட்டும் விழா நாள்...!

விருந்து அருந்திய
இயேசு பிரான் விடை பெறுகிறார்...!

அந்தப் பழசாகிப் போன பரிசேயர்களின்
மன மாசுகள் இயேசு பிரானை
வழி மறிக்கின்றன. ..! )

பரிசேயரில் ஒருவர்:---

போதகரே...!
பாவியின் கரம்பட்ட
வஸ்த்துக்களும் பாவங்களே. ..!

நீர் அங்கே அருந்தியது
பாவங்களின் சின்னமே...!

உமது பரிசுத்தம் கூடக்
கரும்புள்ளி பெற்றுவிட்டதே. ..!

தர்மத்தின் முற்றத்தில்
எருக்கம்பூ
பூக்கலாமா. ..?

இயேசு பிரான்:---
பரிசேயர்களே. ..!
அசுத்தங்களை
விரும்பி விரும்பி
நிரப்பிக் கொள்ளாதீர்கள்...!

உங்கள் தானியங்களைப்
பதர்களால் மூடாதீர்கள். ..!

மன சாம்ராஜ்யத்தில்
புதர்களை மண்டச் செய்யாதீர்கள்...!

கெட்ட வார்த்தைகள்
முளைத்துவிட்ட
சதை நாக்குகளைச்
சுத்தப்படுத்துங்கள். ..!

அமைதி
உங்களைத் தழுவிக்கொள்ள
நான் ஆசீர்வதிக்கிறேன்...!

பரிசேயர்:---
அநீதியை
நாங்கள் நிகழ்த்தி விட்டதாக
நினைக்கவில்லை. ..!

இயேசு பிரான்:---
அப்படியா...?
நீதி பற்றி
அவ்வளவு தெளிவு
உங்களுக்கு இருக்கிறதா...?

பாவம் எதுவென்ற
பக்குவத்தை உணர்ந்து விட்டீர்களா?..?

மன்னிப்பு ஒரு அநீதியா. ..?
பரிசுத்தப்படுத்துவது ஓர் பாவமா...?

ஒரு நிறைவை
நிகழ்த்தியது நீதிக்குப் பங்கமா. .?

புரிந்து கொள்ளுங்கள்...!

"ஒரு தங்கக் காசை
ஒருவனும்...
நூறு தங்கக் காசுகளை
மற்றொருவனும்
கடனாக ஒருவனிடம்
பெறுகிறார்கள்...!

கடன் கொடுத்தவன்
இப்படிக் கூறுகிறான்...

"உங்கள் கடன்களை
நான் தடுத்துக் கொண்டேன்...!
நீங்கள் பெற்றவைகளைத்
திருப்பித் தரத் தேவையில்லை...!"

இந்த வாக்குப் பிறந்தவுடன்
அதிகம் நன்றி செலுத்துபவன்
யாராக இருப்பான்"..?

பரிசேயர்:---
இதிலென்ன சந்தேகம்..?
நூறு தங்கக் காசைக் பெற்றவனே
அதிக மகிழ்வையும்
நிறைந்த நன்றியையும்
செலுத்துவான். ..!

இயேசு பிரான்:---
அப்படியா...?
அது தானே
இங்கேயும் நடந்திருக்கிறது...?

மிகுந்த பாவம் செய்தவள்
மன்னிக்கப் பட்டிருக்கிறாள்...!
அனைவரிலும் அவளே
எனக்கு
மகிழ்ச்சியையும் நன்றியையும்
செலுத்துவாள். ..!

மானுடத் தர்மமும்
இறைக்குணத் தன்மையும்
சந்திக்கும் நிமிடங்களைச்
சந்தேகப் படாதீர்கள்...!

நரக நெருப்பிற்கு
உங்களை
விறகுக் கொள்ளாதீர்கள்...!)

( இயேசு பிரான் ஆழ்ந்த அமைதியில்
பரிசேகர்களை விட்டு மெல்ல நகர்கிறார்..!

இந்த நகர்வு அவருக்கு நிம்மதியைத் தருகிறது..!

மக்தலேனா இல்லம் விட்டு வந்த பிரிவு
அந்தப் புனிதருக்கே கொஞ்சம் வேதனை
மூட்டத்தை விளைவிக்கிறது..!

பரிசேயர்கள் சத்தியத்தின் முன்னே
கரைந்து மறைந்து விட்டார்கள்...!

அவர்கள்தாம் காலாவதி ஆகிவிட்ட கரைந்த பிம்பங்கள்...,)

No comments:

Post a Comment