Sunday, August 2, 2015

சௌந்தர்யம்...! - 2



அசுத்த வனங்கள்
எரிந்து பொசுங்கின. ..!

( காலங்கள் நகர் கின்றன. ..!
மக்தலேனா
நான்கு வீதிகள் கூடும்
சந்திப்பில் நிறுத்தப்பட்டிருக்கிறாள். ..!

அவளிடம் இப்போதும்
சௌந்தர்யம் அப்படியே இருக்கிறது...!
ஆனால்
அன்றிருந்த கம்பீரம்...?

காணப்படவில்லை...!
அந்த இடம் வெற்றிடமாகவுமில்லை...!
அறிவு நிரம்பிய
அலட்சியம் தெரிகிறது...!

சௌந்தர்யம்
அவளிடம் வற்றி விடவில்லை...!
அவளைச் சுற்றி மொய்த்துக் கிடந்த
அடிமைகள் இன்றில்லை...!

சௌந்தர்யம்
அவளிடம் விலகிக் கொள்ளவில்லை...!

அன்றிருந்த
அசாத்திய நம்பிக்கையின்
இழை அறுபட்டி ருக்கிறது. ..!

அண்ணாந்து பார்க்கும் சக்தி
மக்தலேனா
வழிகளுக்குள் புதையுண்டிருக்கிறது. ..!

சற்றே
குனிந்து நிற்கிறாள்...!

வெளிச்சம்
நிழலுக்குக் கீழ் நிற்கிறது...!
ஆனாலும் பதற்றமில்லை. ..!

ஓர் பக்குவம்
அவளுக்குள் இருந்து
விளம்பரப்படுகிறது...!

ஆம்..
ஓர் சௌந்தர்யம்
வேசி என்ற குற்றச்சாட்டில்
தண்டனைக்குத் தயாராகிவிட்டது...!

அப்போது கூட
தன்னை உணர்ந்த ஒரு ஞானமுதிர்ச்சி...!

மக்தலேனா
வெளிப்புறத்தில் தவழுகிறது. ..!

மரணம்...!அவமானம்...!
அவளை ஒரு போதும்
அச்சுறுத்தவே முடியாது...!

பாடம் படித்த
அனுபவத்தின் முன்னே
பயம், பதற்றம் போன்றவை
அடிமையாகிப் போகின்றன. ..!

ஊர் மக்களின்
சொல்லும், தூஷணையும்
கல் வீசிக் கொல்ல
எத்தனிக்கும் ஆக்ரோஷமும்
அவளை
அசைத்து விடவில்லை...!

அவள்
எப்பொழும் படிப்பினைகளை
அங்கீகரித்துக் கொள்கிறாள். ..!

அன்றைய சௌந்தர்யம்
மீண்டும் நிமிர்ந்து நின்றது...!

இன்றையப் படிப்பினை
குனிந்து கொண்டது...!
மாற்றம் இவ்வளவே...!

கல் வீசிக் கொல்லும் தண்டனை
நிறைவேற்றப்பட தயாராகி விட்டது...!

மக்களை நோக்கி
மக்தலேனா கையசைக்கின்றாள்...!

அப்போதும்
மந்திர அசைவுக்குக் கட்டுப்பட்டு
மக்கள் கூட்டம் ஸ்தம்பிக்கிறது. ..!

ஓர் இலை அசைவுகூட இல்லை...!

இப்போதும்
மக்தலேனாவே ஆணையிடுகிறாள். ..!
மக்கள் திரள் கட்டப்படுகிறது. ..!
அருகே நிற்கும் மார்த்தாளைப் அழைக்கிறாள்...!
பேசுகிறாள்...! )

மக்தலேனா:--
மார்த்தாளே. ..
ஏன் உன் அங்கங்களில்
இத்தனை நடுக்கம்...?

நீ...நடுங்கக் கூடாது. ..!

இந்த மக்தலேனா
மிதித்து நடந்த
பாதச் சுவட்டில் கூட--ஒரு
பதற்றத்தைப் பார்க்க முடியாது...!

மார்த்தாள்...! நீ என்னிலே
பதிந்து கிடக்கும்
ஓர் ஜீவத் துணுக்கு...!

நடுக்கத்தை உடனே நிறுத்து...!
உன் நடுக்கம்
என் நடுக்கத்திற்குச் சமம்..!
மக்தலேனா ஒரு தருணத்திலும்
நடுங்கவே மாட்டாள்...!

மரணம்...

அப்படி ஒன்றும்
அச்சப்பட வேண்டிய
கொடுமை யல்ல. ..!

அது ஒரு திராட்சை ரசம்...!
அதைப் பருகாத
மானுட இதழ்கள் கிடையாது...!

அந்த இறுதித் திரவம்
என் கரங்களில்
இப்போது தரப்பட்டிருக்கிறது...!
மார்த்தாள்! அச்சம் வேண்டாம்...!

மார்த்தாள்:---( தேம்பிக் குலுங்கி மெலிதான ஓசையில் )

மக்தலேனா நீ பேசிவிடு. ..!
உன் பேச்சில்
முரண்பாடு இருந்தாலும்
நிச்சயம் அர்த்தமிருக்கும்...!

மக்தலேனா:---

மார்த்தாள்!

சரியாகச் சொன்னாய்...!
கேள்...!

நீ மட்டுமல்ல...!
ஏ! ஜனத்திரளே. ..!
நீங்களும் கேளுங்கள்...!

மக்தலேனா
அர்த்தத்தோடுதான் பேசுவாள்...!

வெறும் பேச்சு
வீணர்களுக்கு உரியது...!
எனக்கது பொருந்தாது. ..!

கற்களை வீசி
நீங்கள் காயப்படுத்தப் போவது
ஒரு பெண்ணையும். ..!
இந்த மக்தலேனாவையு மல்ல. ..!

உலகுக்கு வந்து சேர்ந்த
ஓர் சௌந்தர்யத்தை. ..
ரத்த விளாராகக்
கிழித்தெறியப் போகின்றீர்கள். ..!

ஒர் பாவத்தை
அழிக்கப் போவதாகப்
பாசாங்கு செய்கிறீர்கள்...!
( மார்த்தாளை நோக்கி )
மார்த்தாள்!

மக்தலேனா வார்த்தை மாறாதவள்...!
அன்று சொன்னேன்
"நான் நானேயல்ல
சொந்தர்யமே நான்"என்று...!

இந்த
இறுதிப் பொழுதில் நின்று
இப்போதும் சொல்கிறேன்
"நான் சௌந்தர்யமேதான்"...!

மார்த்தாள்:---
போதும்...மக்தலேனா, போதும்...!

இந்த
மனிதர்கள் உன்மேல் வீசும்
கற்களின் வேதனை
உனக்குக் குறைவாக இருக்கலாம்...!

ஆனால்
உன் வார்த்தை வீச்சுகளை
இந்த மானிடத் தூசுகள்
தாங்க மாட்டார்கள்...!

இந்த இறுதி வேளையிலாவது
மனிதர்களைக்
காயப்படுத்துவதை நிறுத்திவிடு. ..!
போதும்! மக்தலேனா போதும்...!

மக்தலேனா:---
என்னைப் பிரயோகிப்பதை
நான் எப்போதும் நிறுத்துவதில்லை...!
இதுதான் இயற்கை...!
இதை மீற
என்னால் கூட இயலாது...!
ஆனால்...ஓர் திருத்தம்...!

"சௌந்தர்யம். ..
அடிமைப்படுத்த வந்த
ஓர் வசியம்"
இப்படி
அன்று கருதினேனே
அதுதான் தவறு...!

அது
நானே என் மீது நடத்திக் கொண்ட
கல் அடிச் சம்பவம். ..!

இன்று நடக்கும் கல்லடி
என்னை ஒருபோதும்
வேதனைப் படுத்தது. ..!

மார்த்தாள்!
துயரத்தைப் பார்த்தாயா..?
என்னை நானே
தண்டித்த பின்பே
விழித்துக் கொண்டு
இவர்கள் தண்டிக்க வருகிறார்கள்...!

இதுவா என் தண்டனை...?
இல்லை...இல்லை. ..!
தண்டணைக்கு அல்லவா தண்டணை...!

சௌந்தர்யம்
ஆள வந்த ஒன்றாக மட்டுமில்லை...!
அடிமைப் படுத்த வந்த
கம்பீரமாக மட்டுமில்லை...!

யாருக்கோ உரிமைப்பட வந்த
ஓர் வசீகர மந்தகாசமடி. ..!
அதுவொரு
வசீகர மந்தகாசமடி...!

உரிமைக்கு உட்படும்
எந்தப் பொருளும்
பொதுமையாகும் போது
எழுந்துவிடுமே
ஓர் அடக்குமுறை...!
அதுதான் இப்போதும்
நடந்து கொண்டிருக்கிறது...!

சௌந்தர்யத்தைத்
தனியுடைமைப் படுத்த
வந்தவர்கள்
சக்தி இழந்து விட்டார்கள்...!

அவர்கள்
அடைய முடியாத பொருளை
அழிக்காமல் விடுவார்களா...?
அது தானடி
இங்கே நடந்து கொண்டிருக்கிறது...!

அனுபவிக்க
வாய்ப்பிழந்தவர்களின்
ஆக்ரோஷம்...!
சௌந்தர்யத்தை
ரணப்படுத்தத் துவங்கிவிட்டது...!

ஆம்...
மீண்டும் பிரகடனப் படுத்தகிறேன்...!
ஆளவந்த ஆட்சியல்ல நான். ..!
உரிமைப்பட வந்த
ஒரு மகோனதமே நான்...!

, ஜனங்களே...!
உங்கள் கற்கள்
என்மேல் வந்து குவியட்டும். ..!

வீசுங்கள்...!விடாது வீசுங்கள்...!
மக்தலேனா
அஞ்சவில்லை...!
அழவில்லை...!
மரணத்தின் முன்பாக
நடுங்கவுமில்லை. ..!

இம்...! வீசுங்கள்...!
இம்...விடாது வீசுங்கள்...!

( மக்கள் திரள் மக்தலேனா மீது கற்களை வீசுககின்றது...
மேகச் சரம் மீது கையளவுக் கல்மலை சாடுகின்றன...
ஆம்.. இப்போதும் அவள் ஆணையே சட்டமாக்கப் படுகிறது. ..

அதோ. ..தூரத்தில்...ஒரு பிரகாசம்...
சில மனிதர்களுடன் நடந்து வருகிறது...!
கல்லெறி நடத்தப்படும் அந்த நான்கு முனைச் சந்தியில்...
இதோ அநதப் பிரகாசம் வந்து நிறைகிறது. ..!

ஒரு ஜீவன் மீது, நூறு ஜீவன்கள் நடத்திக் கொண்டிருக்கும்
கொலை வெறிச் செயலைக் கண்டு கூசுகிறது...!
பிரகாசமே கூசுகிறது...!

அந்தப் பிரகாசத்தின்
வார்த்தை ஈட்டிகள்
இப்போது
சரமாரியாகப் பாய்கின்றன. ..!
சாந்தமான பிரகாசம்
தவிர்க்க இயலாமல்
வார்த்தைகளால்
ஆயுதப் பிரயோகம் நடத்துகின்றது....! )

இயேசுபிரான்:---

, ஜனங்களே...! நிறுத்துங்கள்...!
இதுவென்ன நீசச் செயல்...?

ஒற்றை ஜீவன்மீது
இத்தனைத் தக்குதல்களா...?
( இயேசுபிரான் வார்த்தை முன் மக்கள திரள் கட்டுப்பட்டு நிற்கிறது...!)

கூட்டத்தில்
ஒருவன் :---

மகானே. ..!
ஒரு மாபாவத்தைத்
தண்டித்துக் கொண்டிருக்கிறோம்...!

ஒரு தகாத தவறுக்கு
ராஜ தண்டனை நடக்கிறது...!

இவள்
கேவலத்தில் புழுத்த வேசை...!
சாகடிக்கப்பட வேண்டிய ஜந்து...!

மகானே...!
 உங்கள் ஆசிர்வாதம்
எங்களுக்கு என்றும் இருக்கட்டும்...!

இயேசு பிரான் :---
ஓ...அப்படியா...?
என் ஆசிர்வாதம்
எப்பொழுதுமே
ஜனங்களுக்காகக் காத்திருக்கிறது...!

பாவம் என்றால்
இன்னதென்று
உங்களில் தெரிந்தவர் யார்...?
பாவம்...!

தான் மட்டுமே
தனித்துத் தோன்றிவிட
முடியுமா.....?
தனித்திருப்பது
ஞானத்தின் திறவுகோல் அல்லவா..?

தவறு மட்டுமென்ன
தானே தோன்றிவிடும் ஒன்றா...?

பாவத்திற்குப்
பலருடைய
பங்களிப்பு இருக்க வேண்டும்...!

இவள்
இந்த ஊரைச் சேர்ந்தவள் தானே...?
இவளின்
பாவத்திற்கும் தவறுக்கும்
இந்த ஊரில்
எவருக்குமே பங்கில்லையா. ..?

அந்தப்
பாவம்
வெளியூர்க்காரர்களால்
நடத்தப்பட்ட
தேச விரோதச் செயலா...?

உங்கள் தண்டனை
அர்த்தங்களை இழந்துவிட்ட அநாகரீகம்...!

இதுவென்ன அக்கிரமம்...!
பாவத்தைச் சுமப்பவளுக்கு மட்டுமே
ஜீவ பறிப்புத் தண்டனை...!

பாவத்தை உற்பத்திச் செய்யப்
பங்களித்தவர்களுககு
ஏனில்லை தண்டனை...!

பாவத்தை ஒழிக்கப்
பாவிகளுக்கு என்ன அருகதை...?

பாவிகள் திருத்தம் பெறலாம். ..!
பாவங்கள் மன்னிக்கப்படலாம். ..!

அதையும் மீறிப்
பாவத்தை ஒழிப்பதென்றால்
பாவத்தின் நிழல்கூடத் தொடாத
ஒரு ஜீவனுக்குத்தான்
அந்த முழு உரிமை உண்டு...!

தண்டிக்கும் தகுதி
தனக்கிருக்கிறதா என்கிற
வேள்விப் பரிசோதனை
வேண்டாமா...?

நீங்களே தண்டனையை
நடத்துங்கள்...!

பாவ நிழலே பட்டறியாத
கரங்களிலிருந்து
கற்கள் புறப்படட்டும். ..!

இந்தப்
பாவி மகள் மீது
மரணத்தை விளைவிக்கட்டும். ..!

பாவம்
தண்டிக்கப்படலாம். ..!
மன்னிக்கவும்படலாம். ..!
நீங்கள்
எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்...!

ஆனால்
என் சட்ட வரம்புகளை மட்டும்
மீறாதீர்கள்...!

( அங்கே ஒரே நிசப்தம்.
இயேசு பிரான் அனைவரையும் உறுத்துப் பார்க்கிறார்.
அந்தப் பார்வைநெருப்பில் பட்டுக் கருகி விடாமல்
மக்கள் திரள் பதறிப் பறக்கின்றது.

மக்தலேனா விழிகளைத் தரையில் பதித்துச் சலனம் இல்லாமல்
ஒரு சிலையைப்போல் நிற்கிறாள்.

அவளின் சௌந்தர்யங் களிலிருந்து ரத்தக் கசிவுகள் தாறுமாறாக
வழிந்து கொட்டுகின்றன.!

மார்த்தாள் நடுக்கம் மாறாமல் இயேசு பிரானையே கவனித்து
நிற்கிறாள்.

வேறு எதுவுமே அங்கு நடந்து விடவில்லை...!

சற்றுத் தாமதித்து மக்தலேனா மகானை நிமிர்ந்து பார்க்கிறாள்.!
அவள் விழிகள் நனைந்து தளும்புகின்றன..!

அவளிடம் கடுமையான கற்கள் உருவாக்க முயன்று தோற்றுப்
போன கண்ணீர் துளிகளை ஒரு பூப் பிரகாசம் இப்போது
உருவாக்கி விட்டது...!

மெதுவாக...ரொம்பவும் மெதுவாக...

இயேசுவின் முன்னே வந்து ரத்தக் கோலத்திலேயே
மண்டியிடுகிறாள்...!

அவளின் நடுங்கிய கரங்கள் பிரகாசத்தின் பாதத்தில்
மெல்ல மெல்லப் பதிகின்றன. ..!

இயேசு பிரான் வலது கரம், மணடியிட்ட ஜீவன் தலையில்
ஒரு ஆறுதலாக வந்து அமர்கிறது? ..!

மக்தலேனா உடல் முழுவதும் ஓர் அதிர்வு...
வான மின்னல் அவளுக்குள் இறங்கி அசுத்த வனங்களை
எரித்துப் பொசுக்கும் ஓர் உத்வேகம்...! )

மக்தலேனா :---
போதகரே. ..! பணிகிறேன். ..! ரட்சிப்புத் தாரும்...!

மகா அசுத்தம் சமுத்திரத்தில்
கரைந்து விட்டது...!

நெருப்புக்கு வாழ்வு உள்ளவரைக்
குப்பைகளுக்குப்
பூரண மரண விதி
குறிக்கப்பட்டுதானே
இருக்கும்...!

போதகரே...!நீர் மட்டுமே
தண்டிக்கத் தகுந்த
மகா ஞானி...!

உமது மன்னிப்பே
மாபெரும் தண்டனை...!
போதகரே...! ரட்சிப்புத் தாரும்...,

இயேசு பிரான் :---
மகளே...! எழு...
திடகாத்திரத்தோடு
உன் பாதங்களைப்
பதித்து நில்...!

திருத்தம்பெற்ற ஜீவன்
தேவ சபையில
வரையப்பட்ட சித்திரம்...!
இன்று முதல்
நீ தேவ சபைச் சித்திரம்...!

உனக்கு
வழங்கப்பட்டிருக்கும்
வாழ்க்கை நாள்வரை
நிமிர்ந்து வாழ்ந்து வா...!

மக்தலேனா :---
போதகரே...!
அசுத்தச் சுவாசம்
இனி என்னை
அணுகாமல்
ஆசீர்வாதம் தாரும்...!

இயேசு பிரான் :---
மகளே...!
இன்னும் மடமை பேசாதே...!

பரிசுத்தம் மாணிக்கம் போல...
அந்த மாணிக்கம்
பொருத்தப்படாத
ஜீவன்களே இல்லை...!

உனக்குள்ளும்
அந்த மாணிக்கம் பிரகாசிக்கிறது
நீயே. ..

குப்பைகளைக் கொட்டி
மூடிக் கொண்டாய்...!

நான் ஒரு புதிய பரிசுத்தத்தை
உனக்குள் செலுத்த வில்லை...!

குப்பைகளை மட்டும்
கூட்டிப் பெருக்கி
அனலுக்குத் தீனியாக்கி விட்டேன்...!
இதுவே என் பணி...!

உன் மாணிக்கமே
இப்போது
உனக்குள் பிரகாசிக்கிறது...!

இந்த மாணிக்கம்
யாசக மாணிக்கமல்ல. ..!
உன் சுய மாணிக்கம்...!

அதை நீயே
பாதுகாத்துக் கொள். ..!
அதைப் பாதுகாக்க
எனக்குச் சக்தி கிடையாது...!
இதுவே என் ஆசீர்வாதம்...!
( இயேசு பிரான் ஒரு மின்னலைப் போல
நழுவி நழுவி நகர்கிறார்...

மக்தலேனாவும் மார்த்தாளும் பிரகாசம் சென்று கொண்டிருக்கும்
பரிசுத்தத் திசையைப் பின்பற்றி ஊருக்குள் பிரவேசிக்கிறார்கள். ..

தேகத்தை தெரிந்தவர்களுக்குத்
தண்டிக்கத்தான் தெரியும்....!

ஜீவனைத் தரிசிப்பவர்களுக்கே
மன்னிக்கத் தெரியும்....!

இன்று மக்தலேனா
ஓர் மதிப்பு மிக்க ஜீவன்...!)

No comments:

Post a Comment