Monday, June 1, 2015

கவிஞர் பொதிகை ஹமீது (...4...)



கூடாதது, நடந்துவிட்டது...!


சாகுல் ஹமீது சாஹிபின் பிந்திய காலக் கட்ட அனுபவங்கள் அவருக்குச் சில போதனைகளை வழங்கி இருந்தது. அதை நடைமுறைப் படுத்தத் தீர்மானித்து விட்டார்.

சாகுல் ஹமீது சாஹிபைப் பொறுத்தவரை சில முடிவுகளை அவரே முடிவுகட்டி நடைமுறைப் படுத்தி விடுவார்.எவர் எதிர் கருத்துக் கூறினாலும் தன் செவிகளுக்கு வெளியே அக்கருத்துகளை நிறுத்தி விடுவார்.

அப்படித்தான் இதுவும் நிகழ்ந்து விட்டது.

முஸ்லிம் லீகிற்கு இன்னும் கூடுதலாக மனித சக்தி தேவைப்படுகிறது.
அதனை உடனடியாகப் பெற்றாக வேண்டும். சமுதாய நலம் விரும்பிகள் முஸ்லிம் இளைஞர்களில் ஏராளம் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் லீகின் அரசியலை விரும்பாதவர்களாகவும், வேற்று அரசியல் இயக்கத் தீவிர ஆதரவாளராகவும் திகழ்கிறார்கள்.

அவர்களையும் சமுகப் பணியில் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு என்னதான் வழி?

அந்த இளைஞர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கங்களில் இருக்கட்டும். அதே நேரம் சமூகப் பணிகளில் வேறொரு அமைப்பிலும்,
உறுப்பினராக இருந்து லீக்குடன் இணைந்து சமுதாயப் பணியில் செயல் படட்டும். அதற்கு "இஸ்லாமியர் பேரவை"எனப் பெயரிட்டுக் கொள்ளுவோம். 

இச் சங்கத்தை லீகின் கிளைச்சங்கமாக அமைத்துக் கொள்ளுவோம் என்றெல்லாம் திட்டமிட்டார். செயலிலும் இறங்கிவிட்டார்.

அதாவது ஒருவர், இரட்டை உறுப்பினராகச் செயல்படவேண்டும். இரட்டை உறுப்பினர், லீகின் அடிப்படைச் சட்ட விதிக்கு மாறானவராகி விடுவார்.

எனவே இது ஏற்புடையதே இல்லை.

லீகிற்குள் இருந்து கொண்டு ஒரு போதும் இதைச்செயல் படுத்தவே முடியாது.

லீகின் கிளையமைப்பில் வேறொரு கட்சி உறுப்பினர் சேர முடியுமானால், விரைவில் லீக் துண்டு துண்டாக வாய்ப்பாகி விடும்.

அதனால் இதுபற்றி லீக் செயற்குழு கூடி தீவிரமாக ஆலோசிப்போம் என்ற கருத்தாடலை சாகுல் ஹமீது சாஹிபிடம் முன்வைத்தோம்.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சாகுல் ஹமீது சாஹிப் அதி வேகமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்.

சென்னை ராயபுரம் லீக் பிரைமறிக்கு, மாநிலப் பொருளாளரான அவர்
கடிதம் அனுப்பினார். "ஆலோசனைக் கூட்டம் ஒன்றைப் பிரைமறி உடனே கூட்ட வேண்டும்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

உடனடியாகச் சென்னை மாவட்டச் செயற்குழு கூட்டப்பட்டது. அப்போது வடசென்னை மாவட்டச் செயலாளராக. இருந்தவன் நான்தான்.

மாநிலப்பொருளாளர், இப்படி ஒரு உத்திரவுக் கடிதம் பிரைமறிக்கு அனுப்பியது வருத்தம் தருவதாகவும், மேலும் இத்தகவலை மாநிலச் செயற்குழுவை கூட்டிப் பொருளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்வதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாநிலத்துக்கு
அனுப்பி வைத்தோம்.

இது நடந்த அந்த வாரமே சாகுல் ஹமீது சாஹிப், சென்னை ராயபுரத்தில் மூத்த லீகர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.

மாவட்ட லீகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாவட்டத் தலைவர் S.A.காஜா முஹைதீன் M.P. கையொப்பத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டது. அக்கூட்டத்தில் லீகர்களாக எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையில் எவ்வளவோ சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சாகுல் ஹமீது சாஹிபின் நெருக்கத் தோழரும் உறவுமுறைத் தம்பியுமான நெல்லை மாவட்டச் செயலாளருமான சாச்சா கோதர்மைதீன் சாஹிப், எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். பயனில்லை.

மாவட்ட லீக் பெரியவர் கடையநல்லூர் அப்துல் கறீம் அண்ணன், கடையநல்லூர் ஹனீபா வாப்பா, சாகுல் ஹமீது சாஹிபின் மிக நெருக்கமான தென்காசி காயிதெ மில்லத் சொற்பயிற்சி மன்றத்தார், ஆடுதுறை பாப்பா நன்னா, ஆடிட்டர் கனீ நன்னா, கவிஞர் தா.காசிம், அ.ஹிலால் முஸ்தபா, கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், கனி சிஷ்தி சாஹிப், தாஜ் ஷரீப் அண்ணன், இசைமுரசு நாகூர் ஹனீபா அண்ணன், இன்னும் இன்னும் எத்தனையோ பேர்கள் முயன்றனர்.
 
மீண்டும் மீண்டும் முயன்றனர் பலனே தரவில்லை.

முடிவாக மாநில பொதுக் குழு கூடியது. அன்றே மாநில செயற்குழுவும்
கூடியது. நாங்களெல்லாம் கூடினோம். ஆனாலும் சாதனையாளராகத்
திகழ்ந்த சாகுல் ஹமீது சாஹிபை தாய்ச் சபையில் இருந்து ஆறு ஆண்டுகள் விலக்கி வைத்தோம்.

சாகுல் ஹமீது சாஹிபை விலக்கிய கூட்டம் விளார் பாப்பா பண்ணையில்தான் நடந்தது. கூட்டத் தலைவர் சாகுல் ஹமீது சாஹிபின்
அண்ணன் A.K.ரிபாய் சாஹிப். தீர்மானத்தை வாசித்தவர் M.A.லத்தீப் சாஹிப், சாகுல் ஹமீது சாஹிபின் சென்னைக் கூட்டத்தின் நிகழ்வை பதிவு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் அ.ஹிலால் முஸ்தபா, தா.காசிம், இஜட். ஜபருல்லாஹ்.

மதுரை அக்பர் அலி அண்ணனுடன் இணைந்த நிலையில் சாகுல் ஹமீது சாஹிப் "இஸ்லாமியப் பேரவை" என்ற பெயரில் அரசியல் அல்லாத ஒரு அமைப்பை உருவாக்கினார். அது சில காலம்தான் செயல்பட்டது.

கடைசி காலம்வரை, சாகுல் ஹமீது சாஹிப் வேறு எந்தக் கட்சிக்கும் போக வில்லை. தனி அரசியல் கட்சியும் தொடங்கவில்லை.

நெல்லையில் "இஸ்லாமியச் சகோதரத்துவக் குரல்" என்ற மாதயிதழ் நடத்தி வந்தார்.

இத் தொடர் நான் எழுதும் போது, கிளியனூர் கவிஞர் அஜீஸ் குறிப்பிட்டுக் கேட்டிருந்தார். "பொதிகை கவிஞர் நடையை M.M.P. அண்ணன் மத யானை நடை எனக் குறிப்பிடுவார். ஏன் அதைக் குறிப்பிடவில்லை? என்று.

காரணத்தோடுதான் அதை ஒத்திவைத்து, இப்போது கூறப்போகிறேன்.

அந்த மதயானை மந்தகாச நடை திடீரென்று ஒருநாள் காலையில் நடை மறந்தது...

ஆம் பக்கவாதத்தில் படுத்துவிட்டது.

இதன் பின் அவர்கள் நடத்திய மாதயிதழை என்னை ஆசிரியராகக்
கொண்டு, ஹைகிரவுண்ட் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவர் ந.மு.ஜமால் முஹமது சாஹிப் நடத்தி வந்தார். சில ஆண்டு பத்திரிகை ஆசிரியனாக இருந்து விட்டு நான் விலகிவிட்டேன்.

சாகுல் ஹமீது சாஹிப் பற்றி இன்னும் பலவற்றை இறைவனுக்காக நான் எழுதாமல் மறைத்து விட்டேன். சாகுல் ஹமீது சாஹிப் பற்றி ஒரே ஒரு சொல்...

சாகுல் ஹமீது சாஹிப், சிலபல காரணங்களுக்காகப் பலி கொடுக்கப்பட்டார்கள்.

கசப்பான உண்மைகள் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படாமலே போய்த் தொலையட்டும். இதற்கு மேல் வேண்டாம்.

சாகுல் ஹமீது சாஹிப் படுக்கையில் படுத்து விட்டார்கள். நான் என் மனைவி, என் இரு குழந்தையுடன் பார்க்கச் சென்றேன்.

என் மனைவி கண் கலங்கினாள் அவளைப் பார்த்துச் சொன்னார்கள்...

"ஏன் அழுகிறாய்? நான் என் இறைவனை சந்திக்கும் போது எந்தப் பயமும் அற்றவனாகாச் சந்திக்க வேண்டும். என் செயல்களில் நான் நிம்மதி அடைந்தவனாகச் சந்திக்க வேண்டும். நான் இப்படித்தான் துஆ கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீயும் இப்படியே துஆக் கேள். அழாதே" என்று கூறினார்கள்.

ஒரு சகாப்தம் காணமலேயே போய்விட்டது!

No comments:

Post a Comment