Sunday, July 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்...! -3



அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கூட்டம் 1947--ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் கூட்டப் பட்டது. இந்திய அரசு அனுமதி பெற்று காயிதெ மில்லத்தும் மற்றும் சிலரும் கராச்சிக்குப் போய் அப் பொதுக் குழுவில் கலந்து கொண்டார்கள். தமிழ் நாட்டில் இருந்து லெப்பைக் குடிக்காடு அப்துல் காதர் ஜமாலியும் காயிதெ மில்லத்துடன் சென்றிருந்தார்.
 
அந்த நிகழ்வில் ஜின்னா சாஹிப், காயிதெ மில்லத்திடம் "இந்திய முஸ்லிம்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், எங்களிடம் கேளுங்கள். நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

உடனடியாகக் காயிதெ மில்லத், "இந்த எண்ணத்தோடு எம்மை நீங்கள் அழைத்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நேற்று வரை நாம் ஒரே தேசத்தவர்கள். இன்று முதல் நாம் சட்ட ரீதியாக வெவ்வேறு தேசத்தவர்கள். ஆனால் அண்டை தேசத்தவர்கள்.
 
எங்கள் தேச இஸ்லாமியர்களின் தேவைகளை, உங்கள் தேசத்தவர்களிடம் நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? எங்கள் தேசத்தவர்களிடம்தான் நாங்கள் கேட்டுப் பெற உரிமை பெற்றிருக்கிறோம்.
 
உங்கள் தேச இந்துச் சிறு பான்மையோருக்கு தேச உரிமைகளையும், பாது காப்புகளையும் நீங்கள் உறுதி செய்யுங்கள். அதுதான் எங்களுக்கும் நல்லதாக இருக்கும் "எனப் பதில் சொன்னார்.
 
ஜின்னா சாஹிப் தலைமையில் இருந்த அகில இந்திய முஸ்லிம் லீக் இங்கு இருந்து போது ,அதற்கு அன்றைய நிலையில் ஹபீப் பாங்கில்ரூபாய் 40 லட்சம் ரொக்கம் இருப்பு இருந்தது.
 
அந்த தொகையோடு ஜின்னா சாஹிப் பாக்கிஸ்தான் சென்று விட்டார்.
பின்னர், "அத்தொகையில் 17 லட்சம் ரூபாயை இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீகின் பங்காக கொடுக்கக் கராச்சிப் பொதுக் குழு முன் வந்தது.
 
கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலச்சாரியார், காயிதெ மில்லத்திடம் இது பற்றிக் குறிப்பிட்டார், "ஜின்னா சாஹிப் சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த விதத் தடையுமில்லை" என்றார், இராஜ கோபாலச்சாரியார்.
 
காயிதெ மில்லத்தின் பதில் ஆணித்தரமாக வந்தது. " Mr. இராஜ கோபாலச்சாரியார் அவர்களே! நம் அண்டைய அந்நிய தேசத்தினுடைய
எந்த ஒரு தொகையையும் பெற்றுக் கொள்ள, இந்திய இஸ்லாமியருக்கு எந்தவித உரிமையும் நியாயமும் இல்லை. அந்நியர்களிடம் பொருள் உதவி பெற்று இந்திய இஸ்லாமியர்கள் தங்களைக் கட்டமைக்க வேண்டியதும் இல்லை.
 
நாம் அனைவரும் இந்தியர்கள் நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வோம்" என்றார் காயிதெ மில்லத்.
 
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்ட இந்தியர் அரசியல் இயக்கம்தான் என்பதை நிரூபணம் செய்தார் காயிதெ மில்லத்.

அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்களின் உரிமைகளை இந்தியப் பாராளு மன்றத்தில் கோரிக்கை வைத்துப் பெற்று அதை உறுதியும் செய்தார், காயிதெ மில்லத்.

மராட்டியம் பகுதியைச் சேர்ந்த சட்ட மேதை முஹமது அலி சாக்ளா, காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் மத்திய அரசின் சட்ட அமைச்சராக
இருந்தார். அப்போது பண்டித நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சர் முஹமதலி அலி கரீம் சாக்ளா ஒரு சட்ட முன் வடிவம் கொண்டு வந்தார்.

" இந்தியாவில் இறந்து போனவர்களின் பிரேதங்கள் இனி புதைக்கப்படக் கூடாது. அவை எரிக்கப்படத்தான் வேண்டும். அதுதான் விஞ்ஞான பூர்வமானது" "என்பதுதான் அந்தச் சட்ட முன்வடிவம்.
 
இதற்கு இந்தியப் பாராளு மன்றத்தில் காயிதெ மில்லத் ஒருவர்தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு நேர் எதிரானது, இப்போது அறிமுகப் படுத்தும் சட்டம் முன்வடிவம். இந்திய மக்கள் கடைபிடிக்கும் மதங்களுக்கு மார்க்கங்களுக்கும் இது முற்றிலும் முரண்பட்டது.
 
இந்துப் பெருங்குடி மக்களிலும் சில பிரிவினர் தங்கள் பிரேதத்தை எரிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
 
கிருத்துவ மக்களும் இதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இஸ்லாமியர்கள் ஒருபோதும் இதை அங்கீகரித்துக் கொள்ளவே மாட்டார்கள். அவரவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கும், கடைபிடித்துக் கொண்டிருக்கும் தத்துவங்களுக்குப் பூரணமாக முரண் பட்டிருக்கிறது.

இந்தச் சட்ட முன்வடிவு அறிமுகக் கட்டத்திலேயே திரும்பப் பெறப்பட வேண்டும. விஞ்ஞானமும் புதைப்பதே சுகாதார பூர்வமானது என்கிறது"
எனவே இந்த சட்ட வடிவைத் திரும்பப் பெறுங்கள்" எனக் காயிதெ மில்லத் வாதிட்டார். இந்தச் சட்ட முன்வடிவு அறிமுகக் கட்டத்திலேயே நேரு அரசால் திரும்பப் பெறப்பட்டது.

முஹமது அலி கரீம் சாக்ளா விடவில்லை தொடர்ந்து பேசினார். "Mr. முஹம்மது இஸ்மாயில் சாஹிபும் அவரைச் சார்ந்தவர்களும் வேண்டுமானால், அவர்கள் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் உடலை மண்ணிற்குள் புதைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொள்ளட்டும்.

முஹமதலி அலி கரீம் சாக்ளா வாகிய என் பிரேதத்தைக் கண்டிப்பாக எரிக்கத்தான் வேண்டும் என இந்த அவையில் பதிவு செய்து கொள்கிறேன்" எனச் சாக்ளா அறிவித்தார்.

காயிதெ மில்லத்தும், "சட்ட அமைச்சரின் இந்த மன்றத்து இந்தக்
கோரிக்கையை இறைவன் நிறைவேற்றித் தரப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
பிந்தையக் காலத்தில் அதுதான் நடந்தது.

காங்கிரஸில் பதிவிகளைச் சுகித்து விட்டு, பின்னர் அதிலிருந்து விலகி வெளியேறி "ஜனசங்கம்"( இந்நாள் பா. . . ) சட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினராக மாறிப் போனார்.

சில ஆண்டுகள் சென்ற பின் ஒருநாள் முன்னாள் பம்பாய் நகர் கிளப் ஒன்றில் சீட்டாடிக் கொண்டிருந்தார். நடுவில் எழுந்து சிறுநீர் கழிக்கக் கழிப்பறை
சென்றார். அங்கேயே மாரடைப்பால் மரணத்தைச் சந்தித்தார்.

பாராளு மன்றத்தில் அவர் ஏற்கனவே வைத்திருந்த வேண்டுகோள்படி
எரியூட்டப் பட்டார்.

சென்னை சட்டசபையில் மீண்டும் மீண்டும் மீண்டும் காயிதெ மில்லத் போராடி நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் இந்தச் சுரங்கத்தை
ஆந்திராவுக்குக் கொண்டு செல்லக் கடும் முயற்சி செய்தது. காங்கிரஸ்
இயக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து காமராஜர் போன்ற  
பெருந்தலைவர்களும் சற்று அமைதி காத்தனர்.

காயிதெ மில்லத் மட்டும் இந்தத் திட்டத்தை வலியுறுத்தி வந்தார். தென் பகுதி இந்தியாவில் நெய்வேலி மிகச் சிறந்த பகுதி என்பதைப் பல நிபுணர் குழுக்களின் அறிக்கை பெற்றுச் சட்ட மன்றத்தில் விடாது போராடிப் பெற்றார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய இஸ்லாமியரின் உரிமைகளைப் பாராளு மன்றத்தில் போராடி பெற்றுத் தந்திருக்கிறது. அதுவும் இந்திய அரசியல் சட்ட விதிகளின் படிப் பெற்றுத் தந்திருக்கிறது.

அதே வேளையில் ஒட்டு மொத்த இந்தியர்களின் உரிமைக்காகவும் பாராளு மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் போராடி இருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் ஒரு முன்மாதிரி நிரூபணங்கள்.

(காயிதெ மில்லத் காலத்திற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் இந்த முன் மாதிரி அடையாளங்கள் எங்கே போயின?
 
அடையாளங்கள் கரைந்து போன காரணங்கள் எங்கே மறைந்து கிடக்கின்றன என்பதை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்ப்போம்.
அடுத்துத் தொடர்வோம்.)

No comments:

Post a Comment