Friday, July 31, 2015

மரணம்... பெருமையின் தருணம்...!



டாக்டர். அப்துல் கலாம் இன்று இல்லை.

அதனாலென்ன? உலகத்திற்கு ஒரு அஸ்தமனமும் வந்து விடப்போவதில்லை. என்றாலும் வேதனை நம் நெஞ்சங்களில் விஸ்வரூபம் எடுக்கத்தான் செய்கின்றன.

கலாம் எங்கு சென்றாலும் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தலை நிறையச் சுமந்து கொண்டுதான் சென்றார். அவர் தமிழர்.

அன்னை வயிற்றிலிருநது வெளிவந்த பின்னர், அவர் பேசத் துவங்கியது தமிழ்தான்.

ஒருமித்த விஞ்ஞானியாகப் பரிணமித்த பின்னாலும்கூட கலாம் வள்ளுவனையும், கணியன் பூங்குன்றனையும் இரு கரங்களிலும் பற்றிக் கொண்டுதான் நடந்தார்.

ஆம். அவர் தமிழன். இந்தியன். இஸ்லாமியன். இப்படி ஒரு வாழ்வு முறையைத் தனதாக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு விழாவில் குத்து விளக்கேற்றுகிறார். அப்போது இப்படிச் சொல்கிறார், "குத்து விளக்கு இந்து மதத்தின் அடையாளம். அதைப் பற்ற வைக்க என் கரத்தில் தரப்பட்டிருக்கும் மெழுகு வர்த்தித் தீபம் கிருத்துவத்தின் அடையாளம். அதை ஏற்றி வைக்கின்ற நான் முஸ்லிம். இதுதான் இந்தியா." இப்படி அவரால் சொல்லவும் முடிந்தது. வாழவும் முடிந்தது.

கலாம் வள்ளுவருக்குத் தந்த மரியாதை உலகம் அறிந்த வெளிச்சமானது. அந்த வள்ளுவன் குறளை நான் இங்கே நினைவு படுத்திப் பார்க்கிறேன்.

" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு."

இந்தக் குறள் அவர் வாழ்விலும் அவருக்கு நினைவிருந்தது. அவர் மறைவுக்குப் பின் நம்மிலும் நினைவிருக்க வேண்டியது.

பெருமை என்பது அழிவில்லாத ஒன்று. நிலை பெற்றிருக்க வேண்டிய
ஒன்று. இப்படி எது இருக்கிறதோ அதற்குப் பெயர்தான் பெருமை.

இந்த அடிப்படையில் பெருமையை நினைவு படுத்திப் பார்த்தால், உலகிலேயே மரணம் ஒன்றுதான் பெருமைக்குரிய தகுதி பெற்றிருக்கிறது.

நேற்று (நெருநல்) இருந்த ஒருவன், இன்று இல்லை என்பதுதான்
இந்த உலகத்தின் பெருமை என்று வள்ளுவன் சொன்னான். ஏனென்றால் இந்த உலகம் அழியும் வரை மரணமொன்றே நிலைத்திருக்கிறது. அப்படியானால் அந்த ஒன்றுதானே பெருமை.

கலாம் அதனால்தான் அடுத்த தலைமுறைக்கு ஆதரவாக இருந்தார்.
தன் தலைமுறை மரணத்தின் வீதிக்குள் பிரவேசித்து விட்டது. எனவே
அடுத்த தலைமுறைக்குப் பாதை அமைக்கும் பொறுப்புத தமக்கு வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டார்.

அப்துல் கலாமுக்கு முந்தையத் தலைமுறையில் எத்தனையோ அப்துல் கலாம்களும் அவருக்கு மேம்பட்டவர்களும் வந்து சென்றிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சென்றதால்தான் இந்த அப்துல் கலாமும் நம்மிடையே நடமாடியிருக்கிறார்.

இந்த அப்துல் கலாமும் சென்றேதான் ஆக வேண்டும். அடுத்தடுத்த அப்துல் கலாம்களும் அவருக்கும் மேம்பட்டவர்களும் இந்தப் பூமிக்கு வந்தாகத்தான் வேண்டும். இதுதானே அவர் கனவு.

அவரின் இந்த மரணம் அடுத்த பெருமைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கும்
ஒரு தருணம்தான். (அப்துல் கலாம்--அரபுச் சொல்லின் பொருள்:---
எழுதுகோலின் அடிமை.)

No comments:

Post a Comment