Tuesday, April 8, 2014

ஒரு ரகசியக் கடிதம்...!


Siraj Ul Hasan  முகநூலில் பதிவு செய்து இருக்கும் செய்தி இது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ம.ம.க கட்சியின் செயலாளர் ஹைதர் அலி, “நான் கும்பகோணம் மகாமக விழாவை தேசிய விழாவாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்என உறுதிமொழி தந்து வாக்குக் கேட்டு இருக்கிறார்.

ஹைதரலி இப்படி வாக்குத் தத்தம் தந்து வாக்குக் கேட்டிருப்பது ஒரு நல்ல தகவலாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் இதிலிருக்கக் கூடிய நியாயம் விமர்சனத்திற்குரியதுதான்.
ஒரு தொகுதியின் வேட்பாளராக இருப்பவர் அந்தத் தொகுதி சார்ந்த மக்கள் பிரச்சனைக்கு வாக்குத்தந்து ஆதரவுக் கேட்பது அடிப்படை ஜனநாயக தர்மம் கூடத்தான்.

தேசிய விழாவாக ஒரு மதம் சார்ந்த விழாவைக் கொண்டு செல்வதற்கு, வலியுறுத்துவதற்கு எத்தகைய நடைமுறைகளை, நியதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற தகவலை ஹைதர் அலி நன்றாக அறிந்துதான் பேசியிருப்பார் என நம்புகிறேன்.

தொகுதி மக்கள் சார்ந்த பிரச்சனைகளும் மதம் சார்ந்த பிரச்சனைகளும் வெவ்வேறு தராதரம் கொண்டவை என்பது ஹைதர் அலிக்கு நன்கு தெரியும்.

அவர் பொதுவாக தொலைக்காட்சியில் தோன்றும் பொழுதும், பொது மேடைகளில் தோன்றும் பொழுதும் பேச்சின் துவக்கத்தில் வணக்கம் என்று கூறி எல்லோரும் ஆரம்பிப்பதுபோல ஆரம்பிக்க மாட்டார்.
இவர் சார்ந்த மார்க்கக் கோட்பாட்டுக்கு அது மாறுபட்டது என்று கருதி இந்திய கலாச்சாரத்தோடு சமரசம் செய்து கொள்ளாதவர். அந்த அளவுக்கு தெளிவான போக்கைக் கடைப்பிடிப்பவர்.

இப்போது தேர்தல் களத்தில் இவருக்கு உடன்படாத ஒரு கருத்திற்குப் பாராளுமன்றத்திலே ஆதரவு குரல் கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

இது தொகுதியின் மக்கள் பிரச்சனை, அவர்களின் தேவை என்ற வரைமுறையைத் தாண்டி வேறு எதற்காகவோ இவர் சமரசம் ஆகி இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்னொரு சகோதர சமுதாய மதக் கோட்பாடுகளை நான் ஆதரித்து பிரச்சாரம் பண்ணத் தயங்கமாட்டேன் என்ற பெருந்தன்மையின் அடிப்படையில் அவருடைய இந்தப் பேச்சு நிச்சயம் இல்லை.

தனக்கு வாக்குத் தாருங்கள்! என்ற கோரிக்கைக்காகத் தன்னுடைய சுய வடிவத்தை ஜனநாயகம் என்ற போர்வையில் மறைத்துக் கொள்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

1984 ஆம் ஆண்டு நடந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் திருவல்லிக்கேணித் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காஜா ஷரீஃப் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருந்தார். காஜா ஷரீஃப் ஏற்கனவே திருவல்லிக்கேணித் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தவர்.

இந்த இரு முஸ்லிம் வேட்பாளர்களையும் எதிர்த்து இந்து முன்னணி வேட்பாளரும் களத்தில் இருந்தார். அவர் பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்தவர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றி அப்துஸ் ஸமது சாஹிப் வாக்குச் சேகரிக்க வந்து கொண்டிருந்தார். இந்தப் பிரச்சார பணியில் தென் சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் அண்ணன் மர்ஹூம் தாஜ் ஷரீஃப் அவர்களும், முஸ்லிம் குரல் பத்திரிகை ஆசிரியர் எம்.எம்.கனி சிஷ்தி சாஹிபும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஏ. காஜா மைதீன் எம்.பி யும், வட சென்னை மாவட்ட செயலாளரான ஹிலால் முஸ்தபாவாகிய நானும், நாகூர் கவிஞர் ஜஃபருல்லாவும் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டுச் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது பார்த்தசாரதி கோயில் பக்கத்தில் பத்து பதினைந்து பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.
அப்துஸ் ஸமது சாஹிப் பிரச்சாரம் செய்து வந்த வாகனத்தை வழி மறித்து நிறுத்தினர்.

பிராமணர் கூட்டத்தில் ஒருவர் தடித்த நீண்ட பருமனான கவரை ஸமது சாஹிபிடம் கொடுத்தார். அந்தக் கவர் ஒட்டி முத்திரை இடப்பட்டிருந்தது.
அந்தப் பிராமணச் சகோதரர் ஸமது சாஹிபிடம்,

ஐயா, நீங்கள் எங்கள் அக்கிரகாரத்திற்குப் பிரச்சாரம் செய்ய நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். நாங்கள் ஏக மனதாக முடிவெடுத்து விட்டோம். எங்கள் கருத்தை இந்தக் கவரின் உள்ளிருக்கும் கடிதத்தில் எழுதி இருக்கிறோம். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டதற்குப் பின் வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கடிதத்தை நீங்கள் உடைத்துப் பார்க்க வேண்டும். அதுவரை இதை உடைக்கக் கூடாது. நீங்கள் இறை பயம் மிக்கவர்கள். நாங்கள் சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எனக் கூறி அந்தக் கடிதத்தை ஸமது சாஹிபிடம் தந்தார்.
ஸமது சாஹிப் அருகில் இருந்த என்னிடம் அந்தக் கடிதத்தைத் தந்து,
இதை மணிச்சுடர் அலுவலகத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேர்தல் முடிவுக்குப் பின் இதை பிரித்துப் படித்துக் கொள்வோம்என்றார்கள்.
அந்தக் கடிதத்தை நான் பத்திரமாக மணிச்சுடர் அலுவலகத்தில் பாதுகாத்தேன்.

மறுநாள் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே சிலர் வந்து ஸமது சாஹிபிடம் கேட்டுக் கொண்டார்கள்.

கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாராமல் சிதைந்து போய்க் கிடக்கிறது. நாங்கள் உங்களுக்கு வாக்குத் தந்து நீங்கள் சட்டமன்றம் சென்றால் கபாலீஸ்வரர் கோயிலை தூர்வார வேண்டிய பணியை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்றத்தில் பேசி நிறைவேற்றித் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஸமது சாஹிப் அந்த இடத்தில் சுமார் அரைமணி நேரம் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.

கபாலீஸ்வரர் கோயிலின் இந்தக் குளம் ஆர்க்காட்டு நவாபுகளால் கோயிலுக்கு வழங்கப் பட்ட இடம். இன்று அது தூர்ந்து போய் கிடக்கிறது. நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செல்வேனானால் என் முதல் பேச்சு சட்டமன்றத்தில் இந்தக் கோயில் திருக்குளத்தின் தூர்வாரும் பணியைத் துரிதப்படுத்தி நடத்த அரசை வலியுறுத்தும் பேச்சாகத்தான் இருக்கும்என்று உறுதிமொழி கொடுத்தார்.

அந்தத் தேர்தலில் திருவல்லிக்கேணிச் சட்டமன்றத் தொகுதியில் வெற்றியும் பெற்றார். சட்டமன்றத்தில் குளத்தைத் தூர்வார வேண்டிய பணியினை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினார், நிறைவேற்றியும் தந்தார்.

அந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் மணிச்சுடர் அலுவலகத்தில் வைத்து பார்த்தசாரதி கோயில் பகுதியில் பிராமணச் சமுதாயத்தவர்கள் ஒட்டித்தந்த கடிதத்தை நாங்கள் பிரித்துப் பார்த்தோம்.

அந்தக் கடிதத்தில் கீழே காணும் செய்தி இருந்தது.

ஐயா, நாங்கள் முஸ்லிம் லீகை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். ஆனால் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும் ஒரு முஸ்லிமே நிற்கிறார். இரண்டு முஸ்லிம்களையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை.

எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். இந்த நிலையில் நாங்கள் கூடித் தீவிரமாக ஆலோசனை செய்தோம்.

நாங்கள் முழுவதுமாக எங்கள் சமுதாயத்தவருக்கு வாக்களித்தாலும் அவர் வெற்றிபெறப் போவதில்லை. அதனால் எங்கள் வாக்கை நாங்கள் விரயமாக்க விரும்பவில்லை. அவருக்கு நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.

மீதமுள்ள இருவரும் முஸ்லிம்கள். உங்களில் முஸ்லிம் லீக் முஸ்லிமை நாங்கள் ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளரான காஜா ஷரீஃபை அவர் காங்கிரஸாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அரசியல்வாதி அல்ல. வியாபாரி.
எங்களின் ஜனநாயகக் கடமையான வாக்களித்தலை வழங்காமலும் இருக்க இயலாது. இந்த நிலையில் தீவிரமாக மேலும் ஆலோசித்தோம். உங்கள் இருவரில் நிச்சயமாக அரசியல் தகுதி, சமுதாயத் தகுதி உங்களுக்குத்தான் இருக்கிறது.

காஜா ஷரீஃப் சட்டமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நாங்கள் உங்களை விரும்பாத போதும், சிறந்த நாடாளுமன்றவாதியான அனுபவமிக்க உங்களை இந்த முறை மட்டும் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய முடிவு செய்துவிட்டோம். இதிலிருந்து நாங்கள் மாறப்போவதில்லைஎன்று எழுதி பலர் கையொப்பம் இட்டு இருந்தனர்.

அந்தத் தேர்தலில் பிராமணச் சமுதாயத்தவரின் ஒட்டுமொத்த வாக்கும் ஸமது சாஹிப் அவர்களுக்குத்தான் கிடைத்தது.

அக்கிரகாரத்து பகுதி வாக்குப்பெட்டியில்தான் அப்துஸ் ஸமது சாஹிபிற்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. ஆறாயிரத்து சொச்சம் வாக்குகளில்தான் ஸமது சாஹிப் வெற்றி பெற்றார்கள்.

இந்த நடைமுறையில் ஜனநாயகப் பண்பு இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினரான ஸமது சாஹிப் மக்கள் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் பேசி நிறைவேற்றித் தந்ததிலும் நேர்மை இருக்கிறது.

ஆனால் இன்றைய ம.ம.க கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் ஹைதர் அலி பேச்சில் இந்த நியாயம் எதுவும் இல்லை. வாக்குக்காக மட்டுமே அவர் பேசி இருக்கிறார்.

அவருடைய நேர்மை சருக்கி இருக்கிறது. ஆதாயத்திற்காக மக்களை அவமதித்து இருக்கிறார். அவரை நம்பியவர்களையும் ஏமாற்றி இருக்கிறார்.

No comments:

Post a Comment