Wednesday, April 23, 2014

கோணிப்பையிலிருந்து குதித்துவிழும் கரும்பூனைகள்..!


பாஜகவின் கடந்த அகில இந்தியத் தலைவர் ஒருமுறைக்கு இருமுறைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தவர் நிதின் கட்கரி. அவர் சொல்லுகிறார்.

காஷ்மீர் 370 சட்டவிதியைத் திரும்பப் பெற நாங்கள் வலியுறுத்த என்ன காரணம் தெரியுமா?” என்று கேள்வி கேட்டு விளக்கம் தருகிறார்.

காஷ்மீரிகளைத் தவிர காஷ்மீரில் ஒரு அங்குல இடம்கூட வேறு எவரும் வாங்க முடியாது. இது மாற்றப்படத்தான் வேண்டும். ஏன் தெரியுமா? அந்நிய முதலீடுகளைக் காஷ்மீரில் போட முடியவில்லை.

இந்தியத்திலுள்ள பெரும் முதலாளிகளின் பெரும் முதலீட்டையும் காஷ்மீரில் போட முடியவில்லை.இதனால் காஷ்மீரில் தொழிற்சாலைகள் அபிவிருத்தி இல்லை. வேலை வாய்ப்புகள் இதன் காரணத்தால் அங்கு இல்லாது போய்விட்டது” – இதுதான் நிதின் கட்கரி முன்வைக்கும் காரணம்.

அதாவது காஷ்மீரத்துக்குள் அந்நிய முதலீடுகள், உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் பெரும் முதலீடுகள் போட முடியவில்லை என்பதுதான் கட்கரியின் பெரும் வேதனை.

அதற்குத் தடையாக உள்ள 370 சட்டவிதி நீக்கப் பட வேண்டும். என்பதுதான் பாஜகவின் அடிமன ஓட்டம்.

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் காடுகள் மலைகளில், அந்நிய முதலீடுகளை, உள்நாட்டு பெரும் வியாபாரிகளின் கொள்ளை முதலீடுகளைக் கொண்டு போய் குவித்து அங்குள்ள கனிமப் பொருள்களைச் சுரண்டுகிறார்கள்.

அந்தப் பகுதியின் சொந்தப் பூர்வீகக் குடிகளை அடித்து விரட்டி நிலங்களைப் பறித்துக் கொள்கிறார்கள்.

இதுமாதிரி காஷ்மீரில் செய்ய சட்டவிதி 370 வழி செய்யவில்லை. காஷ்மீருக்குள் இருக்கும் ஏதோ பலவகையான கனிமங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்கவும் இங்குள்ள சில கொழுத்த கார்ப்பரேட்டுகள் அள்ளிச் சுவைக்கவும் வசதி இல்லாது போனதே என்பதுதான் பாஜகவின் ஆதங்கம்.

பூர்வீக காஷ்மீரிகளை அடித்து விரட்டி முதலீடுகள், தொழில் மயங்கள் என்ற பெயரில் காஷ்மீர் சுரண்டப் பட வேண்டும். இதற்குத்தான் காஷ்மீரில் முஸ்லிம்களுக்குச் சலுகை என்பது போல கதையைச் சோடித்து தங்கள் காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

_______________________ 2 _______________________

மோடியை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு விரட்டப் படுவார்கள். மோடியை விமர்சிப்பவர்களும் அவர்களுக்குப் பின்னால் ஓடத்தான் வேண்டும்என்று கிரிராஜ் சிங் பேசி இருக்கிறார்.

நிதின் கட்கரி அந்தக் கூட்டத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

மோடிக்கும் பாஜகவுக்கும்தான் இந்தியா சொந்தம் என்ற ஒற்றைத் திமிர்வாதம் தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் களத்திலேயே முன்வைக்கப் படுகிறது.

பாஜகவை, மோடியை விமர்சிக்கும், கொள்கை ரீதியாக எதிர்க்கும் எவராக இருந்தாலும் அவர்களெல்லாம் முஸ்லிமாகவே கருதப்படுவார்கள் என்ற தோரணையில் கிரிராஜ் வாய் மலர்ந்திருக்கிறார்,

குறிப்பாகப் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கூட மதம் மாற்றி முஸ்லீமாக்கி காஷ்மீருக்குப் போகச் சொல்லுகிறார்.

மோடி இன்னும் பிரதமர் நாற்காலியில் அமரவில்லை. அதற்கு முன்னே இந்தப் பூனைக் குட்டியும் வெளியே குதித்து இருக்கிறது.

______________ 3 __________________

தொகாடியா இவர் வாய் திறந்தாலே இந்தியாவின் சீரழிவு தாம் திரிகட தாம் திரிகிடஎனக் குதியாட்டம் போடும்.

விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்தான் இந்த பிரவீன் தொகாடியா.

குஜராத்தின் பாவ் நகர் அருகே இந்துப் பெருங்குடி மக்கள் பெரும்பானமையாக வசிக்கும் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு வீட்டை முஸ்லிம் வணிகர் ஒருவர் வாங்கி இருக்கிறார்.

இதை எதிர்த்து பஜ்ரங் தள் அமைப்பு சென்ற சனிக்கிழமைப் போராட்டம் நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பேசி இருக்கிறார்.

இந்து வீட்டை முஸ்லிம் வாங்குவது கூடாது. முஸ்லிம் வாங்கிய வீட்டை பஜ்ரங் தள் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பஜ்ரங் தள் தன் அமைப்பின் பெயர் பலகையை அந்த வீட்டில் தொங்கவிட வேண்டும்.

இதற்குச் சில விழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம் சமூகத்தினர் அசையா சொத்துக்களை பிறர் வாங்காமல் தடுக்க பதட்டம் நிறைந்த பகுதிகள்சட்டத்தை இயற்ற வேண்டும். மாநில அரசை இதற்காக வற்புறுத்த வேண்டும்.

இது முடியவில்லை என்றால் , அவர்கள் வாங்கிய சொத்துக்களை பலவந்தப் படுத்தி கையகப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் விசாரணை முடிந்து தீர்ப்புவர பல ஆண்டுகள் ஆகும். இது நமக்கு வசதிதான்.

தற்போது அந்த வீட்டை வாங்கி குடியேறியுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவர் அடுத்த 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும். மறுத்தால் கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவர்கள் இடத்தை முற்றுகை இட வேண்டும். இதில் தவறேதும் இல்லை.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களே இன்னும் தூக்கில் இடப்படவில்லை. எனவே வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப் பற்றி பயப்பட வேண்டாம்.இதுதான் தொகாடியாவின் தத்துவ விளக்கங்கள்.

காஷ்மீரத்தில் அந்நிய முதலீடு வேண்டும். அதற்குத் தடையாக உள்ள சட்டத்தை நீக்க வேண்டும் என்று நிதின் கட்கரி பேசுகிறார்.

குஜராத்தில் அந்த மண்ணுக்குரிய மக்களே கூட அவர்களின் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இல்லையென்றால் ஆயுதங்களால் வன்முறை நிகழ்த்த வேண்டும்.

வழக்குப் போட்டால் பயப்பட வேண்டாம். கொலை கூட செய்யலாம். அஞ்ச வேண்டாம். ராஜீவ் கொலையாளிகளே இன்னும் தூக்கில் ஏற்றப் படாமல் இருக்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாகக் கொலை முயற்சிக்கு தூண்டுகிறார்.

பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தப்பிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லுகிறார்.

காஷ்மீருக்கு அப்படி. குஜராத்துக்கு இப்படி. இதுதான் முன்மாதிரி கோலம். இதைத்தான் இந்தியா முழுவதும் செயற்படுத்தப் போகிறோம் என்று பாஜக பகிரங்கமாக பிரகடனப் படுத்துகிறது.

பாஜக ஆட்சிக்கு வருகிறதோ இல்லையோ கவலை இல்லை. வந்தால் சட்டப்படி வெறியாட்டம் போடுவோம். வரவில்லை என்றால் கத்தி கடப்பாறை ஆயுத கட்டளைப்படி அணுகி நிற்போம்.

__________________ 4 _____________________

மஹாராஷ்ட்ரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸால் பாலூட்டி வளர்க்கப் பெற்ற கொடூரப் பிள்ளை கதம். இந்தக் கதம் தேர்தல் பிரச்சார மேடையில் பேசுகிறார்.

முஸ்லிம்கள் காவல்துறை வாகனங்களைக் கொளுத்துகிறார்கள். நம் முன்னோர்களின் தியாகபீடங்களைத் தகர்க்கிறார்கள். இந்த முஸ்லிம்களை முழுவதுமாக அழித்தொழிக்க வேண்டுமானால் மோடி பிரதமராக வந்தாக வேண்டும்” - கதமுடைய கர்ஜனை இது.

ஒரிசாவில், கிருத்துவ பாதிரியாரை, அவரின் இரு பச்சிளம் குழந்தைகளை வேனில் தீ வைத்து கொளுத்தி கோரக் கொலை செய்த, குறிப்பாக உயிரோடு துடிக்க துடிக்க சாகடித்த திருக்கூட்டம் காவல்துறை வாகனத்தை முஸ்லிம்கள் தீ வைப்பதாகக் கதை சொல்கிறது.

கன்னிகாஸ்திரிகளை நடுவீதிகளில் கற்பழித்து, சீரழித்து கொலை செய்த நல்லெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம்கள் நினைவிடங்களை தகர்க்கிறார்கள் என்று ஆவேசப்படுகிறார்கள்.

இவைகளை நினைத்து முஸ்லிம்களை அழித்து ஒழிக்க வேண்டும். அதற்கு மோடி, இந்தியத்தின் ஆட்சியில் அமர வேண்டும். கதம் இப்படி கதறுகிறார்.

அந்தக் கூட்டத்தில் மோடி அமர்ந்திருக்கிறார்.

மோடி ஒரு நல்வாசகத்தை வெளியிடுகிறார்.

இப்படிப் பேசுவது நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.” - இவ்வளவுதான் மோடியினுடைய திருவாசகம்.

கதம் போன்றவர்களின் வார்த்தைத் தீவிரம் கண்டிக்கப்படவில்லை. கனிவான அறிவுரை மோடியால் முன்வைக்கப் படுகிறது.

இவர்தான் பிரதம வேட்பாளர்.

தேர்தல் நடைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய காலமிது. பல இடங்களில் நடைபெற்றும் விட்டது. இன்னும் பல இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் கோணிப்பையிலிருந்து கரும்பூனைகள் ஒவ்வொன்றாக துள்ளிக் குதிக்கின்றன.

இந்த அவமானம் அவர்களுக்கு இல்லை. இந்தியர்கள் என்ற முறையில் நமக்கு இருக்கிறது. இந்தச் செய்தியை நான் பதிவு செய்யும் பொழுது என்னை ஒரு சக மனிதனாக புரிந்துக்கொள்ளாமல் இவன் முஸ்லிம் இப்படித்தான் சொல்வான் எனப் பாஜக பாணி மூளைகள் பேசித் திரியலாம். நம் கவலை அது அல்ல.

நம் இந்தியத்தில் நரமாமிசம் புசிக்கும் கோர மிருகங்களாக சில மனிதர்கள் மாறுகிறார்களே இதைத் தடுத்து நிறுத்த மானுட நெஞ்சம் கொண்டவர்கள் ஒன்று சேர வேண்டாமா? என்ற ஆதங்கத்தால் இதைப் பதிவு செய்கிறேன்.


No comments:

Post a Comment