Monday, April 21, 2014

நரக நெருப்பைப் பசியாறுகிறார்கள்..!


குஜராத் மாடல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நடைமுறைப் படுத்தப்படும். என பா.ஜ.க தெளிவாகவும் விளக்கமாகவும் எல்லா மேடைகளிலும் அறிக்கைகளிலும் அறிவித்து விட்டது.

இன்றைய (20.4.2014) தி இந்து (தமிழ்) நாளிதழ் ஒரு பேட்டியை வெளியிட்டு இருக்கிறது.

குத்புதீன் அன்சாரியினுடைய பேட்டிதான் அது.

குஜராத்தில் 2002 பிப்ரவரியில் நடந்து முடிந்த ரத்தக் களரியின் கோர முகத்தை குத்புதீன் அன்சாரியின் முகம் உலகுக்கு சாட்சி சொன்னது.

முகம் முழுவதும் அச்சம் கொப்புளித்தது, விழிகளில் மரணத்தின் தலைவாசல் விரியத் திறந்து கிடந்தது. முகம் முழுவதும், ஈடேற்ற உலகத்தில் யாராவது இருக்கிறீர்களா? என்ற அவல மொழி புருவங்களின் மயிர்க் கால்களில் எல்லாம் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. இப்படி ஒரு வேதனைத் தோற்றம் பத்திரிகைகளில் வெளி வந்தது. அந்த தோற்றத்திற்கு உரியவர் தான் குத்புதீன் அன்சாரி.

குத்புதீன் அன்சாரி குடியிருந்த வீதியில் உள்ள இல்லங்களையெல்லாம் பற்றி எரிந்த தீ கபளீகரம் செய்தது. குடியிருந்த மக்களில் ஆண், பெண், முதியவர், சிறியவர்கள், குழந்தைகள் பாகுபாடு இல்லாமல் மரணப் படுகுழிக்குள் கருகிக் கிடந்தார்கள்.

இந்தக் கொடூரத்தை கண் எதிரில் கண்டு குலைநடுங்கி, பீதிப் பள்ளத்தாக்கில் பதுங்கிக் கிடந்தார் குத்புதீன் அன்சாரி.

இந்த கோரக் காட்சிக்கு, தான் காரணம் இல்லை. இப்படி நடந்து கொண்டு இருப்பது தனக்குத் தெரியாது என குஜராத்தின் முதல்வர், நிர்வாகத்தில் இணையற்ற வெற்றி வீரர் மோடி உலகுக்கு அறிவித்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், குத்புதீன் அன்சாரியின் படம் முதல்வரின் பொய் சாட்சிக்கு எதிராக உலகுக்குக் கிடைத்த அத்தாட்சி என்பது போல, பத்திரிகைகளில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்து கொண்டு இருந்த இனப் படுகொலையின் தீவிரச் செய்தியும் பத்திரிகைகளில் பிரசுரமாகின.

குத்புதீன் அன்சாரி சாதாரண தையல் கடை வைத்திருந்த ஒரு தொழிலாளி. அவரையும் அவரைப் போன்ற மனிதர்களையும் இவ்வளவுக் கோரமாகவும் கொடூரமாகவும் தாக்க குஜராத்தில் என்ன காரணம் நிகழ்ந்தது?

முதல்வர் மோடியிடம் கேட்டால், “இப்படி நடந்து கொண்டா இருக்கிறது? இது பற்றித் தகவல் எனக்கு வந்து சேரவில்லையே?” என கப்பில் டீ குடித்துக் கொண்டு பதில் சொன்னார். இவரைத்தான் ஆட்சி செலுத்துவதில் சிறந்த நிர்வாகி என்று பிரச்சாரப் படுத்தி இந்தியப் பிரதமர் வேட்பாளருக்கு இவரே தகுதியானவர் என பா.ஜ.க. சிபாரிசு செய்து இன்று களத்தில் நிற்கிறது.

குத்புதீன், குஜராத்தை விட்டே தலைதெறிக்க ஓடி மஹாராஷ்டிரத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில இடங்களில் வேலை செய்தார்.

பத்திரிகையில் வந்த அவர் படத்தைப் பார்த்து விட்டு முதலாளிமார்கள் அவரை வேலையை விட்டு விரட்டி விட்டார்கள். துரத்தப்பட்ட குத்புதீனுக்கு மீண்டும் தொடரோட்டம் தொடங்கியது. மேற்கு வங்கத்துக்குள் புகுந்தார். அங்கும் அவருக்கு அடைக்கல நிம்மதி இல்லை.

ஒரு துணிச்சலான முடிவுக்கு வருகிறார். விடாமல் துரத்தினால் பூனைகூட எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகி விடுவது போல, குத்புதீனும் ஒரு முடிவுக்கு வந்தார்.

தான் பிறந்து, வளர்ந்த, தன் மூதாதையர்கள் வாழ்ந்து மறைந்த குஜராத்துக்கேத் திரும்ப முடிவு கட்டினார். தனக்குத் தெரிந்த ஒரே தொழில், தையற் தொழிலையும், தையல் எந்திரத்தையும் சரணடைந்தார்.

அந்த குத்புதீன் அன்சாரியின் பேட்டிதான் தி இந்துநாளிதழில் இன்று வெளிவந்து இருக்கிறது.

பத்திரிகையாளர் அவரிடம் கேட்கிறார், கலவரத்தின் அந்த நாளை நினைவு கூர முடியுமா?”

அந்த நாள் நினைவுகூர வேண்டாத ஒன்று. நான் அன்றைக்கு செத்து விட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். இறைவன் அருளால் பிழைத்தேன் இது குத்புதீன் பதில்.

2002, பிப்ரவரி மாதத்தின் குஜராத்தின் தோற்றம் இதுதான்.

பத்திரிகையாளர் கேள்வி : ஆளும் கட்சியிலிருந்து (பா.ஜ.க.) உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிரதா?

நான் இது பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். மீதமுள்ள காலத்தை கொஞ்சம் நிம்மதியுடன் வாழ நினைக்கிறோம் இது குத்புதீன் பதில்.

2002 - இன்னும் குஜராத்தில் மாறி விடவில்லை.

அன்று எல்லம் வெளிப்படையாக நடந்தது. இன்று அதனுடைய நிழல் உருவம் குஜராத் முழுவதும் பரவிக் கிடக்கிறது. உண்மையைச் சொல்ல இன்று கூட அச்சம் நீங்கிவிடவில்லை. இது தான் மோடியின் நிர்வாக நேர்த்தி.

கேள்வி : கலவரத்தில் முற்றிலுமாகத் தீக்கிறையான பகுதி இது. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் முன்பைவிட மேம்பட்டு இருக்கிறோம். முன்பைவிடக் கடுமையாக நாங்கள் உழைக்கிறோம் என்பது தான் இதற்கு அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக குழந்தைகளுக்காக எதிர் காலத்திற்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றே தான் காரணம் இது குத்புதீன் பதில்.

இன்று கூட பாதிக்கப்பட்டவர்களின் மேம்பட்டிற்கு அவர்களின் திடமான மனநிலையும், கடுமையான உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது. அரசாங்கம் என்ற எந்திரம் அங்கே குஜராத்தில் தன் சொந்த மக்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் ராஜ கிரீடம் சூடிக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சி மாநிலம் குஜராத் என்று அறிவித்துக் கொண்டு இருக்கிறது.

கேள்வி : மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள் தான். ஒன்று, குஜராத் எங்கள் பூர்வீக மண். என் தந்தை, தாத்தா, அவர் முன்னோர்கள் பிறந்து வளர்ந்த மண். இத்தனைத் தலைமுறைகளாக எங்களைக் காத்த மண் கை விட்டு விடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில் தான் நாங்கள் இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

ஒரு தீயசக்தி எல்லோரையும் இயக்கி விட்டது. கலவரத்துக்குப் பின் இந்தச் சம்பவம் அனைவரையும் சங்கடப்பட வைத்தது. எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் அன்றும் உதவினார்கள், மீண்டும் எங்களை குஜராத்திற்கு அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. என் நம்பிக்கைக்கு இவைகள் தான் அடிப்படை இது குத்புதீன் பதில்.

குஜராத் மக்கள் ஐக்கியமாக இருந்தார்கள். சில அரசியல் சமூக கோட்பாட்டுக்குரியவர்கள் மக்களின் மத்தியில் துவேஷத்தைத் தூவி இருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு முதல்வர் மோடிதான் அந்தரங்கத் தலைவர். இவரைத்தான் இந்தியப் பிரதமராக அமரவைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் தலைவர்கள் (வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள்) மேடைகளிலே சிபாரிசு செய்து வாக்குக் கேட்கிறார்கள்.

கேள்வி : மோடியைப் பற்றி, அவருடைய ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை இது குத்புதீன் பதில்.

இது பெருமிதத்தின் பண்பாடாக வந்த பதில் இல்லை. மோடி இன்று அன்றைய சூழலை உணர்ந்து திருந்தி விட்டார் என்ற உணர்விலும் வந்த பதில் இல்லை.

2002 னுடைய பீதி இன்றும் கூட பாதிக்கப் பட்டவர்களை விட்டு நீங்கவில்லை. அது எந்த நிலையில் வேண்டுமானாலும் மீண்டும் வந்து விடலாம் என்கிற அடியாழமிக்க அச்சத்தினால் வந்த அக்கறைப் பதிவு.

கேள்வி : குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறைய செய்து இருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?

எனக்குத் தெரியாது. இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட்காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்றவர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை இது குத்புதீன் பதில்.

மோடி முஸ்லிம்களுக்கு செய்திருக்கும் நல்லவைகள் பற்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. மோடியால் உருவாக்கப் பட்டு இருக்கும் சில முஸ்லிம் ரியல் எஸ்டேட் வியாபாரிகளும், அதற்கு உறுதுணையான புரோக்கர்களும் மோடிக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தத் தரகர்களைத்தான் மோடி வகையறாக்கள் மேடையில் ஏற்றி, “பாருங்கள் எங்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவைஎனப் படம் காட்டுகிறார்கள்.

குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் இன்றும் பீதியிலும், நிலைமையை முழுவதுமாக வெளிச் சொல்ல முடியாத வேதனையிலும் தான் தங்கள் வாழ்க்கையை உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

குத்புதீன் படம் அன்றைய காலகட்டத்தில் குஜராத்தின் பீதி நிலையின் வெளிப்பாடாக இருந்தது போலவே, இன்னொரு படமும் கோரத்தின் அடையாளமாக வெளியிடப்பட்டது.

பின்புறத்தில் பற்றி எரிந்து கொழுந்துவிட்டு தீ ஜ்வாலை உக்கரமாக எரிய அதற்கு முன்னே தலையில் காவித்துணிகட்டி வலது கையில் நீண்ட வாள் ஏந்தி உக்கரமான தோற்றத்தோடு ஒரு இளைஞனின் படம் வெளிவந்தது. குஜராத்தின் கொடூரச் செயலின் அடையாளச் சின்னமது.

அந்த இளைஞன் எத்தனை முஸ்லிம்களை வெட்டினான், எத்தனை முஸ்லிம் வீடுகளை தீக்கிறையாக்கினான் என்றப் பட்டியல் தெரியாது.

அவன்தான் அசோக் மோச்சி. அவனுக்குத் தொழில் செருப்புத் தைப்பது. இந்தப் பாமரன் உள்ளத்துக்குள் பயங்கரத்தையும், படுபாதகத்தையும் உற்பத்தி செய்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்து இந்தியா முழுவதும் இதைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த அசோக் மோச்சி மீண்டும் செருப்புத் தைத்துக் கொண்டு இருக்கிறான்.

பத்திரிகையாளர் கேள்வி : கலவரத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் (மோடி) ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும் தானே. அவர் பின்னாளில் மனம் மாறினார். முஸ்லிகளுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடி ஜீ அப்படி எல்லாம் ஒரு வார்த்தை வருத்தம் கூட இன்றுவரை தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை இது குத்புதீன் பதில்.

அறியாமையில் செய்த உணர்ச்சி வேகத்தில் உக்கரமானவர்கள் தெளிந்த நிலையில் தாங்கள் செய்த கொடூரத்திற்காக மன்னிப்புக் கேட்டு இருக்கிறார்கள். அந்த மனிதநேய மனிதர்களை குத்புதீன் அன்சாரி போன்றவர்கள் கட்டி அணைத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தழுவிக்கொண்டார்கள். இந்த மகத்துவம் குஜராத்தில் வாழும் சாமானியர்கள் மத்தியில் நடந்து இருக்கிறது.

இனப் படுகொலையின் சூத்திரதாரி மோடி போன்ற அடிப்படை மானுட உணர்வு செத்துப் போனவர்கள் இந்தியப் பிரதமராக ஆக ஆசைப்படும் நேரத்தில் கூட, நிகழ்த்தப்பட்ட தீங்கிற்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.

இந்த மோடியைத்தான் முன்மாதிரிப் பிரதமராகவும், இந்த மோடியின் குஜராத்தைத்தான் எடுத்துக்காட்டு மாநிலமாகவும் சிறிதளவு கூட வெட்கமற்றவர்கள் பிரச்சாரப் படுத்துகிறார்கள்.

கேள்வி : இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும், அவர் குஜராத்தில் கொண்டுவந்து இருப்பதுமாக சொல்லப்பட்டு இருக்கும் வளர்ச்சியைப் பற்றித்தானே பேசுகிறார்கள்?

ஒரே ஒரு உதாரணம். என் சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புத்தான் தைத்துக் கொண்டு இருந்தார். இன்றும் அவர் செருப்புத்தான் தைத்துக் கொண்டு இருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை இது குத்புதீன் பதில்.

குஜராத் பற்றிய அருமையான ஒரு ப்ளூ ப்ரிண்டை (வரைபடம்) குத்புதீன் அன்சாரி வெளிப்படுத்தி விட்டார். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி என்பது இதுதான். செருப்புத் தைத்தவர்கள் ஏதோ ஒரு வெறியில் நெருப்பு வைத்தார்கள். ஆனால் அவர்கள் இன்றும் செருப்புத் தைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் மன்னிப்பு கேட்டு மனந்திருந்திய மனிதர்களாக மாறி இருக்கிறார்கள்.

அன்று பணம் கொடுத்தவர்களாக இருந்தவர்கள் மோடிக்கு ஜால்ரா போட்டு இன்றும் பணம் பெருக்குபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் குஜராத்தினுடைய வளர்ச்சி. இதைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கொண்டு வர தேர்தல் அறிக்கையாகவே முன்மொழிகிறார்கள்.

கேள்வி : இந்தப் பேட்டியில் கேள்விகள் முடிந்து விட்டன. இந்த கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெறிய உலகத்தைப் படைத்து இருக்கிறான். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டை சிதைத்து விடக் கூடாது இது குத்புதீன் பதில்.


பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டு பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் விண்முட்டும் பெருந்தன்மையோடு ஆரத்தழுவி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி வெறியின் காரணத்தால் ஆளத் துடிப்பவர்கள் நரக நெருப்பை வாரி வாரி விழுங்கி பசி தீர்த்து விடலாம் என்ற பரிதாபத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment