Sunday, April 20, 2014

மோடி ராஜ்யம்..!


ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிஹார் மாநில பாஜகவின் மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசுகிறார்.

நரேந்திர மோடியைப் பிரதமராக விடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்கப் பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்.

கிரிராஜ் சிங் அந்தக் கூட்டத்தில் இப்படி அறிவித்து இருக்கிறார்.

இனி கிரிராஜ் சிங், இரண்டு கேள்விகளை இங்கே தருகிறார். பாகிஸ்தான் நம்மை விட்டு பிரிந்துபோன ஒரு நாடு. அந்த நாட்டிற்கு நீங்கள் போங்கள் என்று இந்தியர்களுக்கு விஸா கொடுத்து அனுப்ப இவருக்கு ஒரு உரிமையை யார் தந்தது? மற்றொரு கேள்வி, பாகிஸ்தான் பிரிந்து போவதற்கே இந்த கிரிராஜ் சிங் கூட்டம்தான் ஏற்கனவே காரணமாக இருந்திருக்கிறது என்கிற உண்மையை இவர் ஒப்புக் கொண்டு விட்டாரா?

இவர்களை ஆதரிக்காதவர்களுக்கு ஏற்றதொரு இடம் என்று ஒதுக்கித் தள்ளிய வரலாற்று இடம்தான் பாகிஸ்தான் என்ற உண்மை இப்போதைக்கு வெளிவந்துவிட்டது.

இவர்களுக்கு ஆகாதவர்கள் என்று விரட்டப்படுபவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தால் பாகிஸ்தான் நிலை என்னவாகும்? அது வல்லரசாகி விடாதா? அப்பொழுது யாருக்குத் தலைவலி? இவர்களை மட்டுமே நம்பி இருக்கும், இந்தப் பிரதேசத்து மக்களுக்குத்தானே அது சோதனையாகும்.

பாஜகவை நம்பாதவர்களை விரட்டுகிறார்கள். நம்பியவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறார்கள். வேதனைக்குள் சிக்க வைக்கிறார்கள். பாஜகவின் முகமூடி இல்லாத சுயரூபம் இதுதான்.

மோடியினுடைய அதிதீவிர ஆதரவாளர் கிரிராஜ் சிங், பிஹார் நவாடா தொகுதியில் தற்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இது மட்டுமல்ல 2005 முதல் 2013 வரை பிஹார் மாநில அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இப்படி ஒரு வலுவான அரசியல் பின்னணி உள்ளவர் கிரிராஜ் சிங்.

பாஜகவின் ஏதோ ஒரு அடிமட்ட அவசரக் குடுக்கைத் தொண்டனின் அவேசப் பேச்சு என்று இதைக் கருதிவிடக் கூடாது. இந்தப் பேச்சுக்குள் ஒரு செயல்திட்டம் இருக்கிறது.

ஆழ்ந்து புரிந்துக் கொள்ளப்பட வேண்டிய மறைமுகத் தகவல் இந்த அறிவிப்புப் பேச்சில் மறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நிதானம் தவறிப் போன மேடை அலங்கார வீரவசனங்களாக இதைக் கருதிவிட வேண்டாம்.

கிரிராஜ் சிங் பேசிய இந்தக் கூட்டத்தில் இன்னும் சில மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், இப்போது பாஜகவின் அகில இந்தியத் தலைவரான ராஜ்நாத் சிங்கிற்கு முன்னர் அகில இந்திய தலைவராக இருமுறைத் தொடர்ந்து பதவி வகித்த நிதின் கட்காரியும் அமரிந்திருக்கிறார்.

இந்தத் தேர்தல் பிரச்சார மேடையின் பின்புலத்தையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பிரச்சனைக்கு வருவோம்.

மோடி பிரதமராக முடியாது போனால் இந்தியா இரண்டு கோட்பாடுகளுக்குள் வந்தாக வேண்டும். ஒன்று, பாரதிய ஜனதா இந்துக்களின் கூட்டம் ஒன்று, மற்றொரு கூட்டம் அவர்கள் இந்துவாக இருந்தாலும், கிருத்துவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பார்ஸியாக, புத்தராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் மோடிக்கு ஆதரவு தராததனால் அவர்கள் அனைவரும் இந்திய மக்களாக கருதப்பட மாட்டார்கள்.

இவர்களுக்கென்று ஏற்கனவே ஒரு தேசத்தை ஒதுக்கி இருக்கிறோம். அந்தத் தேசம்தான் பாகிஸ்தான். அங்கே மீதமுள்ளவர்கள் ஓடி விடுங்கள். இல்லையென்றால் ஓட்டப் படுவீர்கள் என்ற செய்தியைத்தான் கிரிராஜ் சிங் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மோடி பிரதமாரவதற்கு எதிராக இருப்பவர்கள் தேச விரோதிகள். மோடியின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் ராஜ துரோகிகள். இதுதான் கிரிராஜ் சிங் பிரகடனப் படுத்தும் செய்தி.

பாஜக சொல்லத் தயங்குகிற, ஆனால் உண்மையாக தங்களுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கோட்பாட்டை மோடி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப் படுத்துவார். அது எப்படி என்றால் சட்டத்தின் அடிப்படையில் அந்த நடைமுறை பகிரங்கமாக இருக்கும்.

மோடி பிரதமராக முடியாது போனால் இதே கோட்பாடு ஆயுதங்களின் மூலம் இந்தியாவில் வன்முறையாகவும் கலவரங்களாகவும் கொடூர தாக்குதல்களாகவும் செயல் படுத்தப்பட்டு குழப்பங்களை இந்தியா சந்தித்தாக வேண்டும் என்ற இரு செய்திகள் இங்கே முன்வைக்கப் படுகின்றன.

மோடி இரு தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

முழு பலத்தோடு நாங்களே தனித்து ஆட்சி அமைக்கும் நிலை தேர்தலுக்குப் பின்னால் வந்தாலும்கூட எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவோம்.என்று அறிவிக்கிறார்.

அதனுடையப் பொருள், கிரிராஜ் சிங் பேச்சிற்குப் பின்னால் புரிய ஆர்ம்பிக்கிறது.

மோடிக் கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள் கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிடாமல் இருக்க ஆசைக் கறித்துண்டுகளை முன்னரே வீசி எறிந்துவிட்டார்.

கூட்டணிக் கட்சிகள் வாலாட்டி வந்து புசித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அமைச்சர் பதவி என்பதன் அர்த்தம்.

நிதின் கட்கரி நேற்று ஒரு கூட்டத்தில் பேசுகிறார்.
பாஜக தனித்து ஆட்சிக்கு வந்தால் மட்டுமே 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கப் படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அயோத்தியில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப் பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும்.என்று பேசி இருக்கிறார்.

முழு பலத்தில் பாஜக வந்தால் இத்தணையும் நடக்கும். இது பாஜகவின் திட்டமே தவிற பாஜக அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திட்டமல்ல. இதைக் கூட்டணிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் கூக்குரல் போட்டு எதிர்க்காமல் அடங்கி ஒடுங்க இதோ உங்களுக்கு அமைச்சர் பதவிகள் என்ற கோஷம் முன்வைக்கப் பட்டு இருக்கிறது.

அதற்கு மேலும் நிதின் கட்காரி அதே கூட்டத்தில் சொல்கிறார்.

குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட மாதிரியை தேச முழுமைக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்என்று.

பாஜக தெளிவாக வெளியில் வந்து முகம் காட்டிவிட்டது. ஆட்சிக்கு வந்தால் சட்ட அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்துச் சிதைப்போம். ஆட்சிக்கு வரமுடியாது போனால், எங்களை வராமல் தடுத்த அந்நியர்களே ஓடுங்கள் பாகிஸ்தானுக்கென்று ஆயுத பலத்தால் ரத்த களேபகரம் செய்வோம்.

இதுதான் பாஜகவினுடைய தேர்தல் கட்டத்தின் கடைசி செய்தி.

மோடியை ஆதரித்தால் மட்டுமே இந்தியர்கள். அவரை ஆதரிக்க மறுப்பவர்கள் இந்தியர்களே அல்லர். இப்படி ஒரு கோஷம் வந்தாகி விட்டது. ஆதரவு தந்தால் இந்தியாவை மோடியின் ஏக இந்தியாவாக சட்ட ரீதியாக ஆக்குவோம். இல்லாது போனால் எதிர்த்தவர்களையும் விமர்சித்தவர்களையும் ரத்தக் குளியல் நடத்தில் விரட்டி அடிப்போம்.

இப்படித் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

இந்த நிலையில் மோடியை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், ஆழமான ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

சரியான புரிதலுடன் எந்தக் கட்டத்திலும் இந்தக் கொடூரமான மோடியிஸத்தை எப்பொழுதேனும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருக்கக் கூடிய இயக்கங்கள் கூட்டமைக்க வேண்டும்.

கடந்தக் காலத்தில் மோடி நடமாடித் திரிந்துக் கொண்டிருந்த பாஜகவுடன் உறவு கொள்ளாதவர்களும் எதிர்காலத்தில் நிச்சயமாக உறவு கொள்ள மாட்டார்கள் என்ற தெளிவும் கொண்டவர்களும் யாரெனக் கண்டறிந்து அவர்கள் ஒரு கூட்டணிக்குள் வர வேண்டும்.

தேர்தல் 24 ஆம் தேதி , இதற்குள் ஒரு கூட்டணி அமைக்கவா முடியும்? சாத்தியமில்லாத தகவல் இது என புறந்தள்ள வேண்டாம்.

மோடியின் வெற்றிக்குப் பின்னாலும் சரி. மோடியின் தோல்விக்குப் பின்னாலும் சரி, இந்தியாவிற்கு மோடி கும்பல் குழப்பங்களையும் கலவரங்களையும் உருவாக்கத்தான் போகிறார்கள். அப்போது தேர்தலுக்கு முன் உள்ள இன்றைய மோடியின் எதிர்ப்புற கூட்டணிகள் ஒன்றிணைந்து அதைச் சந்திக்குமா? நிச்சயம் சந்திக்காது. ஏனென்றால் இதற்கு முன் இது மாதிரி சந்தர்ப்பங்களில் இந்தக் கூட்டணிகள் தங்கள் சுயத்தை ஏற்கனவே காட்டி இருக்கிறார்கள்.

அதனால்தான் எதிர் வரும் காலங்களில் ஒரு தெளிவான பாசிஸ எதிர்ப்பு இயக்கங்களோடு சரியான கூட்டு முயற்சி நடந்தாக வேண்டும் என்று கருதுகிறேன்.

நிபந்தனையோடு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். நிபந்தனையோடு இப்பொழுதும் கூட்டணியில் இருக்கிறோம்என சாதுர்யப் பேச்சுப் பேசும் இயக்கங்களை ஒதுக்கிவிட்டுப் பிற உறுதியாக இருக்கக் கூடிய இயக்கங்களின் கூட்டணி அடையாளம் காட்டப் பட வேண்டும்.

குஜராத் போல வளர்ச்சித் திட்டம் நாடெங்கும் கொண்டுவரப்படும் என்ற நிதின் கட்கரி வார்த்தையின் பொருளைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மோடி எல்லா நேரங்களிலும் மனிதகுல விரோதியாகத்தான் இருந்திருக்கிறார். அவரை எனக்கு நண்பர் என்று சொல்கிறவர்களும் அவர் எனக்கு சகோதரர் என்று சொல்பவர்களும் எந்த நோக்கத்தில் இருக்கிறார்கள். என்ன சுயலாபக் கணக்கு போடுகிறார்கள் எனத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக மோடி வேரோடு அழிக்கப் பட வேண்டிய விஷ விருட்சம்.


அதே நேரம் மோடியென்ற பூச்சாண்டியைக் கண்டு பதறி ஓடி, “நீங்கள் காப்பாற்றுங்கள், நீங்கள் காப்பாற்றுங்கள்என்று சில கூடாரங்களுக்குள் தஞ்சம் அடைய எத்தனிப்பது மோடிக்கு நாம் வழங்கும் மகத்தான பகிரங்கமான ஆதரவாக அமையும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment