Tuesday, June 7, 2016

ஒரு சிறிய தொடரின் முன்வடிவம். ..!



மத, இன, மொழி அவற்றின் சிறுபான்மைப் பாதுகாப்பு என்ற எண்ணத் தூண்டல்களின் அழுத்தமான பாதிப்புகளினால், மீறி எழக்கூடிய ஒரு உத்வேகம் அரசியல் விற்பன மூளைக்கு மிக அவசியப் படுகிறது.
உலக வரலாற்றில் இந்தப் போக்கு மிகவும் தொன்மையானதுதான்.  ஆனாலும் காலங்காலமாகத் தொடரக் கூடிய கருத்தாக்கமும்தான்.
ஒரு தத்துவம் கோலோச்சும் போது அது, சில அடிமட்ட நபர்களை ஆட்சி புரியத் தொடங்கி விடுகிறது. பாதிப்புக்கு உள்ளாகும் அந்த அடிமட்ட மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று திரண்டு ஒரு சிறுபான்மைச் சமுதாயமாகிப் போராடத் தொடங்கி விடுவார்கள்.
சரித்திரம் இப்படிப் பலப்பலப் பிரச்சினைகளைத் தனது வளைந்த முதுகில் தூக்கிச் சுமந்து கொண்டே தொடர்கிறது.
சைவம், ஆட்சியைக் கைவசம் எடுக்கும் போது, வைணவம் சிறுபான்மைச் சமுதாயமாகி கல்லில் பிணைக்கப்பட்டு கடலில் வீசப் படுகிறது.
வைணவம் ஆட்சிக் கட்டிலில் ஏறும்போது, சைவம் சித்திரவதைக்குள் திணிக்கப் படுகிறது.
இந்த இரண்டும் சமரசம் செய்து கொண்டு ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும் போது, சமணம் கழுவேற்றப் படுகிறது. புத்தம் படு மோசமாகத் துரத்தப்படுகிறது.
பாதிக்கப்படுபவைச் சிறுபான்மையாகிப் போராட்டக் களம் காணும்.
இந்த வரலாற்று வழிப்படிதான் யூதம் தலைமை தாங்கும் போது, கிறிஸ்தவம் எதிர்த்து அணி திரளும்.
கிறிஸ்துவம் ஆதிக்கம் காணும் போது, இஸ்லாம் எதிர்ப்பு அணி சேர்க்கும்.
இவ்விதம்தான் ஒரு சுழற்சியாக உலக வரலாறு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது.
இதன் அடுத்த கட்டமாகத்தான் ஒவ்வொரு மதமும் மத வெறி ஆதிக்கத்துக்குள் தன்னைப் புகுத்திக் கொள்கிறது.
இப்படித் தலைப்படுவதில், அரசியல் தன்னைச் சுருட்டி மறைத்துக் கொண்டு
வெறித்தன விளைவுகளை மையப் படுத்துகிறது.
இவ்வளவு முன் பீடிகை போட்டு எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது.
நேரடியாக இப்போது நம் பிரச்சினைக்குள் நாம் குதித்து விடலாம்.
இந்திய மதங்கள் மேலே சொன்ன உலக வரலாற்று நிகழ்வுகளை சரியாகவே கடைபிடித்து வந்திருக்கின்றன.
கிழக்கிந்திய கம்பெனியாக வந்த வணிகக் கூட்டம் வந்த நூறு ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியத்தை ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டது.
வணிகக் குணாம்சமும் சாதுர்யமும் நிறைந்த அந்த வணிக ஆட்சி இந்திய
மக்களின் நாடி நரம்புகளை, அவற்றின் அத்தனைத் துடிப்புகளை நன்றாக அறிந்து வைத்திருந்தது.
அதனால் மக்களை தமது ஆதரவில் நிலைப்படுத்த முயற்சிப்பதை விடவும் ,
அவர்களைப் பிரித்தாண்டால் அவர்கள் தம் ஆதரவுக்குள் தானே வந்து விடுவார்கள் என்ற சாணக்கியத் தர்மத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
இந்திய உபகண்டத்தை தனது உள்ளங்கையில் உருட்டி விளையாடும் கோலி உருண்டைகளாகச் சுலபமாக மாற்றிக் கொண்டார்கள்.
துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த ஜாதிகளை ஒன்று திரட்டி பெரும்பான்மைச் சமுதாயம் என்ற வரையறை உருவாக்கப்பட்டது.
இந்த இந்துப் பெருங்குடி மக்களிடம், இந்து மதத்தின் மகத்தான, உயரிய மூத்த தாய்மதப் பெருமிதப் பண்பாட்டை எடுத்துச் சொல்லி அதன் ஆன்மிக
மேன்மையைப் பிரச்சாரப் படுத்தாமல், மூடி மறைத்து, எதிரே நம் மத எதிரி
ஆயுதத்தோடு திரிகிறான் பாருங்கள் எனும் பிம்பம் காட்டப்பட்டது.
அடுத்த மத எதிர்ப்புகளை உருவாக்கிப் பகைமைகளைப் படர விட்டுக் குரோதங்களையும் விரோதங்களையும் சகோதர இந்து மக்களிடம் தோன்றச் செய்வதில் R.S.S.போன்ற அமைப்புகள் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகின்றன. அதில் கணிசமாகத் தோல்வியும் காணுகின்றன.
உடனே ஒரு சாமர்த்தியத்தை மேற்கொள்கின்றனர். " இதுதான் இந்துத்துவா"
எனும் திருநாமமும் சூட்டி விட்டனர்.
இதற்குச் சற்றும் குறைவில்லாமல் முஸ்லிம்கள் இடையே, சில தீவிரவாத அமைப்புகள், சகோதர இந்துப் பெருங்குடி மக்களை எதிரிகளாகக் காட்டி "இதுதான் பூரணமான இஸ்லாம்" என்று ஏதோவொரு அருவருக்கத் தக்கத் தன்மையை தோன்றச் செய்கின்றனர்.
இந்துத்துவத் தீவிரவாதம் இந்து மதக் கோட்பாடுகளைச் சின்னாபின்னப் படுத்துகின்றன.
முஸ்லிம் மதத் தீவிரவாதம் இஸ்லாமியக் கொள்கைகளை அவமானப் படுத்துகின்றன.
இந்துக்களுக்கு முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கு இந்துக்கள், கொடூரமான எதிரிகளே அல்லர். மாறாக அக்கம் பக்கத்து அன்னியோன்னிய சொந்த உறவுக்காரர்கள்.
இந்த உன்னதத் தன்மையின் மீதுதான் இரு பக்கமிருந்தும் தீ மூட்டப் படுகின்றன.
இந்தியம் சுதந்திரம் பெற வேண்டுமானால் இந்தியா இரண்டாக வேண்டும்
அதற்குத் தேவையான அத்தனைக் காரணங்களும் ஏற்கனவே இங்கே தயாராக இருக்கின்றன என்கிற நடைமுறை உண்மையினை, உண்மைப் படுத்தியதுதான் இந்திய, பாக்கிஸ்தான் சுதந்திரச் சரித்திரம்.
இந்தியா ஒரு நாடு அல்ல. இது ஒரு உப கண்டம்(துணைக் கண்டம்) இந்தத் துணைக் கண்டத்திற்குள் ஓராயிரம் பிரிவினைகள் உண்டு. ஆனாலும் இப் பிரிவினைகளை எல்லாம் சம்மதித்துக் கொண்டே ஒன்றுபட்டதுதான் நம் இந்தியா.
இன்று கூட "நாங்கள் இந்தியர்கள் அல்லர்" எனக் கூறிக் கொண்டும் மோதிக் கொண்டும் இருக்கும் பிரதேசக்காரர்கள் நமது இந்தியத்திற்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நம் இந்திய அரசியல், அவர்களையும் அரவணைத்து நடைமுறைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த முன் காட்சிகளை நம் மனக் கண்முன் நிறுத்திக் கொண்டு 2016--ம் ஆண்டு நடை பெற்று முடிந்திருக்கும் தேர்தல் களத்தையும் அரசியல் இயக்கங்களையும் கவனித்துப் பார்ப்போம்.

No comments:

Post a Comment