Thursday, May 28, 2015

கவிஞர் பொதிகை ஹமீது...! (---2---)



சாகுல் ஹமீது சாஹிப், பச்சை இளம் பிறைக்கொடி மீதும் பச்சை வண்ணத்தின் மீதும் விடுபடுதல் அற்ற பாசமும் நேசமும் மிகைத்தவர்.

என் நினைவு சரியாக இருக்குமே யானால், நான் இங்கு குறிப்படுவது
உண்மையாகத்தான் இருக்கும்.

முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவர்கள் எவரின் இல்லங்களிலும்
பிறைக்கொடி பறந்ததே இல்லை, பலப்பல ஊர்களிலிருந்த தொண்டர் இல்லங்களையும், சாகுல் ஹமீது சாஹிபின் தென்காசி இல்லத்தையும் தவிர.

கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத்தின் இல்லத்திலும் இல்லை. தென்காசி மேடை முதலாளி மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப் (சாகுல் ஹமீது சாஹிபின் தந்தையார்) இல்லத்திலும் இல்லை. அப்துல் வஹாப் ஜானி சாஹிப் வீட்டிலும், சாகுல் சாஹிபின் அண்ணன் A.K.ரிபாய் சாஹிப் இல்லத்திலும் இல்லை, அப்துஸ் ஸமது சாஹிப் வீட்டிலுமில்லை, சுருக்கமாக எந்தத் தலைவர்கள் இல்லங்களிலும் இல்லை.

சாகுல் ஹமீது சாஹிப் ஆடைகளில் கூட எப்போதும் பச்சை வண்ணம்தான் பரிணமிக்கும். கடைய நல்லூர் கறீம் அண்ணன், சென்னை ஏழு கிணறு லீக் முஸ்தபா அண்ணன், தென்காசி வடகரை அப்பாஸ் அண்ணன் போன்ற லீகின் தொண்டர்கள் சதாகாலமும் பச்சை வண்ணத்துடனேதான் தம் வாழ் நாளில் நடமாடினார்கள்.

கட்சி அடையாளங்களை ஆடைகளில் தூக்கித் திரிவது ஓர் பாமரத்தன்மை, அல்லது அது திமுக பாணி என்ற ஏளனம்கூட இருந்தது. ஆனாலும் அது பற்றிய அக்கறையற்று, அக் கோலத்திலேயே இவர்கள் லீகர்களாக வாழ்ந்தார்கள்.

நெல்லையில் பிரமாண்டமான மாநில மாநாடு நடந்தது. ஆண்டு சரியாக என் நினைவில் தற்போது இல்லை. பிரமிக்கத்தக்க ஊர்வலம்.

ஊர்வல முன்பகுதியை ஆப்பனூர் லீகின் தொண்டர்கள் அலங்கரித்தனர். குறிப்பாக ஆப்பனூர் கா. பீரண்ணன் லீகின் பச்சிளம் பிறைக்கொடியைக் கம்பீரமாக ஏந்தி லீக் யூனிபார்மில் வீரநடை போட்டு வந்த காட்சியும், அவர் அருகில் அவர் மச்சான் ஆப்பனூர் காசிம் அண்ணன் வந்த கோலமும் இப்போதும் மனத்திரை ஓவியங்களாகக் காட்சிப்படுகின்றன.

மாநாட்டில், "இறைவனிடம் கையேந்துங்கள்" கவிஞர் அப்துஸ் ஸலாம் அண்ணனின் இசைக்குழு அல் அமான் கச்சேரி நிகழ்ந்தது.

அத்தனைப் பாடல்களும் கவிஞர் மட்டுமே எழுதியவை. போக்கு வரத்துச் செலவை மட்டுமே பெற்றுக் கொண்டு சுமார் 2/30 மணியளவுக் கச்சேரி நடத்தினர். என்னுடைய, கவிஞர் இஜட். ஜபருல்லாஹுவினுடைய வேண்டுகோளினால் கவிஞர் ஸலாம் அண்ணன் தானே நேரில் வந்து நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்கள்.

அல் அமான் இசைக்குழு நிகழ்ச்சியை கவிஞர் கிளியனூர் அஜிஸ் தொகுத்துத் தந்தார்.

மாநாடு மேலப்பாளையத்தில் நடந்தது. மாலையில் கவியரங்கம். கவியரங்கத் தலைமை வழக்கப்படி சாகுல் ஹமீது சாஹிப்தான் ஏற்றிருந்தார். மாவட்டத் தலைவரும், மாநிலப் பொருளாளரும் கூட அவரேதான்.

கவியரங்கில், தா. காசிம், வந்தவாசி வஹாப் சாஹிப், அரவாக்குறிச்சி
ஜாபர் அலி, நாகூர் இஜட். ஜபருல்லாஹ், அ. ஹிலால் முஸ்தபா, இன்னும் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர் சாகுல் ஹமீது சாஹிபைக் குறிப்பிடும் வேளையில் இப்படி நான் கவிமொழியில் குறிப்பிட்டேன்...

"பச்சையிலே தொப்பி
பட்டனிலே பிறைவடிவம்
தைச்சிருக்கும் சட்டையிலும்
வைச்சிருக்கும் பேனாவிலும் அதில்
வாய்த்திருக்கும் இங்கினிலும்
கச்சிதமாய்த் தோள்தொங்கும்
துண்டுக் கரையினிலும்
கட்டியிருக்கும்
எட்டுமுழ வேட்டிக் கரையினிலும்
சுற்றியுள்ள புறமெல்லாம்
பச்சையாய்ச் சூழ்ந்திருக்கும்

இந்தப் பச்சைப் பக்கிரியா
எங்கள் தாய்ச் சபையின்
திரவியத் திருக்காப்பாளர்?
அதனால்தான் தாய்ச்சபை
பற்றாக்குறை பட்ஜெட்டால்
திவாலாகிக் கிடக்கிறது!

இப்படி நான் கவிதை வரிகளைத் தொடங்கிய உடனே அதனைப்
பூரணமாக ரசித்துக் கரவொலி முதலில் எழுப்பியவர் எங்கள் சிறிய
தந்தையார் சாகுல் ஹமீது சாஹிப்தான். அவர் அப்படி ஒரு ரசனைக்காரர். மீண்டும் சொல் மகனே என என்னைத் தூண்டிவிட்டார்.


மற்றொரு கவியரங்கம்...

தென்காசி காட்டுபாவா பள்ளிக்கூட மைதானம். அங்கே மீலாது கவியரங்கம். சாகுல் ஹமீது சாஹிப் தலைமை.

தா.காசிம், அ. ஹிலால் முஸ்தபா, நாகூர் இஜட். ஜபருல்லாஹ், இன்னும் சில கவிஞர்கள் பங்கேற்றனர்.

அந்தப் பள்ளிக்கூடமும் மைதானமும் எனக்குப் பால்யப் பந்தம். நான் படித்த பள்ளிக் கூடம் அது. அந்தப் பழைய பிரமாண்ட புளிய மரம் பரப்பி நிற்கும் கிளைகளுக்குக் கீழேதான் கவியரங்க மேடை.

அந்தப் புளிய மரத்தின் மீது நாங்கள் ஏறிக்கொள்வோம். புளியம் பழங்களைப் பறிப்போம். எங்கள் தோழியர்கள் கீழே நிற்பார்கள்.

விழுகிற பழங்களைப் பொறுக்கிப் பாவாடையைச் சற்று உயர்த்தி அதில் பத்திரமாகப் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் எடுத்து வந்திருக்கும் உப்பு, வற்றல் இவற்றைக் கலந்து இடித்துத் தருவார்கள்.

அந்த நட்பையும் சுவையையும் இன்றும் மறக்க முடியவில்லை. இந்த நினைவைக் கவியரங்கத்தில் வாசித்தேன்.

"இந்த மைதானம்
நாங்கள் சடுகுடு பயின்ற
பர்ணசாலை
குற்றாலக் குரங்குகளும்
குதியாட்டம் போட
எங்களிடம்
பாடம் படிக்கும்
பருவம்!
கிளைகள் எங்கள்
கால்களில் கரங்களில்
சதுராடும்!

மரப் பழங்களெல்லாம்
மல்லாக்கத் தரைதழுவும்!
பழங்களைப் பவ்வியமாய்க்
கைப்பற்றி
பாவாடை மேல்தூக்கிப்
பவளக் கால் வெளிக்காட்டி
எங்கள்
பால்யத் தோழியர்கள்
பாவாடைத் தொட்டிலிலே
பக்குவமாய்ப் பதுக்குவார்கள்"

இப்படிப் பழங்கனவு விரிந்தது. சாகுல் ஹமீது வாப்பா கைதட்டி ரசித்தார்கள். மேடையில் என் தந்தையாரும் இருந்தார். புன்முறுவலில் ரசித்தார்.

கவியரங்கம் முடிந்து வீட்டிற்கு வந்தோம். அவ்வளவுதான் அங்கே புயல் வீசியது. எங்கள் சின்னம்மா என்னையும் சாகுல் ஹமீது வாப்பாவையும் ஏசித்தீர்த்து விட்டார்கள்.

"மேடையிலே பாவாடையைத் தூக்கிப் பவளக்கால் காட்டுணாங்கன்னு
சொல்லுறான். அவன் வாப்பாவும் சின்னவாப்பாவும் கைதட்டி ரசிக்கிறீங்க வெக்கமா இல்ல" இதுதான் சின்னம்மா விசனம்.

சாகுல் வாப்பா என்னிடம் சொன்னார்கள் "டேய் வாப்பா நீ இதுக்கெல்லாம் வருத்தப்படாதே. கவிதைக் கனவு அருமையாக இருந்தது. தொடர்ந்து தோன்றுவதை எல்லாம் எழுது" என்று.

கவியரங்கம் முடிந்து பேச்சரங்கம். காரைக்கால் பேராசிரியர் சாய்பு
மரைக்காயர் துணைவியார் பேராசிரியர் நஜ்மா பானு பேசத்தொடங்கினார். பேசும் முன் சாகுல் வாப்பா எழுதிய ஒரு கவிதையை இனிய இசைநயத்தில் பாடினார். அந்த அரங்கத்திற்கு அது முத்தாய்ப்பாய் இருந்தது.

சாகுல் வாப்பாவின் ரசனைப் பகுதி இது. சாகுல் வாப்பாவின் ஆக்ரோசப் பகுதி அடுத்து எழுதுகிறேன்.

No comments:

Post a Comment