Sunday, July 28, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?– 8


இரண்டாம் தாய் வீடு


என் குடும்பத்தாரின், என்னை சுற்றியுள்ள இன்னும் பலரின் அவநம்பிக்கைகளை முழுவதுமாக சுமந்துக் கொண்டே என் அண்ணாமலை வாழ்க்கை ஆரம்பமானது.

நான் அண்ணாமலையில் ஐந்தாண்டுகள் மாணவனாக இருந்தேன். எந்த ஆண்டிலும் வகுப்பறைக்குள் நான் கல்வி கற்றுக் கொண்டதில்லை. அதற்கு தேவையான கல்வியை ஏற்கனவே ஐயா ஜெபரத்தினம் அவர்களுடைய கண்காணிப்பில் கற்றுத் தேர்ந்திருந்தேன்.

புலவருக்குரிய நான்கு ஆண்டுகளும் தமிழ்த் துறை புலவர் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற முதல் மாணவனாக திகழ்ந்திருக்கிறேன்.(புகழ் அனைத்தும் இறைவனுக்கே).

ஆனால் அண்ணாமலை என்னும் ஞானக் களஞ்சியத்துக்குள் நான் அள்ளிச் சேர்த்த பொற்குவைகள் மகத்தான இறை பாக்கியங்கள்.

என்னமோ தெரியவில்லை என் உருவ தோற்றமா அல்லது வேறு காரணமா? தெரியாது. அண்ணாமலை ஹாஸ்டலில் சேர மனு போட்டேன். எனக்கு ஹாஸ்டலில் இடம் தர வில்லை. தவிர்க்க முடியாமல் சிதம்பரத்திலேயே அறை எடுத்து தங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன்.

முதல் நாள் வகுப்பறையில் மூன்றாம் பீரியட். வசீகரமான நிமிர்ந்த நடையும் அழுத்தமான பார்வையும் கொண்ட ஒரு ஆசிரியர் வந்து இருக்கையில் அமர்ந்தார். பாடம் நடத்தவில்லை. அந்த வகுப்பை அறிமுக வகுப்பாக ஆக்கிக் கொண்டார்.


"நான் உளுந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் உங்களுக்கு அபிராமி அந்தாதியை நான் எடுக்கப் போகிறேன்" என்றுத் தன்னைக் கூறிக் கொண்டார்.

அந்த வகுப்பறையில் மாணவ, மனைவியர் சேர்ந்து மொத்தம் அறுபத்தி எட்டு பேர் இருந்தோம்.

எங்களில் யாரையும் யாருக்கும் தெரியாது.

ஐயா உளுந்தூர்பேட்டை சு. அனைவரையும் பார்த்து ஒரே ஒரு கேள்விக் கேட்டார். "எதற்கு நீங்கள் தமிழ் படிக்க வந்தீர்கள்? எத்தனயோ பிரிவுகள் இருக்கின்றனவே அவற்றைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்தில் ஒரு வள வாழ்க்கை வாழலாமே?"  என்று கேட்டார்.

ஒவ்வொரு மாணவ மாணவியர் எழுந்து, முதலில் தங்கள் பெயரைச் சொல்லி அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட அவரவர் பெயரை மட்டும் உண்மையாக சொன்னார்கள். கேட்ட கேள்விக்கு தந்த பதில் மட்டும் "தமிழ் பற்றால் படிக்க வந்தோம்" என்று பஹிரங்கமான பொய்யைச் சொன்னார்கள்.

ஐயா சு., கேள்வி எனக்கு எரிச்சலைத் தந்தது. தமிழ்ப் படிக்க வந்தவனை ஏன் தமிழ்ப் படிக்க வந்தாய் என்று ஒரு தமிழ்ப் பேராசிரியர் கேட்பதா ?.. 

என் முறை வந்தது. எழுந்து நின்றேன். "என் பெயர் ஹிலால் முஸ்தபா. 
'என்னை நன்றாக இயற்கை படைத்தது.
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யும் மாறே' என்றேன்.

என் பதில் வந்தவுடன், அங்கிருந்த அத்தனை மாணவ மாணவியரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.

நான் சொன்ன இந்த கவிதை வரிகள் அவர்களுக்கு புரியவில்லை என்பதை நான் தெரிந்துக் கொண்டேன்.

ஐயா சு.ச மட்டும் மேஜையை தட்டி, "தோழரே திரும்பச் சொல்லுங்கள்" என்றார். நானும் சொன்னேன்.

சு. என்னிடம் கேட்டார், "நீர் என்ன நாத்திகரா? நெல்லை மாவட்டத்துக் காரரா?" என்று.

எனக்கு ஆச்சர்யமாக போய் விட்டது. என் மாவட்டத்தை எப்படி இவர் கண்டுபிடித்தார்.

வகுப்பு முடிந்தது, சு. வகுப்பறையை விட்டு சென்றார். நான் வகுப்பறையில் இருந்து எழுந்து சு. விற்கு பின்னல் சென்றேன்.

திரும்பிப் பார்த்த சு. நின்றார். நான் அவரிடம் கேட்டேன். "என்னை நாத்திகனா என்றுக் கேட்டது புரிந்துக் கொள்ள முடியும். ஏனென்றால் நான் சொன்ன கவிதை வரிகள் திருமூலர் சொன்ன திருமந்திரம்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்." இதிலுள்ள இறைவனை எடுத்து விட்டு இயற்கையை போட்டு உல்டாவாக சொன்னேன். அதனால் நாத்திகன் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் எப்படி என்னை நெல்லை மாவட்டத்துக் காரர் என்று கண்டுபிடித்தீர்கள்?" என்றுகேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "முறுக்கிய மீசை, உறுதியான சொல்லாடல் இது பாரதி மண்ணுக்காரனைத் தவிற வேறு எவனுக்கு இங்கே வரும்?" என்றார்.

ஆனால் அவர் மீசையை வளர்க்க வில்லை. என் முகத்தில் பதிந்திருந்த அவருடைய விழிகள் என் சட்டைப் பையை பார்த்தன. அங்கே சிசர்ஸ் சிகரெட் பாக்கெட்டும், தீப் பெட்டியும் துருத்திக் கொண்டிருந்தன. அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன்.

என்னுடைய இந்த கோலத்தை முழுமையாக ரசித்து, அங்கீகரித்துக் கொண்ட முதல் மனிதர் அவர்தான். அன்று தொடங்கிய எங்கள் உறவு, முப்பத்தி ஓராண்டுகள் தொடர்ந்து வந்தது. இன்று அவர் இல்லை. ஆனாலும் அவர் இல்லத்தில் தலைப் பிள்ளையாக அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

எங்களுடைய பேராசியர் டாக்டர். .சுப. மாணிக்கனார் முதலில் என்னை சந்தேகப் பட்டது போலவே, கடைசி வரை அண்ணாமலை வாழ்க்கை எனக்கு அமைந்து விட்டது. ஆனால் ஒரு பெரிய மாற்றம் . .சுப. அவர்களின் செல்லப் பிள்ளைகளில் நானும் ஒருவன். என்னை .சுப அவர்கள் மிகுந்த பாசத்தோடு எப்பொழுதுமே "டேய் தமிழ்த் துரோகி" என்றுதான் அன்பு கனிய அழைப்பார்.

ஐயா .சுப அவர்கள் உன்னதமான தமிழ் அறிஞர். வாழ்வில் பொய்யே சொல்லாத மகத்தான மனிதர். இதனால் அவர் வாழ்வில் இழந்த இழப்புகள் அதிகம்.

.சுப அவர்களுக்கு ஒரு பழக்கம். அவர் யாருக்கும் வணக்கம் சொல்வது இல்லை. பிறர் வணக்கம் சொன்னால், அவர் தலையாட்டுவார்.

இது ஒரு திமிர்த் தனமாக தோன்றும்.

நான் அண்ணாமலை சேர்ந்த புதிதில் அவரைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வேன். இது ஆசிரியர் மாணவர் இடையே நடக்கக் கூடிய நடப்பு தான். ஆனால் .சுப பதிலுக்கு தலையைத் தான் ஆட்டுவார். எனக்கு இந்த செயல் கோபத்தை மூட்டியது.

எனக்குள் இருந்த ஒரிஜினல் ஹிலால் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான். தினமும் காலையில் ஐயா அவர்களின் அறைக் கதவை திறந்து அவரை மாதிரியே அவரைப் பார்த்து தலையாட்டுவேன். அவர் சிரித்துக் கொண்டே பதிலுக்கு தலையாட்டுவார். நான் .சுபவின் வணக்க பாணி இப்படித்தான் என்று முடிவு செய்துக் கொண்டேன்.

ஒரு பத்து நாள் இது நீடித்து இருக்கும். பதினோராவது நாள் அவர் அறைக் கதவைத் திறந்து தலை ஆட்டினேன். அவர் என்னை உள்ளே அழைத்தார். நான் சென்றேன்.

 "இத்தனை நாள் நீ எனக்கு வணக்கம் சொன்னியா?" என்றார்.

"ஆம் ஐயா, உங்கள் பாணி வணக்கம் இது" என்றேன்.

"நான் உன்னிடம் வணக்கம் கேட்கவில்லையே" என்றார்.
"நீங்கள் பெரியவர், நான் மாணவன், நான் உங்களுக்கு வணக்கம் சொல்கிறேன்"
"இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளுவோம். நான் எவரையும் கையெடுத்து வணக்கம் சொல்வது இல்லை. எனக்கும் எவரும் அப்படி செய்யத் தேவை இல்லை. இதுதான் என்னுடைய பாணி" என்றார்.

நான் உள்ளபடியே அதிர்ந்து விட்டேன். ஒரு நிமிடத்தில் அவர் நாத்திகராகி என்னைப் பழைய பஞ்சாங்க ஆத்திகர் ஆக்கிவிட்டார். அன்றில் இருந்து ஐயா மீது அளவற்ற மதிப்பு வைத்தேன். அவர் என் மீது எல்லைக் கடந்த பாசம் வைத்திருந்தார்.

ஒருமுறை ஒரு விழாவுக்கு இணை வேந்தர் ராஜா முத்தையா செட்டியார் வந்திருந்தார். விழா மேடையில் ஏற்கனவே ஐயா .சுப அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். மேடைக்கு வந்த முத்தையா செட்டியாரும், அவர் பின்னால் வந்த துணை வேந்தர், ஆதி நாராயணனும், அமர்ந்திருந்த .சுப விற்கு கையெடுத்து வணக்கம் சொன்னார்கள். .சுப அமர்ந்த நிலையிலேயே அவர் பாணியில் தலையாட்டி பதில் சொன்னார். தமிழ்த் துறையின் தலைவர் தான் .சுப. இணை வேந்தர் ஆனாலும் சரி, துணை வேந்தர் ஆனாலும் சரி. கையெடுத்து வணங்குவது என் பழக்கமல்ல என்று நிரூபித்துக் காட்டிய .சுப அவர்கள் இன்றும் என் மனத் திரையில் அப்படியே இருக்கிறார்.

தனித் தமிழில் அழுத்தமானவர், எனக்கு தனித் தமிழ் கோட்பாட்டில் அன்றும் சம்மதம் கிடையாது. இன்றும் கிடையாது. ஆனாலும் என் மீது ஐயா அவர்கள் வைத்திருந்த பாசத்தின் காரணத்தால் "டேய் தமிழ்த் துரோகி" என்று என்னை அன்போடு அழைத்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

வாவா நகரம் என் சொந்த ஊர். தென்காசி பிறந்த ஊர். ஆனால் நான் இந்த ஊர்களில் வாழ்ந்ததை விட சிதம்பரத்தில் வாழ்ந்த காலம் அதிகம். ஐந்தாண்டுகள்தான் படிப்பு. ஆனால் பதினைந்து ஆண்டுகள் சிதம்பரத்திலேயே தங்கி வாழ்ந்திருக்கிறேன்.

உளுந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா அவர்கள் இல்லம், எங்கள் தாய் வீடு. எனக்கு முன் பத்தாண்டுகளுக்கு முன் படித்த நண்பர்களும், இதே நிலையில் ஐயா வீட்டைத் தாய் வீடாக் கருதி வந்துக் கொண்டிருப்பார்கள்.

தூத்துக்குடி பேரா. .சிவசுப்ரமணியம், நாகர்கோயில் பேரா. மு. ஆல்பன்ஸ் நதானியல், சென்னை ராமகிருஷ்ண தலைமை ஆசிரியர் அம்மையப்பன். தருமபுரி புலவர் நக்கீரன், வே.மு. பொதியவெற்பன், புலவர் தட்சிணாமூர்த்தி, இஞ்சினியர் செல்வகுமார், புலவர் கு. சங்கரன், ஓவியர் நாகு. நாகலிங்கம், சிதம்பரம் மௌன மட மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சுந்தர மூர்த்தி அடிகளார் போன்ற இவர்கெல்லாம் என்னுடைய தோழர்கள்.

என்னுடைய வகுப்பறைத் தோழர்கள் தில்லை. கலைமணி, அழகு பாண்டியன், ராமனுஜம் இப்படி நாங்கெளெல்லாம் ஐயா சு. இல்லத்தின் பாரம்பரியத்தை சார்ந்தவர்கள். இந்த நட்பு வட்டம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் இறைக் கருணையால் ஒருவருக்கொருவர் நட்புறவோடு நீடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று கூட பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

குறிப்பாக நான் என்னுடைய அன்பிற்கினிய அத்தனை நண்பர்களுக்கும் கடன்பட்டவனாகவே இன்றும் இருக்கிறேன்.

படிக்கிற காலத்தில் புலவர் கு. சங்கரனுக்கு திருமணம் நடந்தது. அவர் திருமண கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்கினேன். எங்கள் ஐயா கவிஞர் உளுந்தூர்ப் பேட்டை சண்முகம், பேரா. வெள்ளை வாரணனார், பேரா. வைத்தியலிங்கம், பேரா. சோ.ந. கந்தசாமி போன்ற எங்கள் ஆசிரியர் பெருமக்கள் எங்கள் எதிரில் அமர்ந்திருந்து இந்த கவியரங்கத்தை ரசித்து வாழ்த்தினார்கள்.

இரண்டாவதாக கும்பகோணத்தில் வே.மு. பொதியவெற்பன் திருமணம் நடந்தது. அங்கும் கவியரங்கம். அந்தக் கவியரங்கத்திற்கும் என்னையே தலைவராக பணித்திருந்தார். அடுத்து புலவர் தில்லை. கலைமணி கவியரங்கம். இதன் தலைமையும் எனக்கே தந்தார்கள்.

இந்த நிலையை நான் அடைவதற்கு ஏழாண்டுகளுக்கு முன்னால், தினத்தந்தி படிக்க தெரியாத அறிவிலியாக இருந்தேன். இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு தலைமுறைக்கு தேவையான அளவு வெறித்தனமாக படித்திருந்தேன்.


சிதம்பரம் என் இரண்டாவது தாய் வீடு. நெல்லை, சென்னை என்னை முட்டாளாகத் தான் வைத்திருந்தது. தில்லை என்னை நல்லபடி வார்த்தெடுத்து வெளிப் படுத்தியது.

No comments:

Post a Comment