Sunday, July 28, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? – 7


புலவனாக்கியது அந்த பத்து ரூபாய்!


ஒரு வழியாக நான் படித்தறியாத பள்ளிக் கல்வி தற்காலிக முடிவுக்கு வந்து விட்டது.

அடுத்த இரண்டாண்டுகள் பள்ளிக் கூடம் பக்கமே நான் போகவில்லை. ஆனாலும் இறை நாட்டம் என்னை படிப்பதில் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது.

மர்ஹும் கவிஞர் தா. காசிம் எனக்கு முழு நேர பரிட்சயம் கொண்டவராக மாறி இருந்தார். அவர் சுவாரஸ்யமாக கதை சொல்லுவார். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை அவர் சொல்லிக் கேட்க வேண்டும். சுந்தர சோழர் காலத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுவிடுவார்.

ரசனையான இடத்தில கதையை நிறுத்திக் கொள்வார். ஆர்வத்தோடு கதையை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டார். "உனக்கு கதை தேவை என்றால் இந்தா புத்தகம், இதற்கு மேல் இதில் இருக்கிறது. எழுத்துக் கூட்டி தப்புத் தப்பாக படித்தாலும், உன்னுடைய ஆர்வம் உன் வாசிப்பு அறிவை வளர்த்து விடும்" என்பார்.

அகிலனின் பாவை விளக்கு, . பார்த்தசாரதியின் பொன்விலங்கு - இப்படி என்னைப் படிக்க வைத்தவர் அவர்.

என்னுடைய படிப்பு, எனக்குள் வெறியாக மாறி விட்டது. ஒரு வருடத்திற்குள்ளாகவே, பெருமைக்கு சொல்லவில்லை, நூற்றுகணக்கான நாவல்களை படித்து முடித்து விட்டேன்.

எனக்குள் எங்கேயோ ஒரு மூலையில் கவிதை உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டு பிடித்தார். கவிதைப் பகுதிக்குள் என்னைத் தள்ளி விட்டார்.

இந்தப் பிரவேசமும் ஒன்றிரண்டு ஆண்டுக்குள் தற்கால இலக்கியங்கள், இடைக் கால இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கங்கைப் பிரவாகம் போல உள்வாங்கிக் கொண்டேன்.

தினத்தந்தி படிக்கத் தெரியாதவன் மூன்றாண்டுகளில் நற்றிணைக்கு, குறுந்தொகைக்கு, அகநானூருக்கு என் சகாக்கள் மத்தியில் உரை விளக்கம் தர ஆரம்பித்து விட்டேன்.

என் தோற்றத்திலும் மாற்றம் வந்து விட்டது. நான் என்னை ஒரு அந்தக் கால தமிழ்ப் பேராசிரியராக கற்பனை செய்து கொண்டேன்.

முறுக்கி விடப்பட்ட மீசை, சந்தனக் கலரில் புல் கை சட்டை, சிகப்பு கறைக் கொண்ட எட்டு முழ வேட்டி, ஒரு தோளில் ஒரு கை துண்டு.

கையில், தடித்த பெரிய சங்க இலக்கியத்தில் எதாவது ஒன்று. இப்ப நீங்களே ஒரு கற்பனை செய்துக் கொள்ளுங்கள். அவன் தான் ஹிலால்.

நான் சென்னையை விட்டு வாவா நகரத்திற்கு வந்து விட்டேன். ஆனால் எனக்குள் புலவராகும் வெறி. எப்படியாவது புலவர் பட்டயம் வாங்கியே ஆக வேண்டும். பள்ளிப் படிப்பு படிக்காதவன், எப்படி பல்கலைக் கழகத்துக்கு போவது?

மறுபடி செவன்த் படிக்க ஆசை வந்தது.

ஆனால் இப்போது என் கோலம் மேலே சொன்ன மாதிரி இருக்கிறது. ஒரு குக்கிராமத்து பள்ளிக் கூடத்திற்கு இது ஒத்துவருமா? நான் வெட்கப் பட வில்லை. சென்னை முத்தையால் பேட்டை பள்ளியிலிருந்து டி.சி வாங்கி  வந்தேன்.

வாவா நகரத்தில் ஹை ஸ்கூல் கிடையாது. பக்கத்தில் உள்ள பண்பொழிலில் தான் உயர்நிலைப் பள்ளி. அங்கே சேர முயற்சித்தேன். தலைமை ஆசிரியர் என் தோற்றத்தை பார்த்து மறுத்து விட்டார். அவர் எங்கள் உறவுக்காரர் தான். ஆனால் நான் விடாமல் குடும்ப செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்துவிட்டேன்.

முதல் நாள் பள்ளி வகுப்பறைக்கு சென்றேன். அது செவன்த். அந்த கிராமத்து பள்ளிக் கூடத்தில் மாணவப் பிள்ளைகளெல்லாம் தரையில் அமர்ந்திருந்தார்கள். என் மனதிற்குள் வெட்க உணர்வு. புலவராக வேண்டும் என்ற வெறி உந்தித் தள்ளியது.

செவன்த் Cக்குள் நுழைந்து விட்டேன். அமர்ந்திருந்த பள்ளிப் பிள்ளைகள் என் தோற்றத்தைப் பார்த்து எழுந்து நின்று "வணக்கம் ஐயா" என்றார்கள். வெட்கம் என்னை பிடிங்கித் தின்றது. ஆனாலும் என் படிப்பு வெறி குழந்தைகள் பக்கத்தில் போய் என்ன உட்காரச் சொன்னது. உட்கார்ந்து விட்டேன்.

ஆனாலும் இந்தக் கொடிய நிலை நீடிக்கவில்லை. மறுபடியும் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி.

எங்கள் தந்தையாரும் அப்போது ஹார்ட் அட்டாக் வந்து, வாவா நகரத்தில் தங்கி இருந்தார்கள்.

புலவர் வெறி விட்ட பாடில்லை. தினத்தந்தியில் ஒரு விளம்பரம் வந்தது. புலவர் நுழைவு தேர்வு எழுத பதினெட்டு வயது நிரம்பி இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எழுதலாம். கல்வித் தகுதி தேவை இல்லை. புலவர் பட்டய படிப்பிற்கு S .S .L .C பாஸ் பண்ணி இருக்க வேண்டும் அல்லது புலவர் நுழைவு தேர்வு வெற்றிப் பெற்றிருக்க வேண்டும் என்று இருந்தது.

எனக்கு உற்சாகம். இந்த அறிவிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருந்தது. அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம். இந்த இரண்டு மட்டும்தான் பல்கலைக் கழகமாக இருந்தன.

நுழைவுத் தேர்வு விண்ணப்பம் வாங்க தந்தையாரிடம் பணம் கேட்டேன். "பள்ளிப் படிப்பையே முடிக்காதவன், பல்கலைக் கழகத்தில் படிப்பதில் முறையல்ல" என பணம் தர மறுத்து விட்டார்கள். அன்று நான் மிக வேதனையில் நொந்து விட்டேன்.

எங்கள் குடும்பத்தில் கணக்கெழுதி வந்த பா.அருணாசலம் எனக்கு நெருக்கமான நண்பன். ஆனால் என்னைவிட பத்து வயது மூத்தவன். அவன் என்னுடைய ஆர்வத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டவன்.

என்னுடைய வேதனையைக் கண்டு அதைத் தன் வேதனையாக மாற்றிக் கொண்டான். இரவு ஒன்பது மணிக்கு வாவா நகரத்தில் இருந்து தென்காசிக்கு கடைசி பஸ். அருணாசலம் என்னை அழைத்துக் கொண்டு பஸ்சிற்கு வந்தான். "உன் வாப்பா இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். நீ நேரே திருநெல்வேலிக்கு சென்று உன் தாதாவிடம் சொல்லு. எல்லாம் நடந்து விடும்" என்றான்.

திருநெல்வேலிக்கு போக பணம் கிடையாது. அருணாசலம் அவன் சம்பளத்தில் வைத்திருந்த பத்து ரூபாயை எனக்குத் தந்தான். அன்றைக்கு பத்து ரூபாய் பெரிய பணம். வாவா நகரம் தென்காசி, தென்காசி திருநெல்வேலி செல்ல பஸ் டிக்கெட் போக மீதி ஒன்னேகால் ரூபாய் என் கைவசம் இருந்தது.

என் தாதாவை சந்தித்து சொன்னேன். எங்கள் தாதா உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய தொடங்கினார்கள்.

நெல்லை ஜான்ஸ் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவராக இருந்து ஓய்வுப் பெற்ற ஐயா அறிஞர் ஜெபரத்தினம் அவர்களிடம் என்னை ஒப்படைத்தார்கள்.

படிப்பறிவில்லாத எனக்கு, அதை தொடங்கி வைத்தவர் கவிஞர் தா.காசிம். ஓராண்டு காலம் என்னை அருகிலேயே வைத்து பக்குவப் படுத்திPh.D எழுதச் சொன்னாலும் எழுதி விடக் கூடிய அளவு என்னை தயார் படுத்தியவர்கள் ஐயா பேரா. ஜெபரத்தினம் அவர்கள்.

ஜெபரத்தினம் பிறப்பால் கிருத்துவர். ஆனால் நாத்திகர். அவர் சார்ந்திருந்த சர்ச் அவரை விலக்கி வைத்திருந்தது. ஐயாவின் மனைவி இறந்து பத்து ஆண்டுகளாகி விட்டன. தனியாகத் தான் இல்லத்தில் இருந்தார். என்னை தயார் படுத்த என்னோடே ஓராண்டு செலவு செய்தார். என்னுடைய நுழைவுத் தேர்வு அந்த ஆண்டு நடக்கவில்லை.

மறுஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு எழுதினேன். வெற்றிப் பெற்று விட்டேன்.

பள்ளிப் படிப்பிலேயே தகுதி இழந்த நான், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் படிக்க விண்ணபித்தேன். புலவர் படிப்பு நான்கு ஆண்டுகள். ஓராண்டு ஆசிரியர் பயிற்சி .M .B.B .S  போல ஐந்தாண்டு படிக்க வேண்டி இருந்தது.

நான் அண்ணாமலை சென்ற காலத்தில், தமிழ்த் துறைக்கு தலைவராக காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இருந்து தமிழ்ப் பேரறிஞர் .சுப.மாணிக்கானார் தலைமைப் பொறுப்பை ஏற்று இருந்தார். நான் புலவர் வகுப்பு சேர்வதற்காக சென்று அவரைச் சந்தித்தேன். அவர், "உனக்கு இங்கு இடம் இல்லை" என்று விட்டார்.

"ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, நிறைய பேர் இது அண்ணாமலை சர்வகலா சாலை அல்ல. அண்ணாமலை சர்வ கலாட்டா சாலை என்று அவதூறு சொல்கிறார்கள். உன் தோற்றத்தை பார்த்தாலே அது உண்மை தான் என்று காட்டிக் கொண்டிருக்கிறது."- என்று கூறி மறுத்து விட்டார்.

நான் ரொம்பத் தான் நொந்து போனேன். நேரே ஐயா ஜெபரத்தினத்திடம் ஓடி வந்தேன். நடந்த விஷயங்கலைச் சொன்னேன். ஐயா ஜெபரத்தினம் அவர்கள் என்னை அழைத்து கொண்டு சிதம்பரம் வந்தார்கள். பேராசிரியர் .சுப.மாணிக்கனாரை சந்தித்து "இவன் என் மாணவன், இவனை சேர்த்துக் கொள்ளும்வே" என்று சொன்னார்கள். அவர்கள் இரண்டு பேரும் அணுக்கமான நண்பர்கள் என்று புரிந்துக் கொண்டேன்.

ஒரு வழியாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புலவர் சேர்ந்து விட்டேன். என் மகிழ்ச்சிக்கு வானம் கூட அன்று எல்லையாக இல்லை.

இத்தனைக்கும் அடிப்படையில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் வாவா நகரத்தில் என் தோழன் அருணாசலம் தந்த பத்து ரூபாய். என்னைப் புலவனாக்கியது அந்த பத்து ரூபாய் தான்.

அந்த பத்து ரூபாயை கடைசி வரை நான் திரும்ப கொடுக்கவில்லை. இன்று அவனுமில்லை.


அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்தது அடுத்து!

No comments:

Post a Comment