Sunday, July 14, 2013

லைலா மஜ்னு - 1






யார் காணாமல் போனது?...

ரோஜா வனம்!

பசிய ஒரு முட்செடிக்கு மேல்
ஓர் ஒற்றை ரோஜா 
இதழ் விரித்து சிரித்து மலர்ந்திருக்கிறது!


இதழ்களில் பனிப் பொட்டுகள் 
பந்தி வைக்கப்பட்டு இருக்கின்றன
மஜ்னூன் விழிகள் பார்க்கின்றன!

அடடா!

"என் லைலா பூரித்துக் கிடக்கிறாள்!"        

இடையில் ஒரு வண்டின் ரீங்கார ஓசை!

"ஆர்ப்பரிக்கும் அலையின் ஓசைகளை 
உருட்டித் திரட்டி 
ஒரு குளிகையாக்கி 
என் செவிப் பறைகளுக்குள் 
இந்தப் பறக்கும் பாடகன் 
வந்து கொட்டுகிறானே!

ஐயையோ!
என் லைலா எனக்கு செய்தி சொல்லி அனுப்பிவிட்டாள்!"

"! லைலா!.. லைலா!

இந்த உச்சரிப்பில்
எங்கிருந்து இத்தனைச் சுவை
எனக்குள் நிரம்புகின்றன?"

"இந்த நறுமணத்தில் 
பிரபஞ்ச நெடிகளைத் தாண்டி 
சுவனத்து சுகந்தம் 
என் நாசிப் புலன்கள் முழுவதும் 
நிரம்புகின்றதே!

லைலாவின் வாசனை
என் நரம்புகளில்
புதையல்களாக
பொதிந்து விட்டனவே!”


"அம்மம்மா!

யாரென்னைத் தீண்டுவது?

இளங் காற்றா..? இசை ஊற்றா..?
நறுமணமா..? அமுத அருவியா..?
இது என்ன தீண்டல்..? இது என்ன தீண்டல்..?" 

மஜ்னூன் மூச்சி உள்சுருண்டு கொள்கிறது
தரை தாங்க.. விழி மூடிக் கிடக்கிறான்!  

வெளிப் புலன்களின் பயணம்
மஜ்னுவின் உள்புறம் பாய்ந்து விட்டது !

மஜ்னுவுக்குள் ஏகப்பட்ட ஒளிப் பிரவாகம்
பிடரி நரம்புகளுக்குப் பின் இருந்து
அவனுக்குள் நிரம்பித் தழும்புகின்றன!

இப்பொழுது அங்கே கிடப்பது
லைலாவா...? மஜ்னூவா...?    


1 comment:

  1. அழகி யவளைப் 'பற்றி' அழகிய தமிழில் ....அண்ணனின் வார்த்தைகள், ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றன. அநேகமாக அண்ணன் கல்லூரிக் காளையாக இருந்த நேரத்தில் எழுதிய ஆக்கம் என உணர்கிறேன்....வாழ்த்துக்கள்.

    ReplyDelete