Friday, September 23, 2016

அடையாளம் கரைந்த அவமானம்..!- 7 ஆ


மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு வரவேண்டிய கட்டாயம் எனக்கு வந்து விட்டது.
Atheequllah Abdul Ahad ஒரு பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் மூவரும் அப்துஸ் ஸமது சாஹிபிற்கு நெருக்கமானவர்கள்தாம். அவர்களைப் பற்றிச் சில தகவல்கள்.

திருப்பத்தூர் வீ. நூர் முஹமது அண்ணன் மிகச் சிறந்த புலவரும், கவிஞரும். கவிஞர் தா.காசிமிற்கு மச்சான் முறையாளர் ஈரோட்டுப் பெரியாரின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர்.
ராவணன் என்ற புனைபெயரில் விடுதலைப் பத்திரிகையில் ஏராளம் எழுதியவர். இவரின் இளமைத் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்தது. பழுத்த நாத்திகவாதி. நல்ல சொற்பொழிவாளர்.

புலவர் வீ. நூரண்ணனின் பிந்தைய வாழ்க்கை இஸ்லாத்தில் வலுவூன்றி நின்றது.
அப்துஸ் ஸமது சாஹிபின் அதி நெருங்கிய தோழர். அப்துஸ் ஸமது சாஹிபின் கடைசித் தம்பி இன்ஜினியர் யஹ்யாவுக்கு ஈரோட்டு கனீ ஹாஜியார் மகளாரைத் திருமணம் செய்வித்திருந்தனர். அந்த கனீ ஹாஜியார் வீ நூரண்ணனின் பலத்த ரசிகர். கீழக்கரை ஷுஐபு மவ்லானாவுக்கு மிக மிகப் பாசத்துக்குரிய நண்பர்.

அப்துஸ் ஸமது சாஹிபின் " அறமுரசு " பத்திரிகையின் வெளியீட்டாளரும், அப் பத்திரிகை அச்சு யந்திர உரிமையாயரும் புலவர் வீ.நூரண்ணன்தான். இதற்கான பொருள் உதவி முழுவதையும் இவருக்காகவே ஷுஐபு மவ்லானா வழங்கி உதவினார். புலவர் மிகப் பெரும் இலக்கிய விற்பன்னர்.

அப்துஸ் ஸமது சாஹிப் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து ஒரு முறை என்னிடம் குறிப்பிட்டுச் சொன்னார்.

அது நோன்புக் காலம். ஈரோட்டுக் கனீ ஹாஜியாருக்கும், அப்துஸ் ஸமது சாஹிபிற்கும் ஒரு விநோதத் திட்டம் உருவானது.
சென்னையில் இருந்து மதியம் 3 - மணியளவில் கனீ ஹாஜியார் A/c காரில் பெங்களூர் செல்ல வேண்டும். நோன்பு திறப்பதற்கு பெங்களூர் சென்று சேர வேண்டும். அன்று இரவு அங்கேயே தங்கி சஹர் உணவை முடிக்க வேண்டும். அன்று மதியம் மீண்டும் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மீண்டும் சென்னை வந்துவிட வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.

காரில் பேச்சுத் துணைக்கு வீ நூரண்ணனைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம்
என முடிவு செய்தார்களாம்.

சென்னையில் புறப்பட்டுப் புறவழிச் சாலையில் கார் நுழைந்தது. வீ.நூரண்ணன் நாலடியாரில் இருந்து ஒரே ஒரு நாலடிப் பாடலைப் படு சுவையாக விளக்க ஆரம்பித்தாராம்.

A/c கார் சென்று கொண்டே இருக்கிறது. நாலடியார் விளக்கம் வந்து கொண்டே இருக்கிறது.
நாலடியார் விளக்கம் முடியும் போது மூவரும் காருக்கு வெளியே கண்ணாடி வழிப் பார்க்கிறார்கள். பூங்கா நகராம் பெங்களூரில் கார் பவனி வந்து கொண்டிருக்கிறது.

கிட்டத் தட்ட மூன்றரை மணி நேரம் ஒரு பாடலுக்கு வீ.நூரண்ணன் விளக்கம் சொல்லி வந்திருக்கிறார். நாலடியாரில் நான்கு அடிப் பாடலுக்கு இத்தனை விளக்கம்.

"அந்த நாலடியில் எவ்வளவு செய்திகள் இருக்கின்றன பார்த்தீர்களா?" எனறு அப்துஸ் ஸமது சாஹிபிடம், கனீ ஹாஜியாரிடமும் வீ.நூரண்ணன் கேட்டாராம்.

அதற்கு அப்துஸ் ஸமது சாஹிப், பதில் சொன்னாராம், "அந்த நாலடியாரில் இவ்வளவு செய்திகள் இல்லை. இந்த நாலடியாரிடம்தான் அத்தனைச் செய்திகளும் ஒளிந்து கிடக்கின்றன!" எனறு கூறி வீ.நூரண்ணனைச் சுட்டிக் காட்டினாராம், அப்துஸ் ஸமது சாஹிப்.
புலவர் வீ.நூர் முஹமது அண்ணனின் உயரம் ஏறக் குறைய நாலடிதான் இருக்கும்.

என்.பி.ஷெய்கு அப்துல் காதர்.

சிறந்த எழுத்தாளர். ஆங்கில மேதை. பர்மாவில் பணி புரிந்து விட்டுத் தாயகம் தமிழகம் வந்தவர். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியர் குழுவில் சில காலம் பணி புரிந்தவர். அப்துஸ் ஸமது சாஹிப் அணுக்கத் தோழர்களில் ஒருவர்.

"அண்ணல் எனும் அழகி முன்மாதிரி"என்ற அதி அற்புதமான பெருமானார் வரலாற்றுத் தொடரை அப்துஸ் ஸமது சாஹிப் மணிவிளக்கு மாத இதழில் தொடராக எழுதி வந்தவர்.
அண்ணலார் வரலாற்றை திரு மறையின் தகவல்களை மட்டும் வைத்து எழுதப் பட்ட தமிழில் வந்த ஒரே வரலாற்றுத் தொடர் அதுதான். ஆனால் ஒரு வேதனை இத் தொடர் இன்னும் கூட நூலாகவில்லை.

மணிவிளக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு பாரம் ( 16 பக்கங்கள் ) எழுதுவார்.அந்தப் பதினாறு பக்கங்களிலும் எந்த விளம்பரங்கள் வந்தாலும் கடுமையாகக் கோபப்பட்டு விடுவார். இயல்பாகவே மகா முன்கோபக்காரர்.

அபிராமம் துபாஷ் தாஜுதீன் அண்ணனுக்கு மைத்துனர் முறைக்காரர். ஷெய்கு அப்துல் காதரின் மகனாருக்குத்தான் துபாஷ் தாஜுதீன் அண்ணன் தன் மகளாரைத் திருமணம் செய்து வைத்து, அவருக்குச் சம்மந்தியாகவும் இருந்தார்.

அஜீஸுர் ரஹ்மான் அட்வகேட்.

ஷரியத் விஷயத்தில் மகாக் கறாரானவர். நூலிழை பிசகு கூட ஷரியத் விஷயத்தில் குறிக்கிட ஒரு போதும் அனுமதியாதவர். அப்துஸ் ஸமது சாஹிப் ஷரியத் பிரச்சினைகளில் குழப்பம் தெளிய இவரிடம் ஆலோசனை கலப்பது உண்டு.

ஒரு முறை " என் அறிவிற்கு உட்பட்ட நிலையில் குர்-ஆனின் இந்தச் சூராவிற்கு இதுதான் பொருள் " என பிறை ஆசிரியர் அப்துல் வஹாப் சாஹிப் மணிவிளக்கில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட சூராவைப் பற்றி எழுதி இருந்தார். அது பிரசுரம் ஆகி விட்டது.

அஜீஸுர் ரஹ்மான் மணிவிளக்கைத் தூக்கிக் கொண்டு மரைக்காயர் லெப்பைத் தெருவில் இருந்த அப்துஸ் ஸமது சாஹிப் அலுவலகத்திற்கே வந்து விட்டார். அப்துஸ் ஸமது சாஹிப் முன்பிருந்த மேஜையில் சற்று ஆவேசமாகத் தூக்கி வீசினார்.

அப்துஸ் ஸமது சாஹிபிற்கு விஷயம் புரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்டார்.
"அட்வகேட் சாஹிப்,பொறுமையாளர் பக்கம் அல்லாஹ் இருக்கிறான். உட்காருங்கள் உட்காருங்கள் என்றார். அஜீஸுர் ரஹ்மான் அமைதியாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்.
"என் அறிவுக்கு உட்பட்ட வகையில் என அப்துல் வஹாப் சாஹிப் எழுதி உள்ளாரே இது சரியா?" என்று சத்தமாகக் கேட்டார்.

"சரியாகத் தானே இருக்கிறது"என அப்துஸ் ஸமது சாஹிப் சொன்னார்.

"தப்புச் செய்யாதீர்கள் அப்துஸ் ஸமது சாஹிப்," என்று மீண்டும் அஜீஸுர் ரஹ்மான் சொன்னார்.

மேலும் விளக்கத் தொடங்கினார்.
"என் அறிவிற்கு உட்பட்டுக் குர்-ஆனுக்குப் பொருள் சொல்லுகிறேன் என்று சொன்னால் குர்-ஆனை அளக்கும் அறிவு இவர் அறிவா? குர்-ஆனை அளக்கும் அறிவு எவருக்கும் இன்னும் வழங்கப் படவில்லை.

அப்துல் வஹாப் சாஹிப் அறிவின் ஆணவத்தில் எழுதி விட்டார்.

"அல்லாஹ் எனக்கு வழங்கி இருக்கும் இந்தச் சிந்தனைக்கு இப்படிப் புரிகிறது எனப் பணிவாக எழுதி இருக்க வேண்டும்"என அஜீஸுர் ரஹ்மான் சொன்னார்.

இப்படி எல்லாவற்றிலும் நூல் பிடித்துப் பார்ப்பவர் அஜீஸுர் ரஹ்மான்.

No comments:

Post a Comment