Saturday, May 7, 2016

காத்துக் கொள்வோம்...!



ஒரு சமூகம் ஒரு இயக்கத்திற்கு நன்றி செலுத்துவதையே வாழ்வின் தீராக் கடமையாக மேற்கொள்ள வேண்டும் என்கிற பிரச்சாரம் ரசக் குறைவானது. அவலமானது.

நன்றி என்பது எப்போதுமே ஒருவழிப் பாதையல்ல. ஒருவர் பெற்றிருக்கும் உதவிக்குத் திரும்ப நன்றி செலுத்துவது ஒரு சடங்கல்ல. அது வாழ்வின் பண்பாட்டுத் தளத்தில் எழும் அற்புத உணர்வு.

இஸ்லாமிய சமுதாயம், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதுமே நன்றிக் கடன்பட்டிருக்கிறது. நன்றிக் கடன் செலுத்துவது இந்தச் சமூகத்தின் கடமை என்பது போல ஒரு பிரச்சாரம் வலுவாக அண்மைக் காலங்களில் செய்யப்படுகிறது.

நன்றிக் கடன் செலுத்துவது, இஸ்லாமியப் பண்பாட்டு அழகு. இதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் நன்றிக் கடன் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்ற திணிப்பு அடிமைச் சாசனத்தின் முத்திரையாகும்.

தி.மு. வின் வரலாற்றைத் துவக்கத்தில் இருந்து உற்றுப் பார்க்கும் போது, இஸ்லாமியச் சமுதாயத்திற்குத், தி.மு.. இன்றும் நன்றி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது என்னும் பென்னம்பெரிய உண்மையைக் காண முடியும்.

இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டுமானால் பெரியாரின் திராவிடக் கழகம் தொட்டு, இஸ்லாமியச் சமுதாயத்திற்கு நன்றி தெரிவிப்பது நீண்டு கிடப்பதைப் புரிய முடியும்

இந்த இரு இயக்கங்களும் பலப்பல வேளைகளில் மூச்சுத் திணறித்
திண்டாடிக் கொண்டிருந்த நேரங்களில், அவர்களுக்கு கைலாகு கொடுத்துத் தூக்கி விட்ட பணியை இஸ்லாமியச் சமுதாயம் செய்திருக்கிறது.

தி. மு. விற்கு ஆரம்ப கால மேடைகளைத் தமிழகம் முழுவதும் நிரம்ப அமைத்துக் கொடுத்தது இஸ்லாமியச் சமுதாயம்.

நூற்றுக்கணக்கான மீலாது மேடைகளில், அன்றையத் தி. மு. வின் முன்னணித் தலைவர்களை மேடை ஏற்றி, அவர்களுக்குப் பெருமிதத்தை வரவழைத்துத் தந்தது, இஸ்லாமியச் சமுதாயம்.

அன்றையக் கால கட்டத்தில் தி. மு. வின் இயக்க மேடைகளுக்குக் கூடப், பொருளாதாரப் பின்புலமாக இருந்தது, இஸ்லாமியச் சமுதாயம்.

மேடையேறிப் பேசியச் சாதுர்யப் பேச்சற்றலால்தான் திரையுலகில் பிரகாசித்தது. மக்கள் மன்றத்தில் கம்பீரம் காட்டியது. பின்னர் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளே குடியேறும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப் பிரமாண்டத்திற்கு அடியிலே இஸ்லாமியச் சமுதாயத்தின்
உழைப்பும், பொருளாதாரமும் விரிந்து குவிந்து கிடக்கிறது.

இந்தத் தள்ளப்பட முடியாத தர்ம நியதியைத் தி.மு. விற்குள் சொல்லிக் காட்டி அன்றும் அவர்கள் வளர்க்கப் படவில்லை.இன்றும் அவர்கள் நினைவு கூர்ந்து கொண்டிருக்கவில்லை.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னால் இஸ்லாமியச் சமுதாயத்திற்குத் திமுக, அங்கும் இங்குமாகச் செய்த கொசுரு சலுகைகளை இந்தச் சமுதாயத்திற்கு நாம் சொல்லிக் காட்டிச் சொல்லிக் காட்டித் தி.மு. விற்கு நாம்தாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்பதை நாமே நமக்குள் வற்பறுத்தி வந்திருக்கிறோம். இதுதான் கண்ணியம் எனவும் ஒப்புக் கொள்ளத்
தள்ளப்பட்டிருக்கிறோம் .

நன்றி செலுத்துவது மானுட நாகரீகத்தின் உச்சம். நன்றி பாராட்டல்
ஒரு கடமை என்னும் பாணியில் அடிமைப் பட்டயம் எழுதித் தொங்க விட்டுக் கொள்வது அநாகரிகத்தின் அவலம்.

பரஸ்பரம் உதவிக் கொண்டிருக்கிறோம்.இதுதான் சரித்திரச் சாட்சியம்.
ஒருவருக்கொருவர் நன்றி செலுத்திக் கொள்வோம்.அதுதான் நல்லதொரு நடைமுறை.

ஆனால் இந்தக் கண்ணியத்தைக் குலைத்து, நாம் மட்டுமே அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என்ற அபரிமிதமான அடிமைத்தனம் அருவருப்பானது.

காயிதெ மில்லத்தின் இறுதிக் காலக் கட்டம். ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நேரம்.

படுக்கை நிலையில் காயிதெ மில்லத்துக்கு நினைவுகள் வந்தும் போயும் இருந்து கொண்டிருந்த வேளை. அன்றையத் தமிழக முதல்வர் கருணாநிதி, காயிதெ மில்லத்தைப் பார்க்க வந்திருந்தார்.

காயிதெ மில்லத்திற்குச் சற்று நேரத்திற்கு முன்னர்தான் நினைவு வந்திருந்தது. முதல்வர் கருணாநிதியைப் பார்த்த காயிதெ மில்லத்,

" இந்தச் சமுதாயத்திற்கு உங்கள் அரசு செய்த உதவிகளுக்கு
இந்தச் சமுதாயத்தின் சார்பாக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்"

என்று காயிதே மில்லத் கூறினார்கள். கருணாநிதி, காயிதெ மில்லத் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
இக் காட்சியை நாமே பல மேடைகளில் இஸ்லாமியச் சமுதாயம்
தி.மு. விற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது எனக்கூறி, கருணாநிதியின்
கையைப் பற்றி ஒப்படைத்து விட்டார்கள் சமுதாயத்தை எனப் பேசிப் பேசி இந்தச் சமுதாயத்தைத் தி.மு. விற்கு அடிமைப் படுத்திவிட்டோம்.

காயிதெ மில்லத் தன் கடைசிக் காலத்திலும் ஒரு கண்ணிய நடைமுறையைச் செய்து காட்டினார்கள். அது இஸ்லாத்தின் அழகியலும் கூட.

அடுத்தடுத்து வந்த நமது அரசியல் நடைமுறைகள் தி.மு. விற்கு
இந்தச் சமுதாயம் கடன்பட்டிருக்கிறது என்னும் ஒருவழி நடைமுறையை எழுதிக் கொடுத்துக் கைகட்டி குனிந்து நிற்கிறது.

தி.மு., இந்தச் சமுதாயத்திற்கு நிரம்பவே நன்றிக் கடன் பட்டிருக்கிறது. இந்தச் சமுதாயமும் தி.மு. விற்கு நன்றி சொல்ல உடன்பட்டிருக்கிறது.

காயிதெ மில்லத்திற்கு அடுத்தடுத்து வந்த முஸ்லிம் லீகின் தமிழகத்
தலைவர்கள் தி.மு. வின் தலைவர் கருணாநிதியோடு நல்லதொரு
இணக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

மர்ஹும் தலைவர் திருச்சி அப்துல் வஹாப் ஜானி சாஹிப், கருணாநிதியை நேரிலேயே "கலைஞர் பாய்" என்று அழைப்பார்.

மூத்த நம் தலைவர்கள் இந்தக் காட்சிகளை ரசிப்பார்கள்.கருணாநிதியும் ரசனையோடு சேர்ந்து கொள்வார்.

மர்ஹும் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், இன்னும் நெருக்கமாகக்
கருணாநிதியுடன் உறவாடுவார். இரு தலைவர்களும் அமர்ந்திருக்கும் பொழுது, ஸமது சாஹிப் தன் கால்மேல் கால் போட்டு அமர்ந்து சரளமாகப் பேசிக் கொண்டிருப்பதை நானே பல முறைப் பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது.

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெரு, முஸ்லிம் லீக் தலைமையகத்தில் ஒருநாள் காலையில் சுமார் 10 மணி இருக்கலாம்,
தொலை பேசி ஒலித்தது. நான்தான் ரிஸிவரை எடுத்தேன். தி.மு..
அலுவலகத்தில் இருந்து நீல நாராயணன் பேசினார்." ஐயா, உங்கள் தலைவருடன் எங்கள தலைவர் பேச விரும்புகிறார்.இணைப்புத் தாருங்கள்"எனக் கேட்டுக் கொண்டார்.

நானும், தலைவர் ஸமது சாஹிபிடம் தொலை பேசியைக் கொடுத்தேன்.தலைவர் ஸமது சாஹிப் பேசத் துவங்கினார்.

அந்தக் காலக் கட்டத்தில், கருணாநிதி போன் பேச ஆரம்பிக்கும் போது,
" நான் மூ கா பேசுகிறேன்." என்றுதான் ஆரம்பிப்பார். ( இன்று எப்படியோ தெரியாது. )

வழக்கப்படி, எதிர் முனையிலிருந்து கருணாநிதி " மூகா
பேசுகிறேன்" என்று ஆரம்பித்தார். தலைவர் ஸமது சாஹிப் அதற்கு, " எதற்குச் சிரமப்பட்டு மூக்கால பேசுறீங்க வாயாலேயே பேசுங்களேன்" என்றார்.

எதிர் முனையில் கருணாநிதி சிரித்த சிரிப்பின் ஒலி இங்கே உள்ள தொலை பேசியில் எதிரொலித்ததை நாங்கள் எல்லோரும் கேட்டோம்

இப்படி தலைவர்களுக்கிடையே அப்படியொரு அன்னியோன்யம் இருந்தது. இன்று அப்படி இல்லை.அதனால்தான் அன்று தோழமையோடு இருந்தோம். இன்று ஆண்டான் அடிமையாக இருக்கிறோம்.

( அண்மையில் தலைவர் ஸமது சாஹிபின் மகளார் என் இனிய தங்கையார் பாத்திமா முஸப்பர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அவரைக் கட்டி அணைத்து முஸாபா செய்தார். ஜெயலலிதாவை இப்படித் தழுவிய பெண்மணி இவர் ஒருவர்தான்.

தங்கைக்குப் பாராட்டுகள். நான் தங்கையின் அரசியல் அணுகு முறைக்கு முற்றிலும் மாறானவன். )

தி.மு. வோ, தி.மு. தலைமையோ முஸ்லிம் லீகாவோ, முஸ்லிம் லீக் தலைமையாகவோ பரிமாற்றம் ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்...

No comments:

Post a Comment