Thursday, January 29, 2015

குற்றம் காணவில்லை... கூடவே வலிக்கிறது...!



சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள L.I.C. 14மாடிக் கட்டிடத்தின், மேல் அடுக்கில் தீப் பற்றிக் கொண்டது.

அப்போது அங்கு நிகழ்ந்த சம்பவம் அனைவரின் நெஞ்சத்தையும் உருக்கியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த ஆண் பெண் முதியவர்கள் எரிந்த கட்டிடத்தைப் பார்த்து குமுறிக் குமுறி அழுதார்கள்.

தங்கள் சொந்தக் குடிசை முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்ட  வேதனையில் கதறி அழுதார்கள். ஐம்பது ஆண்டுகளாக அதனுடன் பழகிவிட்ட பரிதவிப்புப்தான் இதற்குக் காரணம்.

சென்னை மூர் மார்க்கெட் தீக்கிரையாகி விட்டது.அங்கேயும் அதை அண்டிக் கிடந்த பாமர மக்கள் தங்கள் சொத்தே அழிந்ததுபோல் அலறித் துடித்தார்கள்.

சென்னை மாநிலக் கல்லூரியை மாற்றித் தலைமைச் செயலகம் கட்டும் ஏற்பாடு செய்ய முற்பட்டபோது பல முதியவர்கள் வெம்பி வெம்பி வெடித்தனர்.

இதெல்லாம் ஏன் நிகழ்ந்தது?

நீண்ட காலத் தொடர்புடைய ஒன்று முற்றிலுமாக மாற்றம் பெறும்போது
பழகிய உறவு வதைபடத்தான் செய்யும். மாற்றத்தில் ஒரு நியாயம் இருந்தாலும் அதனால் நிகழும் வலியிலும் நியாயம் நிரம்பவே இருக்கும். அதனால்தான் பழகிய ஒன்றை முற்றாக மாற்றாமல் புதுப்பிக்க முனையவேண்டும்.

இந்த வேதனை, 8-மரைக்காயர் லெப்பைத் தெரு கட்டிடத்தைப் பார்த்ததும் எனக்குள் குதிபோட்டது.

குறைந்த பட்சம் காயிதெ மில்லத்தின் வாழ்காலத்தில் வைக்கப்பட்ட கட்டிடத்தின் பெயர்கூட காணாதபோது கஷ்டமாகவே இருந்தது.

கே.டி.எம். அஹமது இபுறாஹிம் மன்ஸில் என்றபெயரைக்கூட நாம் எதற்கு மாற்ற வேண்டும்?

யார் இந்த கே.டி.எம்.?

காயிதெ மில்லத்தின் தம்பி. அதனால் அவர் பெயரை வைக்கவில்லை. அவர் மாநில முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளர். வழக்கறிஞர். முஸ்லிம் லீகின் சட்ட திட்டத்தை (பைலா)உருவாக்கத்தின் முக்கியப் புள்ளி.

அவர் நேர்மையை ஒரு அணுயளவு கூட எவரும் சந்தேகிக்க முடியாது. அவரே செயற்குழுவில் சொல்லுவார் " நான் என் வாழ்வில் லீக்கைத் தவிர
வேறு எந்தக் கட்சியிலும் இருந்ததேயில்லை. காயிதெ மில்லத் கூட
பழைய காங்கிரஸ்காரர்தான்" எனக் கூறுவர்கள். இவர் காயிதெ மில்லத்தின்
உடன் பிறந்த தம்பிதான்.

நான் ஒரு முறையீடாக இதைச் சொல்ல வில்லை .என் வலியை இறக்கி வைத்தேன் அவ்வளவே.

எம்.ஜி.ஆர். ஒரு நகைச்சுவைப் புரட்சி செய்தார் . தெருப் பெயரில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கிவிட்டால் ஜாதியம் மறைந்துவிடும் என்பதுபோல் நம்பி
ஒரு கூத்தாட்டுச் செய்தார்.

மரைக்கயார் லெப்பைத் தெருவில் லெப்பை ஜாதிப் பெயர் ஆகிவிட்டதாம்
எனவே மரைக்காயர் தெருவானது. அதுபோல் கிருஷ்ணமாச்சாரியார் தெருவில் ஆச்சாரியார் நீக்கப் பட்டு கிருஷ்ணமா தெருவானது.

மாற்றம் என்பது இம்மாதிரி அதிநவீனமாய் இருக்கத்தான் வேண்டுமா?
கே.டி.எம். அஹமது இப்றாஹிம் மன்ஸில் இந்தப் பெயர் காயிதெ மில்லத் அனுமதியுடன் வைக்கப் பட்ட பெயர்.

இதில் நிகழ்ந்துள்ள மாற்றம் கொஞ்சம் வலி தரத்தான் செய்கிறது.

இந்தப் பதிவில் எந்த உள் நோக்கமும் கிடையாது. அப்பட்டமாகத்தான் இதைச் சொல்லுகிறேன்.

No comments:

Post a Comment