Sunday, June 22, 2014

சமமான தராசுத் தட்டுகள்..!


இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஒரு எளிய வேண்டுகோள்.

நம்மில் பலர் வளமையாகச் சில முடிவுகளுக்கு உடனடியாக வந்துவிடுகிறார்கள்.

ஒன்றை சொல்பவன் அல்லது எழுதுபவன் தருகிறத் தகவல்களைத் தகவல் என்ற அடிப்படையில் புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தகவலைத் தந்தவனின் பெயரையும், பிற அடையாளங்களையும் வைத்து அவனை ஒரு மதத்துக்கோ அல்லது ஜாதிக்கோ உரியவனாக்கி அவன் தரும் தகவலை அறிகிற வாசகர்கள் அவனை ஜாதி வெறியனாக்கி அல்லது மத வெறியனாக்கிப் புரிந்து கொள்கிறார்கள்.

இப்படி ஒரு அடையாளப் படுத்தலோடு இந்தக் கட்டுரையினைப் புரிந்து கொள்ள வேண்டாம் என முன்மொழிந்து கொள்கிறேன்.

மதம், வெறியூட்டப் படுவதற்கு மிகச் சரியான ஒரு கருவி. மதத்தை அரசியல் படுத்துவது மனித குலத்துக்கு ஒரு சுலபமான நடவடிக்கை.

ஈராக் இன்று ஒரு புதிய போர்க்களத்துக்குத் தயாராக்கப்படும் பிரதேசமாகக் காட்டப்படுகிறது.

சதாம் உசேனை தொலைத்து விட்ட ஈராக் அந்த நாளில் இருந்தே நிம்மதியை நழுவவிட்ட நாடாகத்தான் இருக்கிறது.

சதாம் உசேனின் அமெரிக்க எதிர் நடவடிக்கையை ஒரு பயங்கரவாதம் போல முன்னெடுத்து அமெரிக்க வல்லரசு, சில அரபு நாட்டுத் துணைகளுடனே ஈராக்கைக் கலவர பூமியாக்கி இரத்தக் காட்டேறி போல மாறி ஈராக்கிய இரத்தத்தை உறிஞ்சியது.

அமெரிக்க ஆதரவோடு ஈராக்கில் ஒரு ஆட்சி முறை வழங்கப்பட்டது.

இன்று இந்த ஆட்சி முறைக்கு எதிராக ஒரு புரட்சி தலைதூக்கும் போது அந்தப் புரட்சிக் கருத்துடையவர்களை மத வெறியர்களாகச் சித்தரிக்கிறார்கள்.

ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் களத்தில் இறங்கி விட்டதாக உலக வரம்புக்குச் செய்திகள் தரப்படுகின்றன.

அதாவது அமெரிக்காவை ஆதரித்தால் அவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்ட முஸ்லிம்கள். அமெரிக்கக் கோட்பாட்டை முறியடிக்க முயல்கின்றவர்கள் மதவெறி முஸ்லிம் தீவிரவாதிகள். இதுதான் அமெரிக்க ஃபார்முலா.

இந்தியாவில் மோடியுனுடைய நேர்மை மீது நம்பிக்கை வைக்கும் முஸ்லிம்கள் புதிய, நவீன மதச் சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்கள்தான் இன்றைய இந்திய முஸ்லிம்களின் அடையாளம் என்பது மோடி முன்வைக்கும் நவீன ஃபார்முலா.

இந்த அணுகுமுறை முஸ்லிம்களுக்கு எதிரான தூண்டுதல் என்ற தகவலை முன்வைத்து போராட்ட வியூகம் வகுக்கும் முஸ்லிம்கள் பிற்போக்கான மத வெறி கொண்ட தீவிரவாத முஸ்லிம்களாக அடையாளம் காட்டப் படுகிறார்கள்.

இந்த இடத்தில் நடத்தப்படும் சதியின் வடிவத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய ஷியாப் பிரிவு முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கைக் கொண்ட பிரிவினர் மோடியை, அவர் அரசியல் நேர்மையை, ஆளும் திறமையை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஷியா முஸ்லிம்களை தரக் குறைவாக விமர்சிக்க முடியாது. அது அவர்களின் அரசியல் பார்வை.

மோடியின் கடந்த கால வரலாறு வெளிப்படையாகவும், நடைபெற்றுக் கொண்டு இருக்கக் கூடிய அவரின் இன்றைய வரலாறு திரை மூடிய சீரழிவாக இருக்கக் கூடிய வாய்ப்பாகவும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும் என்று புரிந்து கொண்டு மோடியை விமர்சிக்கும் முஸ்லிம்கள் மத வெறியர்களாகவும், தீவிரவாதிக் கும்பல்களாகவும் காட்டப்படுகிறார்கள்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மோடி அரசின் ஒரு செய்தி நமக்குத் தகவல் தருகிறது.

மதரசாக்களை நவீனப் படுத்துவோம், முஸ்லிம்கள் மீது இந்த அரசுக்கு ஆழமான அக்கறை இருக்கிறதுஎன்று மோடி அறிவித்து இருக்கிறார்.

மோடி சொல்லுகின்ற நிமிடத்திற்கு முன்பு வரை, முஸ்லிம்களின் மதரசாக்கள் பழமை வாதத்திலும் அறியாமைக் கால அசட்டுத்தனத்திலும் கிடந்து கொண்டு இருப்பது போன்ற ஒரு எண்ணத்தை இந்திய மக்கள் மனதில் மோடி அரசு பிரபகண்டா படுத்துகிறது.

சரி, மதரசாவை நவீனப்படுத்த என்ன மாதிரியான திட்டங்கள் வைத்து இருக்கிறார்?..

அந்தத் திட்டங்கள் ஐரோப்பிய அறிவியல் பாணியிலான திட்டமா? அல்லது மனுதர்மத்தில் இருந்து எடுக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட திட்டமா?

அல்லது கிறிஸ்தவப் போதனைகளில் இருந்து எடுக்கப்பட்ட அதி நவீனத் திட்டமா?.. அல்லது புத்தக் கோட்பாட்டில் இருந்து பொறுக்கி எடுத்துத் தரப்பட்டத் திட்டமா?.. அல்லது சமண தத்துவத்தில் இருந்து தயாரிக்கப் பட்டத் திட்டமா? ஒரு வேளை ஆர்.எஸ்.எஸ். யுடைய பிதாமகர்கள் முன்வைக்கும் இந்துத்துவத் தத்துவ விசாரணைகளில் இருந்து தயாரிக்கப் பட்ட நவீனத் திட்டமா?

இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பப்படும் பொழுது இவைகளில் எதுவுமே நிச்சயமாக இருக்காது என்று என் போன்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

மதரசாக்கள் இஸ்லாமிய நெறிமுறைக்கு உட்பட்டது. அதனை நவீனப் படுத்த இஸ்லாத்தில் இருந்துதான் கோட்பாடுகளை எடுத்தாக வேண்டும். மோடி நிச்சயம் இந்த அறிவு நிலையில் தெளிவாக இருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு விரோதமாக மோடி செயல்பட மாட்டார். அவரைப் பொருத்தவரை எல்லா மதத்தவர்களும் அந்தந்த மதத்தில் பேணுதலாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளத் திட்டத்தைதான் மோடி கைவசம் வைத்து இருக்கிறார்.

இதில் இருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது?..

மோடியை அதிகளவில் ஆதரிக்கும் ஷியா முஸ்லிம்கள்தான் முஸ்லிம்கள். அல்லாதவர்கள் தாலிபான் பெற்றெடுத்துப் போட்டு இருக்கக் கூடிய தீவிரவாத மதவெறி முஸ்லிம்கள். இதற்கு மதரசாக்கள்தான் காரணமாக இருக்கின்றன. எனவே இந்த மதரசாக்களில் நவீனமய சிந்தனை தேவைப்படுகிறது. இந்தத் தேவையை மோடியின் முஸ்லிம்களான ஷியாக்களின் மதரசாக்களில் இருந்து தத்துவங்களைப் பெயர்த்தெடுத்து மற்ற மதரசாக்களில் புகுத்தி நவீனப் படுத்த ஒரு திட்டம் மோடியின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்ற சிந்தனை எம் போன்றோருக்கு ஏற்படுகிறது.

ஒருக்கால் இப்படி நடந்து விட்டால், இந்திய முஸ்லிம்களின் அடுத்து வரும் வரலாறும் நிகழ்வுகளும் எப்படி இருக்கும்?..

படிப்பவர்கள் பதிவு செய்யுங்கள்.

மதரசாக்கள் நவீனப்படுத்துவது இருக்கட்டும். பழமையே இல்லாத அதி நவீன இந்து வேதப் பாடசாலைகளில்மோடி மேலும் நவீனப்படுத்த திட்டம் வைத்து இருக்கிறாரா?.. என்ற எதிர்மறைக் கேள்விகளை முன்வைத்து நான் விமர்சிக்க தயாரில்லை.

மதங்கள் என்ற பெயரில் ஷியாக்களையும் சன்னி முஸ்லிம்களையும் வைத்து ஈராக்கில் அமெரிக்கா எப்படி அரசியல் நடத்துகிறதோ அந்த அரசியலைத்தான் இந்தியாவுக்குள் மோடி அமைதியாகச் சாதிக்க முனைகிறாரோ? என்கிற கருத்து என் போன்றவர்ளுக்கு எழுகிறது. இது தவறானதாகவும் தெரியவில்லை. குற்றமானதாகவும் படவில்லை.

புதிய தராசில் ஒரு தட்டு அமெரிக்கா, மறு தட்டு மோடி இந்தியா. அப்படி என்றால் தராசைத்தூக்கிப் பிடிக்கும் கரம் யாருக்குச் சொந்தமானது?..

No comments:

Post a Comment