Tuesday, June 3, 2014

ஸ்ரீருங்கேரி மடம் ஒரு சிறந்த உதாரணம்..!


சங்கர மடம் இந்தியாவில் மொத்தம் ஆறிடங்களில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இந்த ஆறில் ஒன்று ஸ்ரீருங்கேரி சாராதா பீடம் என்கிற சிறப்போடு திகழ்கிறது. ஸ்ரீருங்கேரி கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

1790 ஆண்டுகளில், ஸ்ரீருங்கேரி மடத்துக்கு நிகழக் கூடாத பெரும்பிழை ஒன்று நிகழ்ந்துவிட்டது.

பக்திபீடங்களாகவும் ஆன்மிகத் தலைமையகமாகவும் இருக்க வேண்டிய மடங்கள் தரமிழந்து சாதாரண குடும்பங்களில் நிகழ்ந்து விடக் கூடிய வாரிசுரிமை, சொத்துரிமை சிக்கல்களில் சிக்கித் திணறியது.

ஸ்ரீருங்கேரி சாரதா மடத்தின் தலைமைப் பீடத்தை அலங்கரித்த மடாதிபதிக்கு மடத்துக்குள்ளே பெரும் பகை மூண்டுவிட்டது.

இந்தப் பகை ஒரு கட்டத்தில் மடாதிபதியைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. இன்னொருவர் அந்தப் பீடத்தைக் கைப்பற்றச் சதியும் நடந்தது.

அங்கீகரிக்கப் பட்ட ஒரிஜினல் மடாதிபதி சாரதா பீடத்தைவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பி ஓடிவிட்டார்.

சாரதா பீடத்தைக் கைப்பற்றிய போலி மடாதிபதி பீடத் தலைமையை ஏற்று அவருக்குரிய பணியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

தலைமறைவாகி உயிருக்கு பயந்து பதுங்கி இருந்த ஒரிஜினல் பீடாதிபதி சில காலங்கள் மறைந்து இருந்துவிட்டு அன்றைய அரசாட்சி புரிந்த மன்னரிடம் அடைக்கலம் அடைந்தார்.

சாரதா பீடத்தில் தனக்குள்ள அதிகார உரிமைக்குரிய ஆவணங்களை மன்னனிடம் சமர்ப்பித்து நீதி தேவை என்று முறையிட்டார்.

மன்னன் தரப்பட்ட ஆவணங்களை ஆழமாகப் பரிசீலித்து இவர்தான் ஒரிஜினல் பீடாதிபதி என்ற முடிவுக்கு வந்தான்.

பதவி இழந்திருக்கும் சாரத பீடாதிபதி மன்னனிடம்,

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், எவ்வித வெறுப்புமின்றிப் பிரஜைகளின் பிரச்சனைகளைப் பரிசீலித்து நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய ஆதிகாரத்தில் இருக்கிறார். நீதி எக்காரணத்தினாலும் வரலாற்றில் அவமானப் பட்டு விடக் கூடாது. ஆகவே தெளிவாகத் தேர்ந்து நீதி வழங்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.

அந்த மன்னனும் நீதிக்குப் புறம்பான எதையும் செய்தறியாத பேராளன். எனவே சாரதா பீடத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய போலித் தலைவரை முற்றுகையிட்டு கைது செய்து ஒரிஜினல் தலைவருக்கு அந்தப் பொறுப்பை வழங்கினான்.

இந்தத் தகவல் சாரதா பீடத்திற்கு உள்ளே நுழைவாயிலில் நன்றி உணர்வின் பெருக்கால் அந்தப் பீடாதிபதியால் பதிவு செய்யப் பட்டது. காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் நடத்தும் ஆட்சியாளன், அவனுக்கென்று ஒரு தனிக் கொள்கைகள் மதக் கடைபிடுப்புகள் இருக்கலாம். ஆனால் அதை அவன்தான் பின்பற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஆட்சிகுட்பட்ட பிரஜைகளிடம் அது பற்றிய கணக்குத் தீர்ப்பை பயன்படுத்த கூடாது.

தனிப்பட்ட மன்னனுக்கு மதம் இருக்கலாம். அரசாட்சி புரியும் நீதி பரிபாலன மன்னனுக்குப் பிரஜைகளின் மதங்களில், உரிமைகளில் தன் கோட்பாட்டைத் திணிப்பது என்பது மிகவும் கொடூரமானது.

மதமாச்சரியங்களால் பிரஜைகளிடம் மாறுபட்டு ஒரு மன்னன் நடப்பானேயானால், ஒரு தனி மனிதன் ராஜதுரோக குற்றம் செய்தால் அவன் எப்படிக் கருதப் படுவானோ அவனுக்கு எந்த அளவு உச்சகட்ட தண்டனை தர முடியுமோ அதைப் பெறும் குற்றவாளியாகத்தான் அவன் இருக்க முடியும்.

ஆன்மீக பீடங்களின் தலைமை, அல்லது மத பீடங்களின் தலைமை, ஆட்சி அதிகாரத்திற்குள் தலை நுழைத்து தங்கள் கோட்பாட்டுக்களை அங்கே நுழைத்தால் அவர்களும் ராஜ துரோகத்திற்குரியவர்கள்தாம்.

சாரதா பீடத்தினுடைய தலைமைப் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து மதமாச்சரியங்களின்றி நீதி வழங்கிய அந்த மாமன்னன் மைசூர் வேங்கை தீரன் திப்பு சுல்தான்தான்.

அதே நேரம் மன்னன் வழங்கிய நியாயத்தை மதிப்போடு ஏற்று தர்மபரிபாலனம் செய்த பீடாதிபதி சாரதா மடத்தின் நுழைவாயிலில் நன்றி பெருக்கோடு இதைப் பதிவு செய்து இருக்கிறாரே அந்த மகானும் சரித்திரத்தின் மேலான சிறப்புக்குரியவர்.

அரசியல் அமைப்பும் , மத பீடங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்ரீருங்கேரி சங்கர மடமான சாரதா பீடத்தின் அந்த தலைவர் ஒரு முன்மாதிரி.

இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி. ஆறு சங்கர மடங்களில் மற்றொரு மடமான பூரி கோவர்தன பீட சங்கராச்சாரியார் நிசலானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், அரசியல் சாசனத்தில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய 370 சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று கோரி, பாஜக உறுப்பினரைப் போலவும், ஆர்.எஸ்.எஸ் ஊழியனைப் போலவும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

மதபீடங்கள் அரசியலுக்குள் வரத் துவங்கிவிட்டன. அரசியல் மதபீடங்களுக்குள் சுற்றுலா வர துவக்கம் நிகழ்ந்து விட்டது.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்கும் என் அரசுஎன்று அறிவித்த மோடியின் ராஜபரிபாலனம் துவங்கிவிட்டது.


No comments:

Post a Comment