Monday, March 17, 2014

வாக்கு வழிபாடு...!


மார்ச் 13 ஆம் தேதி தி இந்துவில் (தமிழ் நாளிதழ்) ஒரு செய்தி.
பணம் வாங்காமல் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மக்களுக்குக் கொண்டு செல்லச் சத்தியாகிரக இயக்கத்தினர் ஒரு நூதனமானப் பிரச்சார முறையை மெரினா கடற்கரையில் கையாண்டனர்.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த பொது மக்களின் கால்களில் விழுந்து பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையைப் பிரச்சாரப் படுத்தினார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் தொடங்கி வைத்தார். சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராம கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான நிர்வாகிகள், மற்றும் ஐம்பது கல்லூரி மாணவர்கள் இந்த காலில் விழும் கலாச்சாரத்தைப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

இந்த அமைப்பு கடந்த பத்தாண்டுகளாகவே பொது மக்கள் காலில் விழுந்து இப்படிப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்கிறது. இந்த அமைப்பில் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கிறார்களாம். இதுவரை ஐம்பத்தியொரு லட்சம் நபர்கள் காலில் விழுந்து இவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்களாம்.

மேலே சொன்ன தகவல்களை தி இந்து பத்திரிகை படத்துடன் செய்தி பிரசுரித்து இருக்கிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலும், தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிப்பதைச் சுயமாகத் தீர்மானிப்பதும் ஜனநாயகக் கடமை ஆகும். இந்த நெறிமுறைகளை ஒரு பாமர மனிதன் தொடங்கி படித்தறிந்திருக்கும் பாமரன்வரை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கும், ஜனநாயக அரசியல் இயக்கங்களுக்கும் முழுவதுமான பொறுப்பாகும்.

ஒரு சட்ட நடைமுறையைக் கடைப்பிடிக்க வணக்க வழிபாடு நடத்தி, பூஜை புணஸ்கர நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கெஞ்சிக் கூத்தாடி செயல் படுத்த முற்படுவது கேலிக்கூத்தானது மட்டுமல்ல. கேடுபாடு நிறைந்த கேவலமுமாகும்.

ஜனநாயக விழிப்புணர்வுக்குரிய நடைமுறை நிச்சயமாக இது இல்லை. கடந்த பத்தாண்டாகச் சத்தியாகிரக இயக்கத்தினர் இந்த காலில் விழும் கலையைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள் என்ற கணக்கைப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

சுமாராக ஐம்பத்தொரு லட்சம் பேர் அதாவது ஒரு கோடியே இரண்டு லட்சம் பாதங்களைப் பணிந்து வணங்கிக் கேட்டு இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒரு வாக்குக்குச் சுமார் ஆயிரம் தொடங்கி ஐயாயிரம் ரூபாய் வரை வழங்கி இருக்கிறார்கள். கால் கொண்ட கடவுளர்கள்வாங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரனமாக அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஃபார்முலாவாக அறிமுகம் ஆகி இருக்கிறது.

ஐம்பது லட்சம் ஆதரவாளர்களைப் பெற்றிருக்கும் சத்தியாகிரக கால் விழு கலாச்சாரம் என்ன சாதித்து இருக்கிறது? பாதத்தில் கை வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட பரிதாபத்தைத் தவிர வேறெதுவும் பலிதமாகி விடவில்லை.

இதுமாதிரி வினோத நடவடிக்கைகள், கேளிக்கைகளாகத்தான் அல்லது கேலிக் கூத்தாகத்தான் இருக்க முடியுமே தவிர திருத்தத்தைக் கொண்டு வரும் தெளிவாக அது இருக்க ஒரு போதும் வாய்ப்பில்லை.
பிரச்சாரம் என்பது தெளிய வைக்கும்., புரிய வைக்கும் அறிவு பூர்வமாண நடவடிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறைப் படுத்த சில காலங்கள் தாமதமானாலும் கூட அந்த நடவடிக்கைத்தான் நேர்மையான ஜனநாயக நடைமுறை.

ஆனால் காலில் விழும் கலாச்சாரத்தில் ஒரு கொடூரம் 1967, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது நடந்தது.

விருது நகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் வேட்பாளராக நின்றார். அந்தத் தொகுதி அவரின் சொந்தத் தொகுதி. அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் விருது பட்டி என்று குறிக்கப்பட்ட ஒரு பட்டி விருது நகர்என்ற தொழிற்மயமான நகராக மாறியது.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நலிவுற்றுக் கிடந்த கொடிய நிலை நீங்கி வர்த்தகத்திலும் தொழிற்துறையிலும் முன்னுக்கு வர பெரிதும் காரணமாக இருந்தவர் காமராஜர்தான்.

அந்த பலனடைந்த சமூக மக்கள் கணிசமான அளவில் வாழும் நகரும் விருது நகர்தான்.

ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அந்தத் தொகுதியில் 1967 இல் தோற்றுப் போனார்.

அவரைத் தோற்கடித்தவர் தமிழகத்தின் பென்னம் பெரிய அரசியல் தலைவர் அல்லர். அரசியல் ஞானமும் அனுபமும் கைவரப் பெற்றவர் அல்லர். கல்லூரியில் மாணவராக இருந்து அப்போதுதான் வெளிவந்த பெ.சீனிவாசன் என்ற மாணவர்தான் அவர்.

பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து அண்ணாதுரை இந்த மாணவரை நிறுத்தினார்.

தி.மு.க வின் மாணவர் அமைப்பு பெ.சீனிவாசனுக்கு வாக்குக் கேட்டுத் தொகுதிக்குள் இறங்கியது.

அப்படி வாக்குக் கேட்டு வந்த மாணவர்கள் ஒவ்வொரு வீட்டின் பெற்றோர்களிடமும் நெடுஞ்சாணாக காலில் விழுவார்கள். எங்களுக்குச் சத்தியம் செய்து தந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம் என்று முரண்டு பிடிப்பார்கள்.

எல்லா வீடுகளிலும் எப்படியும் ஒரு மாணவன் இருப்பான். அந்த மாணவனின் தலையில் கை வைத்து பெ. சீனிவாசனுக்கு வாக்குத் தருவோம் எனச் சத்தியம் செய்தால்தான் நாங்கள் எழுவோம் என்று சாதித்து வாக்குகளை பெ.சீனிவாசனுக்கு ஆதரவாகத் திரட்டி காமராஜரைத் தோற்கடித்து விட்டார்கள்.

தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் அண்ணாதுரை அறிக்கை விட்டார். பெருந்தலைவர் காமராஜர் தோற்றிருக்கவே கூடாது. என் மனம் மெத்த வேதனைப் படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் சட்டமன்றத்தில் பெ.சீனிவாசனுக்குத் துணை சபாநாயகர் பதவி தரப்பட்டு இருந்தது. இந்தப் பெ.சீனிவாசன் பின்னாளில் ஒரு நடிகையோடு வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது வேறு கதை.

காலில் விழுந்த கலாச்சாரம் திராவிட பாரம்பரியத்தால் கற்றுத் தரப்பட்டு ஒரு மகத்தான தவறைப் புரிந்த வரலாறு தமிழகத்தில் நடந்தது.
அதே காலில் விழும் கலாச்சாரம், ஒரு நல்லது செய்ய நினைப்பதாக கையாளப்படும் பொழுது இதுவும் தவறாகத்தான் சென்று முடியும்.
கால வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் கற்காலம் நோக்கி காலில் விழும் கலாச்சாரத்தைக் கொண்டு செல்வது எந்தக் காரணத்திற்காகவும் நல்லதல்ல.

__________________________________________________________________
கீழே தரக்கூடிய செய்தி மேலே சொன்ன செய்திக்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் ஒரு சந்தேகத்திற்குரியது.

பெருந்தலைவர் காமராஜர் இந்தத் தேர்தல் (1967) காலத்தில் நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்என்று எப்பொழுதும் பயன்படுத்தாத வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மறைந்த சமுதாயக் கவிஞர் தா.காசிம் காமராஜரின் இந்த வார்த்தையைக் கடுமையாக ஆட்சேபித்தார். உரிமைக் குரல் வார இதழில் ஒரு கண்டனக் கவிதை எழுதினார். அப்போழுது அவர் எங்களிடம் சொன்னார்,
காமராஜர் மீது நான் அறம்பாடப் போகிறேன். அறம் பாடுவதற்குச் சில இலக்கண வரம்பு விதிகள் இருக்கின்றன. பன்னிரு பாட்டியல் இது பற்றி விளக்கி இருக்கிறது.

பாலதானம்
குமாரதானம்
அரசதானம்
மூப்புதானம்
மரணதானம்

இப்படித் தானங்கள் அமைத்துப் பாடப்படுபவரின் பெயரின் முதல் எழுத்தை எந்த தானத்தில் வைத்து பாடப்போகிறோமோ அந்தத் தானத்திற்குப் பொருத்தமாக, அமங்கல சொல்லை அமைத்து பாட வேண்டும். இது ஒரு மாந்திரீகம் போன்ற கலை.

கவிஞர் காசிம் அந்தப் பாடலை மூப்புதானம் வைத்து எழுதினார்.
அந்தப் பாடல்

படுத்துக் கொண்டு ஜெயிக்கப் போற ஆள பாருங்க..என்று தொடங்கும்.
இடையில் அமங்கலச் சொல்லான காலொடிந்து வீடடங்கி கிடக்கப் போறாருஎன்ற வரியைப் போட்டு அந்தப் பாடலை நிறைவு செய்து இருந்தார்.

எனக்கு இந்த அற விவகாரங்களில் அன்று நம்பிக்கைக் கிடையாது.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்துக்குத் திருநெல்வேலி சென்று திரும்பிய காமராஜர், ஒரு விபத்தில் சிக்கி கால் எலும்பில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டு படுக்கையில் படுத்து விட்டார். அதன்பிறகு அந்தத் தேர்தலில் எங்கும் பிரச்சாரம் செய்ய இயலவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. அதன்பின் காங்கிரஸ் இன்று வரை எழுந்திருக்கவில்லை. காமராஜரும் அதன் பிறகு விருது நகர் தொகுதியில் நிற்கவில்லை. நாகர்கோயில் பாராளுமன்றத் தொகுதிக்குச் சென்று ஒரு முறை நின்று வென்றார். டில்லி சென்றார்.
அப்பொழுது காங்கிரஸ் இரண்டாக உடைந்துவிட்டது. காங்கிரஸின் கால் முறிந்து விட்டது. ஸ்தாபன காங்கிரஸில் காமராஜர் இருந்தார். இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.


மீண்டும் சொல்லுகிறேன் இது கொசுறு செய்திதான். கவிஞரின் அறம் காலை ஒடித்தது என்பது என் வாதம் அல்ல. எப்படியோ கால் ஒடிந்தது. காங்கிரஸ் அரசு இழந்தது. கவிஞர் பாடலும் வெளியில் வந்தது. இந்த ரகசியம் என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

No comments:

Post a Comment