Wednesday, December 4, 2013

சங்கடம்தான்

சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் – 3


விடுதலைக் காலத்து இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தனித்தன்மை தழும்பி நின்றது. அரசியல் தெளிவு இருந்தது. மார்க்க ஞானமும் மதிக்கத் தக்க விதத்தில் மலர்ந்திருந்தது.

அகில இந்திய முஸ்லிம் லீக் பலப்பல பெரும் தலைவர்களின் வழிகாட்டலில் திகழ்ந்திருந்தது. கிலாஃபத் இயக்க அறிஞர்களின் கவனிப்பில் வளர்ந்து வந்தது. இந்தியச் சுதந்திரக் காலக் கட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பை முஹம்மதலி ஜின்னாஹ் ஏற்றிருந்தார்.

முஹம்மதலி ஜின்னாவின் தோற்றத்தில் இஸ்லாமியக் கோலத்தைக் காண முடியாது. ஒரு பிரிட்டானிய பிரபுத் தோற்றம்தான் முஹம்மதலி ஜின்னாவைப் பார்க்கும் பொழுது தோன்றும்.

இஸ்லாம் மார்க்கத்தின் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இவைகளும் முஹம்மதலி ஜின்னாவின் நடைமுறை வாழ்க்கையில் காணக் கிடைப்பதில்லை.

இஸ்லாத்தைப் பொறுத்தளவிலே, ஜின்னாஹ் புதியதாக வந்த தலைமுறையைச் சார்ந்தவர்தான். ஜின்னாவின் தந்தையார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைத் தொடர்ந்து ஜின்னா வருகிறார். ஜின்னாவின் மகளார் இஸ்லாத்தில் இல்லை. ஜின்னாவின் இஸ்லாமியக் குடும்பத் தொடர்ச்சி அவர் மகளாரோடு முடிந்து விட்டது.

ஜின்னாவின் மகள் பார்ஸியைத் திருமணம் செய்துக் கொண்டவர். அவர்தான் பாம்பே டையிங்கின் அதிபர். அதாவது இன்றைய பாம்பே டையிங்கின் வாதியா குடும்பத்தினர் ஜின்னாவின் பேரப் பிள்ளைகள்.

ஜின்னாவின் மனைவியார் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஜின்னா குஜராத்திக்காரர். காந்தி அடிகளும் குஜராத்தி.

ஜின்னா என்கின்ற பெயர் முஸ்லிம்களின் அடையாளப் பெயர் அல்ல. குஜராத்தி மொழியில் நெட்டையன் என்று பொருள். ஜின்னா குடும்பத்திற்கு நெட்டையன் குடும்பம் என்று பெயர். காந்தி என்பதும் குடும்பப் பெயர்தான். நேருவுக்குக் கூட நெஹ்ரு என்ற சொல் ஏரிக்கரைக்காரர் என்று அர்த்தம் கொள்ளும். இது கஷ்மீரிய மொழி.

ஜின்னா முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார். ஜின்னாவைப் பொறுத்தளவில் ஆழமான இறை நம்பிக்கை இருந்ததில்லை என்று கூட சொல்லுவது உண்டு.

இந்தியாவில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பைச் சார்ந்தவர்கள். முஹம்மதலி ஜின்னா ஷியாக்கள் பிரிவைச் சார்ந்தவர். ஜின்னாவிற்கு முன்னும் , பின்னும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஷியா பிரிவில் உள்ள ஒருவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை.

அதாவது ஜின்னா முஸ்லிம்களின் தலைவர் அல்லர். முஸ்லிம் லீகின் தலைவர். இன்னும் தெளிவாகச் சொன்னால், முஸ்லிம் லீக் என்ற அரசியல் அமைப்புக்கு ஜின்னா தலைவர். அந்தத் தலைமையை சுன்னத் வல் ஜமாஅத் ஏற்றுக் கொண்டது.

மார்க்கத் தலைமையையும், அரசியல் தலைமையையும் பிரித்தறிந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம், அந்தத் தனித்தன்மை முஸ்லிம்களிடம் அன்று இருந்தது.

விடுதலைக் காலகட்டமான 1947 இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் பொறுப்பை மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இப்படி காங்கிரஸ் ஒப்படைத்ததற்கு அடியோரத்தில் வேறோரு காரணமும் உண்டு. மௌலானா அபுல் கலாம் ஆசாத், மகா மேதை. திருக் குர்ஆனுடைய ஞானம் நிரம்பப் பெற்றவர். அரசியல் விற்பன்னர். பேச்சாற்றலில் மகா சமர்த்தர்.

அவரின் தோற்றத்தில் கனியக் கனிய இஸ்லாமியக் கோலம் இருக்கும். சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர். அவர் பிறந்தது மக்கமா நகரம். ஆனாலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் அரசியல் தலைவராக அவரை ஒப்புக் கொள்ளவில்லை. முஹம்மதலி ஜின்னாவைத்தான் ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் பேரியக்கம், மௌலானா அபுல் கலாம் ஆசாத்தைக் காங்கிரஸ் இயக்கத்தின் தலைமையாக்கியதன் உள்நோக்கம், முஸ்லிம் லீகைப் பலகீனப் படுத்த மௌலானா நல்லதொரு அடையாளம் என்று நம்பி இருந்தது.

முழுமையாக முஸ்லிமாக இருப்பவரை பின்னொற்றி முஸ்லிம்கள் காங்கிரஸுக்குள் வந்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தது.

ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் தனித்தன்மையோடு தெளிவாக இருந்தது. அரசியல் தலைமைக்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை விடவும், முஹம்மதலி ஜின்னாவைத்தான் ஒப்புக் கொண்டது.

இந்திய சுதந்திர உடன்படிக்கையில் நம் இந்தியத்தை விட்டு துண்டாகிப் போன பாகிஸ்தான் நாட்டின் சார்பாக முஹம்மதலி ஜின்னா கையொப்பம் இட்டார். இந்தியத் திருநாட்டின் சார்பாக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கையொப்பம் இட்டார். பிரிட்டிஷ் ராணியின் சார்பாக மவுண்பேட்டன் பிரபு கையெழுத்திட்டார்.

இந்தியாவின் துண்டாடிய பகுதியான பாகிஸ்தான் உதயமாகும் வரை அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைமை ஜின்னா வசம் இருந்தது. அது உதயமான பின்னால் பாகிஸ்தானுக்கும் அதன் தலைமைக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று இந்தியப் பகுதி முஸ்லிம்களின் பெரும்பான்மையோர் கருதினர்.

அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பாக காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகை உதிக்கச் செய்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார்கள்.

முஸ்லிம் லீகின் தனித்தன்மை எந்த நிலையிலும் கெட்டு விடாமல் யாருடைய சாயலும் தொட்டுவிடாமல் ஏன், ஜின்னாவின் சாயல் கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பட்டு விடாமல், தெளிவான தனித்தன்மையுடன் வழி நடத்தினார்கள்.

R.S.S இயக்கமும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அதன் கிளை அமைப்புகளும் முஹம்மதலி ஜின்னாவை, முஸ்லிம் மதத் தீவிரவாதி போன்ற தோற்றத்தில் பொய்ப்படம் காட்டித் தங்கள் இயக்கங்களுக்குத் தீனி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இவ்வளவு துல்லியமான கணிப்போடு அரசியல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருந்த இஸ்லாமிய சமுதாயம், பின்னால் சுயத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விட்டு விட்டது.

இது கசப்பாக இருந்தாலும் விழுங்கித்தான் ஆக வேண்டும்.

தன்னைச் சார்ந்திருந்த இயக்கங்களின் கூட்டுறவால், தன் சுய முகத்திற்குப் பக்கத்திலேயே இரவல் நிழல் முகத்தையும் தூக்கித் திரிய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் நிழல் முகத்தைப் பிரகாசமாகக் காட்டினால்தான் அதை நிஜமுகமாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் என்கின்ற தப்புக் கணக்கைத் தன் வசம் எடுக்கத் தொடங்கியது.

குறிப்பாகத் தமிழக அரசியல் வரலாற்றில் இந்த நிலை தூக்கலாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க வின் முகத்தின் பாணியை முஸ்லிம் லீகும் கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இப்படித் தழுவிக் கொள்வதால் சமூகத் தலைமையின் அந்தஸ்த்துப் பிரபலப் படுவதாகவும் கருதப் படுகிறது.

கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் அண்ணா பேசியது மாதிரி நம் தலைவர்களும் பேச வேண்டும். கருணாநிதி பதில் சொல்வது மாதிரி நம் தலைமையும் நச்சென்றுப் பதிவு செய்ய வேண்டும் என்ற பாணி வளர்க்கப் படுகிறது.

இதில்தான் அரசியல் ராஜ தந்திரம் இருப்பதாக இயக்கத் தோழர்களும் பூரணமாக நம்பத் தலைப்பட்டு விட்டனர்.

கருணாநிதியிடம் கேள்வி கேட்டால் பதிலில் ஒரு நையாண்டித்தனம் இருக்கும். தப்பித்துக் கொள்ளும் சாகசம் தென்படும். இப்படிப் பதில் தருவது தான் அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம் என்ற கருத்துத் தமிழகத்தில் பரவி விட்டது.

முஸ்லிம்களிடமும் இந்தக் கசடு எப்படியோ தழுவிப் பதிந்து விட்டது.

காயிதே மில்லத்திற்கு ஏன் பாரத ரத்னா இன்னும் தரப்படவில்லை?” என்று கேட்டால், “அவர் ஜகத் ரத்னா, பாரத ரத்னா என்று அவரைச் சுருக்கி விடக்கூடாதுஇப்படி பதில் தரப்படுகிறது. இதுதான் தி.மு.க தனம். கருணாநிதி பாணி.

சட்டமன்றத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த அந்தக் காலத்தில் கருத்திருமன் காங்கிரஸ் இயக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என நினைக்கிறேன். அவர் ஒரு வினா கேட்டார்.

புளி விலை தமிழகத்தில் உயர்ந்து விட்டது. என்ன காரணம்?” என்று கேட்டார்.

கருணாநிதி சட்டென்று எழுந்து, “இந்தக் கேள்வியைப் புளிய மரத்திடம் கேட்க வேண்டும்எனப் பதில் சொன்னார்.

சட்டசபை சிரிப்பில் அலறியது. இந்தப் பாணிதான் இப்பொழுதும் பாரத ரத்னா, ஜகத் ரத்னாவில் விளையாடுகிறது.

தி.மு.க, பாரதிய ஜனதா கூட்டேற்பட்டு விடலாமோ?” என்ற ஐயக் கேள்விக் கேட்கும் பொழுது,

பாரதீய ஜனதா, தி.மு.க வை ஆதரித்தால் ஆபத்தில்லை. தி.மு.க, பாரதீய ஜனதாவை ஆதரித்தால்தான் யோசிக்க வேண்டும்என்ற தொணியில் பதில் தரப்படுகிறது.

இது சுத்தமான சொல் விளையாட்டு. இந்த விளையாட்டு முஸ்லிம் அரசியல் சாயைக் கொண்டது அல்ல.

கருணாநிதியின் காட்சிதான் இங்கும் தெரிகிறது.

மனைவி கணவனை அழைத்தால் ஆபத்தில்லை. கணவன் மனைவியை அழைத்தால் யோசிக்க வேண்டும் என்று ஒரு பதில் தந்தால் அது எப்படி நல்ல நகைச்சுவையாக இருக்குமோ? இது அப்படி இருக்கிறது.

சுன்னத் வல் ஜமாஅத் ஒப்புக் கொள்ளாத ஷியா பிரிவைச் சார்ந்த ஜின்னாவை இயக்கத் தலைவராக ஏற்றுக் கொண்ட சமுதாயம், இஸ்லாமிய கோலத்தோடும் கோட்பாட்டோடும் வாழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

காரணம் மௌலானாவிடம் காங்கிரஸ் அரசியல் தெரிந்தது. ஜின்னாவிடம் லீக் அரசியல் இருந்தது. இப்படித் தெளிவான புரிதலோடு தனித்தன்மையோடு இருந்த சமூக அமைப்பு, இன்னொரு முகச் சாயலைத் தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டதற்குத் திராவிட இயக்கத்தின் வசீகரம் வெளிக் காரணமாகவும், வேறு பல ஆசை அபிலாஷைகள் உள்காரணங்களாகவும் இருக்கிறது.

இதுபற்றி இன்னும் சிந்திப்போம். விவாதிப்போம்.

No comments:

Post a Comment