Monday, December 16, 2013

மானுடக் கடமை!!!


11.12.2013 மகாகவி பாரதியின் பிறந்த நாள்(11.12.1882). பாரதி, தமிழ்ச் சமூகத்தால் மரியாதையோடு நினைவுகூரப் பட வேண்டிய பெருமைக்குரியவர்.

அன்றைய தினம் பாரதியைப் பற்றி மீடியாக்கள் நல்லவிதமாகச் செய்திகள் வெளியிட்டன.

அன்றைய தினத்தில் பொதிகை தமிழ்த் தொலைக்காட்சி , பாரதியை ஆறு கோணத்தில் , ஆறு விமர்சகர்கள் நிகழ்த்திய நிகழ்ச்சி ஒன்றைப் பதிவு செய்தது. உள்ளபடிக்கே சிறப்பாக இருந்தது. சில அரிய தகவல்களை அந்த ஆறு பெருமக்களுமே வெளியிட்டனர்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அறுவரில் இறுதியாக பேசிய ஒரு கல்லூரியின் முதல்வர், சில செய்திகளைச் சொல்லிக் காட்டினார். அவர் பெயரை நிகழ்ச்சியில் எழுதிக் காட்டினார்கள். ஆனால் என்னுடைய கவனக் குறைவின் பிழையால் இந்தச் சில நாட்களிலேயே மறதியாகி விட்டது.

அந்தக் கல்லூரி முதல்வர், சொன்ன சில தவல்களை நானிங்கே பதிவு செய்யவும், அது பற்றி சில உண்மைகளைச் சொல்லிக் காட்டவும் முனைகிறேன்.

அந்தக் கல்லூரி முதல்வர் சொன்ன தகவலில் எப்படியோ தவறு கலந்து விட்டது. அதுபற்றி அவரைக் குற்றம் சாட்ட நான் இங்கே நிச்சயம் பதிவு செய்யவில்லை.

தவறுவது , மனித இயற்கை. திருத்திக் கொள்வது மானுடக் கடமை என்ற அடிப்படையிலேயே என் பதிவுகளைத் தயவு செய்து புரிந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் , போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வருகைத் தந்திருந்தார். அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் சில அடிகள் மெல்ல நடந்து வந்து , பூமியை நோக்கி பணிந்து , இந்திய மண்ணுக்கு முத்தமிட்டார்.

அவர் கூறினார் , “இந்த இந்திய பூமி, ஞானம் பிறந்த பூமி . எனவே இந்த மண்ணை நான் முத்தமிட்டேன்.என சொன்னார்.

இந்த நிகழ்வைக் கல்லூரி முதல்வர் நினைவு படுத்தினார். இது நடந்தது உண்மை.

அன்றைய தினம் இந்திய மீடியாக்களும், உலக மீடியாக்களில் பலவும் இதைப் பதிவு செய்தன. இந்தியப் பூமிக்கு இந்தப் பெருமைத் தகும்.

அந்தக் கல்லூரி முதல்வர் அடுத்தொரு தகவலைச் சொன்னார். அந்தத் தகவலில்தான் பிழை இருக்கிறது.

அந்தத் தகவல் வரலாற்றுப் பிழை மட்டுமல்ல. கோட்பாட்டு பிழையும் கூட.

முஹம்மது நபி எல்லா திசைகளிலும் வணங்கும் வழக்கமுடையவர். ஒரு முறை அப்படி வணங்கிக் கொண்டிருக்கும் போது , அவர் நாட்டில் இருந்து இந்திய திசையை நோக்கி நின்று கொண்டு, இதோ இந்த திசையில் இருக்கும் ஹிந்து தேசம் ஞானங்கள் பிறந்த பூமி. எனவே இங்கிருந்தபடியே ஹிந்து தேசத்திற்கு என் வணக்க வழிபாட்டைச் செலுத்துகிறேன் என சொல்லி இந்தியாவை நபிகள் வணங்கினார்எனக் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.

இதுமாதிரி தகவல்கள் தரப்படும்போது சரியாகவும், தெளிவாகவும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தகவல் தருபவருக்கு இருக்க வேண்டியது கட்டாயம்.

ஒன்றைச் சிறப்பிப்பதற்காக , அழுத்தம் கொடுத்து சொந்தச் சரக்குகளை வரலாற்று நிகழ்வில் கலந்து விடுவது மேடைப் பேச்சுக்கு நன்றாக இருந்தாலும் , முற்றுமான தவறுக்குப் பொறுப்பாக நேரிடுகிறது.

கல்லூரியின் முதல்வர் இரண்டு பிழைகளை இந்தத் தகவலில் பதிவு செய்து விட்டார்.
 

பொதுவாகவே ஏனோ தெரியவில்லை, இஸ்லாமியர் வரலாறை புரிந்துக் கொள்வதிலும் படித்துக் கொள்வதிலும் நமக்கு ஒர் அசட்டைத்தனம் இருக்கிறது. இந்த அசட்டைத் தனம் அவரவர் மனப் போக்கிற்கு ஏற்ப அதிகப்படியாக இட்டுக் கட்டப்பட்டு விடுகிறது.

முஹம்மது நபி வாழ்க்கை வரலாற்றில் , கல்லூரி முதல்வர் குறிப்பிட்டது போன்ற வணக்க வழிபாடு நடந்ததே இல்லை.எல்லா திசைகளையும் முஹம்மது நபி தொழுவார் என்ற தகவல் முழுவதுமான பிழையாகும்.
 

இறைவன் ஒருவனைத் தவிர , எவரையும் , எதனையும் யாரும் வணங்க, வழிபட கூடாது என்பது முஹம்மது நபி கற்றுத் தந்த வணக்க வழிமுறையாகும்.

திசைகளைத் தொழுவது என்பது இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிதலாகும்.
 

எந்த பாரதி பிறந்த நாளை நினைவு கூருகிறோமோ , அந்த பாரதிகூட இஸ்லாத்தைப் பற்றிச் சரியாக அறிமுகமில்லாத நேரத்தில்,

திக்கை வணங்கும் துருக்கர்..என்று பிழையாக , தவறுதலாக பதிவு செய்திருக்கிறார்.

இதை ஆதாரமாகக் கொண்டுதான் கல்லூரி முதல்வர் திசைகளைத் தொழும் பழக்கம் முஹம்மது நபிக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் என நம்புகிறேன்.

பாரதி இரண்டு பிழையை ஒரே வரியில் செய்து விட்டார். திக்கைத் தொழுவது இஸ்லாமியர்களுக்கு ஆகாதது. இது ஒன்று.
 

துருக்கர் என்ற சொல், இஸ்லாமியர்களைக் குறிப்பதாக பாரதி முடிவு கட்டியது மற்றொரு இமாலயப் பிழை.

இந்தச் சொல் முஹம்மது நபியை துருக்கர் என்று குறிப்பிடுவது போல் இருக்கிறது. முஹம்மது நபி, தேசத்தால் அரபியர். துருக்கர் அல்லர். துருக்கர், துலுக்கர் என்பது துருக்கியர் என்பதின் மரூஉ. துருக்கியில் உள்ள அனைவரும் துருக்கர். அதாவது துருக்கியில் உள்ள யூதர், கிருத்துவர், முஸ்லிம் அனைவருமே துலுக்கர்தாம். முஸ்லிம்களைத் துருக்கர் என்று கூறுவது வரலாற்றுப் பிழை.
 

இந்திய திசையைப் பார்த்து நின்று முஹம்மது நபி அரபு நாட்டிலிருந்தே இந்த ஞான பூமியை வணங்கியதாகக் கல்லூரி முதல்வர் குறிப்பிடுவது மகத்தான அறியாமை.

இறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த மனிதனையோ சொந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டையோ இறைவன் படைப்புகளான ஐந்து பூதங்களையோ ( மண், நெருப்பு, காற்று , ஆகாயம், நீர்) வணங்குவது என்பது பூரணமான குற்றத்திற்குச் சமமாகும் என்று இஸ்லாம் தன் கோட்பாட்டைத் தெளிவு படுத்தி விட்டது.

இந்தக் கோட்பாட்டைத் துல்லியமாக வெளிப்படுத்தியவர்கள் முஹம்மது நபி.

தாயின் பாதத்தடியில் சொர்க்கமிருக்கிறது எனச் சொன்னவர்கள் முஹம்மது நபி. தாய்மைக்கு இதை விட பென்னம்பெரிய சிறப்பைத் தந்து விட முடியாது. ஆனாலும்கூட அந்தத் தாயை வணங்குவதுகூட மகத்தான குற்றம்.

சொர்க்கத்தை பாதத்தில் தூக்கி சுமந்து திரிவதாக உருவகப் படுத்தப் பட்டுள்ள தாயைக் கூட ஆண்டவனாக வணங்குவது குற்றமாகி விடும். இவ்வளவு தெளிவாக இஸ்லாம் சொல்லி விட்டதற்குப் பின்னால் , அந்த இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான பதிவுகளைச் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமே இதை நான் பதிவு செய்கிறேன்.

இதை ஒரு மத நெறியாகவோ, வெறியாகவோ பிறழ யாரும் நினைக்க வேண்டாம்.
 

கல்லூரி முதல்வர் குறிப்பிட்ட இந்த நிகழ்வு சொல்லப் பட்டிருக்கிறது. எப்படியென்றால்....

ஸாரே ஜஹான்சே அச்சா ,
ஹிந்துஸ்தான் ஹே ஹமாரா

என்று எழுதிய மகாகவி அல்லாமா இக்பால், இப்படிக் குறிப்பிடுகிறார்..

ஒரு முறை முஹம்மது நபி மக்காவில் உள்ள கஃபதுல்லாவில் அமர்ந்து இருக்கும் பொழுது , தான் அமர்ந்திருந்த திசையில் இருந்து சிறிது மாறி இதோ இந்தத் திசையில் ஹிந்து தேசத்தில் இருந்து ஏகத்துவ நறுமணத் தென்றல் வீசுகிறது. இங்கும் அது பரவுகிறதுஎன்று நபிகள் நாயகம் சொன்னதாக அல்லாமா குறிப்பிடுகிறார்.

இந்த நிகழ்விற்கு ஆதாரம் இருப்பதாக சில முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் தெளிவான ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படி இருந்தாலும் முஹம்மது நபி பூமிக்கு வணக்கம் செலுத்தினார் என்று சொல்லுவது புரியாமையின் பிரம்மாண்டமாகும்.
 

மகாகவி பாரதியார் , “திக்கை வணங்கும் துருக்கர்என்று ஆரம்பக் கட்டத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், பிந்தைய அவருடைய காலக்கட்டங்களில் இந்தப் பிழையான கருத்தில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டார் என்றும் சில குறிப்புகளும் உள்ளன.

பாரதியாருடைய இறுதி காலத்தில், கடையத்திற்குப் பக்கத்தில் உள்ள பொட்டல்புதூரில் அவர் பேசிய மீலாது பொதுக்கூட்ட உரையில் பாரதியார் இஸ்லாத்தைத் தெளிவாகப் புரிந்து இருந்தது நன்றாகத் தெரிகிறது.

முஸ்லிம்களை துருக்கர் என்ற வார்த்தையிலேயே பாரதியார் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
 

பாரதியார் வடிவமைத்த இந்திய தேசியக் கொடியில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர் பால்என்று குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமியர்களை இங்கும் துருக்கர் என்றார்.

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!- பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;”

இங்கேயும் பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்கிற செயல் தில்லித் துருக்கர் வழக்கம் என்கிறார்.

துலுக்கர் துலுக்கர்தான் . அது என்ன தில்லி துலுக்கர் தென்காசி துலுக்கர். பெண்கள் முகமலரை மூடிக் கொள்ளல் குஜராத்தி, ராஜஸ்தானி, பணியாக்கள் பேன்ற பிற சமூகத்தினரின் பழக்க வழக்கங்களும் கூட.

பாரதி, தென்னாட்டு முஸ்லிம்கள் போடுகிற முக்காட்டையும் பார்த்தவர். டெல்லியில் அணிந்த கோஷா காட்சியையும் பார்த்தவர். கோஷாவை துலுக்கர் வழக்கம் என்று விட்டார். அதனால்தான் தில்லி துருக்கர் என்று சொல்லி இருக்கிறார் போலும்.

கல்லூரி முதல்வரை நான் பிழைப் பிடிக்கவில்லை. பாரதியிடமும் இந்த வரலாற்றுப் பிழை இருந்திருக்கிறது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு தன் கருத்தை மாற்றிக் கொள்கிறார். சரியான தகவலை ஏற்றுக் கொள்வதுதானே ஞானத்தின் வெளிப்பாடு.
 

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் , பொதுவாகத் தாய் மண்ணை வணங்காதவன் இந்தியனல்லன் என்ற முரட்டுவாதம் தேவையில்லாமல் மதவாதமாக மாறி விடக்கூடாது.

தாய் மண்ணை வணங்குபவர்கள் தாராளமாக வணங்கிக் கொள்ளட்டும். அது அவர்களின் கோட்பாடு, அவர்களின் உரிமை. தாயே ஆனாலும், தாய் மண்ணே ஆனாலும் வணங்க முடியாது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே எனச் சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். அது அவர்கள் கோட்ப்பாடு. அவர்கள் உரிமை.

எந்த நிர்பந்தங்களும் கலவரங்களைத்தான் கண்டெடுத்து இருக்கின்றன.
 

ஏற்றுக் கொள்வதை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். நிர்பந்தங்களை நிராகரித்து விட வேண்டும்.

No comments:

Post a Comment