Monday, April 6, 2015

விலங்கொடு மக்கள் அனையர்...!"




யோகி ஆதித்திய நாத். பா ஜ க வின் நாடாளு மன்ற உறுப்பினர். இந்தத்
தகுதியோடு இந்துத்துவ தீவர வெறியர். "இந்து யுவ வாஹிணி" என்ற ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவருமாவார்.

தீடீரென்று ஒரு பிரச்சாரத்தை முன் வைத்துச் செயல்படத் துவங்கிவிட்டார்.

"இந்திய நாட்டின் தாயாகப் பசுவை அரசு அறிவிக்க வேண்டும்." இதுதான் யோகி ஆதித்ய நாத், அரசை நோக்கி வற்புத்தும் அறிவுறுத்தல்.

இந்த நாட்டு மக்கள் அரசுக்கு இக் கோரிக்கை யை வலியுறுத்தி, "மிஸ்டு கால்" கொடுக்க வேண்டும் என இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மிஸ்டு கால் கதை ஏற்கனவே பா ஜ க வாலும், அமித்ஷாவாலும், பிரதமர் மோடியாலும் பா ஜ க வுக்கு ஆள் பிடிக்கக் கண்டுபிடிக்கப்பட்ட புத்தம்புது கலாச்சாரம். இந்தக் கலாசாரத்தை நடமாடவிட்டு, 10-க் கோடி உறுப்பினர்களைப் பா ஜ க வில் சேர்த்து விட்டதாக ஒரு ஆகாசப் புளுகை அவிழ்த்து உதறிவிட்டு இருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பா ஜ க தான் அதிகம் உறுப்பினர்கள் உள்ள கட்சி, அதனால் உலகிலேயே பெரிய கட்சி, பா ஜ க தான் எனத் தங்கள் முதுகைத் தாங்களே, மிஸ்டு கால்களால் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இதற்கு இன்னொரு பொருள் இருக்கிறது. சீனா, கம்யூனிஸ பூமியென்றால்
இந்தியாவை இந்துத்துவா பூமி என ஆக்கிக் காட்டுவோம் எங்களுக்குக் கடைக்கண் காட்டுங்கள் என்று அமெரிக்காவிடம் யாசகக் கரம் நீட்டுகிறது
பாஜக.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, கவனியுங்கள், பாஜக, கம்யூனிஸ்ட்களின் மீது பாய்ந்து குதறித் துப்பும் கொடூர நிலை தெரியும்.

இந்த அரியமுறைக் கண்டுபிடிப்பான மிஸ்டு கால் கலாச்சாரத்தை யோகி ஆதித்திய நாத் கைவசம் தூக்கிக்கிட்டு வந்திருக்கிறார்.

ஏற்கனவே பாஜக ஆளும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் மாட்டிறைச்சித் தடைச்சட்டம் அமலில் இருக்கிறது. மாட்டிறைச்சியை விற்பனை செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனச் சட்டம்  நிறைவேற்றப் பட்டுள்ளது.

மற்றொரு மாநிலமான ஹரியானாவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது, இத்தடையை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மேலும் அபராதமும் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தாயை வெட்டினாலும், தாய் மாமிசத்தை புசித்தாலும் சட்டம் இப்படித்தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி, என் நினைவுகளில்
நிழல் விரிக்கிறது.

மறைந்த பெரியவர் சங்கராச்சாரியாரைச், சந்தித்துப் பேட்டி காண, தத்துவப் பேராசிரியராக அப்போது திகழ்ந்த ஓஷோ அனுமதி கேட்டிருந்தார்.


சங்கரமடம், முதலில் தயங்கியது, மறுத்தது. பின்னர் அனுமதி வழங்கியது. ஓஷோ சங்கரமடத்துக்கு வந்தார்.

குறித்த நேரத்தில் சங்கராச்சாரியாரைச், சந்திக்க அவர் இருப்பிடத்திற்குச் சென்றார். சந்திப்பும், பேட்டியும் தொடங்கியது.

சங்கராச்சாரியாருக்கு வணக்கம் தெரிவித்து, பேட்டியை ஓஷோ ஆரம்பித்தார்.

"ஐயா, தங்களைச் சந்திக்க மடத்திற்குள் நுழைந்த உடனே, தங்கள் தாயாரைப் பார்க்க நேர்ந்தது. மகிழ்ச்சியாக இருந்தது." என்றார், ஓஷோ.


சங்கராச்சாரியார் குழம்பி விட்டார்.

"என் தாயார் இப்போது இல்லையே, எப்போதோ தவறி விட்டார்களே அவர்களை இப்போது எப்படி மடத்து வாசலில் பார்க்க இயலும்?" இது சங்கராச்சாரியார் சந்தேகம்.

"இல்லை ஐயா, தங்கள் தாயாரைப் பார்த்தேன். அவர் இளமையோடும், நல்ல திடகாத்திரத்தோடும் இருக்கிறார்களே' என்றார் ஓஷோ.

சங்கராச்சாரியாருக்கு, மேலும் புரிபடவில்லை.

ஓஷோ விளக்கினார். "மடத்துக்குள் நுழைந்த உடனே அங்கே நல்ல இளமையான பசு கட்டப்பட்டு இருந்தது. நான், அதைத்தான் உங்கள் தாயார் எனக்குறிப்பிட்டேன். ஆனால் நீங்கள் அதைத் தாயாரில்லை என மறுத்து விட்டீர்களே? பசு நம் தாய் என்று நீங்கள் எழுதியுள்ளதை நான் வாசித்திருக்கிறேன். அது வெறும் வசனம்தானா? அதை நீங்களே பூரணமாக
நம்பவில்லையா? நீங்களே பூரணமாக நம்பாத ஒன்றை, எப்படி மற்றவர்களை நீங்கள் நம்பச் சொல்லுகிறீர்கள்"? எனக் கேட்டு ஓஷோ தன் பேட்டியைத் தொடர்ந்தார்.

பசுவை, இந்திய மக்கள் தாயாக ஏற்றுக் கொண்டால், காளை மாடுகள் இந்திய மக்களின் தந்தைதானே?

கன்றுக்குட்டிகள், நம் சகோதர,சகோதரிகள் ஆகிவிடுகிறார்கள். இந்த ஜந்து உறவு நன்றாகத்தான் இருக்கிறது.

இவற்றை மனப்பூர்வமாக, ஓஷோ கேட்டது போல இந்தியமக்கள் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

இந்தியாவை மேம்படுத்தப் போகிறோம். ஊழலே இல்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறோம். என்ற வாக்குறுதிகளை, இந்தியா முழுவதும் பாஜகவினர் அள்ளி அள்ளித் தெளித்தார்கள்.

இந்திய மக்களில் பெரும்பான்மையினர் இதை நம்பி வாக்குகளை வழங்கினார்கள்.இதன் அடிப்படையில் பாஜக வின் மோடி அரசு ஆட்சி அமைத்திருக்கிறது.

ஆட்சி பீடத்தில் கொலு அமர்ந்த உடனே மக்கள் அனைவரையும் மக்கள் நிலையில் இருந்து தாழ்த்தி, விலங்குறவாக்கச் சட்டம் சமைக்கிறார்கள்.

மனிதயினம் நிலை மாற்றம் அடைந்து, விலங்கினமாக மாறுவதுதான் மேம்பாடடையும் நிலையோ?

ஒரு பசுவுக்கு நான்கு கன்றுக்குட்டிகள் இருக்க முடியும், ஆனால் ஒவ்வொரு கன்றுக் குட்டிக்கும் ஒரே காளை அப்பா இருக்க முடியாது. தாய் ஒன்று, அவளுக்கு கணவர்கள் நான்கோ, ஐந்தோ.

இந்தத் தத்துவத்தை இந்திய மக்கள் அனைவரும் மனப் பூர்வமாக ஒப்புக்கொள்ளத் தயாரா?

குந்தியிஸமும், பாஞ்சாலியிஸமும் ஓர் உன்னத இஸமாக இருப்பதை சமூகம் ஏற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இங்கே எழுத்தாளர் பெருமாள் முருகன் பட்டபாட்டை அண்மையில்தான் கண்டோமே!

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, தன் ஊரில் இருந்த பல்லக்கு வழக்கு பற்றி நாவல் எழுத ஆசை, ஆனால் பெருமாள் முருகன் பட்டபாட்டைப் பார்த்தபின் பேனா தூக்க யோசிக்கிறேன் என அலறும் ஒலியும் கேட்கத்தானே செய்கிறது..

No comments:

Post a Comment