Thursday, October 2, 2014

மனித விற்பனை மலிவு விலையில்...!


உலகில் படைப்பின் பாக்கியம் பெற்ற அத்தனை உயிரினங்களிலும் மனிதப் படைப்பு மேன்மையானது. மரியாதைக்குரியது.

இறை ஆற்றலின் எண்ணம் மானுடப் பிறப்பாக மதிப்புப் பெற்றது. அதே நேரம் இறை ஆற்றலின் எண்ணம் இறைவனாக முடியாது. இறை ஆற்றலின் கூறுகள் மானுடத்தின் படைப்பில் நிரம்பி இருக்கும். அதனால்தான் இறைவன் வேறு, அவன் எண்ணத்தின் படைப்பான மனிதன் வேறு என்பதைப் புரிந்து கொள்ள, “மனிதன் இறைவனின் பிரதிநிதிஎன முன்மொழியப்பட்டான்.

இறைவன், மனிதன் என்ற இருமைத் துவைதம் இருப்பதாகத் தீர்மானித்துவிடக் கூடாது. இறைவனுடைய பிரதிநிதி மனிதன் என்கிற இந்த ஒருமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட மகுடச் சிறப்பு இது.

தமிழ் மூதாட்டி அவ்வை தன் தனிப் பாடலில்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுஎன்று மனித முக்கியத்துவத்தை வலியுறுத்தினாள்.

கம்பர், தன்னுடைய ராம காதையில் ராமன் இறுதியாகப் பெற்ற வெற்றியைக் குறிப்பிடும் பொழுது,

மானுடம் வென்றதம்மாஎன மனித மகத்துவத்தை அறிவிப்புச் செய்தார்.
மனிதனுக்கு அளப்பரிய மரியாதை உண்டு என்ற பெருமிதம் மானுடத்தின் வெற்றியாகும்.

ஆனால் இந்த மானுடத்தை மிக மிக மலிவாக்க நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதுவும் ஆன்மீகத்தை முன்வைப்பதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெளிப்பட்ட மதங்களால்தான், மனிதன் சந்தைக் கடைப் பொருளாக மலிவாக்கப்பட்டு இருக்கிறான்.

ஒரு வாழ்வு முறையைக் கற்றுத் தருவதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்ட மதங்கள் மனித மரியாதையின் மீது தாரள்ளிப் பூசி விட்டன.
மனிதன் தனக்கு ஏற்புடையதாக, விருப்பம் உடையதாக கொள்ளக் கூடிய ஒரு தத்துவத்தை, ஒரு நடைமுறையை, ஒரு மதத்தை, ஒரு மார்க்கத்தை ஒப்புக் கொள்ள முழு உரிமைப் பெற்ற தகுதி உடையவன் ஆகிறான்.
அந்த வாழ்க்கையைப் பின்பற்றி வாரிசுகளையும், வாழ்க்கையையும் தொடர்கிறான்.

மதங்கள் வளர்கின்றன. மதங்களின் உறுப்பினர்கள் அந்த மதத்தின் கோட்பாட்டு ஞானத்தை மறந்து, மதம் தங்கள் பிறப்புரிமை என்பது போன்ற அடாவடித்தனத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொண்டனர்.
அதாவது மதங்களின் கோட்பாட்டு வாழ்க்கை முறைகளை விட, மத சமூகம் மேலானதாகிவிட்டது.

சமூகம் என்பதின் அடையாளம் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கண்ணியம் பெருகிறது.

ஒரு விற்பனைப் பொருளுக்கு பிராண்ட் வேல்யூபோல சமூகத்துக்கு மத வேல்யூமுக்கியமாகி விட்டது.

இங்கு தான் மத அரசியல் கட்டமைக்கப் படுகிறது.
ஒரு கட்சி தன் இருப்பை அக்கட்சியின் எண்ணிக்கையைப் பொருத்து உயர்த்திக் கொள்கிறது.

இந்த எண்ணிக்கை, ஆட்சி உரிமையைத் தரும். அல்லது ஆட்சி இழப்பை வழங்கும்.

இந்த அரசியல் குணப்பாடு மதங்களின் பிடரியில் வந்து அமர்ந்து கொண்டது.

மதங்களின் உண்மைக்கும் மேன்மைக்கும் அவைகளின் கோட்பாட்டு மேன்மை தேவையற்றதாகி விட்டது.

ஒரு மதத்தினுடைய உறுப்பினர் அந்த மதம் தன்னைத் திருப்திப்படுத்தவில்லை என்ற நிலைக்கு வந்து, வேறொரு மதம் அவர் விரும்பிய திருப்தியை வழங்குகிறது என்ற உறுதியில் அடுத்த மதத்திற்குப் போவாரேயானால் அது மதமாற்றமாகக் கருதப்படுகிறது.

ஒரு மதம் தன் உறுப்பினரை இழந்துவிட்ட கோபத்துக்குள்ளாகிறது. அடுத்த மதம் தன்னில் பெருக்கிக் கொண்ட பெருமிதத்திற்கு உள்ளாகிறது.
இந்தச் சித்து விளையாட்டை மதங்கள் தங்களுக்குச் சாதகமாக்கி மனித மரியாதைகளைக் கொச்சைப் படுத்தக் கற்றுக் கொண்டன.

ஒரு மதத்தில் உள்ள, மனித இழிநிலையை ஒரு மனிதன் ஏற்காத போது அவனை வலுக்கட்டாயமாக நீ இங்குதான் இருந்தாக வேண்டும் என வலியுறுத்துவதும் குற்றமாகும். அதே போல இழிநிலையைக் கண் முன் நிறுத்தி இதற்குரிய சலுகை எங்களிடம் உள்ளது என மற்றொரு மதம் ஆசை வலையை வீசிப் பிடிப்பதும் பிழையானது.

பாதிக்கப்பட்டவன், பாதிப்படையும் பொழுது, தன் பாதிப்புக்குள்ள நேர்வழியை அவனே சமூகத்திடமிருந்து கற்றுக் கொள்கிறான். பெற்றுக் கொள்கிறான். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் எந்த நிலையையும் அவன் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுதான் மானிட மகத்துவம்.

ஆனால் வரலாற்று நெடுகிலும் இந்த மத அரசியல்தனம், ஆள் சேர்க்கும் அவலம் பதிவாகி கொண்டுதான் வந்திருக்கிறது.

தேவார நால்வரில் திருநாவுக்கரசர் வரலாற்றில் இந்த நெருக்கடியைக் காண முடிகிறது.

நாவுக்கரசர், சைவ மதத்தின் கோட்பாட்டில் எங்கேயோ ஒரு பகுதியை வெறுத்து இருக்கிறார். அந்த வெறுப்பு அவரைச் சமண மதத்திற்குத் துரத்திச் சென்றது. இது அவரின் முதல் மத மாற்றம். சமண மதத்தைத் தழுவியதற்குப் பின்னால் தீர்க்க முடியாத வயிற்று வலி நோய் வருகிறது. அவர் தமக்கையார் வழங்கிய திருநீற்று மருத்துவ மகத்துவ முறையால் வயிற்று வலி நீங்கி குணம் அடைகிறார். இப்போது சமண மதம் வெறுப்புக்குரியதாகி விட்டது.

மீண்டும் சைவ மதத்திற்குள் பிரவேசிக்கிறார். சைவ மத தலைவர்களில் நால்வரில் ஒருவராக வளர்ச்சி அடைகிறார்.

ஒரு மனிதன் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு எதனால் மாறுகிறான்? எதனால் மீள்கிறான்? என்ற தகவல்களை எண்ணிப் பார்க்கும் பொழுது வினோதமாக இருக்கிறது.

ஒரு நோய் தீர்க்கப்படும் பொழுதெல்லாம் மத மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று முடிவானால் மனிதனின் மகத்துவம் எப்படி மதிப்பிழக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு கணக்கிற்கு இன்றைக்குள்ள மருத்துவமனைக்குச் செல்வோமானால் தீர்க்க முடியாத நோய்களைக் கூட மருத்துவர்கள் தீர்த்து 
வைத்திருக்கிறார்கள். அப்படி நோய் நீங்கியவர்கள் எல்லாம் நோய் தீர்த்த மருத்துவரின் மதத்தில் சேர்ந்து விடலாமா?

அதே மருத்துவமனையில் சாதாரண நோய்க்குத் தரப்பட்ட மருத்துவத்தின் காரணத்தால் மரணமடைந்து விடுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் மருத்துவம் செய்த மருத்துவரின் மதத்தை விட்டு அந்த மதத்தவர்கள் வெளியேறி விடலாமா?

சில மத மாற்றங்களையும் அதன் அடிப்படைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்தியத்தின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு காஷ்மீரத்து பண்டிட் சமூகத்தைச் சார்ந்தவர். அந்த சமூகத்தின் முழுமுதல் மத நம்பிக்கையான இறை நம்பிக்கையை ஒப்புக் கொள்ளாதவர் நேரு. அவர் மதத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். மற்றொரு மதத்தை அவர் தேடிக் கொள்ளவில்லை. இது அவரின் நிலைப்பாடு.

பண்டிட் நேருவின் நெருங்கிய உறவுக்காரர் ஒருவர். பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த மத நம்பிக்கையை விட்டு வெளியேறி இஸ்லாமிய மதத்திற்கு மாறுகிறார். அவர்தான் காஷ்மீரத்து சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா.

காஷ்மீரத்து ஆட்சிப் பொறுப்பை ஷேக் அப்துல்லாவின் மகன் பாரூக் அப்துல்லா அதற்கு பின் இப்பொழுதுள்ள உமர் அப்துல்லா தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்கள் அடிப்படையில் பண்டிட் சமூகத்தவர்கள். தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட மார்க்கத்தின் அடிப்படையில் இஸ்லாமிய மதத்தவர்கள்.
குஜராத் பனியா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம் ஆகிறார். அவர் மகன், அந்த மகன் வயிற்று மகன் வரை இஸ்லாமிய வாழ்க்கை தொடர்ந்து இருக்கிறது. அவர்தான் முஹம்மதலி ஜின்னா. ஜின்னாவின் ஒரே மகள் இஸ்லாத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பார்சி சமூகத்திற்கு மாறி அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுவிட்டார்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த, அப்துல் கரீம் சாக்ளா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாரம்பரியத்தில் வந்தவர். ஆனாலும் சாக்ளாவிற்கு இஸ்லாம் உடன்பாடானாதாக இல்லை.
இஸ்லாமிய நடைமுறைகளை வாழ்க்கையில் அவர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மற்றொரு மதத்திலும் சேர்ந்து விடுகின்ற நிலையும் அவரிடம் இல்லை.

இன்றைய பாரதிய ஜனதாவின் துவக்கக் கால, சட்டத் திருத்த குழுவில் ஒருவராக இருந்து பாஜகவின் சட்டதிட்டங்களைத் தயாரித்தவர்களில் ஒருவர் அவர்.

இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருந்த டாக்டர். அம்பேத்கர் தன்னுடைய சமூகத்தின் வாழ்நிலையை இழிவு படுத்தி கொச்சைப் படுத்திய ஒரு மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தைத் தழுவியவர்.

ஒரு லட்சத்திற்கு நெருக்கமான எண்ணிக்கையில் கூடி மாநாடு நடத்தி அத்தணை பேரும் புத்த மதத்தைத் தழுவினார்கள்.

அம்பேத்கரின் மனைவியார் பிராமணச் சமுதாயத்தவர். ஒரு தலித்தை மணமுடித்து பிராமண தர்மத்திலிருந்து நீங்கிக் கொண்டவர். பின்னர் அதிலிருந்தும் நீங்கி புத்த மதம் சார்ந்த ஒருவரின் மனைவியாக அடையாளப் படுகிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முறை கோட்பாட்டு அடிப்படையில் மத மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டவர்களின் வரலாறு ஏராளம் உண்டு. ஒரு கும்பலாக மத மாற்றத்திற்கு முதல் அடையாளம் அம்பேத்கர் என்று நினைத்துவிட வேண்டாம்.

மதுரை மாநகரில் பாண்டிய மன்னின் கட்டளைப்படி அறுபதாயிரம் சமணர்கள் வெட்டவெளியில் கழுவேற்றப்பட்ட கதையும் உண்டு.
கழுவேற்றுதல் என்றால் என்னவென்று தெரியுமா? கூர்மையான மரத்தடியை நட்டு தண்டனை அறிவிக்கப் பட்ட நபரை அந்த மரத்தடியின் உச்சியில் உள்ள கூர்மையை மலத்துவாரம் வழியே செலுத்தி சொருகிவிட வேண்டும்.

தண்டனைக்குரியவரின் எடை காரணமாக அந்த மனிதர் மரத் தண்டின் கீழே இறங்கிக் கொண்டிருப்பார். இரண்டு மூன்று நாள் வரை உயிர் துடித்துக் கொண்டிருப்பார். அதன்பின் அழுகும் அந்த உடலைக் கழுகுகளும் காக்கைகளும் கொத்திக் குதறும். இதுதான் கழுகேற்றும் கோர தண்டனை.
பாண்டிய மன்னன் இந்தத் தண்டனையைச் சமணர்களுக்குத் தந்தான். அதுவும் அறுபதாயிரம் பேர்களுக்கு. மத மாற்றம் இவ்வளவு அருவருப்பாக தண்டிக்கப்பட்டு இருக்கிறது.

சைவக் கோட்பாடு தன்னை மாற்றிக் கொண்டு மனிதச் சதைகளாகவும் ரத்த ஒழுக்கள்களாகவும் அசைவ கோலத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
செப்டெம்பர் 1, 2014 அன்று தி இந்துதமிழ் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. உ.பி யில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதம் மாறிய சுமார் நாலாயிரம் பேர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பி உள்ளதாக பஜ்ரங் தள் தெரிவித்து உள்ளது.

டெல்லியை ஒட்டி உள்ள உ..பி.யின் மேற்கு பகுதி சுமார் இருபது ஆண்டுகளாகப் பின்தங்கிய பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி மக்களில் உயர் வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குப் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குப் பொது இடங்களில் சம உரிமையும் கல்வியும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் இருந்து விடுதலை பெரும் பொருட்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்து மதத்திலிருந்து கிருத்துவ மதத்திற்கு மாறினர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வால்மீகி என்னும் மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களை மீண்டும் இந்து மத்த்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான தரம் ஜாக்ரன் சமிதி ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு உதவியாக பஜ்ரங் தளம் உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்தச் செய்தியிலிருந்து சில பல நடப்புகளை நாம் யூகிக்க முடிகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வால்மீகி சமூகத்திற்குக் கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் உயர்தர சமூகத்தினரால் இழிவு தரப்பட்டு இருக்கிறது என்ற செய்தி எவ்வளவு வரலாற்று உண்மை மறைப்பு. எவ்வளவு கேவலமான மோசடித்தனம்.

அதாவது, 1995க்கு பின்தான் இந்த நிலை என்று சொல்லுகிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைச் சட்டங்களும் நிறைவேற்ற பட்டபின் சாதீய இழிவை உயர் சாதியினர் கையாண்டு இருக்கிறார்கள், அதற்கு முன்னால் வால்மீகி சமூகத்தவர்களைத் தழுவி அரவணைத்துச் சென்று இருக்கிறார்கள் என்ற வாதத்தை துணிச்சலோடு சொல்கின்ற தைரியம் பஜ்ரங் தளத்திற்குத்தான் உண்டு.

அதுவும் இந்தியாவின் தலைநகரம் டெல்லியை ஒட்டி இருக்கக் கூடிய உ.பி.யின் மேற்கு பகுதியில் இது நிகழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.
இவர்கள் குறிப்பிடும் இருபது ஆண்டுகளில்தான், கன்ஷிராமும் மாயாவதியும் உ.பி யில் உயர்ந்த பட்ச அரசியல் பவனி வந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் உயர் வகுப்பினர் வால்மீகி சமூகத்தவர்களைத் தாழ்மைப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டு அந்த தலைவர்கள் வெறுமனே திரிந்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
சரி, இது போகட்டும். அப்படி வெளியேறி மீண்டும் இந்து மதம் வந்து இருக்கிறவர்கள் எந்தப் பிரிவில் வந்து சேர்ந்து இருக்கிறார்கள்?

உயர் வகுப்பிலா? அல்லது மத்திய வகுப்பு பிரிவிலா? இல்லை என்றால் பழைய வால்மீகி சமூகப் பிரிவிலா? இதில் எந்தப் பிரிவில் இந்து மதம் இவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கிறது.

வால்மீகி சமூகத்தவர்களுக்கு, உயர் வகுப்பு பிரிவினர் அளவுக்கு உயர்ந்த அந்தஸ்த்து இன்று வழங்கப்பட்டு விட்டதா?

பொருளாதாரத்தாலோ, சலுகைகளாலோ மதம் மாறுங்கள், அரவணைத்துக் கொள்கிறோம்என்று கிருத்துவமோ, இஸ்லாமோ செயல்படத் தொடங்கினால் அந்தச் செயலில், மத அரசியல் மட்டுமே இருக்கிறது. மத உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி அதன் அடிப்படையில் தங்களின் இருப்புகளை வெளிப்படுத்தும் எத்தனமாகவும், நிரந்தரக் குற்றமானதாகவுமே அது இருக்கும்.

அதே நேரத்தில் பாதிப்புகளுக்குத் தீர்வு தேடி அது வேறொரு மதத்தில் கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் செல்பவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, பிச்சைக் காசுக்காக மானம் இழந்து போன தன்மைக்குரியவர்களாக அவர்களை இழிவு படுத்துவதோ, தாய் மதத்திற்குப் பெருமை சேர்க்காது.

தாய்மதத்தில் உள்ள இழிவுகளைச் செம்மைச் செய்யுங்கள். தேவையற்ற மத மாற்றங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அரசியல் கட்சிகள் போல ஆட்களை எண்ணிக்கை அளவில் பெருக்கிக் கொள்ள, விலை பேசி நிகழ்ச்சி நடத்துவதில், உண்மைகள் மட்டும் சாகவில்லை. நம் சகோதரர்களை மலிவு விலைப் பொருளாக மாற்றுகின்ற கேவலங்களும் அநாகரிகங்களும் அங்கே தலை தூக்கத்தான் செய்கின்றன.

இந்தச் செயல்கள் எந்த மதத்தையும் வாழ வைக்காது. மாறாக மதங்கள் அற்ற மனிதர்களை உருவாக்கி மதங்களை மலிவாக்கி ஒரு நாள் மாய்த்து அழித்து விடும்.


No comments:

Post a Comment