Thursday, August 7, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–42

பரிணாமம்!...


சிதம்பரம் கனகசபை நகரின் ஒதுக்குப் புறமாக பாலமான் ஆறு, பெரிய ஓடையாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அதன் படித்துறையிலிருந்து மூன்றாவது அல்லது நான்காவது வீடாக இருக்கலாம். 123, கனகசபை நகர் வீடு.

இந்த வீட்டின் மாடியில் அன்று குழுமி இருந்த ஒரு கூட்டத்தினர், தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் பேராசிரியர்களாக, தமிழாசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று இருக்கக் கூடியவர்கள், இன்றுவரை நட்புறவோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

தூத்துக்குடி பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம், சென்னை திருவல்லிக்கேணி மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கவிஞர் செல்வ கணபதி, நாகர்கோயில் பேராசிரியர் மு. ஆல்பென்ஸ் நதானியல். தர்மபுரி மாவட்ட மேலப்புலியூர் புலவர் நாகு. நக்கீரன், புலவர் பாவாணன், புலவர் கு.சங்கரன், புலவர் தட்சிணாமூர்த்தி, புலவர். தில்லை. கலைமணி, புலவர் ராமானுஜம், பெங்களூரில் தமிழாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அங்கு தமிழ்ச் சங்க செயலாளராக இருந்த காமராஜ், ஹிலால் முஸ்தபா, வே.மு. பொதிய வெற்பன், புலவர். ஓவியர் நாகலிங்கம், புலவர். சுந்தரமூர்த்தி(மௌனசாமி மடாதிபதிகள்), சென்னை பாண்டிபஜார் ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும் தமிழ்நாடு தலைமையாசிரியர்க் கழக மாநிலத் தலைவராகவும் இருந்த புலவர் அம்மையப்பன், இஞ்சினியர் செல்வம், பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலை மேனிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த புலவர் எழிலன்.

இப்போதைக்கு இந்த அளவுப் பட்டியல் போதுமானது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேதான் இருக்கும்.

123, கனகசபை நகர் இல்லத்தில் உளூந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா குடியிருந்தார். அங்கு நடமாடித் திரிந்து கொண்டிருந்தவர்களைத்தான் மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.

இந்தப் பட்டியல் விநோதமானது. இவர்களுக்குள்ளே உடன்பட்ட கருத்துகள் எக்கச்சக்கம் உண்டு. நேர் எதிரான கடுமையாக முரண்பட்ட கருத்துகளுக்கும் பஞ்சம் இருக்காது.

ஆனாலும் இந்த நண்பர்களின் நட்பு எப்போதும் சேதாரம் அடைந்ததில்லை.

சண்முகம் ஐயா, பழுத்த பக்திமான். எங்களில் பலருக்கு பக்தியில் உடன்பாடே கிடையாது. உடன்பாடு இல்லையென்பதைவிட, கடுமையான எதிர்மறைக் கருத்துகளோடு, போதும் போதும் என்கிற அளவு விவாதச் சண்டைகளையும் நடத்திக் கொண்டிருப்போம்.

ஆனாலும் என்ன? எங்கள் கூட்டுக்குள் குதர்க்கம் என்றும் தலை காட்டியதே இல்லை. எவரும், எவர் கருத்தையும் விட்டுக் கொடுத்ததும் இல்லை.

123 கனகசபை நகர் வீட்டு மாடியில் ஒரு நீண்ட அறை உண்டு. அங்கே ஐயாவின் ஒரு அற்புதமான நூலகம் இருந்தது. அந்த அறையில் சோபாக்கள், சேர்கள் கிடக்கும்.

ஸ்டீரியோ, ஸ்பீக்கர் இவைகளும் பொருத்தப் பட்டிருக்கும். மத்தளம் போன்ற இசைக் கருவிகளும் இருக்கும். காலையில் சங்கீதம் கற்றுத் தர வித்வான் வருவார். ஐயாவின் மகள் வளர்மதி சங்கீதம் கற்றுக் கொண்டாள். மாலையில் பரத நாட்டிய நட்டுவநார் வருவார். பரத நாட்டியமும் அவள் கற்றுக் கொண்டாள்.

ஐயா மகன் எழில்மணி இசை வாத்தியங்கள் கற்றுக் கொண்டான். இந்த வளர்மதிதான் திருமலைத் தென்குமரி படத்தில் சீர்காழியாரின் கையைப் பிடித்துக் கொண்டு படம் முழுக்க வரும் சிறுமி.

உளூந்தூர்ப் பேட்டை ஐயாவின் மனைவியாரும், சீர்காழியாரின் மனைவியாரும் சகோதரிகள். இந்த வளர்மதிதான் சினிமா பின்னணி பாடகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வித்யா.

உழவன் மகன் திரைப்படத்தில் வரும்
செம்மறியாடே செம்மறியாடே
செய்வது சரியா சொல்
செவத்தப் பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்
இப்பாடலைப் பாடிப் பிரபல்யமானவள் வித்யா.

அந்த மாடியில் இசைச் சமாச்சாரங்கள் இல்லாத நேரங்களில் ஐயா தலைமையில் எங்கள் தர்பார் ஆரம்பித்துவிடும். இலக்கிய விவாதங்கள். அரசியல் காரசாரங்கள், தத்துவ மோதல்கள், நகைச்சுவை வெடிப்புகள் என அந்த தர்பாரில் குதூகலத்திற்குப் பஞ்சம் இருக்காது.

வே.மு. பொதியவெற்பன் தனித்தமிழை, அங்குலம் நழுவாமல் இறுகப் பற்றிப் பிடித்த அழுத்தக்காரர். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற பருமன். குரல் கணீரென்று கண்டசாலாவையும் சிதம்பரம் ஜெயராமனையும் தழுவிக் கலந்து ஒலிக்கும் சாரீரம்.

திருகி விடப் பெற்ற பெரிய மீசை. இந்த உடம்பிற்குள் இலக்கிய ரசனை எப்படி வந்தது என்று எண்ணும்படியாக ஒரு முரட்டுத் தோற்றம். ஆனால் உள்ளபடியே நயம் நிறைந்த ரசனை மிக்க மென்மையான இலக்கிய உணர்வுக்காரர் அவர்.

அவரிடம் என் போன்றவர்களுக்கு எப்போதுமே ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அவர் உச்சரிக்கும் தனித்தமிழும் அவர் எழுதும் தனித்தமிழும்தான் அது.

நல்ல சிந்தனையாளர். அவர் சிந்தனை, தனித்தமிழ்ப் புதருக்குள் சிக்கிக் கிடக்கும் கண்ணுக்குத் தெரியாத அற்புதக் கனிகள். பெரியாரின் பூரண பக்தர். தேவநாய பாவாணரின், பெருஞ்சித்திரனாரின் பட்டாளத்துக்காரர். இவையே எதிர் எதிர் தன்மையுள்ள கோட்பாடுகள்தான். ஆனாலும் பொதியவெற்பனிடம் இவைகள் சமமான பலத்தில் அழுந்திக் கிடந்தன.

ஐம்பது வருடங்களுக்கு முன்பே இனிசியலை (அன்று இப்படி சொன்னால் பொதியவெற்பனுக்கு எரிச்சல் வந்துவிடும்) அதாவது தலைப்பெழுத்தை புரட்சிகரமாகப் போட்டுக் கொண்டவர் பொதியவெற்பன்.

அன்னை பெயரின் முதலெழுத்தை முதலிலும், தந்தை பெயர் முதலெழுத்தை அடுத்தும் இனிசியலாகப் பதிவு செய்து கொண்டவர் அவர். தாய் வேலம்மாள், தந்தை முத்தையா. வே.மு. பொதியவெற்பன் என இப்படி அமைத்துக் கொண்டவர்.

அவருக்குப் பிறப்பில் இருந்த பெயர் இது இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இதுதான் அவர் பெயர். நேதாஜி, தனித்தமிழ் வெறியால் பொதியவெற்பனாகப் போனார்.

அன்னை வேலம்மாள் குற்றால(பொதிய) மலைக்கு சரிவிலிருக்கும் கடையநல்லூர்காரர். அதனால் அவர் பொதியவெற்பனாகி விட்டார்.

நண்பர் ஆல்பென்சுக்கும், பொதியவெற்பனுக்கும் தனித்தமிழ் விவகாரத்தில் அடிபிடி அளவுக்குச் சென்று சர்ச்சை நடைப்பெற்றுக் கொள்ளும். ஆனாலும் அடுத்த வினாடி கட்டியணைத்துக் கொண்டு கண்ணியம் பாதுகாக்கப்படும்.

சண்முகம் ஐயா, சிதம்பரத்தைவிட்டு முழுவதுமாகக் சென்னைக்குக் குடிமாறிய கடைசிக் காலக் கட்டத்தில் சிதம்பரம் வாகீச நகரில் குடியிருந்தார். அந்த நகர் அப்பொழுதுதான் புதியதாக உருவாகிக் கொண்டு இருந்தது. ஆறு, ஏழு பங்களாக்கள் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தன.

இங்கேயும் ஐயா குடியிருந்த பங்களாவின் மாடி எங்களின் இலக்கியக் களம்தான். அந்த பங்களாவின் கீழ்ப்பகுதியில் ஐயா குடும்பத்தோடு இருந்தார். முதல் மாடி எங்கள் அனைவரின் இலக்கியச் சாம்ராஜ்ஜியப் பகுதி. அதற்கு மேல் ஒரு மொட்டைமாடி. மொட்டை மாடிக்குச் செல்லப் படி கிடையாது. மொட்டைமாடியின் மேல் உள்ள தடுப்புச் சுவரில் ஒரு பருத்த இரும்புக் கம்பி ஒன்று இருந்தது.

அங்கே மாப்பிள்ளைக் கலைமணி எப்படியோ தாவி ஏறி அந்தக் கம்பியில் உறுதியான ஒரு கயிறைக் கட்டித் தொங்க விட்டான். இந்தக் குரங்குத் தனம் கலைமணியினுடையப் பிறப்புரிமை.

இரவு ஒரு மணிக்கு மேல் அந்தக் கயிறைப் பற்றிப் பிடித்து நாங்கள் மேல் ஏறிச்சென்று மொட்டை மாடியில் படுத்துக் கொள்வோம். இந்தச் சாகசம் ஐயாவுக்குக் கூடத்தெரியாது.

ஒரு நாள் இரவு 2 மணி அளவு. மொட்டை மாடியில் நான், கலைமணி, ஆல்பென்ஸ், பொதியவெற்பன், பொதியவெற்பனுடைய நண்பர் புதுவையைச் சேர்ந்த அரிமா பாமகன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

அரிமா பாமகனும் பொதியவெற்பனும் தனித்தமிழ்த் தீவிரக்காரர்கள். அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் எல்லோருமே புலவர்கள்தாம். ஆனாலும் அந்த இருவர் பேசியப் பேச்சுக்களில் நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள எங்களுக்கு ஒரு தனித் தமிழ் அகராதித் தேவைப்பட்டது.

ஆல்பென்ஸ் ஆரம்பித்தார், “கானாக ஆனாக டானாக மானாகஇப்படி அடிக்கிக் கொண்டு இருந்தார். கலைமணி இதற்கு பதிலாக, “தூனாக்க தேனாக பூனாக பீனாகஎன்று பதிலாகப் பேசிக்கொண்டு இருந்தான். இவர்கள் பேச்சில் ஒரு பொருளும் கிடையாது.

அரிமா பாமகனுக்குக் கோபம் வந்து விட்டது. தங்களைத் தரக்குறைவான இழி சொற்களில் இவர்கள் ஏசிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் கருதி விட்டார்.

பொதியவெற்பனிடம், “பொதியரே இந்தக் கழிசடையினர் நம்மை ஏகடியம் செய்கின்றனர். இவர்களுக்குப் பதில் சொல்லக் கூடாது, நம் கரங்களால்தான் பேச வேண்டும்என அரிமா பாமகன் ஆவேசமாகப் பேசினார்.

ஆல்பென்ஸ் எதுவும் பேசவில்லை. அரிமா பாமகனை அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி மொட்டை மாடியின் சுற்றுச் சுவருக்கு வெளியே வீசச் சென்று விட்டார். அரிமா பாமகன், மரண ஓலம் எழுப்ப ஆரம்பித்து விட்டார். வாகீச நகரே அந்த ஓலத்தை எதிரொலித்தது. கீழே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஐயாவும் அவர் குடும்பத்தினரும் விழித்தெழுந்து மாடிக்கு ஓடி வந்தார்கள்.

ஐயா வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி மணிவாசகப் பதிப்பக உரிமையாளர் பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பனாரின் தம்பி குடி இருந்தார். அவர் குடும்பமும் நடு இரவில் ஐயா வீட்டிற்கு ஓடி வந்தது. (மெய்யப்பனாரும் எங்களுக்கு ஆசிரியர்தான்).

ஆல்பென்ஸைப் பிடித்து நிறுத்தி அரிமா பாமகனைக் காப்பாற்றி நாங்கள் கீழேக் கொண்டு வந்தோம். இதனாலெல்லாம் எங்களுக்குள் பகை வந்துவிடவில்லை. மறுநாளே ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு உலாவிக் கொண்டு இருந்தோம்.


123 கனகசபை நகர் மாடியில் உள்ள அறைக்குள்ளே இரவில் பல நேரங்களில் நாங்கள் அமர்ந்து கொண்டு அறைக் கதவைத் தாழிட்டுக் கொள்வோம். ஐயா ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொள்வார். நாங்கள் எல்லாம் விருப்பம் போல் தரையிலும் சேர்களிலும் அமர்ந்தும் படுத்தும் கொண்டும் இருப்போம்.

அறையில் மின்விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கும். நீலக் கலர் ஜீரோ வாட்ஸ் பல்பு ஒரு ரம்மியனான ஒளியை அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கும்.

பர்வீன் சுல்தானாவுடைய மீரா பஜன் ஆலாபனை ஸ்டீரியோவில் நழுவி நழுவி அறை முழுவதும் தழுவி பரவி எங்கள் அனைவரையும் எதோ ஒரு உலகத்திற்குள் அள்ளித் தூக்கி எறிந்திருக்கும். கிட்டதட்ட தன்னிலை தவறித்தான் போய் இருப்போம்.

இந்த உணர்வுகளில் அதிகம் பதிக்கப் படுபவர் வே.மு. பொதியவெற்பன்தான். கொடூரமான தனித்தமிழ் வெறியர். அந்த வெறித்தனத்தின் பிடிப்பு பர்வீன் சுல்தானாவின் இசை ஒலியில் முதல்முதல் நொறுங்க ஆரம்பித்தது.

பொதியவெற்பன் என்னிடம் ஒருமுறை சொன்னார், “நான் திருமணம் முடித்தபின் எனக்கு ஒரு பெண்பிள்ளைப் பிறந்தால், பர்வீன் சுல்தானாவின் பெயரைச் சூட்டிவேன்என்று.

நான் அவரிடம் கேட்டேன். மதங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். பர்வீன் ஆகட்டும் சுல்தானாவாகட்டும் தமிழ் இல்லையே. உமது கோட்பாட்டின் மூலையில் இது என்ன ஒரு கீறல்?” என்று.

இசை, மொழியை நொறுக்கிவிட்டதுஎன்று அவர் சொன்னார்.

வெல்லப் பிறந்தான் முதலித் தெருவில் உள்ள என் அறையிலும் நாங்கள் நடத்தும் இந்த மொழிச் சண்டை காரணமாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் அறை வாசலுக்கு வந்து விடுவார்கள்.

பொதியவெற்பனுக்கு மொழி வெறி இருந்தது. எனக்கோ இவருடைய ஆழமான சிந்தனைகள், மொழியிறுக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்ற ஆதங்கம்.

என் அறையில் வைத்துத்தான் முதல்முதலில் நான் வைத்திருந்த புதுமைப் பித்தன் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் நெல்லை தனித் தமிழ் சங்கம், புதுமைப் பித்தனை விமர்சித்து தனித் தமிழில் எழுதும் நூலுக்குப் பரிசு அறிவித்தது.

முதல் பரிசு, ஒரு பவுண் தங்க பதக்கம். நான் பொதியவெற்பனைத் தூண்டினேன். தனித் தமிழை ஒப்புக் கொள்ளாத புதுமைப்பித்தனை,

நீர் நேசிக்கும் தனித்தமிழில் எழுதுங்கள் அண்ணாச்சி என்று கட்டாயப் படுத்தினேன்.

எழுதினார், போட்டிக்கு அனுப்பினார். இவர் எழுத்துத்தான் முதல் பரிசு பெற்றது, சிதம்பரத்தில் இருந்து, நானும் அவரும் நெல்லைக்கு வந்து அந்தப் பாராட்டு விழாவில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டோம்.

நெல்லை தூய யோவான் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வளன்அரசு அதனை வழங்கினார். புதுமைப்பித்தன் பொதியவெற்பனுக்குள் இறங்கியதற்குப் பின்னால் பொதியவெற்பனுக்குள் ஒளிந்து கிடந்த தனித்தமிழ்க் கொடூரம் உருகத் தொடங்கியது.

தி.க தத்துவத்தை மட்டுமே முழுச் சிந்தனையாகக் கொண்டு இருந்த பொதியவெற்பன், என் அறையில் இருந்த மார்க்சிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். விவாதிக்க தொடங்கினோம். பின்னர் அவரிடம் பெரியார் மட்டும் இருந்தார். தி.க. தனம் சிதறி விழுந்துவிட்டது.

மார்க்சீயம் பொதியவெற்பனின் விழிப் பார்வையாக மாறியது. தனித்தமிழில் இருந்து வெளியில் வரவும், தி.க விலிருந்து மார்க்சீயப் பாதையில் கால் பதிக்கவும் நானும் அன்று ஒரு சின்ன காரணமாக இருந்து இருக்கிறேன். இதை நான் மகிழ்ச்சியோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.

நோபல் பரிசு அழைத்தபோது அதைத் தவிர்த்துக் கொண்டான். சிலி தேசத்து மகாகவி. பாப்புலோ நெரூடோ. மீண்டும் நோபல் பரிசு அவனை அழைத்தது. அப்போது அதைப் பெற்றுக் கொண்டான்.

நோபல் பரிசைப் பெற்று கொண்டு, அவன் அமர்ந்திருந்த இருக்கையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டான். அப்படி ஒரு பிடிவாதப் புரட்சிக்காரன் பாப்புலோ நெரூடோ. அவன் எழுதிய கடைசியாக முப்பது காதல் கவிதைகள்என்ற கவிதை நூலை ஆங்கில வடிவில் பொதியவெற்பன், ஐயா நூலகத்தில் எடுத்துப் படித்தார்.

அந்த முப்பது கவிதைகளும் பொதியவெற்பனை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. அதைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

ஏற்கனவே இசையால் பர்வீன் சுல்தானா அவருக்குள் இறங்கி இருந்தார். இப்போது கவித்துவத்தால் பாப்புலோ நெரூடோ அவருக்குள் கொலு அமர்ந்துவிட்டார்.

இவைகளுக்கு முன்னால் நடந்த இரு சம்பவங்களை நான் இங்கே குறிப்பிடவேண்டும்.

72-ம் ஆண்டு புலவர் சங்கரனுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மாமா சங்கரன், கவியரங்கம் வைத்திருந்தான். அந்தக் கவியரங்கத்திற்கு நான் தலைமை வகித்தேன். பொதியவெற்பனும் கவியரங்கத்தில் கவிதைப் படித்தார். கவியரங்கத்திற்குப் பொதியவெற்பனை நான் அறிமுகப்படுத்தியபொழுது

பற்களுக்கு இடையில் கற்களைப் போட்டே
பக்குவமாகவே கடிப்பார் - பொதிய
வெற்பனார் தமிழ்ப் படிப்பார்.

என்று குறிப்பிட்டேன்.

அவர் தமிழ் அன்று இப்படித்தான் இருக்கும். அதற்குப் பின்னால் 1975 அல்லது 76 ஆண்டில் பொதியவெற்பனாருக்குத் திருமணம் நடந்தது. அப்பொழுதும் கவியரங்கம் நடந்தது. அந்தக் கவியரங்கத்திற்கும் நான்தான் தலைமை தாங்கினேன்.

ஆனால் இப்பொழுது பொதியவெற்பனார் முழுவதுமாக மாறி இருந்தார். தனித்தமிழ் பொதியவெற்பன் தன்னைத் தொலைத்து விட்டார். அதேபோல் தி.க பொதியவெற்பன் தன்னை விடுவித்துக்கொண்டு விட்டார்.

மார்க்சிய லெனினியச் சிந்தனைக்குள் பிரவேசித்து விட்டார்.

பொதியவெற்பனாருக்கு முதலில் ஒரு மகள் பிறந்தாள். அடுத்து ஒரு மகன் பிறந்தான்.

123 கனகசபை நகர் ஐயா வீட்டு மாடியில் எடுத்த சங்கல்பத்தை அமல் படுத்தினார்.

மகளுக்குப் பர்வீன் என்று பெயர் வைத்தார்.

பொதியவெற்பன் மட்டும் முடிவெடுத்துவிட்டால் இது நடந்துவிடுமா? அவர் வீட்டார் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே.

ஆனாலும் பொதியவெற்பனின் பிடிவாதம் குறையவில்லை. வீட்டாரைத் திருப்திப்படுத்த ஒரு வழி செய்தார். அனுராகம் என்ற பெயரை இணைத்துக் கொண்டார். பர்வீன் அனுராகம்.

பர்வீன் இசைப் பெயராகிவிட்டது. அனுராகம் இந்துப் பெயராகிவிட்டது. குடும்பத்தின் தயக்கமும் விலகிக் கொண்டது.

பொதியவெற்பன் தன் முழு சொத்துக்களையும் விற்று பதிப்பகம் ஆரம்பித்தார். பதிப்பகத்திற்கு அவர் வைத்த பெயர் , “சிலிக்குயில்பதிப்பகம்.

சிலிக்குயில் என்ற சொல் பாப்புலோ நெரூடோவைக் குறிக்கும். சிலிக்குயில் பதிப்பித்த நூல்கள் தமிழுக்குக் கிடைத்த வரப் பிரசாதங்கள்.

மருத்துவம் என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய புத்தகத்தை சிலிக்குயில் பதிப்பித்தது. மார்க்ஸுக்கு அதுதான் அறிமுகப் புத்தகம். தி.க.காரர் மார்க்ஸையும் மார்க்சியத்தைப் பார்க்க வைத்தவர் பொதியவெற்பன்.

பொதியவெற்பன் ஒரு சரியான சாதனையாளர். இன்று சித்தர் மரபில் நீண்டநெடிய ஆய்வு செய்து கொண்டு இருக்கக் கூடிய ஆய்வாளர். சூபியிசம், சித்தரிசம், ஜென்னிசம் போன்ற தத்துவப் பாதைக்குள் ஒரு பிரம்மாண்ட நடை நடந்து கொண்டிருக்கிறார்.

பொதியவெற்பன் எத்தனையோ புனை பெயரை வைத்திருந்தார்; என்றாலும் பொதியஎன்ற சொல்லோடு இணைத்து ஒரு புனை பெயரை வைத்ததில்லை.

இப்போது பொதியவெற்பன் பொதிகைச் சித்தராகி இருக்கிறார்.

பரிணாமங்கள் எப்படியோ... எங்கோ... நடந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment