Thursday, July 24, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது-39

முரண்களின் ஏகபோகக் கலைஞன்.!

எங்கள் நட்பு வட்டத்தில் ஒருவன் ஓவியப் புலவன் நாகலிங்கம்.

இவன் ஏகப்பட்ட முரண்களினால் ஏகபோகமாகத் தொகுக்கப்பட்ட விசித்திரன்.

நாகலிங்கம் விழிகள் அவனுக்கென்றே பொருத்தி அனுப்பப்பட்ட ஒரு வரமாகும். அந்த விழிகளில் எப்பொழுதுமே நிறைவேற முடியாத, திருப்திப்பட்டுப் போக முடியாத ஒரு சில அபூர்வக் கனவுகள் மிதந்து கொண்டு இருக்கும்.

நல்ல அகன்ற நெற்றி. கொஞ்சமாக ஒடுங்கி சிறிது நீண்ட முகம். வார்த்தைக்குள் அடங்காத நேர்த்தியான மூக்கு.

மாந்தளிரை விட கொஞ்சம் கூடுதலாக வெளிறிய நிறம். ஒடிசலான உருவம். வாயில் எப்பொழுதுமே வெற்றிலையும் புகையிலையும் குதப்பியச் சிகப்புச்சாறு தஞ்சமடைந்து இருக்கும்.

எங்கள் நாகலிங்கம் பேசுவது எப்பொழுதுமே கொஞ்சம்தான். பேசுவதைக் குறைக்கத்தான் வாயில் புகையிலைப் புகுந்து கொண்டு இருக்குமோ? என்று நாங்கள் எண்ணுவது உண்டு. அவன் விரல்களில் வண்ணத்தில் முங்கி நனைந்து இருக்கும் ஓவியத் தூரிகை (பிரஷ்) ஏதாவது ஒரு பொருளில் எதையாவது தீட்டிக் கொண்டு இருக்கும்.

சட்டை அணியாது வேட்டிகட்டி அவன் வீட்டுத் திண்ணையில் இருக்கும் அவன் தனி அறையில் அவன் இருப்பான். இந்த நேரம் தவிர அவன் வெளியில் புறப்படும் போது அவன் தோற்றம் இன்னும் விநோதமாக இருக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பிற்கு எப்போதாவது வந்து போவான். ஆனாலும் புலவர் பட்டம் பெற்றுவிட்டான்.

நான், மாமா புலவர் சங்கரன், மாப்பிள்ளை புலவர் கலைமணி, மாப்பிள்ளை இஞ்ஜீனியர் செல்வம் இப்படி உள்ள எங்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் அவன் வீட்டுத் திண்ணையில் அவனோடு எப்பொழுதும் இருப்போம்.

அவன் வீதிக்கு வரும்போது மட்டும்தான் மேலாடை அணிவான். ஜிப்பாதான் அவன் மேலாடை. அவன் ஜிப்பாவின் வலது கை துணி மேல் நோக்கி சுருட்டப்பட்டு இருக்கும். இடது கை ஜிப்பா துணி நீளமாகத் தொங்கிக்கொண்டு இருக்கும். எல்லா நேரங்களிளும் வேட்டிதான் கட்டுவான். ஒரு சில பொழுதுகளில் பேண்ட்டும் அணிவான்.

சிதம்பரம் வீதிகளிலும், அண்ணாமலை நகர் வெளிகளிலும் புலவர் வகுப்பறையிலும் இதே தோற்றத்தில்தான் தென்படுவான்.

முக்கியமான ஒரு தகவல். அநேகமாக சில வேளைகளைத் தவிர ஏதாவது ஒரு போதைத் திரவத்தை (விஸ்கி, ரம், கள்) தனக்குள் நிறைத்துக் கொண்டு இருப்பான். அவனிடம் எந்தத் தள்ளாட்டமும் இருக்காது. எந்தக் கண்ணியக் குறைவும் அவனைச் சீண்டாது.

நாங்களெல்லாம் உளுந்தூர்ப்பேட்டை சண்முக ஐயாவின் வட்டத்திற்கு உரியவர்கள்.

நாகலிங்கம் பேட்டையாரிடம் பேசும் போது கூட இப்படித்தான் இருப்பான். அவனுக்கு ஒளிவு மறைவு கிடையாது. அவன் அப்பட்டமான யதார்த்தப் பேர்வளி. இவற்றைத்தவிர அவனிடம் வேறு எந்தத் தவறையும் எவரும் என்றும் கண்டது இல்லை.

நாகலிங்கத்தின் வீடு சிதம்பரத்தின் கடைக்கோடிப் பகுதியில் உள்ள தொப்பையன் தெருவில் இருந்தது. அவனுக்கு அது சொந்த வீடு.

அவன் தாய், தந்தை எப்பொழுதோ இறந்து விட்டார்கள். இவன்தான் மூத்தவன். இவனுக்கு ஒரு தம்பி. அவன் வீட்டுக்கு இவர்கள்தான் உரிமையாளர்கள்.

நாகலிங்கத்தின் தம்பி என்றுமே நேரெதிரில் நின்று அவனிடம் பேசமாட்டான். ஒரு பக்கத்தில் ஒதுங்கி கைகட்டி நின்றுதான் பேசுவான். நாகலிங்கம் எடுக்கும் எந்த முடிவும் தம்பிக்குத் தேவ அறிவிப்பு. இப்படி ஒரு சகோதரப் பிணைப்பு எங்களுக்கே ஒரு பேராச்சரியம்தான்.

நாகலிங்கம் தம்பி அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணோடு தொடர்போடு இருந்தான். அந்தப் பெண் இரண்டு குழைந்தைகளுக்குத் தாய். இந்தச் செய்தி நாகலிங்கத்திற்கு அந்தத் தெருவில் உள்ளவர்களிலேயே கடைசியாகத்தான் தெரிய வந்தது.

அறிந்த நாகலிங்கம் ஒரு முடிவெடுத்தான். அவன் தெருவில் உள்ள சொந்தக்காரர்களை அழைத்தான். இந்தத் தகவலைப் பகிரங்கப் படுத்தினான். தனித்து வாழ்ந்த அந்தப் பெண்மணியை அழைத்தான். தன் தம்பியையும் அழைத்தான், “இந்தப் பெண்மணியோடும், இரு குழந்தைகளோடும் நம் வீட்டில் வந்து வாழ்க்கை நடத்து. நம் வீட்டில் எனக்குள்ள உரிமையை உனக்கும் உன் குடும்பத்தினர்களுக்கும் எழுதித்தந்து விடுகிறேன்என்று சொன்னான்.

அண்ணன் கட்டுப்பாட்டை எப்பொழுதும் மீறாதத்தம்பி அப்படியே நடந்து கொண்டான்.

நாகலிங்கம் தன் வீட்டின் திண்ணையில், தட்டிகளால் தடுத்து ஒரு சின்ன அறையை உருவாக்கிக் கொண்டான். அதில்தான் அவன் வாழ்ந்தான்.

நாகலிங்கத்தின் தம்பி அவன் குடுப்பத்தோடு இன்றும் அங்குதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

நாகலிங்கத்தின் அந்தச் சின்ன அறைக்குக் கதவுகள் கிடையாது. சிதம்பரத்தின் கடைவீதிகளில் உள்ள பெரும்பான்மையான கடைகளில் நாகலிங்கம் எழுதிய பெயர்ப்பலகைதான் மின்னிக்கொண்டு இருக்கும்.

நாகலிங்கம் எழுதிய எழுத்துகளுக்கும் ஓவியங்களுக்கும் கீழே அவன் கையெழுத்துப் போடுவது இல்லை.

காரணம் கேட்டால், “ஒரு கையெழுத்து என்னை அடையாளம் காட்டக் கூடாது. என் எழுத்துகளும் என் ஓவியங்களும் என் முகவரியை அறிவிக்க வேண்டும்என்பான்.

அது எப்படி அறிவிக்கும்? என்று கேட்டால்..,

இவற்றைப் பார்த்து இதை ஆக்கியவன் யார்? என அந்தக் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். அந்தக் கடைக்காரர் என் முகவரியை அவருக்குத்தந்து என்னிடம் அனுப்பிவைப்பார். இதுதான் எனது பாணிஎன்பான்.

அவனுக்கு ஒரு தொழில் தர்மம் இருந்தது. அவன் தொழிலுக்குப் பேரம் பேசக்கூடாது. அவன் சொன்ன தொகையை ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தொகையை நிர்ணயிப்பதே அலாதியானது. அன்றைக்கு அவனுக்கு என்ன தேவையோ அதுதான் அவன் நிர்ணயிக்கும் தொகை.

வாடிக்கையாளர்களுக்கு இதனால் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். ஆனால் அவன் வாடிக்கையாளர்கள் அவனிடம்தான் வந்து கொண்டு இருந்தார்கள்.

அவன் கையில் இருக்கும் பணத்தை அவன் திண்ணை அறையில் வைத்து இருப்பான். அந்த அறைக்குக் கதவு கிடையாது. வெளியே போய்விட்டு அறைக்குவந்து பணத்தைத் தேடுவான். அங்கே பணம் இருக்காது. யாரோ தேவையானவர்கள் எடுத்து விட்டார்கள்என்று சொல்லி விட்டு பட்டினியாகப் படுத்துக் கொள்வான்.

அவன் தெருவில் உள்ள யாரோ தேவையானவர்தான் அதை எடுத்து இருப்பார். சில நேரங்களில் காணாமல் போனப் பணம் அவன் அறையில் அதே தொகையில் வந்து அமர்ந்து இருக்கும். எடுத்த பணத்தைத் திரும்ப வைத்திருக்கிறார்கள்என்று சொல்லி செலவு செய்து விடுவான். இந்தத் தொகையைக் கடனாக எடுத்தது யார்? வைத்தது யார்? அவனுக்கே தெரியாது.

உளுந்தூர்ப் பேட்டையார் சென்னை கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைக்குக் குடிவந்து இருந்தார்.

பேட்டையார் பொறுப்பேற்ற சில மாதங்களில் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வந்து விட்டது. மாணவர்கள் பக்கம் பேட்டையார் உறுதியாகச் செயல் பட்டார். அவர்கள் பக்கம் ஒரு நியாயம் இருந்தது.

கல்லூரி நிர்வாகம் பேட்டையாரையும் அவருக்கு ஆதரவான 6 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்தது.

மாணவர் போராட்டம் கொதித்தெழுந்தது.

போராட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பை பேட்டையார் எங்களிடம் ஒப்படைத்தார்.

சிதம்பரத்தில் இருந்து நான், கலைமணி, செல்வம், நாகலிங்கம் சென்னைக்கு வந்தோம். எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி மாணவர்களுக்குப் போராட்ட முறைகளை வகுத்துக் கொடுத்தோம்.

சென்னை சைனா பஜார் பூக்கடை ஹோல்சேல் துணிக் கடைகளில் துணிகளைச் சுற்றப் பயண்படுத்தப்படும் நீண்ட கோல்களை நிறைய வாங்கி வந்து வெள்ளை காட்போர்டுகளில் போராட்ட சுலோகங்கள் எழுதி ஆணி அடித்து பொருத்த வேண்டிய வேலை நாகலிங்கத்திற்கு உரியது.

கௌரிவாக்கத்தைத் தாண்டி எப்போதும் பூட்டிக்கிடக்கும் ஒரு பங்களா இருந்தது. அதன் மாடியில் இரவுகளில் நாங்கள் தங்கி இருந்து இந்தப் பணிகளைச் செய்து கொண்டு இருந்தோம்.

இன்றைக்கு இருக்கும் கௌரிவாக்கம் பரபரப்பானது. நான் குறிப்பிடும் சம்பவம் 1973-ம் ஆண்டு நடந்தது. அன்றைய கௌரிவாக்கம் வெறும் வெட்ட வெளி மணற் காடாக இருந்தது. இரவில் சர்வசாதாரணமாகப் பாம்பும் தேளும் ஊர்ந்து கொண்டு இருக்கும்.

இந்த மாணவப் போராட்டம் தமிழக அரசு தலையீட்டால் மாணவர் சார்பாக வெற்றியைத் தேடித்தந்தது.

மீண்டும் பேட்டையார் சிதம்பரம் வந்தார். நாங்களும் சிதம்பரத்தில் இருந்தோம்.

சிதம்பரத்தில் மாமா சங்கரன் திருமணம் நிகழ்ந்தேறியது. ஒருநாள் சங்கரன் மனைவியை அழைத்துக் கொண்டு நாகலிங்கம் திண்ணைக் குடிலுக்குத் திடீரென வந்து விட்டான்.

அவ்வளவுதான் 10 பாம்பு 20 தேள் கொத்தியது போல துடித்தெழுந்த நாகலிங்கம் தெருவில் வந்து நின்று விட்டான்.

புதுத் தம்பதியரை வரவேற்கத்தெரியாத பதற்றத்தில் துடித்தான். மாமா உடனே மனைவியைக் கூட்டிக் கொண்டு தயவு செய்து போடா போடாஎன்று விரட்ட ஆரம்பித்து விட்டான்.

நாகலிங்கத்திற்கு அன்பு செலுத்த மட்டும்தான் தெரியும். அது பற்றிய நகாசு வேலைகள் எதுவும் அவனுக்குத் தெரியாது.

நாகலிங்கம் தொடர்ந்து அருந்தி வந்த மதுப் பழக்கம் அவன் உடலை ரொம்பவும் பாதித்துவிட்டது.

அப்பொழுது நான் சென்னை மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள முஸ்லீம் லீக் அலுவலக மாடியில் தங்கி இருந்தேன். மணிவிளக்கு மாத இதழில் நானும் கவிஞர் இஜட்.ஜஃபருல்லாவும் துணையாசிரியர்களாக இருந்தோம்.

மணிவிளக்கு அலுவலகத்திலேயே அறமுரசு அலுவலகமும் இருந்தது. அறமுரசை எம்.ஏ.அக்பர் அண்ணன் கவனித்துக் கொண்டு இருந்தார்.

சற்றுத் தொலைவில் கவிஞர் தா.காசிமின் காயிதே மில்லத் அச்சகம் இருந்தது. அதில் இருந்து சரவிளக்கு மாத இதழ் வந்து கொண்டு இருந்தது.

சிதம்பரத்தில் எங்கள் நண்பர் வட்டம் கூடி ஒரு முடிவு எடுத்தார்கள். இனிமேல் நாகலிங்கம் சிதம்பரத்தில் இருந்தால் குடித்து சீரழிந்து விடுவான். சென்னையில் ஹிலாலிடம் இவனை ஒப்படைத்துவிட வேண்டும் என நண்பர்கள் தீர்மானித்து விட்டார்கள். எனக்கும் தகவல் தந்தார்கள். நானும் சென்னையில் இருந்து சிதம்பரம் சென்றேன்.

நாகலிங்கம் என் பொறுப்பில் சென்னை வர சம்மதிக்கவில்லை. நாங்களெல்லாம் சேர்ந்து அவனை உதைத்துத் தூக்கி வர முடிவு செய்து விட்டோம். முடிவாக சம்மதப்பட்டு என்னுடன் வர இசைந்து விட்டான்.

ஒர் இரவில் சிதம்பரத்தில் பஸ் ஏறினோம். அதிகாலை பாரிஸ் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினோம் (அப்போது கோயம்பேடு கிடையாது). அன்று ரமளான் மாதம். முதல் நோன்பு ஆரம்பம். அங்கப்பன் நாயக்கன் தெருவில் நடந்து வந்தோம்.

அங்கே ஒரு கட்டிட மாடியில் போரா முஸ்லிம்பள்ளிவாசல் இருக்கிறது. அங்கே ஸஹர் உணவு அருந்திவிட்டு ஒரு கூட்டம் தெருவில் நிரம்பி நின்றது. அதைத்தாண்டி நடந்தோம். மரைக்காயர்லெப்பை தெருவிற்கு வந்து விட்டோம். முஸ்லிம் லீக் தலைமை அலுவலக 3-வது மாடியில் உள்ள என் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

நான் நாகுவிடம் கூறினேன், “டேய் நாகு! இது முஸ்லிம் லீக் அலுவலகம். இங்கே எங்களில் யாருக்கும் மது ஆகுமானது இல்லை. உனக்கோ மது இல்லாமல் முடியாது. உன்னை நான் தடை செய்யவில்லை. நீ மது அருந்தி விட்டு இந்த கட்டிடத்திற்குள் கால் வைத்தால் உன்னோடு நானும் வெளியேற வேண்டியதுதான். நீ மது அருந்தினால் நானும் உன்னோடு இந்த பிளாட்பாரத்தில் வந்து தங்க வேண்டியதுதான். ஒன்று மதுவை நீ விட்டுவிடு. இல்லையேல் நான் உன்னோடு பிளாட்பாரத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி நீ சிதம்பரத்திற்குத் திரும்பப் போகக் கூடாது.இப்படி நான் உறுதியாகக் கூறிவிட்டேன்.

அந்த ஸஹர் நேரத்திலும் அவன் ஒரு குத்து புகையிலையை எடுத்து வாயில் அமுக்கினான். எந்த முடிவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.

நாங்கள் அது தொடங்கி 6,7 மாதம் முஸ்லிம் லீக் அலுவலகத்திலேயே தங்கி இருந்தோம். ஒரு நாள் கூட என் நாகலிங்கம் மதுவை அருந்தவும் இல்லை, மது பாட்டிலைத் தொடவும் இல்லை.

நாகலிங்கத்திற்கு ஏற்கனவே ஒரு பழக்கம் உண்டு. அவன் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களை ஒருபோதும் மது அருந்த சம்மதிக்க மாட்டான்.

அவன் மதுப் பிரியன் ஆனால் மதுப் பிரியர்களுக்கு அவன் எதிரானவன்.

கவிஞர் தா.காசிம், எம்.ஏ.அக்பர் அண்ணன், நாகுவின் கலைத்திறமை கண்டு டைட்டில் எழுதுவதற்கும், படம் வரைவதற்கும் நிறைய வாய்ப்புகள் வாங்கித் தந்தார்கள்.

நிறைய அவன் சம்பாதித்தான். புதுப்பிக்கப்பட்ட அவன் வாழ்க்கை செம்மையாகவும் செழிப்பாகவும் மலர்ந்தது. அவன் வருமானத்தில் நானும் அவனும் தினம் தினம் அசைவ சாப்பாடு சாப்பிட்டோம். அவன் மெருகேறினான். நானும் கூடத்தான்.

அப்போது தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. கடையநல்லூர் தொகுதியில் என் சிறிய தந்தையார் அ.சாகுல் ஹமீது சாஹிப் முஸ்லிம்லீக் வேட்பாளராகப் போட்டி இட்டார். நான் தேர்தல் பணிக்காகச் சென்னையில் இருந்து கடையநல்லூர் செல்ல இருந்தேன்.

நாகு சிதம்பரம் செல்ல என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுத்தேன். டேய் நான் குடிக்க மாட்டேன்என்று சொன்னான். நாகு வாக்கு மீறாதவன். சரி, நீ சிதம்பரம் செல், நான் கடையநல்லூரிலிருந்து தேர்தல் முடிந்தவுடன் சிதம்பரம் வருகிறேன். இருவரும் சேர்ந்து சென்னை வந்து விடலாம்என்றேன்.

இந்த ஒப்பந்தத்தோடு மறுநாள் பிரிந்தோம்.

சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.கவினர் இரட்டை இலைச் சின்னத்தைப் பிரம்மாண்டமான கட்டவுட்டாக வரைய இவனுக்கு ஆர்டர் கொடுத்தனர். நாகலிங்கத்தின் தம்பிதான் அந்தப் பகுதி அ.இ.அ.தி.மு.க. செயளாலர். இதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர், தி.மு.க., உதய சூரியன் சின்னத்தின் பெரிய கட்டவுட்டை வரைய இவனுக்கு ஆர்டர் கொடுத்துப் பெற்று இருந்தனர்.

அந்த உதய சூரியன் சின்னத்தை மறைக்கிற மாதிரி இவன் வரைந்த இரட்டை இலை கட்டவுட்டைக் கட்டி விட்டனர். அ.தி.மு.க. வினருக்கும் தி.மு.க வினருக்கும் வாய்ச் சண்டை முற்றி கைகலப்பு ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க.வினர் மீதுதான் குற்றம் என்று உணர்ந்த நாகு, அந்த இடத்திற்குச் சென்று தன் தம்பியிடம் இரட்டை இலைச் சின்னத்தை இங்கே வைக்காதே. இன்னொரு கட்சிச் சின்னத்தை மறைக்காதே என்றுக் கண்டித்தான்.

அண்ணன் சொல்லை என்றுமே தட்டியறியாத நாகுவின் தம்பி, “அண்ணா நீங்க விலகிக்குங்க. நாங்கப் பாத்துக்கிறோம்என்று கூறி நாகலிங்கத்தின் கையைப் பற்றி தெரு ஓரத்துக்கு இழுத்துவிட்டான். நாகலிங்கம் தடுமாறி விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் ஒரு பாராங்கல் கிடந்தது. நாகலிங்கம் தலை அதில் வேகமாக மோதி விட்டது. இது மட்டும்தான் நடந்தது நாகலிங்கம் மரணித்து விட்டான்.

மறுநாள் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு. காவல் துறையினர் நாகலிங்கத்தின் தம்பியைக் கைது செய்து விட்டனர். நாகலிங்கம் உடல் மருத்துவமனைக்குப் போஸ்ட்மார்டத்திற்கு சென்று விட்டது. போஸ்ட் மார்டம் முடிந்த உடன் தி.மு.க.வினர் தி.மு.க கொடியினைப் போர்த்தி தி.மு.க. தியாகி என்பது போல ஊர்வலம் நடத்தி கொண்டு போய் எரித்து விட்டனர்.

ஆனால் நாகுவுக்கு அரசியல் கிடையாது. அவன் முழுவதுமாக முரண்களால் சமைக்கப்பட்ட ஏகபோகக் கலைஞன்.

இந்த சம்பவம் நடக்கும் போது நாங்கள் எவரும் சிதம்பரத்தில் இல்லை.

எங்கள் நாகுவை இந்தக் கோரக்கோலத்தில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை.

இறுதிவரை அவன் தனியனாகவே இருந்து விட்டான். அவன் மட்டுமே இறந்து இருக்கிறான். ஆனால் எங்கள் நினைவுகளில் அவன் நிழல் பதித்து இருக்கிறான்.

No comments:

Post a Comment