Sunday, January 5, 2014

எங்களுக்குத் தெரியும் எளிமை...!


தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற பிரவேசக் காட்சிகள் எளிமையின் அடையாளங்களாக ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. இதை ஒப்புக்கொள்ள எவரும் மறுப்பதில்லை.

முதல்வர் பேருந்தில் வருகிறார், சட்டமன்ற உறுப்பினர் ரிக்ஷாவில் வருகிறார். இப்படி மக்கள் வாகனங்களில் மாண்புகள் பயணம் செய்வது இந்திய மக்களுக்கு காணக் கிடைக்காத திருக்காட்சிகள் போன்று மீடியாக்கள் வெளிச்சம் போடுவதில் உள்ள நியாயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

புது விளக்குமாறு நல்லாத் தான் பெருக்கும்”.
 

இதே டில்லியில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காங்கிரசை குப்புறக் கவிழ்த்தி விட்டு கூட்டுச் சோறானஜனதா ஆட்சியைப் பிடித்தது. அப்போது உத்திரப் பிரதேசம் ரேபரேலி தொகுதியில் அன்றையப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை தோற்கடித்து விட்டு ராஜ் நாராயணன் வெற்றிப் பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப் பட்டது.
 

இந்த ராஜ் நாராயணன் பழைய சோஷியலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். அந்த கட்சியின் தலைவர் ராம் மனோகர் லோஹியா. லோஹியா அரசியல் வாரிசாக வருணிக்கப் பட்டவர் ராஜ் நாராயணன்.

தலைவர் லோஹியா, நடைபெறக் கூடிய அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் பண்டிட் ஜவஹர்லால் நேருவை எதிர்த்து நிற்பார். தேர்தலில் தோற்பார். பின்னர் ராஜ்ய சபா வழியே நாளுமன்றத்திற்குள் நுழைவார். அதே போலத்தான் ராஜ் நாராயணனும் லோஹியாவைத் தொடர்ந்து செயல்பட்டார்.
 

தலைவர் லோஹியா, பண்டிட் நேருவிற்கும், நேரு குடும்ப அரசியலுக்கும் நிரந்திர எதிரி.
 

நேருவின் அரசியல் எதிரியான பட்டேலை பூதாகரப் படுத்தும் பி.ஜெ.பி. தலைவர் லோஹியாவுக்கு ஒரு சின்ன தேர் செய்து கொலுவேற்றி ஊர்வலம் வரலாம்.
 

ராஜ் நாராயணன் டில்லியில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்ற போது இன்றைய கேஜ்ரிவாலை தூக்கி விழுங்கிவிடுமளவு அன்றைக்கு எளிமையைக் கடைப்பிடித்தார். மத்திய அமைச்சர் பஸ்ஸில் வந்தார், நடைபாதையில் நடந்து வந்தார், ரிக்ஷாவில் வந்தார், இவைகளை எல்லாம் அன்றைய பத்திரிகை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு மக்களுக்குக் காட்டின.
 

எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தில் இருந்த அமைச்சர் அறையில் ராஜ் நாராயணனுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் இருந்து மேஜை, நாற்காலி போன்ற பரிவாரங்களை அவர் அறையின் வெளியிலே வராண்டாவில் போட்டார். வராண்டாவில் இருந்தே அமைச்சர் பணியினை மேற்கொண்டார்.
 

பொது மக்கள் தன்னைச் சந்திக்க எந்த ஒரு தடையும், இடையூறும் இருக்கக் கூடாது. அதற்குத்தான் இந்த ஏற்பாடு என்று ராஜ் நாராயணன் குறிப்பிட்டார்.

ராஜ் நாராயணன் பெரும்பாலும் காவி அணிவார். தலையில் ஒரு நீண்ட காவி கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு இருப்பார். இதனால் அவரை காவித் தோற்ற ஆ.எஸ்.எஸ். என்றோ, ஜன சங்கம் என்றோ, பி.ஜெ.பி. என்றோ நினைத்து விடாதீர்கள்.

இவைகளுக்கு மாறு பட்டவர் அவர். ராஜ் நாராயணன் நிச்சயமாக வித்தியாசமான மனிதர். எந்த இடத்திலும் தன் கருத்தைச் சொல்ல ராஜ் நாராயணன் அச்சப் பட்டவர் இல்லை. தயக்கம் காட்டியவர் இல்லை. வெளிப்படையாகத் தூக்கிப் போட்டு விமர்சிக்க வெட்கப் பட்டவர் இல்லை.

ஒரு சம்பவம்...!

ஒரு முறை டில்லியில் நோன்பு காலத்தில் இப்தார் நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அமைப்புகளால் அழைக்கப் பட்டார். ராஜ் நாராயணன் அதில் கலந்து கொண்டார். அப்போது அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
 

அண்ணல் நபிகள் பெருமானார் அவர்களே! மஹ்ஷரில் உங்களைப் பின்பற்றியவர்களின் குற்றம் குறைகளுக்காக இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு வழங்க யாசிப்பீர்களாம். இதை நான் படித்து இருக்கிறேன்.
 

பெருமானார் அவர்களே! உங்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உலகில் உள்ள எந்த முஸ்லிம்களுக்கு வேண்டுமானாலும் பாவமன்னிப்புக் கேட்டு இறைவனிடம் மன்றாடுங்கள். ஆனால் இந்திய முஸ்லிம்களுக்காக மட்டும் பாவ மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடாதீர்கள்.

ஏனென்றால், உங்களை எங்களுக்குத் தெளிவாகவும், சரியாகவும், பூரணமாகவும் வெளிக்காட்டி இருந்தால் எங்களுக்கும் மிகப் பெரிய ஈடேற்றம் கிடைத்து இருக்கும்.
 

இதை இந்திய முஸ்லிம்கள் செய்யத் தவறி விட்டார்கள். இவர்களுக்குக் கிடைத்த உன்னதமான தானியத்தைத் தங்களுக்குள்ளேயேப் பதுக்கிக் கொண்டார்கள். இந்தப் பதுக்கல்காரர்களுக்காக தயவு செய்து நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள்”.

இப்படி ஒரு துஆவை (பிரார்த்தனையை) அந்த இப்தார் நிகழ்ச்சியில் ராஜ் நாராயணன் கேட்டார்.
 

ராஜ் நாராயணன் 1986, டிசம்பர் 31 ஆம் நாள் அவர் குருநாதர் பெயரிலேயே டில்லியில் உள்ள டாக்டர்.ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் காலமானார்.

No comments:

Post a Comment