Monday, July 29, 2013

உருவமற்ற அல்லாஹ்விற்கு உருவாக்கி இருக்கும் தாடி!



28/7/2013 ஞாயிற்றுக் கிழமை தினமணி நாளிதழின் இணைப்பான தினமணிக் கதிரில் . குமார் என்பவர் 'இந்தியாவின் கடைசி முகலாய மன்னர்' என்ற தலைப்பில், முகலாய இறுதி மன்னரான இரண்டாம் பகதூர் ஷா பற்றிய வரலாற்று துணுக்குகள் கொண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார்.

இரண்டாம் பகதூர் ஷாவின் முழுப் பெயர் சமீபத்தில் தொலைக்காட்சிகளில் வெளிவந்த ஒரு விளம்பரத்தில், நினைவாற்றலுக்கு அடையாளமாக ஒரு மாணவன் இவர் பெயரை முழுவதுமாக சொல்லுவான். "அபுல் முஸப்பர் சிராஜுதீன் முஹம்மது பகதூர் ஷா" இதுதான்  இவர் முழுப் பெயர்.



பகதூர் ஷாவைப் பற்றி அறிமுகப் படுத்த வேண்டிய முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை அவர் கட்டுரையில் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் தவறாக செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

பகதூர் ஷா ஆங்கிலேயர்களால் கைது செய்யப் பட்டு ரங்கூனுக்கு அழைத்துச் செல்லப் படும்போது, அவர் கைவசம் எடுத்து சென்ற பொருள்களில் ஒன்றாக "விலை மதிப்பற்ற பொருளாக கருதிய இறைத் தூதர் அல்லாவின் மூன்று தாடி முடிகளை மட்டுமே ஒரு பேழையில் வைத்து எடுத்துச் சென்றார்." என்று எழுதி இருக்கிறார்.

நண்பர் . குமார் அவர்கள், வரலாற்றை எழுதும் போது வரலாற்றுக் குரியவர்களின் மரபுகள், பண்பாடுகளை புரிந்தவராக இருக்க வேண்டும்.

"இறைத் தூதர் அல்லாவின் தாடி முடி" என்று மிக மிக தவறான வரலாற்றுப் பிழையான மரபு அறியாத அறியாமையான நிலையிலிருந்து எழுதி இருக்கிறார்.

சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்ற குறைபாட்டுக்கு வரலாற்று அறிவு பெற்றிருக்கும் . குமார் அவர்களே ஒரு அடையாளமாக இருக்கிறார்.

இறைத் தூதர் என்று இஸ்லாமியர்கள் குறிப்பிடுவது, இறைவனுடைய அடிமைகளில் தலை சிறந்தவர்களாக விளங்கக் கூடிய நபிமார்கள் என்பவர்களே ஆவர். இந்த நபிமார்களை இறைவன் எல்லாச் சமுதாயத்திற்கும் வழிக் காட்டிகளாக அனுப்பி இருக்கிறான். உலகத்தில் நபி மார்கள் இல்லாத மனித சமுதாயம் கிடையாது என்பது இஸ்லாத்தின் பூரண நம்பிக்கை.

இங்கே இறைத் தூதர் என்று குறிப்பிடுவது நபிமார்களில்ளெல்லாம் இறுதியாக வந்த முஹம்மது நபி அவர்களைக் குறிக்கும். அத்தனை நபிமார்களும் மனிதப் புனிதர்களே. இவர்களில் எவரும் அல்லாஹ் என்று அழைக்கப் படும் இறைவன் இல்லை.

இதை .குமார் அவர்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் என்ற சொல் இறைவனை மட்டுமே குறிக்கும். அந்த இறைவனுக்கு உருவம் கிடையாது. அவன் யாராலும் பெறப் படவும் இல்லை, அவன் யாரையும் பெற்றவனும் இல்லை. உருவமில்லாத ஆண்டவனுக்கு தாடி மயிரை குறித்துச் சொல்லும் . குமார் அவர்கள் தவறான தகவலைத் தான் உறுதியாக, நிச்சயமாக பதிவு செய்து விட்டார்.

இறைத் தூதர்கள் அனைவருமே மனிதர்கள் தாம்.




முகலாய இறுதி மன்னர் இரண்டாம் பகதூர் ஷா பற்றி அவர் சொல்லத் தவறிய, ஆதாரபூர்வ சில வரலாற்றுக் குறிப்புகள்.

1.      இவர் கி.பி. 1837 இல் அரியணை ஏறினார். இவர் மிகுந்த சமரச மனப்பான்மை உடையவர்.
இவர் முஸ்லிம்களை நோக்கி "நீங்கள் என்னுடைய ஒரு கண் என்றால், இந்துப் பெருங்குடி மக்கள் என்னுடைய மற்றொரு கண் போன்றவர்கள்" என்று பிரகடனப் படுத்தினார்.

2.      கி.பி.1857 ஆம் ஆண்டில் நடந்த இந்திய சுதந்திரப் போரின் ஆணிவேர் இவரே ஆவார். அதே ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள், டில்லி வீழ்ச்சி அடைந்த போது, தன் பாட்டனார் ஹுமாயுனின் அடக்கத் தலத்தில் அடைக்கலம் புகுந்தார்.

3.      பிரிட்டிஷ் காரர்களின் பிச்சைக் காசுக்கு ஆசைப் பட்டு இவரை மிர்சா இலாஹி பக்ஷ், முன்ஜி ரஜப் அலி என்ற முஸ்லிம்களே காட்டிக் கொடுத்தார்கள்.





4.      பிரிட்டிஷ் தளபதி ஹட்சனை நோக்கி, "ஹட்சன் பகதூர்!, முஜே பே இஸ்ஸத் நஹி ஹோனா" (ஹட்சன் பகதூர்! எனக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது) என்று கூறிய பகதூர் ஷாவின் மொழிகள் வரலாற்றுப் பதிவில் முக்கியமானது.


பல நூற்றாண்டுக்கு முன்னர் மஹா அலெக்ஸாண்டர் முன் கைதாகி நின்ற மாமன்னன் புருஷோத்தமன் பேசியது நினைவுக்கு வரும்.


5.      பகதூர் ஷா வயதானவர். டெல்லி செங்கோட்டையில் சிறை வைக்கப் பட்ட இவர், பசி தாளாது உணவுக் கேட்டார். இவரின் முன் இரண்டு மூடப் பட்ட பாத்திரங்கள் கொண்டு வந்து வைக்கப் பட்டன. பகதூர் ஷா ஆவலோடு உண்பதற்கு அவற்றைத் திறந்தார். அந்த இரு தட்டுகளிலும், பகதூர் ஷாவின் இரண்டு மகன்களுடைய துண்டிக்கப் பட்ட தலைகள் வைக்கப் பட்டு இருந்தன. துக்கம் தாளாது கண் கலங்கிய பகதூர் ஷா, தன் மனைவி, ஜீனத் மஹலை நோக்கி, "கண்கலங்காமல் இரு, நடப்பது நடக்கட்டும்" என்று அவர் சொன்ன மொழிகளை  வரலாறு பதிவு செய்து இருக்கிறது.




6.      செங்கோட்டையில் 42 நாட்கள் விசாரணை நடந்தது. அதன்பின் குற்றம் சாட்டப் பெற்று ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப் பட்டார். 1858 அக்டோபர் 7ஆம் நாள், டெல்லியிலிருந்து கல்கத்தா கொண்டு வரப் பட்டார்.

தன்னுடைய வயோதிகத்தின் காரணமாக இவர் கேட்ட ஒரு சிறு வேண்டுகோள், "நான் சாய்ந்து கொள்ள ஒரு நாற்காலி வேண்டும் என்பது தான். ஆனால் அதைக் கூட பிரிட்டிஷ் அரசு தரவில்லை. மாறாக இவரைத்  தரையில் படுக்குமாறு வற்புறுத்தியது.


7.      1858 டிசம்பர் 4 சனிக் கிழமை இவரும், இவர் குடும்பத்தினர் 14 பேர்களும், H.M. மெகாரா என்ற கப்பலில் கல்கத்தாவிலிருந்து ரங்கூனுக்கு அனுப்பப் பட்டனர். ரங்கூனில் ஒரு சிறு குடிலில் சிறை வைக்கப் பட்டனர்.

8.      இவர்கள் அனைவருக்கும் தினம் பதினோரு ரூபாயும், ஞாயிற்று கிழமையில் அதிகப் படியாக ஒரு ரூபாயும் வழங்கப் பட்டது.

9.      இவர்களின் சிறு செலவுக்காக ஒவ்வொருவருக்கும் மாதம் இரண்டு ரூபாய் தரப் பட்டது. அங்கு 1862 நவம்பர் 7 ஆம் நாள், காலை ஐந்து மணிக்கு இவர் உயிர் நீத்தார்.

அன்று மாலை நாலு மணிக்கு ரன்கூனிலேயே அடக்கம் செய்யப் பட்டார்.

10.  பிரிட்டிஷ் அரசாங்கம் இவர் அடக்கத் தலத்தைக் கூட தரைமட்டமாக மறைத்து விட்டது. இதே நிலை திப்பு சுல்தானின் அடக்கத் த்திற்கும் நேர்ந்தது.

11.  1903 ஆம் ஆண்டில் பிழைப்புக்கு ரங்கூன் சென்ற இந்திய முஸ்லிம்களில் சிலர் பகதூர் ஷா அடக்கத் தலத்தை தேடிக் கண்டு பிடித்தனர். அங்கு ஒரு கட்டடம் எழுப்ப முயன்றபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இறுதியாக முப்பது ஆண்டுகள் கழித்து 1934 ஆம் ஆண்டில்தான் அனுமதி வழங்கியது.





12.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய விடுதலைப் படையை உருவாக்கிய பின், பகதூர் ஷா அடக்க இடத்தை தரிசிக்கச் சென்றார். அப்போது நேதாஜி, மொழிந்த மொழிகள் "இந்தியாவின் விடுதலை வீரன், இங்கே புதையுண்டு கிடக்கிறான். அவன் புதையுண்டு கிடக்கும் மண்ணை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களை விரட்டி அடிப்போமாக! வாருங்கள் போவோம் டெல்லிக்கு! புறப்படுங்கள், டெல்லி சலோ" என்று வீர முழக்கம் இட்டார்.

13.  1956 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில், ரங்கூனில் புதையுண்டு இருக்கும் பகதூர் ஷாவின் உடலை தோண்டி எடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து, அவர் ஏற்கனவே தனக்கு இறந்த பின் புதைக்க குத்பு மினாரின் அண்மையில் உள்ள மிஹ்ராளியில் மீண்டும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பிரச்னை எழுந்தது. ஆனால் இது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று கூறி பண்டித நேரு விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

14.  பகதூர் ஷா அற்புதமான கவிஞர், சபர் என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்புகள் பிரசுரமாகி உள்ளன.

"தாம் நேசிக்கும் நாட்டில் அடக்கப் பெற சபருக்கு (தனக்கு) இரண்டு கஜ நிலம் கூட இல்லாதது எத்துனை துரதிஷ்டமானது”என்று இவர் ஏற்கனவே பாடியதற்கு ஏற்ப இவர் வாழ்விலேயே அது நடந்து விட்டது.

பகதூர் ஷா, ஒரு சிறந்த அறிஞர்.மௌலானா சாஅதி எழுதிய குலிஸ்தானுக்கு (ரோஜா தோட்டம்) இவர் விரிவுரை எழுதி இருக்கிறார். இந்த நூல் ஆன்மீகக் களஞ்சியம். சூபிச கோட்பாட்டின் சிகரம்.

நண்பர் .குமார் அவர்கள் இவைகளை எல்லாம் பதிவு செய்ய ஏனோ தவறி விட்டார்.

படங்கள்:நன்றி கூகிள்


No comments:

Post a Comment