அப்படின்னா?
தடித்து பருத்த மரம் !
அதன் அடிவாரம்
மண்ணுக்கு மேலே முரட்டுத் தனமாக
திண்டாக பரப்பிக் கிடந்தன.!
பகல்
நரகத்தின் சூட்டை
அந்த நகரத்தில்
குடைப்பிடித்து கவிழ்ந்து கிடந்தது.
இடையிடையே காற்றுத் துணுக்குகள்
மணல்துகள்களை
அள்ளி இறைத்துக் கொண்டிருந்தன!
அந்த மரத்தின் கீழே வேரின் திண்டில்
தலை சாய்த்து
பித்துக்குளி மஜ்னூன் படுத்து கிடக்கிறான்!
விழி இமைகள் மூடி இருக்கின்றன!
தூங்கி விட்டானோ என்னவோ?
ஒரு பருத்த கருந்தேள்
மணலுக்குள்ளிருந்து
முளைத்து ஊர்ந்தது
மஜ்னூன் காலடி நிழலில் ஒதுங்கி நிற்கிறது!
அதற்கென்ன நாட்டமோ?
நிழல்
கொடுத்த காலில் ஒரு போடு போட்டது
அப்போதும் காலில் அசைவில்லை!
தேள் முன்னேறியது
அவன் கை கிடக்கும் பிரதேசத்தில் பிரவேசித்தது!
என்ன நினைத்தோ
அந்தக் கரத்திலும் ஒரு போடு போட்டது
கரத்திலும் அசைவில்லை !
ஒரு வழிப்போக்கன் இதை பார்த்து விட்டான்!
தேள் கொட்டியும்
அசைவற்ற மனிதனை அன்று தான் அவன் கண்டான்!
தேளை விரட்டிவிட்டு கிடந்தவனை எழுப்பினான்
கிடப்பவன்
மனிதனா? பிரேதமா ?
வழிப்போக்கன் விடாமல் தட்டி எழுப்பிவிட்டான்!
மஜ்னூன் முழிப்புக்கு வந்தான்!
"அடப்பாவி தேள் கொட்டியுமா தூங்குகிறாய்?"
"தேளா?"
"வலியே இல்லையா?"
"வலியா ?அப்படின்னா ?
வழிப்போக்கன் சிலை ஆனான்!
"இவன்
மனுதனும் இல்லை.. பிரேதமும் இல்லை
இரண்டுமான ஒரு ஜந்து! "
வழிப்போக்கன் மீண்டும் கேட்டான்
"உனக்கு இந்த ஊரா?"!
"அப்படின்னா ?"
"உனக்கு என்ன பேரு?"!
"அப்படின்னா ?"
வழிபோக்கனுக்கு பித்துபிடித்து விட்டது!
மஜ்னூன் பேசத் தொடங்கினான்
"நான் தூங்கவில்லை
விழியிமை மூடி விழித்திருந்தேன்!
அதோ இந்த மர கிளையின் நுனியில்
தளிர் விடும் புத்தம் புது தளிரில்
லைலா சிரிக்கிறாள்!
என்விழி இமை மீது மர இலைகளை ஊடுருவி
சூரியக் கங்கு
சுட்டுக் கொண்டிருந்தது
என் லைலா அங்கே தழும்புகிறாள்!
என் நாசித் துளைக்குள் மணல் துகளை
காற்றுத் தூவி இருக்கிறது !
அந்த நறநறப்பில் என் லைலா தழுவுகிறாள்!
காலில் ஒருமுறை
கையில் ஒருமுறை
தேள் கொடுக்கு
எனக்குள் விஷம் நிரப்பியது
என் லைலா அங்கே சிரிக்கிறாள்!
ஆம்.
நான் விழியிமைகள் மூடி
விழித்திருந்தேன்...
லைலாவும் நானுமாக!
No comments:
Post a Comment