Monday, July 15, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? -1



எங்கள் குடும்பம் எங்களுக்கு தெரிய பத்து பதினோரு தலைமுறைகளாக பேணுதலான ஷரியத் நடைமுறைகளை பூரணமாக ஒவ்வொரு நாளும் பின்பற்றி வந்த கதைகளை எங்கள் ஊரிலே எல்லோரும் சொல்லிக் காட்டுவார்கள்.

எனக்கு தெரிந்ததிலிருந்து இந்தத் தலைமுறையிலும் , முந்தைய பல தலைமுறைகளிலும் நாத்திக கொள்கையை ஏற்றுக் கொண்ட எவருமே எங்கள் குடும்பத்தில் இருந்தது இல்லை .

என்னுடைய 17 அல்லது 18 ஆம் வயதில் எங்கள் தலைமுறையில் நான் முதன்முதலாக நாத்திக கொள்கைக்குள் நுழைந்தேன்.

எங்கள் காலத்தில் எங்கள் குடும்பங்களில் தொழாத சில இளைஞர்கள் இருந்தார்கள். ஆனாலும் ஊர்க்காரர்கள் முன்னால் தொழுவது போல பாசாங்கு செய்து கொள்வார்கள்.

நோன்பு காலத்தில் சஹருக்கு சாப்பிட்டு விட்டு  வீட்டுக்கு தெரியாமல் காலை மாலை உணவுகளை ஹோட்டலில் முடித்துக் கொள்ளும் யோக்கியர்களும் சிலர் இருந்தார்கள்.

எனக்கு இது பிடிக்காது. ஊருக்குத் தெரிய தொழுவதை நிறுத்திக் கொண்டேன். நோன்பு பிடிப்பதையும் வெளிப்படையாக விலக்கிக் கொண்டேன்.

இதெல்லாம் ஒரு புரட்சி போல ஒரு போலித் தோற்றம் என்னிடம் அன்று இருந்ததை பின்னால் புரிந்துக் கொண்டேன்.

என்னுடைய தாதா மு..அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களிடம் நான் நாத்திகனாகி விட்டேனென்று எங்கள் குடும்பத்தில் அக்கறைக் கொண்ட சில பேர் சொன்னார்கள்.

அந்த காலக் கட்டத்தில் நான் திருநெல்வேலி பாளையம்கோட்டையில் இருந்த ரஹ்மத் நகர் என்ற காட்டுக்குள் குடியிருந்த எங்கள் தாதாவின் கட்டுபாட்டில் இருந்தேன்.

பஜ்ர் வக்து வேளையில் சமையல் காரரை எழுப்பி அங்குள்ள அனைவரையும் பஜ்ர் தொழ எழுப்ப சொல்லிவிட்டு அவர்கள் தொழுகையில் ஈடுபட்டு விடுவார்கள்.

ஒரு நாள் அவர்களே நேரில் என் படுக்கை அருகே வந்து நின்று,பஜ்ர் வக்த்துக்கு என்னை தட்டி எழுப்பினார்கள்.நான்தூங்குகிறேன் தொந்தரவு பண்ணாதீர்கள்” என்று சொல்லிவிட்டேன்.

"தொழலென்னா இங்க இருக்கக் கூடாது, ஓடிப் போ " என்று அதட்டி சொன்னார்கள்.எனக்கு கோபம் வந்து விட்டதுஎழுந்து நிதானமாக தாதாவைப் பார்த்து "அல்லாவுக்காக தொழலாம் உங்களுக்காகவோ உங்கள் பராமரிப்புக்காகவோ தொழ முடியாது" என்று நான் சொன்னேன்.


எங்கள் தாதாவை அவர்கள் வாழ்நாளில் முகத்திற்கு நேரே யாருமே இப்படி பேசி இருக்கவே மாட்டார்கள்.

என்னை உற்றுப் பார்த்து விட்டு எங்கள் தாதா தொழப் போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னும் நான் அவர்களுடன் ரஹ்மத் நகரில் தான் குடியிருந்தேன். எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருந்தேன். எங்கள் தாதா எதையும் தடை செய்து விடவில்லை. ஆனால் என் மீது வைத்திருந்த கவனத்தை நிறுத்தி விட்டார்கள்.

அந்த வீணத்தனமான நேரத்தில் இது பற்றி எந்த உறுத்தலும் எனக்கு இல்லை.
எங்கள் தாதா  மரணத்திற்கு பின் அதாவது, இந்த நிகழ்வுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் சிதம்பரத்தில் என் அறையில் நான் இரவு படுத்து இருக்கும் ஒரு நாள், நடு இரவில் விழிப்பு வந்து விட்டது. தாதாவிடம் நான் நடந்து கொண்ட இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விட்டது. என் ஆழ்மனத்தின் அந்த பதிவு முழுவதுமாக விழி அரங்கில் வந்து என்னை ஆட்கொண்டது

எவ்வளவு நேரம் இது நடந்தது ? மணி சொல்ல முடியாது. ஆனால், சிதம்பரத்தில் நான் இருந்த  தெருவிற்கு அடுத்த சில தெருக்கள் தள்ளி இருந்த பள்ளிவாசலில் இருந்து பாங்கொலி அந்தப் பகுதி முழுவதும் பரவி என் காதுகளில் வந்து தவழ்ந்ததுஅப்போதும் நான் நாத்திகம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன்என் கன்னப் பகுதிகள் நனைந்து இருந்தனஎன் கழுத்தின் மடிப்பிலும் நீர் கசிவு இருந்ததுவிழித்துக் கொண்டே நான் அழுதிருந்திருக்கிறேன்.

என் ஆழ்மனம் மானசீகமாக எங்கள் தாதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதோ, அந்த அழுகைத் தான் மன்னிப்பு மொழியோ?

 எங்கள் தாதா இறைவனுக்காக மனம் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் - இப்போது இந்த நம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment