Monday, July 15, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? -2


நெல்லை மாவட்டம் தென்காசிக்கு பக்கமுள்ள மலையடிவாரக் கிராமம் வாவா நகரம். இங்கே எங்களின் பூர்வீக நிலபுலங்கள் இருந்தன. இந்தக் கிராமத்தில் எங்கள் குடியிருப்பு பங்களாவும் உண்டு. அதற்கு பங்களா என்று பெயர் கிடையாது. கொட்டாரம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். மிகப் பெரிய பங்களா அது. கொட்டாரத்துக்கு முன் அகன்று பரந்த முற்றம். அங்கே தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், மாமரங்கள், வாசல் பக்கம் பவழ மல்லி மரம் அதைத் தாண்டி பம்ப்ளிமாஸ் மரம். இத்யாதி இத்யாதி...

(பல தலைமுறைகளை கண்ட பங்களா சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எங்களை விட்டு விற்பனையாகி போய் விட்டது. எங்கள் தாயார் மரணத்திற்குப் பின் எங்கள் தந்தையார் வாவா நகர கிராமத்துக்குள் வரவே இல்லை. கொட்டாரத்தையும் விற்று விட்டார்.)

ஒருநாள் மதியம் சித்திரை மாதமாக இருக்கலாம் . வெய்யில் முறுகித் தாக்கிக் கொண்டிருந்தது. நான் கொட்டரத்தின் பிரமாண்டமான இரும்பு அழிகலுக்கு பின்னால் அமர்ந்திருந்தேன்.

அது என் காளைப் பருவம். நாத்திக சிந்தனைகள் எனக்குள் குதூகலம் கொண்ட காலம்.

ஒரு பக்கீர் முற்றத்தை தாண்டி கொட்டார வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். அந்த வாசலில் நின்று யாசித்த அல்லது உணவு கேட்ட யாரும் வெறுங்கையோடு திரும்பியது இல்லை.

ஆனால் எந்த நினைப்பில் நான் இருந்தேனோ? அந்த பக்கீருக்கு உணவில்லை என்று கூறி விட்டேன். அந்த பக்கீரின் தோற்றம் ஒரு வித்தியாசமாக இருந்தது. உயரமானவர். மாநிறத்தவர். பச்சை அங்கியும் , வெள்ளைத் தலைப் பாகையும் கட்டியிருந்தவர் . இடப்பக்கத் தோளில் நீண்ட துணிப் பொதி சுமந்திருந்தவர். அவர் கண்களில் ஒளி நிறைந்து இருந்தவர். இவர்தான் அந்த பக்கீர்

எப்போதாவது இப்போது கூட அப்படியே காட்சியில் தெரிகிறார்.
அவர் யாசகராக இருக்க முடியாது. பசித்த வயிறுடைய தோற்றம் அவரிடம் இல்லை. எனவே தான் நான் உணவில்லை என்று அவருக்கு மறுத்து கூறினேன்.

அந்த பக்கீர் என்னை ஆழமாகப் பார்த்தார். இரண்டு வரிப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்தப் பாடலும் நினைவில் இல்லை. பொருளும் நினைவில் இல்லை.

எனக்குள் ஒரு திடீர் மாற்றம்நான் கொட்டரத்தின் அடுக்களைக்கு சென்றேன்அங்கே சோறும் கறிகுழம்பும் இருந்தது. ஒருவருக்கு போதுமான அளவு சோற்றையும் கறிக்குழம்பையும் கொண்டு வந்தேன். பக்கீரைப் பார்த்து, வாங்கிக் கொள்ள பாத்திரம் இருக்கிறதா என்று கேட்டேன்.

அந்த பக்கீர் துணிப் பையில் கைவிட்டு, பித்தளை தூக்கு ஒன்றை வெளியில் எடுத்தார். அதில் சோற்றையும் கறிக்குழம்பையும் கொட்ட சொன்னார். நான் கொட்டினேன். அந்த பக்கீரை அதற்கு முன்னும் நான் பார்த்தது இல்லை. அதற்கு பின்னும் நான் பார்த்தது இல்லை.

நான் பாத்திரத்தை அடுக்களையில் வைத்துவிட்டு வெளியே வந்தேன். கொட்டாரத்தின் இரும்பு அழிக்கதவைத் திறந்து முற்றத்தில் இறங்கினேன்எனக்குப் பின்னால் பெரும் இடிச் சத்தம் கேட்டது.நான் அப்படியே அதிர்ந்து நின்றேன்.

முற்றத்திற்கு அருகிலேயே எங்கள் சின்ன தாதாவின் சற்குண மருந்து சாலை இருந்தது. அங்கே கணக்கு எழுதிக் கொண்டிருந்த என் நண்பன் அருணாசலம் இடிச் சத்தம் கேட்டு ஓடி வந்தான்.

என் முதுகில் உரசவில்லை. உரசர மாதிரி அணுக்கத்தில் எனக்கு பின்னால் சுமார் இரண்டு அடி நீளமுள்ள இரும்புக் கம்பி தரையில் குத்தி நிற்கிறது.

அந்த இரும்பின் உச்சியில் ஐந்து முனை கொண்ட பெரிய கான்க்ரீட் நட்சத்திரம் இருக்கிறதுஎன்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒரு சாண் இடைவெளி முந்தி விழுந்திருந்தால், என் உச்சந்தலைக்குள் அந்த இரும்புக் கம்பி உள் இறங்கியிருக்கும் .

இது எப்படி இங்கே வந்தது?

அருணாசலம் என்னை கொட்டாரத்தின் வாசலின் மேலே பார் என்றான்

அப்பொழுது தான் எனக்கு உண்மை புரிந்தது. கொட்டாரத்தின் மேலே பெரிய பிறையும்நட்சத்திரமும் கான்க்ரீட்டில் இருக்கும்இப்போது அந்த நட்சத்திரம் அங்கே இல்லை.அது தரையில் குத்தி நிற்கிறது.

நட்சத்திரத்தை இரும்புக் கம்பி தாங்கி இருந்தது யார்க்கும் தெரியாது. பிறையோடு ஒட்டி இருந்த தோற்றமே வெளியே தெரிந்தது.

இப்பொழுது அந்த நட்சத்திர கம்பி பெயர்ந்து கொண்டு விழவில்லை. எப்படியோ பிடிங்கிக் கொண்டு விழுந்திருக்கிறது.

யார் பிடுங்கினார்? யாருக்கு தெரியும்?

பக்கீர் யாசகம் கேட்டது, நான் மறுத்தது, பக்கீர் ஏதோ இரண்டு வரி பாடியது, அதன் வரியும் பொருளும் மறந்து போனது. நான் மறுபடி உணவு கொண்டு வந்து கொடுத்தது, ஒரு துளி தொலைவில் கொட்டார நட்சத்திரம் எனக்குப் பின் குத்தி நின்றது - இதெல்லாம் எதேச்சையாக நடந்தது என்று, அன்று நான் சாதித்தேன்.

நாத்திக, தர்க்க அறிவு எனக்கு அப்படிச் சொல்லி தந்தது.

 ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவம் எல்லாவற்றுக்கும் தொடர்பு உண்டு என்ற விஞ்ஞானம் இன்று என் நினைவுக்கு வருகிறது.

 அது சரி...

 நடந்தது யதார்த்தமா ? தொடர்பு உடையதா? புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment