Tuesday, July 16, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? - 3


குங்குலியம் சண்முகம் செட்டியார்



நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன்.

அந்தக் காலம் என்னுடைய நடவடிக்கைகளுக்கு உரிய ராஜ காலம்.

அப்போதும் நாத்திக நெடி என்னிடம் அடித்துக்கொண்டுதான் இருந்தது. என்னுடைய அரசியல் வாசனை சிவப்பு நிறமாக கொடி கட்டிப் பறந்து  கொண்டு இருந்தது.

பெரியார் நாத்திகம் எனக்கு ஒப்புக்கொண்டதாக என்றும் இருந்ததில்லை. பல்கலைக்கழக வகுப்பறைக்குள்ளும் சரி, மாணவப் போராட்டக்  களங்களிலும் சரி என் அரசியல் தாக்கத்தை நான் விட்டுக் கொடுப்பதில்லை.

மாறாக முரட்டுத் தனமாக இருந்திருக்கிறேன்.         

பல்கலைக்கழக துணை வேந்தர் ஆதி நாராயணனுக்கு தொந்தரவு கொடுத்த மாணவர்  பட்டியலில் எனக்கும் ஒரு சின்ன இடம் உண்டு.



டாக்டர். .சுப. மாணிக்கனார் என்னுடைய பேராசிரியர். ஈடு சொல்ல முடியாத தமிழறிஞர். அவர் தனித் தமிழ் இயக்கம் சார்பு கொண்டவர். எனக்கு அதில் ஈடுபாடு இன்று போல் அன்றும் இருந்ததில்லை.

ஆனாலும் என்னுடைய விவாதங்களை ரசிக்கக் கூடிய மகா மனிதர் அவர். அவருக்கு நான் செல்லப் பிள்ளை. என்னை, "அடே தமிழ்த் துரோகி" என்றுதான் அன்போடு அழைப்பார்.               

அண்ணாமலையில் தமிழ்த் துறையில் ஆசிரியர், மாணவர் மத்தியில் கோஷ்டிச் சண்டை இல்லை என்று நான் சொன்னால் மரியாதை நிமிர்த்தம் பச்சைப் பொய் சொல்கிறேன் எனச் சாட்சியம் சொல்கிறேன் என்று அர்த்தம்.

கலைமாமணி.உளுந்தூர்ப் பேட்டை சு. சண்முகம் ஒரு கோஷ்டிக்குத்  தலைமைத் தாங்குவார், பேராசிரியர் ஆறு. அழகப்பன் மற்றொரு புறத்தின் தலைமை.

உளுந்தூர்ப் பேட்டையார் பக்கம் நாங்களெல்லாம் இருப்போம்.

மணிவாசகப் பதிப்பகத்தின் உரிமையாளர் டாக்டர்..மெய்யப்பன்  எங்களுக்கு எதிரணியில் இருப்பார்.

மெய்யப்பன் ஒரு கட்டத்தில் டாக்டர்..சு..மாணிக்கனாரிடம், "ஹிலால் முஸ்தபா இருக்கும் வகுப்புக்கு நான் பாடம் எடுக்க மாட்டேன்"  என்று எழுத்து மூலமாகக் கொடுத்து, வருவதை நிறுத்திக் கொண்டார்.                  
(பேராசிரியர்.மெய்யப்பன், நான் அண்ணாமலையை விட்டு சென்னைக்கு வந்து வாழ்ந்த காலத்தில் என்னிடம் நல்ல நட்புறவோடு இருந்தார்).

பேராசிரியர். மெய்யப்பனுடைய தந்தையார் குங்குலியம் சண்முகம் செட்டியார். அற்புதமான ஒரு துறவி.

இந்தத் தகவலை அறிந்து என் நண்பர் பழ. முத்து வீரப்பனிடம் (இப்போது அண்ணாமலை தமிழ்த் துறை பேராசிரியராக இருக்கிறார்) என்னை அழைத்து வரச் சொன்னார். நண்பருடன் சென்று நான் பார்த்தேன்.          

சிதம்பரம் மாலைக்கட்டித் தெருவில் உள்ள நகரத்தார் சத்திரத்தில் தங்கி இருந்தார் குங்குலியம் சண்முகம் செட்டியார்.

அவர் தோற்றமே ஒரு மரியாதையைத் தரும். வெள்ளைத் துண்டு மேலேப் போர்த்தி இருப்பார், இடையில் வெள்ளை வேட்டி கட்டி இருப்பார். தாடி பளீர் என்ற அடர்ந்த வெள்ளை. தலையில் முடி இல்லை. வெளிப் புறத்தில் வெள்ளை அணிந்த பச்சைத் துறவி.

மாலை வேளையில் கையில் ஒரு சின்ன தாம்பளம், அதில் காம்பு நீண்ட சாம்பிராணி கும்பா, அதில் அனல் கங்குகள். இத்தனையும் பித்தளையில் இருக்கும். வலது கை தங்கிப் பிடிக்க, இடது கையில் மயிலிறகு விசிறி வைத்திருப்பார் .              

மாலைக்கட்டித் தெருவில் இருந்து, நடராஜர் கோயிலுக்கு நடந்து செல்வார். நடராஜருடைய அந்த அழகிய நடன சிலைக்கு முன்பு கையில் கொண்டு வந்திருக்கும்  குங்குலியத்தை (சாம்பிராணி) தீக்கங்கில் போட்டு புகை எழுப்புவார்.

இடது கையில் இருக்கும் மயிலிறகு விசிறியால் விசிறி சிலையை  நோக்கிப் புகையை அனுப்புவார். நான் அவர் கும்பிட்டுப் பாத்ததில்லை.      

குங்குலியம் சண்முகம் செட்டியார், நகரத்தார் சத்திரத்தில் இருந்துகொண்டு என்னிடம் ஆத்திகம் பேசுவார். நான் நாத்திகம் முழங்குவேன்.

எங்களுக்குள் கருத்தியல் ரீதியாக உடன்பாடு வந்ததே இல்லை. ஆனால் நாங்கள் ஆழமான அன்பால் பிணைக்கப் பட்டு இருந்தோம். ஐயா முதியவர், நான் இளைஞன். எங்களுக்கு இடையில் இப்படியொரு வேறுபாடு மட்டுமே.

ஒரு நாள் நல்ல வெயில் நேரம். மதியம். நகரத்தார் சத்திரத்தில் உள்ளே உள்ள கருங்கல் முற்றத்தில் நானும்  ஐயாவும் உட்கார்ந்து வழக்கம் போல் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

ஐயா நல்ல தமிழறிஞர், அதே அளவு ஆங்கிலப் புலமை உள்ளவர்.
நகரத்தார் சத்திர வாசலில் ஒரு யாசகரின் பிச்சை ஒலி கேட்கிறது. ஐயா வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். நான் அவருக்கு எதிரே இருக்கிறேன். என் பிடரிக்கு பின்னால் வாசல் இருக்கிறது. ஐயா யாசகரை பார்த்து விட்டு திடுக்கிற்று "ஹிலால் திரும்பிப் பார், திரும்பிப் பார்" என்று சத்தமிட்டார். நான் உடனே திரும்பிப் பார்த்தேன். வாசலில் ஒரு சினிமாக் காட்சிப் போல் இருந்தது. யாசகர் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் நாங்கள் இருவரும் பார்க்கும் போது தோன்றி, நின்று மறைந்தது.

யாசகம் கேட்டவர் எதையும் பெறாமல் வீதியில் இறங்கி நடக்கலானார்.

 ஐயா பதறிப் போய் எழுந்து வாசலை நோக்கி ஓடினார்.அவர் ஓடியதால் நானும் ஓடினேன். வீதியில் இறங்கி யாசகரைப் பார்த்தோம். அவர் அங்கே தென்படவே இல்லை.

அந்த வீதியில் நகரத்தார் சத்திரத்திற்கு அருகாமையில் உடனடி சந்து எதுவும் இல்லை.அந்த யாசகர் முதியவர். நாங்கள் வந்து பார்க்கும் நேரத்தில் P .T . உஷா ரேஞ்சில் அவர் ஓடினாலும் எங்கள் கண்ணுக்கு அவர் தென்பட்டுதான் ஆக வேண்டும்.

ஐயா என்னிடம்" அவர் தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை பார்த்தாயா?" என்றார்.

 “எனக்கும் அது தென்பட்டது. ஆனால் உங்களைப் போல் புத்தர் தலைக்கு பின்னால் உள்ள ஒளிவட்டம் போல் நான் நினைக்க மாட்டேன். நாம் கட்டிடத்திற்குள் இருந்து பார்க்கிறோம். அந்த யாசகர் வெயிலில் வாசலில் நிற்கிறார். நம் பார்வையின் மாயத் தோற்றம் தான் அந்த ஒளிவட்டம். கதைகளில் சொல்லப் படும் ஞான ஒளிவட்டமல்ல " என என் விஞ்ஞான அறிவைத் தூக்கி வைத்தேன்.

“சரி ஹிலால், அந்த ஆள் இப்போது நம் கண்ணில் படவில்லையே ஏன்?”

நம் இரண்டு பக்கத்தில் உள்ள ஏதாவது வீடுகளில் நுழைந்திருப்பார்என்றேன் நான்.

ஐயா சோதித்து விடுவோம் என்றார்.இடது பக்கத்தில் உள்ள இரண்டு பக்கங்களிலும் உள்ள பத்து வீடுகளில் நான் பார்க்கிறேன். வலது பக்கம் நீங்கள் பாருங்கள் என்றார்.

அவரும் தேடினார், தலைவிதியே என்று நானும் தேடினேன். ஆனால் அந்த யாசகர் எங்குமே இல்லை.

மீண்டும் நகரத்தார் சத்திர வாசலில் ஐயாவும் நானும் வந்து நின்றோம்.

அமைதியாக, நிதானமாக ஆழமான மொழி உச்சரிப்பில் ஐயா, "மறைந்து விட்டார்" என்றார்.

நான் துடுக்குத் தனமாக "விரைந்து விட்டார்" என்றேன்.

இது நடந்தது உண்மை. அந்த யாசகர் மறைந்தாரா? விரைந்தாரா?


(குங்குலியம் சண்முகம் செட்டியார் ஒரு நாள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் சிதம்பரத்தை விட்டு வெளியேறி விட்டார். அவர் எப்போதும் தாங்கி இருக்கும் குங்குலியத் தட்டு நகரத்தார் மடத்திலேயே இருந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் வடலூரில் இராமலிங்க அடிகளார் மடத்தில் அவரைப் பார்த்தார்கள். ஊரன் அடிகளார் உடன் அவர் தங்கி இருந்தார். உருவ வழிபாட்டை முற்றிலும்  துறந்து விட்டார். இன்று ஐயா இல்லை.)

No comments:

Post a Comment