Friday, July 12, 2013

ஈகைக் கணக்கு


கை - இதற்குத் தான் எத்தனைப் பாதைகள். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் சேகரித்து வைத்தவைகளை  மற்றொரு உயிருக்காக பங்கிட்டுத் தரும் பரோபகாரம்தானே ஈகை.

செல்வச் செழிப்பில் இருந்து வழங்கி வரும் இனாம்கள் மட்டுமல்ல ஈகை. கல்வியைப்பெருக்கிக் கொண்டோர் அது தேவைப்படும் நபர்களுக்கு பிரதிப்பலன் இல்லாமல் வழங்கினால் இதுவும் கொடைதான்.

     உடல் பலம் மிக்கோர் தேவைப்பட்டோருக்கு -  உடலால் பயன்படுவதும், அப்பயன்பாட்டுக்குப் பகரமாக எதையும் பெறாமலும் இருந்தால் அதுவும் ஈகைதான்.

     மனம் வளம் மிகுந்தோர் மன எண்ணத்தால் மற்றவருக்கு வளர்ச்சியை உருவாக்கக் கருதினால் அதுவும் இந்தப் பட்டியலில் சேரும்.
     பிறருக்குப் பயன்படுவோர் பிரிதொரு எதிர்பார்ப்பை நாடாமல் செய்யும் நல்லவைகள் எல்லாம் வள்ளல் தன்மையின் வடிவங்கள்தாம்..

     தானம் செய்கிறோம். தர்மம் வழங்குகிறோம். இனாம் தருகிறோம். பிச்சை ஈய்கிறோம். இவையெல்லாம் ஈகைதான். ஆனால் ஒவ்வொன்றிற்கும் வேறுபாடு இருக்கிறது.

     தானம் என்பது தனிக் கொள்கை உடையது. ஒருவனின் தேவையினை அவன் இறைவனிடம் யாசிக்கிறான். அவனுக்குத் தேவையான அது அவனிடம் வந்து சேராததற்குத் தன்னுடைய தீச்செயல் காரணமாக இருந்துவிட்டது எனக் கருதுகிறான். அந்தத் தீய செயலின் தீமைகள்தாம் தன்னுடைய தேவைகளை வழி அடைத்து நிற்கின்றன என முடிவு கட்டுகிறான்.

     இந்தத் தடை கல்லை தகர்க்க, தன்னிறைவு பெருக ஏழை எளியவர்க்கு அவர்களிடம் எதனையும் எதிர்பாராமல் வழங்குவதுதான் தானம். தன் செயலின் பாவத்திலிருந்து தன்னை விடுவிக்க இதனைச் செய்கிறான். இது  பரிகாரத்தானம்.

     தர்மம் என்பது தானத்துக்குப் பக்கத்து இருக்கையில் இருக்கும் மற்றுமொரு மகராஜன். பாவத்தின் ஒரு பரிகாரம் தானம். இந்தத் தர்மம் கொஞ்சம் வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்திற்குள் வந்து விடும்.

     தனக்குத் தீங்குகள் வராமல் இருக்கவும் கேடுபாடுகள் தன்னைத் தொட்டுவிடாமல் இருக்கவும்,  நன்மைகள் தன் பங்கில் பெருகி வளரவும் நாட்டம் கொண்ட மனிதன் இல்லாமையில் வதங்குவோருக்கு வழங்குகிறான். இதுதான் தர்மம்.

     இனாம் - இது கொஞ்சம் மாறுபட்டது. தன்னிடம் ஏதாவது ஒரு வகையில் இணைந்துக் கொண்டிருப்பவருக்குத் தேவைப்படும் தேவைகளைப் பூர்த்தியாக்குவதற்காக உதவுவது இனாம். வேறொன்றை எதிர்பாராமல் தருவதுதான், ஆனாலும் ஏற்கனவே பல வகையிலும் உதவிகரமாக கலந்து வாழ்வோருக்கு, ஒரு கஷ்டப் பரிகாரமாக வழங்கி விடுவதுதான் அந்த இனாம். நமக்குச் சம்பந்தப்பட்டவர் மனமகிழ்ச்சிக்கு இது உதவும். இதுதான் இனாமின் சமூகக் காரணம்.

     பிச்சை என்பது இரக்கக் குணத்தின் அடிப்படையில் எழும் மனக்கசிவு. பிறர்படும் வேதனைகளைக் கண்டு மன உளைச்சல் ஏற்பட்டு தன்னுடைய பங்குக்கு முடிந்ததை ஈவதுதான் பிச்சை. பிச்சை ஏற்போருக்கு இடுவோரின்  இரக்க உணர்ச்சி பலகீனமாகத் தெரிகிறது. அதுவே தனக்கு வசதியாகவும் ஆகிவிடுகிறது. எனவே பிச்சை ஏற்போருக்கு இது உற்சாகத்தை உண்டாக்கி விடுகிறது. இப்படி ஒரு தீமை பிச்சையில் மறைந்திருந்தாலும் இதுவும் இதுவும் ஒரு ஈகைதான்.

     நேர்ச்சை என்ற ஒரு வகை ஈகையும் நம்முன் நிற்கிறது. எனக்கு இது தேவை. இத்தேவையினை இறைவனே நீ வழங்கிவிட்டால் அதற்குப் பரிகாரமாக நான் உனக்காக உன் படைப்புக்களுக்கு இதனை வழங்குகிறேன் என்று மன உறுதிப் படுத்துவது நேர்ச்சை. தானம் என்பது செய்த அதர்மத்தால் ஏற்பட்ட தடையை நீக்க வழங்குவது. தானம் ஒரு வீட்டின் தலைவாசல் என்றால் நேர்ச்சை அவ்வீட்டின் பின்வாசல்.

     இத்தனை பாதையையும் தாண்டி இஸ்லாம் ஒரு தானத்தை முன் வைக்கிறது. அதுதான் ஜக்காத்.

     மனிதன் சேகரித்துப் பெற்றுள்ள பொருள் எதுவாயினும் சரிதான். பணமாகவும் இருக்கலாம். நிலமாகவும் இருக்கலாம். விளைச்சல் பலனாகவும் இருக்கலாம். தங்கம் போன்ற ஆபரணங்களாகவும் அமையலாம். விலை உயர்ந்த வெள்ளியில் செய்த பாத்திரங்களாகவும் விளங்கலாம். இவை அனைத்தும் ஓர் ஆண்டு ஒருவனின் கைவசம் தேக்கமாக இருந்து விடுமானால் அந்தச் செல்வத்தில் பயன்பாட்டின்மை என்ற கறை படிந்து விடுகிறது. அதற்குப் பரிகாரம் அந்தச் செல்வத்தின் சதவிகிதப்படி பங்கீட்டு குறிப்பிட்ட வகையினருக்கு அதனை வழங்கி விட வேண்டும்.

     அப்படி வழங்கத் தவறினால் அது தண்டனைக்குரிய குற்றம். இறைக் கட்டளைக்கு மாறுபட்ட தீமை அது. தங்கியுள்ள பொருள்களின் தராதரம் பற்றி சதவீத கணக்கு மாறும்.

     தங்கமாக இருப்பில் இருந்தால் அதற்கு ஒருவித  சதவீதக் கணக்கு. தானியமாக இருந்தால் அதற்கு வேறுவிதமான கணக்கு. தானியத்தைப் பொறுத்தவரை இருப்பில் இருந்தாலும் சரி, இல்லாது போனாலும் சரியே விளைகிற காலத்திலேயே குறிப்பிட்ட சதவிகிதம் வழங்கிவிட வேண்டும். இப்படிப் பட்டியல் மாறும்.

     இந்தப் பரிகாரம் ஈகைதான். ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் பொருளுக்கு ஏற்றவாறு சதவிகிதக் கணக்குப் போடப்படுகிறது. இப்படிச் சதவிகிதக் கணக்கின் அடிப்படையில் வசூலிக்கச் செய்தால் அது வரிசட்டமாக மாறிவிடும்.

     அதே நேரம் மக்களிடம் இருந்து மக்கள் நலனுக்கு வசூலிக்கப்படும் ஒன்றுதான் வரி. வரியைப் பொருள்களின் சதவிகிதக் கணக்கில்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படிப் பெறப்படும் வரியை குறிப்பிட்ட துறையில்தான் மக்களின் நலத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என விதிக்க முடியாது.

     ஜக்காத் இங்கே வரியின் தன்மையினை மீறி விடுகிறது. அரசு வசூலித்து அரசுக்குத் தேவையான நலப்பணியில் ஜக்காத்தைப் பங்கிடக்கூடாது. ஜக்காத் பங்கிடப்பட வேண்டிய முறையும் அதைப் பெறத் தகுதி படைத்தோர் பட்டியலும் இஸ்லாம் துல்லியமாக அறிவித்துவிட்டது.

     இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஜக்காத் ஏழை எளியவருக்கும் உதவவே வழங்கப்படுகிறது என முடிவுகட்டி விடலாம். சதவிகிதத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படுவதால் வரியின் முகாந்திரமும் இதில் இடம் பெற்று விடுவதையும் அறியலாம். தானம், தர்மம், இனாம், பிச்சை, நேர்ச்சைக்கு இத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என்று சட்டம் கிடையாது. விரும்பியவாறு விரும்பிய தொகையினை வழங்கலாம்.

     அதனால்தான் ஜக்காத்தை ஏழை வரி என அழைக்கிறோம்.


     ஏழையருக்கு வழங்கப்படுவதால் அது ஈகை. சதவிகிதத்தின் அடிப்படையில் இருப்பதால் அது வரியாகவும் ஆகிறது. இது உலக மக்களுக்கு இஸ்லாம் காட்டும் ஓர் உன்னத ஈகை வரி அறிமுகம்.

No comments:

Post a Comment