சற்றுச் தொலைவில் ஞான
விளக்கத்தால் ஈர்க்கப்பட்ட சில ஊர்வாசிகள். ஆன்மீகத்தின் சாரல் சிதறிக்
கொண்டிருக்கும் வேளையில் புல்லரித்து நிற்கின்றனர்.
''ஆகுக'' என்னும்
போதே ஆகியிருந்த அனைத்துப் படைப்புகளின் அதிபதி அல்லாஹ்வின் கருணைக்கு அங்குமோர்
அத்தாட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது
ஞான ஆசானின் விளக்கம்
தடை படுகிறது. விழிகளை இருக்கமாக மூடிக் கொள்கிறார். அவரின் உள்ளுக்குள் ஏதோ ஒரு
காட்சியின் நிழல் படர்கிறது சலனங்கள் இல்லை. மாணவர்கள் பக்கமும் அசைவுகள் இல்லை.
ஒரு கண்டிப்புக்கு
முன் நிகழும் ஜனன நிமிஷங்கள் அவை.
ஆசானின் அகத்துக்குள்
ஓர் அதிர்ச்சி இடித்து நிற்கிறது மூடிய விழி இமைக்குள் கருமணி ஒருமுறை
வலக்கோடியில் முட்டி இடக் கோடிக்கு உருள்கின்றது. அந்த அசைவு அலை இமைகளை லேசாக, மிக லேசாக அசைக்கின்றது.
தனக்குள் வந்து
குதித்துவிட்ட செய்தியினை மாணவர் அவையில் எடுத்து வழங்க வேண்டும் இது ஆசானின்
மீறமுடியாத கடமை.
தொண்டையில் ஒரு துளி
எச்சில் உள் இறங்குகிறது. அதன் அடையாளமாக தொண்டையின் உருண்டை முடிச்சு
ஒருமுறை ஏறி இறங்குகிறது.
வண்ணத்துப்பூச்சி
ரோஜாவின் இதழைவிட்டு எழுவது போல விழி இமைகளை மெல்ல விலக்குகிறார்.
எதிரில் அறிமுகமான
அதே பழைய மாணவர் கூட்டம் என்ன கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சூழ்ந்து அமர்ந்திருக்கிறது. ஆசானின் பார்வை
அவர்களைத் தடவி நகர்கிறது. சுற்றிச் சில அறிமுகம் இல்லாத வேற்று மனிதர்கள். அவர்களின் மீது ஆசானின் பார்வை உறுத்துகிறது.
ஆசானின் வாய் உதடுகள்
நடுங்குகின்றன. அங்கே இருந்து இன்னும் சில துளிப் பொழுதுகளில்
வரவிருப்பது சாபமா? கட்டளையா? அல்லது அழுகையே ஆரம்பமாகப் போகிறதா?
ஒரு பதற்றம் அங்கே
இருந்தவர்கள் மீது வலுவாக விழுந்து விட்டது.
ஆசானின் வாயில்
இருந்து ஆரோக்கியமான பிரார்த்தனை பிறந்தது.
“இறைவனே! வந்தமர்ந்து
இருப்பவரில் எவர் மிகப் பெரும் பாவியாக உள்ளாரோ? அவரை மன்னித்தருள்வாயாக!
துஆவின் வசந்தம்
அங்கே இருந்தவர்களின் உச்சந்தலையை ஊடுருவி இதயக் கமலத்துக்குள் திடிரென்று
தாக்கியது. அனைவர் மேனியிலும் மயிர்க்கால்கள் குறு
அம்புகளாகக் குத்திட்டுச் சிலிர்ந்து நின்றன.
ஒருவர் மற்றொருவரின்
முகத்தை உற்றுப் பார்த்தனர். அந்தப் பாவி இவரா அல்லது அவரா? தேடும் ஆர்வம்
அவர்கள் கண்களில் துடிதுடித்தது.
யார் அந்தப் பாவி?
இங்கே எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? பாவங்களை இறைவனிடம் கூறி
ஆசானே மன்னிப்புக்குப் பிரார்த்திக்கும் தகுதி படைத்த அந்தப் பாவி எவன்? பாவியின் பாவ மன்னிப்புக்கு ஓர் இறைநேசரின்
இதய ஒலி எழுந்து வந்து விட்டதே... அவன் பாவியா? பாக்கியம் படைத்தவனா? எவனானால் என்ன யார் அவன்?
தேடுகின்றவர்களில்
ஒரு வேளை அவன் ஒளிந்திருக்கலாமோ?
நேரம் அங்கே நெருஞ்சி
முள்ளாகக் குத்திக்குத்தி நகர்ந்தது.
கூட்டத்தில் ஒருவன் நடுநடுங்கி விக்கி விக்கிக் குமுறுகிறான். உடம்பெல்லாம் வியர்வை வழிகிறது. கரங்களைக் கொண்டு தன் முகத்தின் மீது தானே அறைந்து கொள்கிறான். தன் மார்பைத் தானே பிராண்டிக் கொள்கிறான். ரத்தவிளார்கள் காய்ந்து உலருகின்றன.
பாவம் ஒன்று தன்னை
இப்படித் தான் வெளிப்படுத்துகிறது.
கூட்டத்தினர் அவனைக்
கட்டிப் பிடித்து நிலைக்குக் கொண்டு வருகின்றனர்
ஆசான் அமைதியாக
அழுத்தமாக அவனை நோக்கிக் கண் ஜாடை செய்கிறார் அருகில் அழைக்கிறார். கழன்று விழுந்த
பாவத்தை உதறி விட்டு ஆசான் முன்னே அருகில் அந்த மனிதன் வருகிறான்.
''நான் இறைவனிடம்
மன்னிப்புக் கோரிய பாவி நீயா?''
''மேதையே! இறைவனின்
அருள் அதை உங்களுக்கு அறிவித்துவிட்டதே''
''செய்கிற பாவம் என்ன?''
''அச்சமும்,
அவமானமும் என்னை விழுங்குகின்றதே''...
''அவை இப்போது உன்னை
உமிழ்ந்து விட்டன. அவற்றின் வாய்ப்பட்ட எச்சில்தான் உன் மீது இந்த நேரத்தில் இருக்கிறது
- அதுவும் இறைக்கருணை முன் உதிர்ந்து போகும் சொல். உன் பாவத்தின் செயல் என்ன''?
''புதைக்கப்பட்ட ஜனாஸாவின்
கபன் துணிகளைத் திருடினேன்.
கூட்டத்தினர்
வெறுப்பை மழை மழையாகக் கொட்டினார்கள்.
ஆசான் மட்டும்
மீண்டும் விழிகளை மூடி ஒரு நெடுமூச்சை உள்ளிருந்து உருவி எடுத்து நாசித்
துவாரத்தால் தூரக் கொட்டினார்.
மறுபடியும் ஆசான்
விழித்துப் பார்கிறார். நெருப்புச் சிவப்பில் கண் படலம் தீயாய்ச்
சுழன்றன. அது ஆத்திரத்தின் அடையாளமா? அழுததால் ஆன அறிகுறியா?
''ஏ! கடந்த கால கபன் மனிதனே! இந்த இழிச்செயல் எத்தனைக் காலம் தொடர்ந்தது''?
இப்போது ஆசானின்
விழிகள் தரையில் விழுந்து தவழ்ந்தன.
''இருபது
ஆண்டுகளாக''... அந்த மனிதன் வாயில் இருந்து வார்த்தைகள் முறிந்து தெறித்தன.
''இருபது ஆண்டுகளில்
எத்தனை புதைக்குழிகளைத் தொண்டியுள்ளாய்''.
''ஏழாயிரம் புதை
குழிகள்''
''அத்தனையும்
முஸ்லிம்கள் குழிதானா?
''நிச்சயமாக..!”
''அங்கே எத்தனை
நபர்களின் முகம் கிப்லாவை நேக்கி இருந்தன?''
''மூன்றே மூன்று
தான்... மற்றவை திசை மாற்றப்பட்டிருந்தன''!
ஆசானின் நெஞ்சு
மூன்று முறை ஏறி இறங்கியது. தலை சுழன்றது. பார்வையில் இருட்டுக் கவிந்தது. கிழே சரிந்து மயக்கமுற்றார்.
இருபது ஆண்டுகளில்...
ஏழாயிரம் பிரேதங்களில் மூன்றே மூன்று முகங்கள் தானா...?
***********
இன்னொருநாள். ஆசானின்
ஞான அரசவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் திரள் அன்று அதிகம் அங்கே
நிரம்பியது.
எடுத்தெறிந்த பார்வை.
தலை நிமிர்ந்த செருக்கு. படித்துக் கனத்த திமிர். இத்தனையும் ஒன்று கூடிய ஒரு
நாத்திகன். ஞான அவையின் முன்னே தோன்றினான்.
ஆசானை நோக்கி சொத்தை
மொழிகளை வீசினான்.
''எவனாவது தூக்கி
எறியும் பிச்சையை நக்கித் திரிபவன் நீ! மனிதவர்க்கத்தின் சொத்தை விழுங்கி ஏப்பமிடுபவன்
நீ!''
நாத்திகனின் வார்த்தை
அம்புகள் ஆசானின் மீது பாய்ந்தன. ஆனால் முனை மழுங்கித் தரையில் விழுந்தன.
''தம்பி உன் சொத்தில்
இருந்து எதனையேனும் நான் பறித்து விழுங்கி இருக்கின்றேனா?''
''இல்லை''!
''அப்படியானால் நீ
மனிதன் இல்லையா''!
ஆசானின் பதில்
நாத்திகத்தின் உச்சி மயிரைப் பிடித்திழுத்தது.
''நீ யுக்தியாகத்
தர்க்கம் செய்கிறாய்''! -நாத்திகன் தொடர்ந்தான்.
''தவறில்லை.
மறுமையில் என் இறைவன் அடியார்களுடன் யுக்தியாக உரையாடுவான். உனக்கு அதில் நம்பிக்கை
இல்லை ஆனால் எனக்கு அதுவேதான் நம்பிக்கை''.
''நீ வீண் பேச்சுப்
பேசுகிறாய்!'' நாத்திகனின் நா கொழுத்துப் பேசியது.
''மனிதர்களின் பேச்சை
இறைவன் இறக்கி வைத்தான். அந்தப் பேச்சினால்தான் உன் அன்னை
உன் தந்தைக்கு ஹலால் ஆக்கப்பட்டாள். இல்லையெனில் நீ ஹராத்தில்தான்
பிறந்திருப்பாய்.''
ஆசானின் மொழிகளில்
அனல் கொஞ்சம் கலந்தது.
''உனக்கு உணவு
விண்ணில் இருந்தா வருகிறது!'' நாத்திக நா மீண்டும் அதிர்ந்தது.
''எனக்கு மட்டுமல்ல. உனக்கும் இன்னுமுள்ள அனைவருக்கும் அது
அங்கிருந்துதான் வருகிறது.''
ஆசானின் வார்த்தையில் அடக்கம் தழும்பியது.
''அப்படியா? நீ நன்கு குறட்டை விட்டுத் தூங்கு.
உன் ஆண்டவன் உன் வாயைப் பிளந்து உன் உணவை உனக்குக் கொட்டுவான்.''
நாத்திகம் இன்னும் அடங்காமல் குதித்தது.
''இரண்டு ஆண்டுகள் நான் தொட்டிலில் தூங்கிய போது என் வாயில்தான்
உணவு தானாகவே வந்து இறங்கியது. நான் தேடி ஓடிப் பெற
வில்லை.'' ஆசானின் அனுபவம் எழுந்து நின்றது.
''விதைக்காமல் அறுவடை செய்யப்படுவதை நீ பார்த்திருக்கிறாயா?
நாத்திகம் தலை நிமிர்ந்தது.
“ஆம்..! உன் தலைமயிர்
விதைக்காமால்தான் அறுக்கப்படுகிறது''
ஆசானின் வார்த்தை நாத்திகத்தின் தலையில் மிதித்தது.
''வானத்தைப் பார்த்து கொண்டிரு. உனக்கு இரணம் கிடைக்கும்''
நாத்திகம் உளறியது.
''நான் பறவையாக இருந்திருப்பின் என் உணவை வானத்தில் பறந்து
சென்றுதான் தேடி வந்திருப்பேன்''
ஆசான் மொழி செய்தி சொன்னது.
''பூமியின் கீழே போ; அங்கு உனக்கு உணவு கிடைக்கும்''
நாத்திகம் மெலிந்து பிதற்றியது.
''நான் எறும்பாய்ப் பிறந்திருப் பின் என் இரணம் பூமிக்குக்
கிழேதான் கிடைத்திருக்கும்.''
ஆசானின் அறிவிப்பு நாத்திக மூளையை நசுக்கியது.
ஆசான் அடுத்த கேள்விக்கு நாத்திகனை ஏறெடுத்துப் பார்த்தார்.
நாத்திகம் தலை குனிந்தது. ஆசானின் ஆதரவான கரம் அதனை
அரவணைத்தது. அறியாமையின் ஆர்ப்பாட்டம். அணு அணுவாக வெடித்துச்
சிதறியது. ஆன்மீக அடக்கம் மழை மழையாக அவனுக்குள் வழிந்தது.
அங்கே நாத்திகன் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போனான். இறை
வழியில் ஒரு புதிய தளிர் துளிர்
விட்டிருந்தது.
***********
ஆன்மீக ஞானி ஆசான் ஹாத்திம் அஸம் [ரஹ்] பல்க் தேசத்து ஞான
விளைச்சல்களின் நல்ல மகசூல்.
இறையருள் குடைபிடிக்க ஆன்மீக வீதியுலா நிகழ்த்திய ஹாத்திம்
அஸம். பொறுமையின் கர்ப்ப வயிறு. கண்ணியத்தின் தலை வாசல்.
தன்னைக் குறைப்பட்டவராகக் காட்டிக் கொண்டு பிறரின் குறை
மறைத்த பெருமையின் சின்னம்.
பதினைந்து ஆண்டுகள் முழுமையான செவிடராக வாழ்ந்து
காட்டியவர். அப்படி ஒரு நடிப்பு. நடிப்பது ஞானத்துக்குத் தகுமா? ஆனால் ஹாத்திம்
அஸம் நடித்தார்.
அந்த நடிப்பு ஒரு பெண்மணியின் அவமானத்தை மறைத்தது.
ஒரு நாள் ஹாத்திம் அவர்களின் பாடசாலைக்கு ஒரு பெண்மணி வந்திருந்தார்.
ஏதோ மார்க்கச் சம்பந்தமான சந்தேகம் விளக்கம் பெற நாடி நின்றார்.
ஆசான் ஹாத்திம் பெண்மணியிடம் விபரம்
கேட்டுக்கொண்திருந்தார்.
பெண்மணி தன் சந்தேகத்தை ஆசான் முன் வைத்துக்
கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அடக்க முடியாத அவசரத்தில் அப்பெண்மணியின்
''காற்றுப்'' பிறிந்துவிட்டது. அந்த ஓசை சற்று அதிகம் இருந்தது.
பெண்மணியின் எண் சாண் உடம்பும் ஒரு குறு எறும்பு போல்
குன்னி விட்டது. நாணம் அவரைச் சாட்டை கொண்டு சரமாரியாகத் தாக்கியது.
ஆசான் ஹாத்திம் நிலைமையினை புரிந்து கொண்டார்.
பெண்மணியைப் பார்த்து ''ஏம்மா என்ன கேட்கிறாய்..? எது
கேட்பாதாயினும் மிக ஓங்கிப் பேசு என் இரு காதுகளும் கேட்கும் சக்தி குறைந்தவைகள். நான்
பலமான செவிடு'' என்று கூறினார்கள்.
ஒழுகிக் கொண்டிருந்த உயிர் மிக விரைவாக அப்பெண்மணிக்குள்
மீண்டும் புகத் தொடங்கியது.
தன் அவமானத்தை ஆசானால் அறிய முடியவில்லை என்ற பெருமிதம் அப்பெண்ணில்
மகிழ்வை ஸ்திரமாக்கியது.
வந்த வேலையினை முடித்துக் கொண்டு அப்பெண்மணி மனம் நிறைந்த
ஆனந்தத்துடன் வீடு திரும்பி விட்டார்.
ஆனால் ஆசானுக்கு அவஸ்தை ஆரம்பமாகி விட்டது. ஒரு பெண்மணியின்
அவமானத்தை மறைக்கத் தான் செவிடர் ஆனது அன்றோடு முடியக் கூடியதாக இல்லை.
அந்த பெண்ணின் மன நிறைவும் மகிழ்வும் என்றும் நிலைக்க
வேண்டும். அதற்கான பொறுப்பு தனக்குக் கடமையாகி விட்டது என ஆசான் உறுதிப் படுத்திக்
கொண்டார்.
அந்தப் பெண்மணி அந்நகரில் வாழும் காலம் வரை செவிடராக இருந்தால்தான் அந்தப் பெண்ணின் மனமகிழ்ச்சிக்கு அர்த்தம் இருக்கும். எனவே தொடர்ந்து செவிடராக நடித்தார். அந்தப் பெண்மணி பதினைந்து ஆண்டுகள் சென்ற பின் மரணமடைந்து விட்டார். அன்றுதான்
ஆசான் ஹாத்திம்மின் காதும் கேட்கத் தொடங்கியது.
இதன் காரணமாக ஹாத்திம் பெயருடன் அஸம் என்னும் பெயரும்
ஒட்டிக கொண்டது. அஸம் என்றால் செவிடர் என்று பொருள்.
ஒரு மானிடரின் மன மகிழ்வுக்குப் பொறுப்பெடுத்தால் அவர்
மரணிக்கும் வரை அது வளர்க்கப்பட வேண்டும்
ஆம். ஹாத்திம் அஸம் [ரஹ்] அவர்கள் மானிடத்தின் நல்லதொரு
மகத்துவம்.
பிறரை மதிக்கத் தெரிந்த மரியாதைதான் ஹாத்திம் அஸம் [ரஹ்].
No comments:
Post a Comment